இலங்கைச் செய்திகள்

* கொழும்பு - யாழ்பாணம் இ.போ.ச. பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்


* திருகோணமலை தென்னைமரவாடி தமிழ்க் கிராமத்தில் சிங்களவர் அத்துமீறி விவசாயம்


* வெளிநாடுகளில் வாழும் யாழ்வாசிகள் இங்குள்ள தமது காணிகளை விற்பதில் ஆர்வம்


* வவுனியாவில் இருக்கும் போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவநம்பிக்கையுடன் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

- நாமினி விஜேதாஸ


* வன்னியில் இந்திய ராணுவக் குழு

*  பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வெற்றியா?


கொழும்பு - யாழ்பாணம் இ.போ.ச. பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்
1/11/2011

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் - கொழும்பு புதிய பஸ் சேவையொன்றை இன்று ஆரம்பித்துள்ளது. காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் அதே நேரம் யாழ்ப்பாணத்திலிருந்தும் பஸ் வண்டியொன்று கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.


வரக்காபொல, குருநாகல், அனுராதபுரம், மதவாச்சி, வவுனியா ஊடாக இச்சேவை இடம்பெறும். இதுகால வரை இ.போ.ச. இரவு நேர சேவைகள் மூன்றை மட்டும் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

திருகோணமலை தென்னைமரவாடி தமிழ்க் கிராமத்தில் சிங்களவர் அத்துமீறி விவசாயம்


 1/11/2011

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னைமரவாடி தமிழ் கிராமத்தில் சிங்களவர்கள் அத்துமீறி விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக இக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

போர் காரணமாக இக்கிராமத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் 1982 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீளக்குடியேறி விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்குச் சொந்தமான வயல் நிலத்தை உழுது பண்படுத்தியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு வருகை தந்த சிங்கள விவசாயிகள் குறித்த வயல் நிலங்களில் நெல் விதைகளைத் தூவிவிட்டுச் சென்றிருப்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கேசரிக்குக் கருத்துத் தெரிவித்த குச்சவெளி பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஆதம்பாவா தௌபீக்,

"தமிழ் மக்களுக்குச் சொந்தமான இக்கிராமத்தில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறவும் விவசாயம் செய்யவும் முற்படுவதானது மீண்டும் இப்பிரதேசத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் ஏற்பட வழிவகுக்கும்.

இடப்பெயர்வுக்கு முன்னர் இக்கிராமத்தில் 456 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இம் மக்களை மீளக்குடியேற்றுவதில் அரசாங்கம் எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. இம் மக்கள் தமது சொந்த முயற்சியின் காரணமாகவே மீண்டும் குடியேறி விவசாய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடிரவாக அத்துமீறி நுழைந்த சிங்கள விவசாயிகள் நெல்விதைகளைத் தூவிவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்செயற்பாடானது மீண்டும் இப்பிரதேசத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்பட வழிவகுக்கும்" என்றார்.
எம்.பி.எம். பைரூஸ் / வீரகேசரி

வெளிநாடுகளில் வாழும் யாழ்வாசிகள் இங்குள்ள தமது காணிகளை விற்பதில் ஆர்வம்

Monday, 31 October 2011

யாழ்.குடா நாட்டில் காணிப்பதிவு வேலைகள் இடம்பெறுவதால் வெளிநாடுகளில் வாழும் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் தற்போது இங்கு வந்து தமது காணிகள், வயல்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

சிலர் தமது உறவு முறையானவர்களில் தமக்கு ஒருநேரம் காணியைத் திருப்பித்தருவார்கள் என்ற நம்பிக்கையுடையவர்களுக்கு எழுதிக்கொடுக்கின்றனர்.

வெளிநாட்டில் வாழும் குடாநாட்டைச் சேர்ந்தவர்களில் சிலர் தமது காணிகளை நிர்வகிக்க சட்ட உரித்து அனுமதியை உறவினர்களுக்கு முன்பு வழங்கியிருந்தனர்.

இப்படியானவர்களும் வந்து சட்ட உரித்து அனுமதியை இரத்துச் செய்துவிட்டுக் காணியை விற்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படியானவர்களின் காணிகளை விற்றுக்கொடுப்பதில் தரகர்களும் தீவிரமாக செயற்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

காணிப்பதிவு நடவடிக்கையால் வெளிநாட்டவர்களின் காணிகளை அரசு சுவீகரிக்கவுள்ளதாக சிலர் தெரிவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல்

வவுனியாவில் இருக்கும் போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவநம்பிக்கையுடன் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.- நாமினி விஜேதாஸகண்டுபிடித்தும் கைக்கு எட்டாதது

Vavuniya re1அவளது குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் சொந்தமான கிழிந்துபோன கந்தல் துணிகள் யாவும் தகரம், களிமண் மற்றும் பிளாஸ்டிக் கூரைத்தகடுகள் என்பனவற்றின் கூட்டணியில் உருவான அவளது வீட்டுக்குள் இருந்த சிறிய கயிற்றுக் கொடியில் தொங்கிக் கொண்டிருந்தன.சத்தத்துடன் கூரைமேல் விழுந்து கொண்டிருந்த மழை,ஒரு சிறிய துவாரத்தைக் கண்டுபிடித்து அதனுடாக களிமண் தரையில் தாளத்தோடு சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது.

கதிர்காமத்தம்பி கலைச்செல்வி எனும் அந்தப் பெண் அழுக்குத்தரையில் சம்மணமிட்டு அமர்ந்தவாறு ஒரு ஏ-4 அளவு காகிதத்தில் பதியப்பட்ட கணணி அச்சுப்பதிவை இமைக்காது தீவிரமாக வெறித்துப் பார்த்த வண்ணமிருந்தாள். அது யுத்தத்தின் இறுதிப்பகுதியில் காணாமற்போய் பல மாதங்களின்பின் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் தனது தாயை இனங்காண முடியாதுள்ள எட்டுவயதான அவளது மகள் கிருபாலினியின் படம்.

கலைச்செல்வி தனக்கு 36 வயது எனச் சொல்கிறாள். அவளுக்கு 11 வயதான யசிந்தன் மற்றும் 6 வயதான ஹரிஹரன் என்கிற வேறு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவளது தலைமுடி எல்.ரீ.ரீ.ஈ பெண் போராளிகள் வழக்கமாக அணிவதைப்போல இரண்டாக பகிர்ந்து பின்னி முறுக்கிக்கட்டி முடிச்சுப்போட்டு இருபக்கமும் விடப்பட்டிருந்தன.புலிகளுடன் முன்பு தங்களுக்கு இருந்த பழைய தொடர்புகளைப் பற்றிய எதையும் அவள் இரகசியமாக வைத்திருக்கவில்லை. அதை மறைப்பதால் இப்போது பயன் என்ன?

கலைச்செல்வியின் கணவர் ஒருகாலத்தில் புலிகளின் பக்கமிருந்து சண்டையிட்டவர்தான் ஆனால் சண்டை மிகவும் மோசமான நிலையை அடைந்தபோது, அவர் தனது குடும்பத்தினருக்காக வேண்டி புலிகளைக் கைவிட்டார்..இராணுவத்தினர் முன்னேறி வந்து கொண்டிருந்தபோதுகூட அவர்கள் வன்னியில் இருப்பதையே தெரிவுசெய்திருந்தார்கள். ”நாங்கள் சாதாரணமாக நகர்ந்து நகர்ந்து, எங்கள் நகர்ச்சி முள்ளுவாய்க்காலில் ஒரு முடிவுக்கு வரும்வரை போய்க்கொண்டேயிருந்தோம்” என்று கலைச்செல்வி பழையதை நினைவு மீட்டினாள். அங்கு அடைபட்டிருந்த நூறாயிரக்கணக்கான மற்றவர்களுடன் இவர்களும் கலந்து காத்திருந்தார்கள். மே 2009 ல் ஒருநாள் அவளது கணவன் தான் உணவு கொண்டு வரப்போவதாகவும், குடிநீர் கொண்டுவந்து வைக்கும்படி அவளிடம் கூறினார்.அவர்கள் தங்கள் குழந்தைகள் மூவரையும் அருகருகே அமர்ந்திருக்கும்படி செய்துவிட்டுப் போனார்கள். கலைச்செல்வி தண்ணீருடன் திரும்பிவந்து பார்த்தபோது அவரது கணவரையும் கிருபாலினியையும் காணவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

யுத்தம் முடிவடையும் தருணத்தில் கலைச்செல்வியும் அவளது இரண்டு குழந்தைகளும் வன்னியை விட்டு தப்பிச்சென்று மெனிக் பாமில் இரண்டு வருடங்கள் வரை வாழ்ந்தார்கள். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிலையம்,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்,அதிகாரிகள், இராணுவத்தினர், பத்திரிகைகள் என சகலரிடமும் கலைச்செல்வி தனது கணவனையும் மகளையும் பற்றிய செய்திகளுக்காக இரந்து மன்றாடினாள். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

கலைச்செல்வி வன்னியில் தனது சகல உடமைகளையும் விட்டுவிட்டு வந்திருக்கலாம., ஆனால் யுத்தம் நடைபெற்ற சமயத்தில் ஒடிய மற்றும் பலரையும்போல அவள் தனது மகளின் புகைப்படங்களை போகுமிடமெல்லாம் எடுத்துச் சென்றாள். தங்கள் குடும்ப அங்கத்தினர்களை காணாமற் போக்கடித்தவர்களுக்கு இன்று இவைகள்தான் தங்கள் கைகளிலுள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த பொக்கிசங்கள். அதில் ஒரு படத்தை சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்திடம் கொடுத்தபோது அவர்கள் அதை ஒரு செய்திப் பத்திரிகையில் பிரசுரித்தார்கள்.

இதற்கிடையில் அவர்கள் மெனிக் பாமை விட்டு வெளியேறி, தங்கள் சொந்தக் கிராமமாக இல்லாது போனாலும் வன்னியில் வேறிடத்தில் குடியேறினார்கள். கலைச்செல்வியால் தனது அசல் கிராமத்துக்குச் செல்ல முடியாது,ஏனெனில் அவளது மாமியார் தனது மகனின் இழப்புக்காக அவள்மீது பழி சுமத்துவார். அதைத் தவிர ஒருகாலத்தில் அவர்கள் “புலிகளின் குடும்பமாக” இருந்தபடியால், மற்றவர்கள் வசதியாக அவர்களை அந்தத் தரப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தார்கள். போர் முடிவடைந்ததும் புலிகள் இல்லாது போய்விட்டார்கள், ஆனால் அந்த வடு காரணமாக இவர்கள் ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

கலைச்செல்வி பின்னாளில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், வவுனியாVavuniya re2 மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் என்பனவற்றின் கூட்டாகச் செயல்படும் குடும்பங்களின் தடமறிந்து மீள் இணைக்கும் பிரிவு (எப்.ரி.ஆர்) ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு, தனது புகைப்படங்களுடன் அந்த அலுவலகத்தை தேடிப் பயணமானாள். 2009 டிசம்பரிலிருந்து காணாமற்போன குழந்தைகள் சம்பந்தமாக அந்தப் பிரிவுக்கு 690 புகார்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. அவர்கள் அவளது விபரங்களை பதிவு செய்து கொண்டபின் அவளது மகளின் புகைப்படத்தையும் ஊடுகதிர் (scanner) மூலமாக தங்கள் தரவுத் தளத்தில் பதிவு செய்துவிட்டு அவளை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

சில மாதங்களுக்குப் பின்னர் எப்.ரி.ஆர் இலிருந்து ஒரு பெண் கலைச்செல்வியின் கைத் தொலைபேசிக்கு – நாங்கள் விஜயம் செய்து ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் எத்தகைய ஆதரவற்ற நிலையிலிருந்தாலும் அதற்குப் பொருத்தமற்ற ஒரு உபகரணமாக இந்த கைத் தொலைபேசி அவர்களிடம் காணப்பட்டது – அழைப்பொன்றை விடுத்திருந்தார்.” நான் அங்கு சென்றேன் அவர்கள் எனது மகளைக் காண்பிக்கவில்லை, ஆனால் நிறைய புகைப்படங்கள் உள்ள கணணி ஒன்றைக் காண்பித்தார்கள்” என்று சொன்னாள் கலைச்செல்வி. கணணித்திரையில் கிருபாலினியின் உருவம் தெரிந்த அந்தக் கணமே அவள் தன் மகளை அடையாளம் கண்டு கொண்டாள்.

எப்.ரி.ஆர் அமைப்பினால் ஒரு சிறுவர் இல்லத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் பிள்ளைக்கு இப்போது கிட்டத்தட்ட எட்டு வயதிருக்கும். அவர்கள் அந்தச் சிறுமியை அவளது குடும்பத்தினருடன் சாத்தியமான அளவுக்கு பொருத்தம் செய்து பார்ப்பதற்காக ஒரு பயணத்துக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகளுடன் சென்ற கலைச்செல்வி முதன்முறையாக தனது மகளைச் சந்தித்தபோது அந்தச் சிறுமியால் தனது தாயை அடையாளம் காணமுடியவில்லை.

கலைச்செல்வி திடீரென எங்கள் காலடியில் விழுந்து கைகூப்பி வணங்கியபடி கதறி அழுதாள். அவள் கைகளால் தனது மார்பில் அறைந்து கொண்டு வேதனையுடன் கதறினாள், அவளுக்கு அவளுடைய மகளை, அவளுடைய சின்ன அம்மாச்சியை திரும்பவும் வேண்டும். ஆனால் இந்த விடயம் முடிவுக்கு வருவதற்கு வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் தாய்க்கும் மகளுக்கும் இடையே ஒருகாலத்தில் இருந்த உறவைப் புதுப்பிக்க கருத்துரைளை வழங்கினார்கள். இந்தக் கணம்வரை கிருபாலினி தனது தாயாருடன் மீண்டும் இணைவதற்கு சாதகமாக சாய்வதாகத் தெரியவில்லை. அவள் எப்படித் தனது ஞாபகங்களை இழந்தாள் என்பதும் தெளிவில்லாத ஒன்றாக தேங்கி நிற்கிறது.

பராமரிப்பு அதிகாரிகள் கலைச்செல்வி வாழும் சூழ்நிலையை கவனத்தில் எடுத்துள்ளார்கள். அவளுக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை. அவளது இரண்டு மகன்களும் பாடசாலைக்குச் செல்வதில்லை. அதற்கு அவர்களுக்கு ஆடைகள்,புத்தகங்கள், காலணிகள் என்பன தேவையாக உள்ளன. அவர்கள் மிகவும் மோசமாக உடையணிந்து அழுக்காக மற்றும் மோசமான வறுமைக் கோலத்தில் காட்சியளிக்கிறார்கள்.

“நான் வேறு ஒருவருடைய காணியில் வசிப்பதால், எங்காவது ஓரிடத்தில் ஒரு வீட்டை அமைக்கும்படி எனக்கு கூறப்பட்டுள்ளது” என்று சிணுங்கினாள் கலைச்செல்வி.” நான் வீதி வேலை செய்கிறேன், நான் நினைக்கிறேன் அவர்கள் எனது பணத்தை வங்கியில் வைப்புச் செய்து வருகிறார்கள் என்று. மேலும் நான் பங்கீட்டு உணவை பெற்று வருவதோடு,எனது மீள் திரும்பலுக்காக கிடைத்துவரும் கொடுப்பனவும் வங்கியில் வைப்பில் உள்ளது......” என்று தொடர்ந்து கூறினாள்.

“இது குழந்தைகளைக் கண்டுபிடித்து ஒரு இணைப்பை ஏற்படுத்த போதுமானதாக இல்லை” என யுனிசெஃப்பின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான மனுரு டீன் விளக்கினார். ”சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் குழந்தை ஒரு நல்ல பாதுகாப்பான சூழலுக்கு திரும்புகிறாள் என்று திருப்திப்பட வேண்டும். அவள் திரும்பச் சென்றதும் அவளுக்குத் தேவையான உணவு உடைகள் என்பனவற்றைப் பெறுவதற்கு ஏற்ற போதிய நிதிநிலை உள்ளதா என அவர்கள் மதிப்பீடு செய்ய இருக்கிறார்கள். அதன்பின் நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கும்”.

உணவின் பிரதான பாகங்களைக் கொண்டிருந்த மூன்று சமையல் பானைகளைச் சுற்றி ஈக்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஒரு ஒட்டுப் பலகைத் துண்டின்மேல் சிறிய போத்தலில் முகத்துக்குப் போடும் வாசனைப் பொடி,ஒரு மயிர் செருகி, சிறிய கண்ணாடி, மற்றும் தேங்காய் எண்ணை என்பன வைக்கப் பட்டிருந்தன. கலைச்செல்வி அந்தக் கணணிப் பதிவுத் தாளின் மேலிருந்து தனது முகத்தை மெதுவாகத் திருப்பியபடி “எனது கணவர் திரும்பி வந்ததும் நான் இங்கிருந்து போய்விடுவேன், குறிசொல்பவர்கள் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். எனது மகளைப் பற்றியும் அவர்கள் இதேபோலச் சொன்னார்கள்” என்று சொன்னார்.

சிதைந்துபோன சிறு பிராயம்

ஒன்பது வயதான இராஜேஸ்வரன் விதுஷன் என்ற சிறுவனின் வவுனியா வீட்டை நாங்கள் அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. ஒரு குப்பி விளக்கின் சிறிய வெளிச்சம் திருகிப் போயிருந்த அவனது வலது காலின்மீது விழுந்தது.என்ன நடந்தது என்று அவனிடம் கேட்டபோது “ஷெல்” என்று அவன் பதிலளித்தான். அந்தச் சிறுவன் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளையே பேசினான். அவனது கதை தொடர்பில்லாததாகவும் சிலசமயங்களில் சம்பவங்களுடன் இசைவற்றதாகவும் இருந்தது. அநேகமாக அவன் மௌனமாக உங்களை வெறித்துப் பார்க்கிறான்.

அவன் சொல்வது யுத்தம் முடிவடையும் சமயத்தில் அவன் தனது மூத்த சகோதரியுடன் முத்தையன்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு எறிகணை தங்கள்மீது வந்து விழுந்ததாக. அவனது சகோதரி ,பாட்டனார் மற்றும் பாட்டி ஆகியோர் அதில் கொல்லப் பட்டார்கள். விதுஷன் மோசமான காயங்களுக்கு உள்ளானான். அடுத்து என்ன நடந்தது என்ற விபரங்களை அவனால் நினைவுபடுத்த முடியவில்லை. இவையெல்லாம் நடக்கும்போது விதுஷன் முதலாம் வகுப்பு மாணவன். அவனது சகோதரி மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். யுத்தம் காரணமாக பாடசாலைகள் யாவும் மூடப்பட்டன, மற்றும் விதுஷன், அவனது சகோதரி, பாட்டனார் மற்றும் பாட்டி ஆகியோர் பலதடவைகள் இடம் பெயர்ந்தார்கள். அவனது தந்தை இதற்கு முன்பே குடும்பத்தைக் கைவிட்டுச் சென்றுவிட்டார்.வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு வேண்டிய சம்பாத்தியத்துக்காக அவனது தயார் வெளிநாடொன்றில் வேலை செய்கிறார். அவனது தாயார் எங்கே என்று கேட்டால் “வெளிநாட்டில” என்று விதுஷன் பதிலளிக்கிறான்.

Vavuniya re3அந்தச் சிறுவனின் உறவுவழி சகோதரனான ஒருவர் சொன்னது, விதுஷன் முல்லைத்தீவிலிருந்து கப்பல் வழியாக புல்மோட்டையிலிருந்த ஒரு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு,அங்கு இந்திய வைத்தியர்கள் அவனுக்கு சிகிச்சையளித்தனர். அதன் பிறகு வவுனியா வைத்தியசாலைக்கு அவன் மாற்றப்பட்டான் மற்றும் அதன்பின் அவனது குடும்பத்தினருக்கு அவனைப் பற்றிய தகவல்களோ இருக்குமிடமோ தெரியாமற் போனது. அவன் எந்த வைத்தியசாலையில் இருக்கிறான் அல்லது அவன் உண்மையில் உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்து விட்டானா என்று யாருக்குமே தெரியவில்லை.

இதற்கிடையில் அவனது தயார் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விதுஷனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். குடும்பங்களை தேடிக் கண்டுபிடிக்கும் விளம்பரம் ஒன்றைப் பார்த்ததின் பின்னர் அவர் விதுஷனுடைய விபரங்களையும் அவனுடைய புகைப்படத்தையும் எப்.ரி.ஆர் இடம் கையளித்தார். சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் அவனது புகைப்படத்தை பத்திரிகை ஒன்றில் விளம்பரப் படுத்தியது ஆனால் விபரங்களோடு யாரும் முன்வரவில்லை. சில வாரங்களுக்கு முன்புதான் எப்.ரி.ஆருக்கு புல்மோட்டையில் சிகிச்சை பெற்ற ஒரு குழந்தை வவுனியாவுக்கு மாற்றப்பட்டு அது இப்போது ஒரு நிறுவனத்தில் வாழ்ந்து வருகிறது,என்கிற தகவல் கிடைத்து அந்த விடயம் பற்றித் தடுமாற்றத்தில் இருந்தது. அவர்களது வழக்கு நீதிமன்றம் ஒன்றினால் பரிசீலிக்கப் பட்டதன் பின்னர் தாயும் மகனும் விரைவிலேயே திரும்பவும் இணைந்து விட்டார்கள்.


tamil women-3ஒரு மாதத்துக்குப் பின்னர் விதுஷனின் தாயார் அவனை அவனது சித்தியின் பராமரிப்பில் ஒப்படைத்துவிட்டு திரும்பவும் வெளிநாட்டுக்குப் போய்விட்டார்.விதுஷனின் சகோதரி ஒருவர் மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் உள்ளார்.அவனது சித்தி ஒரு பண்ணை கூலித் தொழிலாளி.”நான் இன்று அதிகம் வேலை செய்துவிட்டேன் எனது முதுகு உண்மையில் மிகவும் வலிக்கிறது” என்று எங்களிடம் சொன்னார் அவர்.


விதுஷன் நிரந்தரமாகவே முடமாகி விட்டதுடன் மற்றும் தொடர்ச்சியாக மருத்துவ பரசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வருகிறான். அவனது கால் ஒரு வித்தியாசமான கோணத்தில் திரும்பியிருக்கிறது. இருந்த போதிலும் பேரூந்து வராத நாட்களில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு அவன் நடந்தே செல்கிறான. அவன் தமிழ், கணிதம் ஆகிய பாடங்களை மிகவும் விரும்புகிறான். எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறாய் என அவனிடம் கேட்டபோது “டாக்டர்” என பல்லைக்காட்டி சிரித்தபடியே பதில் சொன்னான்.

இன்னமும் காணவில்லை

வவுனியா சேமமடுவில் உள்ள 49 வயதான சாந்தகுமார் கமலாவின் வீட்டு முற்றத்தில் ஒரு சேவல் தன் அலகினால் கொத்தி எதையோ தின்றபடி நடக்கிறது. அப்போது நேரம் அதிகாலை.அவரது கணவர் துரைராசா வேலைக்காக வெளியே சென்றிருக்கிறார், ஆனால் அவரது மகன் தனுதாசன் வீட்டில் இருக்கிறார். அவர் எல்.ரீ.ரீ.ஈ யினால் 2008ல் வலுக்கட்டாயமாக அவர்கள் படையில் இணைக்கப்பட்டார், ஆனால் விரைவிலேயே அங்கிருந்து வவுனியாவுக்கு ஓடிவந்து விட்டார்.காவல்துறையினர் அவரை தடுப்புக்காவலில் வைத்தனர் மற்றும் அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னால் பத்து மாதங்கள் வரை சிறையில் கழிக்க வேண்டியேற்பட்டது. அவர் இன்னமும் நீதிமன்றத்துக்கு சமூகமளித்துக் கொண்டிருக்கிறார். தனுதாசன் கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆளாகும் நேரத்தில் அப்போதுதான் தனது உயர்தரக் கல்வியை முடித்திருந்தார். ”எனக்கு இப்பொழுது இருபத்தியொரு வயது” எனக் கூறினார் அவர். “இந்த ஆட்சேர்ப்பைத் தவிர்ப்பதற்காக நான் பாடசாலையைக்கூட இரண்டு வருடங்கள் கைவிட்டிருந்தேன்” கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தார் தனுதாசன்.

இதற்கிடையில் இராணுவப் படைகள் எல்.ரீ.ரீ.ஈக்கு அருகில்tamils in srilanka நெருங்கிவிட்டதால் கமலாவும் அவரது குடும்பத்தினரும் வன்னியின் ஆழமான உட்பகுதியை நோக்கி ஓடிவிட்டார்கள். அவர்கள் கனகராயன்குளத்திலிருந்து முத்தையன்கட்டுக்கும், புதுக்குடியிருப்பிலிருந்து இரணைப்பாலைக்கும் மற்றும் தேவிபுரத்திலிருந்து இரட்டைவாய்க்காலும் அலைந்து கொண்டேயிருந்தார்கள். அவர்களோடு 16வயதான அவர்களது கடைசி மகன் தனுராஜூம் இருந்தார். 26 பெப்ரவரி 2009ல் தனுராஜ் பதுங்கு குழி ஒன்றினுள் உறங்கிக் கொண்டிருந்தவேளை அவர்கள் அவனைத்தேடி வந்தார்கள். ”ஒரு பிக்அப் வாகனத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினர் வந்தார்கள்” என்றார் கமலா.” அந்த பதுங்கு குழி வீதிக்கு வெகு அருகில் இருந்ததால் எங்களால் அவனை மறைக்க முடியவில்லை. நான் அவர்களிடம் மன்றாடினேன். அவனுக்கு 16 வயதுதான் ஆகிறது என்று நான் அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் அவனது வயதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று பதிலளித்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் யாராவது ஒருவர் அவர்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என அவர்கள் வற்புறுத்தினார்கள்” என கமலா தொடர்ந்து கூறினார்.

அந்தப் போராளிகள் கமலாவை பிற்பாடு தங்கள் முகாமுக்கு வரும்படி சொன்னார்கள். அவள் தங்கள் தளபதியுடன் பேசமுடியும் என்றும் மற்றும் தனுராஜைப் போகும்படி அவர் சொன்னால் தாங்கள் அவனை விடுவிப்பதாகச் சொன்னார்கள். கமலா அதையும் முயற்சித்துப் பார்த்தார், ஆனால் அது வெற்றியளிக்கவில்லை. பதிலாக அவர்கள் கமலாவின் குடும்பம் ஒரு அங்கத்தவரை கொடுத்து விட்டதாகவும் இன்னொருவரை வழங்கத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும், ஒரு போராளி அட்டையை அவரிடம் கையளித்தார்கள்.

அவர் தனுராஜைப் பார்த்தது அதுதான் கடைசி. அவரது கட்டாய ஆட்சேர்ப்பு நடந்து ஐந்து நாட்களுக்கிடையில் அவர்கள் திரும்பவும் இடம்பெயர்ந்தார்கள். இந்தக் கிராமத்தின் பெயரை அவரால் நினைவு படுத்த முடியவில்லை,ஆனால் அவர்கள் ஒரு கடற்கரை அருகே இருந்ததாக அவர் சொன்னார். 17வயதான தனது மகளை கட்டாய ஆட்சேர்ப்பில் பறிகொடுத்த மற்றொரு பெண்மணியுடன் சேர்ந்து கமலா தனது மகனைத் தேடியலைந்தார். அந்தப் 17 வயதுப் பெண் போர் முடிவடைவதற்கு முன்பே எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்து தப்பித்து வந்து தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டாள்.

மார்ச் மாதமளவில் கமலாவின் கணவருக்கு கையில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது, அதற்கு எல்.ரீ.ரீ.ஈயினர் மாத்திரைகளை வழங்கினார்கள். ”துப்பாக்கி ரவைகள் சகல திசைகளிலிருந்தும் பாய்ந்து வந்தன. மிகவும் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது” என்று கமலா சொன்னார். ஏப்ரல் மாதமளவில் நந்திக் கடலேரியின் மேலுள்ள வட்டுவாய்க்கால் பாலத்தினூடாக வன்னியை விட்டு வெளியேற துடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்துடன் அவர்கள் இணைந்து கொண்டார்கள். ஏன் அந்தப் பகுதியை விட்டு முன்னரே வெளியேறவில்லை என்று கேட்டதுக்கு எல்.ரீ.ரீ.ஈ அவர்களை போக அனுமதிக்கவில்லை என்று கமலா சொன்னார். ”அவர்கள் எங்களுக்கு அனுமதி அட்டைகளை வழங்கவில்லை, எங்களை உட்பக்கமாக நகரும்படியே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.”

“நாwarcrimeன் மயங்கி விழுவதற்கு முன் தண்ணீருக்குள் மனித உடலகள் கிடப்பதைக் கண்டேன்” என்று கமலா கூறினார். அவை எத்தனை என்று எனக்குத் தெரியாது ஆனால் அவை ஏராளம் என மற்றவர்கள் சொன்னார்கள்.” ஓமந்தையில் ஒரு இரவைக் கழித்த பின் பேரூந்து மூலம் மெனிக் பாமை நோக்கிச் சென்று கொண்டிருந்த நூற்றுக் கணக்கானவர்களோடு கமலாவும் இணைந்து கொண்டார். அவர் எல்லா இடங்களிலும் மேன்முறையீடுகளை மேற்கொண்டு தனுராஜை தேடுவதை மீண்டும் தொடரலானார். ஜனவரி 2010ல் கமலா தனுராஜின் விபரங்களை எப்.ரி.ஆர் க்கு கொடுத்தார். ஆனால் அவர்களால் அவனைக் கண்டுபிடிக்க இயலவில்லை.” அவர்கள் தங்களுடைய கணணியில் பரிசோதித்தார்கள் ஆனால் பொருத்தமான உருவம் எதுவும் கிட்டவில்லை” கமலா விசும்பினார். தனுசாந்தன் ஈக்களை அகலமான மட்டையினால் அடித்துக் கொண்டிருந்தான். கரையான்களை விரட்டுவதற்காக அவர்களின் களிமண் சுவர்களில் பூசியிருந்த மாட்டுச்சாணத்தின் மணம் எங்கும் வீசியது. பீட்ரூட் கிழங்கின் துண்டுகள் தரையில் பரவிக் கிடந்தன.

“கடைசி நாட்களில் நான் அங்கு இருக்கவில்லை ஆனால் அவன் எங்காவது இருப்பான என நான் நம்புகிறேன்.” என்று கமலா தெரிவித்தபடி, கல்லூரிச் சீருடையிலும் மற்றும் மாணவ சாரண உடையிலும் காட்சி தரும் மிடுக்கான ஒரு இளைஞனின் புகைப்படத்தைக் காண்பித்தார். ஒரு காலத்தில் அவர்களும் மிகவும் வசதியாக வாழ்ந்தவர்கள்தான்,அவர்களுக்கு ஏழு ஏக்கர் நெல் வயல்கள், ஒரு வீடு,ஒரு உழவு இயந்திரம், மற்றும் இரண்டு சீருந்துகள் என்பன சொந்தமாக இருந்தன. இப்போது வெறுமே தங்கள் மகன் திரும்பக் கிடைத்தாலே போதும் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைவார்கள்.

குடும்பங்களின்; தடமறியும் பிரிவு காணாமற் போனவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது

2009 ல் போரின் உச்சநிலையின்போது நூற்றுக் கணக்கான குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போயுள்ளார்கள்.வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மனிக் பாம் வளாகத்தினுள்ளேயே பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியை தொடங்கி வைத்தார்.ஆனால் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் காணாமற்போன குழந்தைகளைப் பற்றிய முறைப்பாடுகளை தொடர்ந்து பெற்று வந்தார்;கள்.டிசம்பர் 2009ல் யுனிசெஃப்பின் ஆதரவுடன் மாவட்டச் செயலகத்தில் குடும்பங்களின்; தடமறியும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 2011 வரை அது காணாமற்போன குழந்தைகளின் குடும்பத்தினரிடமிருந்து 690 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது,என்றும்; அதன் தவைரான பிரிகேடியர் ஜே.பி.கல்கமுவ தெரிவித்தார். இவற்றில் 490 விண்ணப்பங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு இலக்காகியவர்களைப் பற்றியது.இந்தப் பிரிவு தங்கள் தரவுத்தளத்திலிருந்து விண்ணப்பங்களுடன் பொருந்தக்கூடிய 113 பெயர்களைக் கண்டு பிடித்துள்ளது

இவற்றில் 29 பிள்ளைகள் ஏற்கனவே அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையான மற்ற விண்ணப்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நன்றி : லக்பிம நியுஸ்
தமிழில்: எஸ்.குமார்
நன்றி தேனீ

வன்னியில் இந்திய ராணுவக் குழு


03 Nov 2011

கொழும்பு,நவ.2: இந்திய ராணுவத்தினர் இலங்கையின் வடபகுதியான தமிழர்கள் அதிகம் வசிக்கும் வன்னிப் பகுதிக்கு புதன்கிழமை சென்றனர்.

விமானக் கமோடர் பி.ஆர்.நாவல்கர் தலைமையில் 16 பேர் அடங்கிய குழுவினர் வன்னி சென்றுள்ளனர். இவர்கள் 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இப்பயணத்தில், வன்னியிலுள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம், ஆயுதப்படை அலுவலகம்,மறுசீரமைப்பு ஆணைய அலுவலகம்,தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை ராணுவத்தினர் பார்வையிட உள்ளனர்.

இலங்கையின் லெப்டினென்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யாவை மரியாதை நிமித்தமாக இந்தியக் குழுவினர் சந்தித்தனர்.

இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி தினமணி

பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வெற்றியா?


3/11/3/2011

'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற கதையாகத்தான் இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலை இருக்கின்றது. ஆம், போர்க்குற்றச்சாட்டுக்கள் அல்ல எந்தவொரு குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டாலும் கூட நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப்போவதில்லை என்பதனையே ஆளுந்தலைமை உட்பட அரசாங்க அமைச்சர்கள் அனைவரினதும் கருத்தாக இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நடத்திய ஊடகவியலாளர் மாநட்டில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பெருமிதம் அடைந்துள்ளார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் பொதுநலவாய மாநாட்டை சமாளித்து வந்து விட்டோம் என்பதாகத் தான் இவரது கருத்து அமைந்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு அவஸ்திரேலியா சென்றபோது, இலங்கைக்கு எதிராக பல நகர்வுகள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நகர்வுகளாகவே இருந்தன.

இதில் முக்கியமானது,

01. ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட போர்க் குற்ற வழக்கு.

02. அடுத்த பொதுநலவாய மாநாட்டை 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்கு எதிராக கனடா மேற்கொண்ட முயற்சிகள்.

03. ஜனாதிபதிக்கும் இலங்கைக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்.

இவை தொடர்பில் பொதுநலவாய மாநாடு நடப்பதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகள் வெளிக் கிளம்பியன. இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதனை தடுப்பதற்கு முற்பட்டாலும் இலங்கை அதிலிருந்த எவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பொதுநலவாய நாட்டுக்கு மகிந்த ராஜபக்ஷ இலங்கையிலிருந்த செல்லும் முன்பே அவுஸ்திரேலியா குடியுரிமைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மெல்போர்ன் நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கொன்றை தாக்கல் செய்தார். இதனால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தாம் பங்கு கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அரச தரப்பில் பல்வேறு தடுமாற்றங்கள் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி மகிந்தவின் அவுஸ்திரேலியா விஜயம் பல்வேறு நாடுகளின் அவதானத்திற்கும் உட்படுத்தப்பட்டதைக் காணலாம். இந்நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற ஜனாதிபதி, அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார்.

எனினும், மெல்போர்ன் நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க வேண்டுமாயின் அதற்கு அந்நாட்டு சட்டமா அதிபரின் அனுமதி பெற்றப்பட வேண்டும். எனினும் அவுஸ்திரேலியா சட்டமா அதிபர் வழக்கை விசாரிக்க அனுமதியளிக்க முடியாதெனவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அரசுக்கு உள்ள பொறுப்புகளையும், உள்நாட்டுச் சட்டங்களையும் மீறும் வகையில் வழக்கு இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் அந்நாட்டு சட்டமா அதிபர் திணக்களம் அறிவித்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் ஆதரவில் அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கு இலங்கை தரப்பிலிருந்து பலத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இதில் முக்கியமான அம்சமொன்றை குறிப்பிட்டாக வேண்டும். அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை பெரும் அச்சத்துடன் பங்கேற்றது. பல நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை பங்குபற்றியிருந்ததுடன், இக்கூட்டத்தொடரின் போது பல்வேறு சவால்களையும் எதிர்நோக்கியது என்பதையும் மறுக்க முடியாது.

இந்த கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு இலங்கைக்கு திரும்பிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க சர்வதேசம் எம்மை ஒன்றும் செய்து விடாது நாம் ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோலதான் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா சட்டமா அதிபர் திணைக்களம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியாதென மேற்கொண்ட தீர்மானமானது சர்வதேச ரீதியில் இலங்கை ஜனாதிபதிக்கு மிகப்பெரும் பாதுகாப்பை அளித்துள்ளதையும் நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.சர்வதேச ரீதியாக தம்மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென்ற செய்தியை எதிர்காலத்தில் இலங்கை தரப்பு அதிகளவும் தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவும் இது உதவலாம். அதேநேரம் இந்த பொதுநலவாய மாநாடானது மற்றுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. 2013 ஆம் ஆண்டில் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் கனடா போன்ற நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியதுடன், இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், அவ்வாறு தமது எதிர்ப்பையும் மீறி இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுமாயின் அதில் தாம் பங்குகொள்ளப் போவதில்லையெனவும் அறிவித்திருந்தது. இதனால், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதியளிக்கப்படுமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்திருந்தது.

இருப்பினும் சில மேற்குலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், இந்தியாவின் பலமான ஆதரவின் துணையுடன் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'பல்வேறு எதிரப்;புகளுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டில் நாம் கலந்துகொண்டோம். இதில் மூன்று முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.பொதுநலவாய மாநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை பிரச்சினைகள் தொடர்பில் பிரசாரம் செய்வதற்கு முற்பட்ட போதும் அதற்கு 15 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் விசாரணை மேற்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வாங்கப்பட்டமை, 2013 ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு அங்கத்துவ நாடுகள் அனைத்தும் இணக்கம் தெரிவித்தமை போன்ற முக்கிய பிரதான காரணங்கள் இலங்கைக்குப் பெரும் வெற்றியைத் தந்துள்ளன.

பொதுநலவாய மாநாட்டில் இலங்கை பங்குபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நாம் அதில் கலந்துகொண்டு பெரும் வெற்றி கண்டுள்ளோம்"


இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமைகள் மீறல் தொடர்பில் எந்த ஆதாரத்தை காட்டியும் குற்றம் சுமத்தப்பட்டாலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கைத் தரப்பினர் முற்றாக மறுத்து வருவதே வழமையாக உள்ளது. இந்நிலையில், உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்கததை கட்டியழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதன் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவுஸ்திரேலியத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் காத்திருந்த ஆபத்திலிருந்து தாம் தப்பித்துவந்துவிட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொண்டாலும், ஜனாதிபதி செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், வழக்ககளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்த மாநாடும் உணர்த்தியிருக்கின்றது.

அத்துடன், 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஜனாதிபதியின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் நடைபெறும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், கனடா போன்ற நாடுகள் எதிர்காலத்தில் இதற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் கூறிவிடவும் முடியாது. போர்க் குற்றச்சாட்டு உயிர்ப்புடன் இருக்கும் நிலையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் தொடரத்தான் செய்யும்!

ஜீவா சதாசிவம் /வீரகேசரி இணையம்


No comments: