பேர்த் நகரத்தில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் - மெல்பேர்ன் ஊடகப்பிரிவு

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம் 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்றது. நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்  ஒக்ரோபர் 28ம் திகதி வெள்ளிக்கிழமை பேர்த் நகரத்தில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், அவுஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்விலும், ஊர்வலத்திலும் பங்குகொண்டிருந்தார்கள்.


சனநாயகப் பண்புகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள பொதுநலவாய நாடுகளின் கட்டமைப்பிலிருந்து , சிறிலங்காவை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் , சிறிலங்காவில் சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியும் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு நிகழ்வுகள், மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதோடு, இந்நிகழ்வுகளை, அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து, செய்திகளை வெளியீட்டதோடு தமிழ் உணர்வாளர்களை செவ்விகளையும் கண்டிருந்தனர்.

தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தி பொதுநலவாய நாடுகள் கட்டமைப்பிலிருந்து சிறிலங்காவை நீக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்தும், போர்க்குற்றவாளியான சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கையை வற்புறுத்தியும், இக்கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அவுஸ்திரேலியாவின் முக்கிய தமிழ் அமைப்புக்களான நாடு கடந்த தமிழீழ அரசு, அவுஸ்திரேலியாவின் தமிழர் பேரவை, தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதிகளும் மற்றைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக ஓழுங்கு செய்து நடாத்தி இருந்தார்கள். அத்துடன் இக்கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக வந்திருந்த அதன் அங்கத்துவ நாடுகளின் சில உயர்மட்டப் பிரதிநிதிகளுடன், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளும் முக்கிய சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தனர்.
































No comments: