உலகச் செய்திகள்

* பாகிஸ்தானில் 60 வருடங்களுக்குப் பின் இந்து ஆலயம் திறப்பு: இந்துக்கள் கொண்டாட்டம்

* யுனெஸ்கோவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது பலஸ்தீனம்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

* நாடு கடத்தலுக்கு எதிரான அசாஞ்சேவின் மனு நிராகரிப்பு: எந்நேரத்திலும் அனுப்பப்படலாம்

* ஹிலரி கிளிண்டனின் தாயார் காலமானார்

* சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணம்: சல்மான்பட், முகமது அசிப் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு


* ஐரோப்பிய நாடுகளின் கடனுதவி திட்டம்: கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

பாகிஸ்தானில் 60 வருடங்களுக்குப் பின் இந்து ஆலயம் திறப்பு: இந்துக்கள் கொண்டாட்டம்
 1/11/2011

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், அரசு கட்டுப்பாட்டில் இருந்த இந்து கோவில் ஒன்று, சுமார் 60 வருடங்களுக்குப் பின், கோவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், தீபாவளியை அக் கோயிலில் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.


அந்நாட்டில் மிகத் தொன்மையான இந்து கோவில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில், பல சரியான பராமரிப்பின்மையால் அழிந்து வருகின்றன. கடந்த 1947ல் நடந்த தேசப் பிரிவினையின் போது, பெஷாவரில் வசித்து வந்த காகா ராம் மற்றும் அவரது தந்தை பண்டிட் கமோராம் இருவரும், அந்நகரிலேயே இருக்க முடிவெடுத்தனர். இவர்களுக்கு கோர்க்காத்ரி என்ற பகுதியில், 160 ஆண்டுகள் பழமையான கோரக்கநாதர் கோவில் ஒன்று சொந்தமாக உள்ளது.

கடந்த 1960 வரை காகா ராம் குடும்பத்தினரிடம் இருந்த இக்கோவில், அதன் பின், மாகாண தொல்பொருள் துறையினரால் கைவசப்படுத்தப்பட்டது. கோவில் பூஜைகள் நிறுத்தப்பட்டு, பொலிஸ் காவலும் போடப்பட்டது. காகா ராமும் அவரது தாய் பூல்வதியும், கோவில் உரிமை குறித்து பெஷாவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த மாதம் இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கப்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீபாவளியன்று கோரக்கநாதர் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. எனினும், பூஜைகள் முடிந்தவுடன் கோவில் சாவி, தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் விரைவில், கோவிலை மீட்கப் போவதாக, அப்பகுதி இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.

"பெஷாவர் இந்து வால்மீகி சபா' தலைவர் ராம் லால் இதுகுறித்துக் கூறுகையில், "பெஷவாரில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் வால்மீகி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மொத்தம் மூன்று கோவில்கள் தான் உள்ளன. அவற்றிலும், இரண்டு மூடப்பட்டு விட்டன. சமீபத்தில் தான் காளிபாரி கோவில் திறக்கப்பட்டுள்ளது' என்றார்.

வரலாற்றறிஞர் எஸ்.எம்.ஜாபர் எழுதிய, "பெஷாவர்: அன்றும் இன்றும்' என்ற புத்தகத்தில்,"கோர்க்காத்ரி கோவிலுக்கு இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொண்டு, தங்கள் தலைமுடியைக் காணிக்கையாக அளித்து வந்தனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
யுனெஸ்கோவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது பலஸ்தீனம்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

 1/11/2011

பலஸ்தீனம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் யுனெஸ்கோவில் தனது அங்கத்துவத்தை நேற்று பெற்றுக்கொண்டது.

பிரான்ஸின் பாரிஸிஸ் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 107 நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன மேலும் 52 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகியவை முக்கிய நாடுகளாகும். இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகியவை எதிர்த்து வாக்களித்தன. பிரிட்டன், ஜப்பான் ஆகிய முக்கிய நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

இதேவேளை யுனெஸ்கோவில் பலஸ்தீனத்துக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டமைக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

"யுனெஸ்கோவில் பலஸ்தீனம் உறுப்பினராகியுள்ளதன் மூலம் ஒரு பலனும் ஏற்படாது. மாறாக அதனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முறியவே வாய்ப்புள்ளது" என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

மேலும் யுனெஸ்கோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதற்கு அளித்துள்ள நிதியை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதுடன் அமெரிக்காவும் அதற்கான நிதியை நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கவின்
நன்றி வீரகேசரி

நாடு கடத்தலுக்கு எதிரான அசாஞ்சேவின் மனு நிராகரிப்பு: எந்நேரத்திலும் அனுப்பப்படலாம்


கவின்  2/11/2011

தன்னை சுவீடனுக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே தாக்கல் செய்த மனு, லண்டன் உயர்நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் எந்நேரத்திலும் சுவீடனுக்கு நாடு கடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்ச். சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்தாண்டு ஒகஸ்ட் மாதம் 10ம் தேதி இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து லண்டனில் இருந்த அவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது லண்டனில் வசித்துகின்றார் அசாஞ்சே.

இந்நிலையில், அவரை சுவீடனுக்கு நாடு கடத்த வேண்டும் எனக்கோரி, சுவீடன் வழக்கறிஞர்கள் லண்டன் உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதை எதிர்த்து அசாஞ்சேவும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அசாஞ்சே, தனது நிறுவனம் பிற நாடுகளின் இரகசியங்களை அம்பலப்படுத்தியதால் பொய்ப்புகார்கள் கூறப்பட்டுள்ளதாக மறுப்பு தெரிவித்தார்.

எனினும் அசாஞ்சேயின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து இன்னும் சில நாட்களில் அசாஞ்சே சுவீடனுக்கு நாடு கடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதனை எதிர்த்து அசாஞ்சே மேன்முறையீடு செய்ய செய்யமுடியும் என்பதுடன் அவர் இது தொடர்பில் கூடிய விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்வார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி


ஹிலரி கிளிண்டனின் தாயார் காலமானார் _


2/11/2011

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹலரி கிளிண்டனின் தாயார் ரொட்ஹாம் (92) நேற்றுக் காலமானார்.

ரொட்ஹாம் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 92ஆவது வயதி்ல் மரணமானார்.

ஏற்கனவே தாயார் சுகவீனமடைந்த காரணத்தினால் ஹிலரிகிளிண்டன் தனது இங்கிலாந்து மற்றும் துருக்கிக்கான பயணத்தை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணம்: சல்மான்பட், முகமது அசிப் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

2/11/2011

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான்பட், முகமது அசிப் இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என்றும் லண்டன் நீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பு அளித்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தலைவர் சல்மான்பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் லண்டன் லோர்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், ஸ்பொர்ட் பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதை அங்குள்ள பத்திரிகை அம்பலப்படுத்தியது.

சூதாட்ட தரகர் மஸார் மஜீத்திடம் கோடிக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர் வேண்டுமென்றே முறையற்ற பந்தை வீசியதும், இதற்கு காரணமாக டெஸ்ட் அணித் தலைவர் சல்மான்பட் செயல்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டது. சல்மான்பட்டுக்கு 10 ஆண்டுகளும், முகமது ஆசிப்புக்கு 7 ஆண்டுகளும், முகமது ஆமிருக்கு 5 ஆண்டுகளும் விளையாட தடை விதிக்கப்பட்டன.

இதன் பின்னர் இவர்கள் மீதான வழக்கு விசாரணை லண்டன் சவுத்வோர்க் கிரோன் நீதிமன்றில் நடந்து வந்தது. முகமது அமிருக்கு சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என்ற போதிலும், அவர் தவறை ஒப்புக் கொண்டதால், அவர் மீது நீதிமன்றில் விவாதம் நடைபெறவில்லை.

மற்ற இருவர் மீதும் கடந்த 20 நாட்களாக நீதிமன்றில் விவாதம் நடந்தது. அவர்கள் நீதிமன்றில் தினமும் ஆஜரானார்கள். சூதாட்ட தரகர் மஸார் மஜீத்துடன் பேரம் நடந்த போது பதிவு செய்யப்பட்ட டேப் முக்கியமான ஆதாரமாக இந்த வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, சல்மான்பட், முகமது அசிப் இருவரும் தங்கள் மீதான சூதாட்ட புகாரை மறுத்தனர்.

இந்த நிலையில் 16 மணி 56 நிமிடங்கள் விவாதத்திற்கு பிறகு 12 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இதில் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

27 வயதான சல்மான் பட் மீது, ஏமாற்றுவதற்கான சதி செய்தல், ஊழல் மூலம் கிடைத்த பணத்தை பெறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. 28 வயதான முகமது அசிப் மீது ஏமாற்றுவதற்கான சதி செய்தல் புகார் நிரூபணமாகி உள்ளது. இவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நாளையும், நாளை மறுதினமும் அறிவிக்கப்படும். இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரை இருவரும் பிணையில் வெளியில் இருக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஊழல் மூலம் கிடைத்த பணத்தை பெறுதல் குற்றச்சாட்டில் சல்மான்பட்டுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதே போல் முகமது அசிப்புக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிகிறது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது, வீரர்கள் இருவரும் எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டவில்லை.

இதற்கு முன்பு தென்னாபிரிக்காவின் ஹன்சி குரோனே, பாகிஸ்தானின் சலிம் மலிக், இந்தியாவின் முகமது அசாருதீன் ஆகியோர் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் நீதிபதிகள் கமிஷன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் குற்ற வழக்குகளில் இதுவரை எந்த வீரர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டதில்லை. தற்போது தான் முதல் முறையாக குற்ற வழக்கில் கிரிக்கெட் வீரர்களுக்கு தண்டனை அளிக்கப்பட உள்ளது.

மேலும் இங்கிலாந்து நீதிமன்றில் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே விளையாட்டு வீரர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 1964-ம் ஆண்டு 3 உதைப்பந்து வீரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


ஐரோப்பிய நாடுகளின் கடனுதவி திட்டம்: கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல்



ஏதென்ஸ், நவ.2: கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கத்துக்கு உதவ ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன. 13,000 கோடி யூரோ அளவுக்கு கடன் அளிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. இத்திட்டத்தை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதைத் தீர்மானிப்பதற்காக அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டி உறுப்பினர்களின் கருத்துகளைக் கோரினார் அந்நாட்டு பிரதமர் ஜார்ஜ் பப்பாண்டிரியோ. இந்த கடன் மீட்பு திட்டத்துக்கு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில் கடன் மீட்பு திட்டத்துக்கு கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு இத்திட்டத்தை ஏற்பதாக முடிவு செய்யப்பட்டதாக கிரேக்க நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் இலியாஸ் மொஸியாலோஸ் தெரிவித்தார்.

இருப்பினும் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்கள் இந்த திட்டத்தை ஏற்பது குறித்து தயக்கம் காட்டினர். கிரேக்க நாடாளுமன்றத்தில் மன்னராட்சி முறை 1974-ம் ஆண்டு ஒழிந்தது. அதன் பிறகு இதுபோன்று நாடாளுமன்ற அனுமதி கோரும் தீர்மானம் இப்போதுதான் முதல் முறையாக ஏற்பட்டுள்ளது.

கிரேக்க மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய யூனியன் வகுத்துள்ள கடனுதவித் திட்டத்தை ஏற்பதுதான் சிறந்த வழி என்று பிரதமர் பப்பாண்டிரியோ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் முன்பு இரண்டு விஷயங்கள்தான் வைக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கடனுதவியை ஏற்பதா அல்லது, யூரோவிலிருந்து விலகுவதா என்பதுதான் அது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோர உள்ளதாக பப்பாண்டிரியோ அறிவித்தவுடன் அது ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் கடும் சரிவை ஏற்படத்தியது.

கடனுதவித் திட்டத்தின்படி கிரேக்க வங்கிகள் எதிர்கொண்டுள்ள நஷ்டத்தில் 50 சதவீதத்தை ஏற்பதற்காக 14,000 கோடி டாலர் கடன் பத்திரங்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) அளிக்கும். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் மிகப் பெரிய கடனுதவி மீட்பு நடவடிக்கை இதுவாகும்.
நன்றி தினமணி














No comments: