700 கோடி மனித முகங்கள்

 Tuesday, 01 November 2011

உலக சனத்தொகை நேற்றைய தினம் 700 கோடியைத் தாண்டியிருக்கிறது. உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும் குறைந்த பட்சம் இரு குழந்தைகள் பிறப்பதாகவும் பாதுகாப்பற்ற நீரைப் பருகுவதாலும் போதிய சுகாதாரப் பராமரிப்பு இல்லாததாலும் ஒவ்வொரு 15 செக்கன்களுக்கும் ஒரு குழந்தை இறப்பதாகவும் கணிப்பிடப்பட்டிருக்கிறது. தினமும் இலட்சக்கணக்கில் பிறப்புக்களும் இறப்புக்களும் நிகழுவதற்கு மத்தியில் உலகின் 700 கோடியாவது மனிதப் பிறவியாக வரப்போவது யாரென்பதைத் திட்ட வட்டமாக தீர்மானிப்பது நடைமுறைச் சாத்தியமான காரியமில்லை என்ற போதிலும் கூட, நேற்றைய தினம் பிறக்கும் போது பிரசவிக்க ப்படுகின்ற குழந்தைகளில் ஒன்றுக்கே அந்த அடையாள பூர்வமான பெருமையை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்திருந்தது. நேற்றைய தினம் உலகில் 382,000 குழந்தைகள் பிறக்குமென்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் அதாவது அக்டோபர் 31 பிறப்பதற்கு இரு நிமிடங்கள் முன்னதாக (நள்ளிரவுக்கு இரு நிமிடங்கள் முன்னதாக) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணியளவில் அரசாங்க ஆஸ்பத்திரியொன்றில் பெண்மணியொருவர் பெற்றெடுத்த டானிக்கா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் குழந்தையே உலகின் 700 கோடியாவது வாசியாகக் கணிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. நேற்றைய தினம் பிறந்த குழந்தையாக கணிக்கப்படக் கூடிய அளவுக்கு நள்ளிரவுக்கு நெருக்கமாகவே கமிலி கலுறா என்ற அந்தப் பெண்மணி டானிக்காவைப் பிரசவித்திருப்பதாக டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணம் வரை 700 கோடியாவது வாசியாக யாரைப் பிரகடனம் செய்வது என்பது தொடர்பில் ஐக்கியநாடுகளிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஞாயிறன்று நள்ளிரவுக்குப் பின்னர் பிறந்திருக்கக் கூடிய குழந்தைகள் சகலவற்றையுமே 700 கோடியாவது உலகவாசி என்று நினைத்துப் பல நாடுகளில் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தலைநகர் கொழும்பில் காசல் வைத்தியசாலையில் நள்ளிரவுக்குப் பிறகு பிறந்த குழந்தையொன்றை ஜனாதிபதியின் பாரியார் தூக்கியணைக்கும் காட்சிகளைப் பத்திரிகைகளில் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அக்குழந்தையின் தாயாருக்கு பெருமளவு பரிசுப் பொருட்கள் நலன்விரும்பிகளினால் வழங்கப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இவ்வாறு பிறந்திருக்கக் கூடிய குழந்தைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

முன்னைய நூற்றாண்டுகளைப் போலன்றி தற்போதைய காலகட்டத்தில் உலக சனத்தொகைக்கு 100 கோடி பேரைச் சேர்ப்பதற்கு மிகவும் குறுகிய காலமே அதாவது 12 வருடங்களே எடுத்திருக்கிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். உலக சனத்தொகை 100 கோடியை எட்டுவதற்கு 1804 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு 123 வருடங்கள் கழித்தே உலக சனத்தொகை 200 கோடியை எட்டியது. இருபதாம் நூற்றாண்டு சனத்தொகை அதிகரிப்பில் பெரும் வீச்சைக் கண்டது. 1959 ஆம் ஆண்டில் 300 கோடியாக இருந்த சனத்தொகை 1974 ஆம் ஆண்டில் 400 கோடியாகவும் 1987 ஆம் ஆண்டில் 500 கோடியாகவும் 1998 ஆம் ஆண்டில் 600 கோடியாகவும் அதிகரித்ததைக் காணக் கூடியதாக இருந்தது. 2025 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 800 கோடியையும் 2083 ஆண்டளவில் 1000 கோடியையும் எட்டுமென்று ஐ.நா. மதிப்பிடுகிறது.ஆயுள் எதிர்பார்ப்பு காலம் தொடக்கம் குடும்பக் கட்டுப்பாட்டு வசதிகளைப் பெறக் கூடிய வாய்ப்புகள் மற்றும் சிசு மரண வீதங்கள் வரை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த சனத்தொகை அதிகரிப்பு மாறுபடக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

உலக சனத்தொகையில் ஏற்பட்டுவருகின்ற துரித அதிகரிப்பு நாமெல்லோரும் கொண்டாடக் கூடிய ஒன்றா அல்லது கவலைப்பட வேண்டிய ஒன்றா? உலகின் பல பாகங்களில் மக்கள் நீண்டகாலம் உயிர் வாழ்வதுடன் முன்னரை விடவும் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். அத்துடன் சராசரி ஆயுட்காலம் 48 வருடங்களில் இருந்து 68 வருடங்களாக அதிகரித்திருப்பதாக ஐ.நா. சனத்தொகை நிதியம் கூறுகிறது. தம்பதிகள் ஒருசில குழந்தைகளையே பெறுகிறார்கள். கூடுதலான குழந்தைகள் நோய் பிணியின்றி உயிர் தப்பி ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன. சனத்தொகை துரிதமாக அதிகரிக்கும் வளர்முக நாடுகள் கூடுதலான எண்ணிக்கையில் இளைஞர், யுவதிகளைக் கொண்டிருக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளில் கருவளம் குறைவதுடன் சனத்தொகையில் பெரும்பான்மையினர் வயது வந்தவர்களாக இருக்கிறார்கள். மேற்குலகிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பிறப்பு வீதம் குறைகிறது. உலகின் ஏனைய பகுதிகளில் வறுமையும் கூடுதல் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களும் உணவு மற்றும் நீர்வளங்கள் மீது பெரும் நெருக்குதல்களைக் கொடுக்கின்றன. இந்த நிலைமை தெற்காசியாவில் தீவிரமடைகிறது என்று ஐ.நா. கூறுகிறது.

1999 ஆம் ஆண்டு உலகின் சனத்தொகை 600 கோடியை எட்டியபோது 600 கோடியாவது வாசியாக பொஸ்னியா ஹெர்செகோவினாவின் சரஜீவோ நகரில் அகதிப் பெற்றோருக்குப் பிறந்த ஆண் குழந்தையொன்றையே அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் கோபி அனான் கட்டியணைத்துப் பிரகடனம் செய்தார். அட்னான் மெவிக் என்ற அக்குழந்தை இன்று வளர்ந்து 12 வயதுச் சிறுவனாக சரஜீவோவில் பிரபலமான ஒரு "பிரமுகர்' போன்று கொண்டாடப்படுகிறான். ஆனால் நேற்றைய தினம் பிறந்து 700 கோடியாவது உலகவாசியாகப் பிரகடனம் செய்யப்படவிருக்கும் குழந்தைக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரவணைப்பையும் முத்தத்தையும் பெறும் வாய்ப்புக் கிட்டுமா தெரியவில்லை. 700 கோடியாவது உலகவாசியாகக் கூடிய குழந்தை வறுமைக்குள் பிறக்குமாக இருந்தால் "முரண் பாடுகள் நிறைந்த உலகமொன்றிலேயே ' அது பிரவேசிப்பதாக அமையும் என்று செயலாளர் நாயகம் பான் கீமூன் ஏற்கனவே கூறியிருந்தார். உலகில் போதுமான அளவில் உணவு இருக்கின்ற போதிலும் 100 கோடிபேர் வெறுவயிற்றுடன் தான் நித்திரைக்குப் போகிறார்கள். சிலர் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் போது பலர் வறுமையில் வாடுகிறார்கள். பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், உயர்வு தாழ்வுநிலை, சகிப்புத்தன்மையின்மை போன்ற பிரச்சினைகளினால் உலகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. உலகம் பூராவும் பெரும்பாலான மக்கள் பீதியுடனேயே வாழ்கின்றார்கள். தங்களது அரசாங்கங்களும் உலகப்பொருளாதாரமும் தங்களை இடர்பாடுகளில் இருந்து விடுவிக்குமென்று பெரும்பாலான மக்கள் இனிமேலும் நம்புவதாக இல்லை என்று பான் கீமூன் எச்சரிக்கை செய்திருக்கிறார். இந்த எச்சரிக்கைக்கு மத்தியிலேயே 700 கோடியாவது உலகவாசி இன்று தாயாரின் அரவணைப்பில் இரண்டாவது நாளாகத் தூங்குகிறார்!

நன்றி தினக்குரல்

No comments: