.
அண்மைய பத்திரிகை செய்தி ஒன்றின் படி காங்கேசன்துறை சீமேந்துக் கைத்தொழிற்சாலை அரசின் அனுசரணையுடன் மீண்டும் இயங்க தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலை ஆரம்பித்த 1950 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி இப்பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மூன்று அடி ஆழத்திற்கு கீழே சுண்ணாம்புக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படகூடாது என்றும் இக் கணிப்பீட்டின் படி இவ் ஆலையின் உற்பத்தி 20 – 25 வருடத்திற்குள் முற்றாக நிறுத்தப்படும் என்றும் ஆரம்ப திட்ட செயற்பாட்டு அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் உயிர்நாடியான தரைக்கீழ் நீர் வளத்திற்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்ற இவ் இயற்கை சுரண்டல் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட இக் கைத்தொழிலானது எந்த விதத்திலும் புனர்நிர்மாணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதே எனது கருத்தாகும். எனவே மீண்டும் இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட வேண்டுமாயின் எழுந்தமானமாக தீர்மானம் எடுக்கப்பட கூடாது என்றும் புவிச்சரிதவியலாளர்கள், சூழலியலாளர்கள், பொறியியலாளர்கள் போன்ற நிபுணர்களின் ஆழமான ஆய்வின் பின்னரேயே இது பற்றி தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
1950 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இத் தொழிற்சாலை யுத்த சூழ்நிலைகளால் 1980 ஆம் ஆண்டு மூடப்பட்டது. தொழிற்சாலை இயங்கிய போது காங்கேசன்துறை, தெல்லிப்பழை போன்ற வளமான செம்மண் பிரதேச நிலங்களில் விளைவிக்கப்பட்ட பசுமையான மரங்கள், செடிகொடிகள் அனைத்திலும் சீமேந்து தூசுக்கள் படிந்திருந்ததையும், காங்கேசன்துறையில் இருந்த வைத்தியசாலை இதன் காரணமாக தெல்லிப்பழைக்கு மாற்றப்பட்டதையும் நாம் அறிவோம். இத் தூசியால் இப்பிரதேச மக்கள் சுவாசம் சம்மந்தமான நோய்களிற்கு உட்பட்டமையும் இங்கு விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், நச்சுத்தன்மை கொண்டனவாக மாறியமையும் இப்பிரதேச மக்களின் வரலாற்று சுவட்டில் பதியப்பட்ட தகவலாகும். காங்கேசன்துறை சீமேந்துக்குரிய சுண்ணாம்புக்கல் பெறும் பிரதேசத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 50 அடி ஆகும். இதுவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் அதி உயர்ந்த பகுதியாகவும் விளங்குகின்றது. இவ் ஆலை இயங்கிய போதும் அதற்கு பின்னரும் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கையால் மிகவும் ஆழமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. சில பள்ளங்கள் நூறு அடி ஆழம் கொண்டனவாக இருப்பதை இன்று நேரில் சென்று பார்வையிடும் ஒருவரால் இலகுவில் அவதானிக்க முடிகின்றது. 1990களில் உயர் பாதுகாப்பு வலயமாக இப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட இங்கு சுண்ணாம்புக்கல் அகழும் செயற்பாடு நடைபெற்று வந்துள்ளது. இப்பொழுதும் கூட இது நடைபெற்று வருகின்றது. இதை யார் செய்கின்றார்கள்? இதற்குப் பொறுப்பு கூறுவோர் யார்? என்பது தெரியாது உள்ளது. வெளிப்படத் தன்மை என்பது அரசுக்கும் நிர்வாகத்திற்கும் இன்றியமையாததாகும். இன்று இப்பிரதேசத்தை உள்ளடக்கிய உள்ளுராட்சி அமைப்புக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிர்வாகத்தினுள் வந்த போதும் அவர்களுக்கும் இங்கே அகழும் சுண்ணாம்புக் கற்கள் எங்கே போகின்றன என்று தெரியாதுள்ளது. இது அரச நிர்வாகிகளினதும், உள்ளுராட்சி நிர்வாகத்தினதும் மிகவும் ஆபத்தான நிலையை சுட்டுவதாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் குடியிருப்புக்கு அடிநாதமாக விளங்கும் தரைக்கீழ் நீர் வளத்தைப் பேணி வைத்திருப்பது இச் சுண்ணாம்புக் கற்படையே ஆகும். யாழ் குடாநாட்டின் ஒரேஒரு நீர் ஆதாரம் இதுவே. மேலும் இன்றைய நிலையில் எமக்கு கிடைக்கும் தரைக்கீழ் நீரில் 30வீதம் உவர் நீராக மாறியுள்ளது. குடாநாட்டின் எப்பகுதியிலிருந்தும் 15கி.மீ தூரத்தில் கடல் உள்ளது. எனவே கடல் நீர் உட்புகும் அபாயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதுமே உள்ளதால் தான் இப்பகுதிகளில் கல் அகழ்தல் மிகவும் ஆபத்தை அளிக்குமென வலியுறுத்தி வருகின்றோம். காங்கேசன்துறை கடல் பெருகி சுரங்கம் அகழ்ந்த 100 அடி வரை ஆழமான பிரதேசத்தை மேவுமாயின் உடனடியாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அனைத்து நீர் வளங்களும் உவர் நீராகும் பாரிய அபாயம் உள்ளது. ஏனெனில் குடாநாட்டு தரைக்கீழ் நீர் அனைத்தும் தரைக்கீழ் குகை வழியாக இணைப்பைப் பெற்றுள்ளன. எனவே மிக ஆபத்தான இந் நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசும், நிர்வாகமும், புவிச்சரிதவியலாளர்களும், சூழலியலாளர்களும் குரல் எழுப்ப வேண்டும். வேலை வாய்ப்பை வேறு கைத்தொழில் ரீதியாகப் பெற்றுக் கொள்ள முடியும். சூழலை அழித்துத் தான் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யலாம் என்பது அண்மைக்கால அபிவிருத்திக் கொள்கை அல்ல. சூழல் நட்பார்ந்த அதை பேணுகின்ற அபிவிருத்தியே தற்போது எமக்கு தேவையானதாகும். இங்கே காட்டப்பட்டுள்ள படம் காங்கேசன்துறை பிரதேசத்தின் சுண்ணாம்புக்கல் அகழ்ந்ததால் ஏற்பட்ட பாரிய பள்ளங்களை காட்டுவதோடு கடலின் அண்மையையும் உணர்த்துகின்றது.
அரசு பாராளுமன்றம் ஊடாக உருவாக்கிய சட்டங்கள் சரத்துக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீறப்பட்டு “சொல் ஒன்று செயல் ஒன்றாக” நடப்பதை காங்கேசன்துறை சீமேந்து ஆலை மீள் இயக்க நடவடிக்கை மாத்திரமல்ல இன்னும் பல நடவடிக்கைகளும் உணர்த்தி நிற்கின்றன. நல்லூர் சங்கிலியன் வளைவுக்கு அருகே நட்சத்திர ஹோட்டல் கட்டும் முயற்சிகளை தற்காலிகமாக கைவிடப்பட்டதாக கூறினாலும் அக் காணியில் “ஹோட்டலுக்காக காணி ஒதுக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு இன்றும் உள்ளது. பழைய பூங்கா மதில் உடைப்பு, பூங்காவினுள் கட்டிடக் கட்டுமானங்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கே.கே.எஸ் வீதி அகலிப்பால் ஆபத்திற்குள்ளாகும் என குரல் எழுப்பியபோது காங்கேசன்துறையில் இருந்து அகலிப்புச் செய்யும் பணி முடக்கி விடப்பட்டு தற்போது அகலிப்புப் பணி நகரை அண்மித்து மீண்டும் தொன்மையான கோவில்கள், கட்டிடங்கள் அழிப்புப் பணி ஆரம்பிக்கவுள்ளதை உணரக் கூடியதாக உள்ளது. இதற்கு தொல்பொருள் திணைக்களம் அரசின் சட்டத்திற்கு இயைபாக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பது ‘மூடுமந்திரமாக’ உள்ளது. அரசின் செயற்பாட்டிற்கு வெளிப்படத்தன்மையும், பொறுப்புக்கூறும் தன்மையும் அவசியம் என்று அரசே கூறுகின்றது. சொல் ஒன்று செயல் ஒன்றா? அரச சட்டங்களை மீறுவது அரசுக்கு அழகாமோ?
நன்றி தேனீ
No comments:
Post a Comment