தமிழ் சினிமா

முரன்
வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் முரண்பட்ட மனிதர்களை பற்றிய கதை.



வெடி
'அவன் இவன்' படத்தில் வித்தியாசமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் விஷால்.

பிரபு தேவாவுடன் கை கோர்த்து தன் வழக்கமான ஆக்க்ஷன் பார்முலாவிற்கு திரும்பியிருக்கும் படம்தான் 'வெடி'.

சதுரங்கம்
ஒரு நிருபரின் வாழ்க்கையில் நடக்கும் சதுரங்க ஆட்டம்தான் கதை.

திசைகள் பத்திரிகையில் நிருபராக பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த். அவர் எழுதும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் பாராட்டும், அதிகாரிகள் மத்தியில் சலசலப்பும் ஏற்படுகிறது.



முரன்
வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் முரண்பட்ட மனிதர்களை பற்றிய கதை.

வாழ்க்கையில் ஏதோ ஒரு நாள் ஏதோ ஒரு சம்பவம் யாரோ ஒருவரால் நமது நிம்மதி தொலைந்தது அல்லது வசந்தம் வந்தது என்று சொல்லக் கேட்டிருப்போம்.

அல்லது நமக்கே அது போன்ற அனுபவங்கள் கிடைத்திருக்கும். கிடைத்த அனுபவத்தினால் இனிமை கிடைத்திருக்குமானால் அதில் சுவாரஸ்யம் அதிகமிருக்காது. ஆனால் அதுவே துன்பமயமெனில் இதைதான் ஊரே மெல்லும் அப்படியொரு அனுபவச் சிக்கலுக்குள்ளாகும் படம்தான் இந்த 'முரண்'. பெங்களூரில் இருந்து சென்னைக்கு போகும் சேரனின் கார் நடுவழியில் கோளாறு காரணமாக நின்றுவிட, அவருக்கு லிப்ட் கொடுக்கிறார் பிரசன்னா. எது செய்தாலும் அதில் ஒரு த்ரில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பிரசன்னாவின் குணத்தைப் பார்த்து வியக்கும் சேரன், போகப் போக ரசிக்கவும் செய்கிறார்.

ஒரு வழியாக இரண்டு பேரும் தாங்கள் யார் தங்களுடைய வாழ்க்கை எப்படி போகிறது என்பதை பகிர்ந்துகொள்கிறார்கள். இதில் சேரனுக்கு அவருடைய மனைவி பிரச்சினையாகவும், பிரசன்னாவுக்கு அவருடைய அப்பா பிரச்சினையாகவும் இருக்கிறார். சென்னையை நெறுங்கும் தருவாயில் பிரசன்னாவுக்கு ஒரு யோசனை வருகிறது. "உங்களுடைய மனைவியை நான் கொலை செய்கிறேன். என்னுடைய அப்பாவை நீங்கள் கொலை செய்கிறீர்களா? இப்படி செய்தால் நாம் இருவரும் தப்பித்துகொள்ளலாம்." என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்டு அதிர்ந்துபோகும் சேரன், "மனநல மருத்துவரை போய் பாருங்கள்" என்று பிரசன்னாவிடம் கூறிவிட்டு சென்று விடுகிறார். இதற்கிடையில் சேரனுடைய மனைவியின் அட்டகாசம் எல்லையை மீற, "இவளை கொலை செய்தால் தான் என்ன?" என்று சேரன் யோசிக்கும் தருவாயில், பிரசன்னா சேரனின் மனைவியை கொலைசெய்துவிடுகிறார்.

அதற்கு பதிலாக தனது அப்பாவை நீங்கள் கொலை செய்யுங்கள் என்று சேரனை வற்புறுத்த, வேண்டாவெறுப்பாக கொலை செய்ய சம்மதிக்கும் சேரன், பிரசன்னாவின் அப்பாவை கொலை செய்தரா இல்லையா? என்பதை எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் படம் தான் 'முரண்'. ஆர்ப்பாட்டம் இல்லாமல் படம் ஆரம்பித்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சுவாரஸ்யத்தை வைத்து விறுவிறுப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். அதுவும் பிரசன்னாவின் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு முழுப்படத்தையும் ரசிக்கும்படி செய்திருப்பது சுவாரஸ்யம். தமிழ்த் திரைப்படத்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் தகுதியுடைய நடிகராகப் பிரசன்னா மிளிர்கிறார். டிடிஎஸ் எஃபெக்டில் கத்தவெல்லாம் இல்லை. பிரபல கொமெடி நடிகர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவர்களது முதுகில் சவாரி செய்யவில்லை. தன்னுடைய முக பாவனைகளிலேயே அத்தனை பாவங்களையும் காட்டி நம்மைக் கட்டிப்போடுகிறார்.

மொத்தத்தில் பிரசன்னாவின் திறமையை இந்த படம் வெட்டவெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. இனியாவது முன்னணி ஹீரோவின் பட்டியலில் பிரசன்னாவின் பெயர் இடம்பெறுமானு பார்ப்போம். இயக்குநர் சேரனை இயக்குநர்களின் நடிகர் என்று சொல்லலாம். ஸ்டேட்டஸூக்கும் சொத்துக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் தன் முதல் மனைவியுடன் வாழாமல் வாழ்கிறார். ஹரிப்பிரியா மூலம் ஒரு வசந்தம் வருகிறது. பிரசன்னா மூலம் பயமும் வருகிறது. இறுக்கம், தயக்கம், மகிழ்ச்சி, பயம் அனைத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகள் அவர் கொடுக்கும் பின்னணிக் குரல், 'ஐயோ..அம்மா..ஹா..' ரசிக்க முடிகிறது. முதற்பாதியில் படத்தினை நகர்த்துவதே வசனங்கள்தான்.. சேரனின் ஈகோவை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரசன்னாவின் அந்த நக்கலையும், பிரசன்னாவை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அப்பாவியாக சேரனின் நடிப்பும் ஏ ஒன் அதிலும் மாங்கா பறிக்கும் காட்சிக்குப் பின்பு 'நாயை உசுப்பிவிட்டது நீங்கதானே..' என்று சேரன் கேட்குமிடம் செம டச்சிங் சேரனின் மனைவியாக நிகிதா காதலியாக ஹரிபிரியா இருவருக்கும் அதிகம் வேலையில்லை என்றாலும், ஹரிபிரியாவின் அந்த மார்க்கெட்டிங் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.

'நீங்க என்ன சோப்பு யூஸ் பண்றீங்க..?' என்று ஹரிபிரியா கேட்கும் கேள்வியில் சிரிக்காமல் எப்படி இருப்பது..? இதேபோல் 'சொதப்பிட்டா..' என்று சேரன் கேட்கும்போதும், பிரசன்னா மேப் போட்டு விவரிக்கும்போதும், 'கமிஷனரும் அங்கதான் வாக்கிங் வருவாரு' என்று சொல்லும்போதும் அப்ளாஸ் போட்டுத்தான் ஆகவேண்டியிருந்தது. பிரசன்னா வேண்டுமென்றே வம்பு சண்டைக்குப் போக, சேரன் இடையில் புகுந்து தாக்குதல் தொடுக்க கடைசியில் அவர்களது காரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு கவலைப்படாமல் தப்பிக்கும் காட்சியிலேயே சேரன், பிரசன்னாவின் குறைந்தபட்ச எல்லைக் கோட்டுக்குள் வந்துவிட்டார் என்பதை உணர்த்திவிட்டார் இயக்குநர். சுமா பட்டாச்சார்யாவின் தமிழ் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. ஜெயபிரகாஷ், சுமாவை கற்பழிக்கும் காட்சியை, ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்' படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷை, சேரன் கொலை செய்திருந்தால்கூட சேரன் மீது எவருக்கும் குற்றவுணர்வு வந்திருக்காது என்று நினைக்கும் அளவுக்கு பிரசன்னாவின் டார்ச்சர் காட்சிகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக வைத்து 'பெப்' ஏற்றியிருக்கிறார் இயக்குநர். சேரன், பிரசன்னா, ஹரிபிரியா, ஜெயப்பிரகாஷ் நால்வரையே படத்தின் பின்பாதி முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும், எப்படி இருவரும் கதையை முடிக்கப் போகிறார்கள் என்று திரில்லிங்கில் 'பெப்'பை ஏற்றிக் கொண்டேயிருக்கிறது திரைக்கதை. அந்த சப் இன்ஸ்பெக்டர் இறக்கும்போதுதான் பிரசன்னாவின் கேரக்டர் மீது கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிற்பாடு உறுதியானபோது திரைக்கதையின் இறுக்கம் புரிந்தது. இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் மகன் சொந்த அலுவலகத்தில் சாதாரண டைப்பிஸ்ட்டை போல அமர வைக்கப்பட்டிருப்பதும், அப்பாவால் வெறுத்து ஒதுக்கப்பட்டும் இத்தனை ஆடம்பரமாக வலம் வந்தும், கொலை செய்ய சேரனை ஏன் கேட்க வேண்டும் என்ற லாஜிக் கேள்வியெல்லாம் எழாமல் இல்லை.

இருந்தாலும் அப்பாவியாய் தோற்றமளிக்கும் சேரன் போன்றவர்கள் கிடைத்தால், எந்த அயோக்கியனுக்கும் பயன்படுத்திக் கொள்ளத்தான் தோன்றும் என்பதையே நாம் லாஜிக்காக எடுத்துக் கொள்வோம் ஒளிப்பதிவாளர் பத்மேஷின் கேமரா தேசிய நெடுஞ்சாலைகளை அக்குவேரா ஆணிவேரா காட்டியிருக்கிறது. ராஜசேகர் வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் எதார்த்தம் என்றால் அதை படம் பிடித்திருக்கும் விதம் அபாரம். சாஜன் மாதவின் பின்னணி இசையும், பாடல்களின் இசையும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகள் படத்தின் தொய்வுக்குக் காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து அரை பாடல், முக்கால் பாடல் என்று 2 பாடல்களைத் தாண்டி கிளைமாக்ஸில் வரும் குத்துப் பாடல் ஒரு புதிய வரவு. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே முரண்பட்டால் வாழ்க்கை என்னாகும், காதலால் தந்தையும் மகனும் முரண்பட்டால் என்ன ஆகும் என்பதை கதைக்கருவாக எடுத்து கொண்டு படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர், சில காட்சியமைப்புகளுக்கு அழுத்தமான காரணங்களை சொல்லாமல் இருப்பது படத்தில் மிகப் பெரிய குறையாக உள்ளது.

வெடி
'அவன் இவன்' படத்தில் வித்தியாசமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் விஷால்.

பிரபு தேவாவுடன் கை கோர்த்து தன் வழக்கமான ஆக்ஷன் பார்முலாவிற்கு திரும்பியிருக்கும் படம்தான் 'வெடி'.

காவல் துறையில் ஐ.பி.எஸ், பதவியில் இருக்கும் விஷால் (பிரபாகரன்), சிறு வயதில் தொலைத்து விட்ட தன் தங்கையை தேடி, தூத்துக்குடியிலிருந்து கொல்கத்தாவிற்கு போகிறார். அதற்கு முன்பு தூத்துக்குடியில் தாதாவாக வலம் வரும் ஷாயாஜி ஷிண்டேவை அடித்து, உதைத்து சிறைக்கு அனுப்பி விட்டு கொல்கத்தாவிற்கு போகிறார். சிறுவயதில் வறுமையின் காரணமாக, தன் தங்கையாவது நன்றாக இருக்கட்டுமே என்று மிஷினரி ஒன்றில் சேர்த்து விட்டுப் போகும் விஷாலின் மனதை புரிந்து கொள்ளாமல் அவரை வெறுக்கிறார் அவரது தங்கையான பூனம் கவுர். ஜெயிலில் இருந்து வெளியே வரும் ஷாயாஜி ஷிண்டே, கொல்கத்தாவில் இருக்கும் விஷாலின் தங்கையைப் பற்றி அறிந்து கொண்டு, அங்கே தன் படை பரிவாரங்களுடன் வருகிறார். பூனம் கவுரின் தோழியாக வருகிறார் சமீரா ரெட்டி. தங்கையை சந்திக்க வரும் விஷால் மீது காதல் கொள்கிறார் சமீரா.

இதனிடையே கொல்கத்தா வரும் ஷாயாஜி ஷிண்டே, அங்கே உள்ள லோக்கல் ரவுடியுடன் சேர்ந்து கொண்டு, விஷாலின் தங்கையையும், சமீராவையும் சிறைபிடிக்கிறார். விஷாலோடு அவரது தங்கை சேர்ந்தாரா? சமீராவின் நிலை என்ன? வில்லன்களின் கதி என்ன? என்பதை நீங்களே யூகித்து விடும் அளவிலான கிளைமாக்ஸை சொல்லி படத்தை முடித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கில் 2008-ல் வெளிவந்த 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக். இப்படத்தை விஷாலின் அண்ணன் தயாரித்திரக்கிறார் அடிக்கடி சண்டை போடுகிறார். அவ்வப்போது சமீராவுடன் ஆடிப் பாடுகிறார். என்ன ஒரு கூடுதல் அம்சம் என்றால், 'அவன் இவன்' படத்திற்குப் பிறகு விஷாலிற்கு நடிக்க வருகிறது என்பதுதான். சண்டை காட்சிகளில் நன்றாகவே செய்திருக்கிறார்.

இவர் உயரத்திற்கு பொருத்தமான சமீரா ரெட்டியை ஹீரோயினாக்கியது நடனக் காட்சிகளில் விஷாலுக்கு நிம்மதி கொடுத்திருக்கும். சமீரா ஆறடியில் இருந்தாலும் அசத்தல் விவேக் யாரையாவது இமிடேட் செய்து இரிடேட் செய்யாமல் நடித்தது நலம். இவர் பேசுவதை விட உடலெங்கும் பலூனை சுத்திக் கொண்டு இளைய திலகம் பிரபு போல இவர் செய்யும் சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன.. படத்தின் முதல் பாதி நகர்வதற்கு இவர் கொமெடி கொஞ்சம் கை கொடுக்கிறது. விஷாலின் தங்கையாக வரும் பூனம் கவுர் அழகாக இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார். ஷாயாஜி ஷிண்டே நன்றாக நடித்திருந்தாலும் வட இந்திய தோற்றம் அவருடைய தூத்துக்குடி வில்லன் கேரக்டரை துவம்சம் செய்கிறது என்று தணியும் இந்த தமிழ் பட வில்லன் பஞ்சம்.

பெரிய சண்டை வருமோ என எதிர்பார்க்கும் இடத்தில் அதை தவிர்த்திருப்பது உத்தமம். விஷால் வில்லனுக்கு விஷ ஊசி போட்டதாக சொல்லி உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அலைய விடும் காட்சிகளில் ஊர்வசி, ஸ்ரீமன், பாண்டு இவர்கள் மூவரையும் வைத்து பிரபு தேவா நன்றாக செய்திருக்கிறார். கதை பழசாக இருந்தாலும் அதை புதுசு போல விறுவிறுப்பாக காட்டுவதே ஆக்ஷன் படங்களின் ஆணிவேர். அதரப் பழைய கதைக்கு பிரபு தேவா தன் பாணியில் கொமெடி, ஆக்ஷன் மருந்தை ஆங்காங்கே கலக்கியிருந்தாலும் நிறைவாக இல்லாததால் வெடி முழுசா வெடிக்கல. 'போக்கிரி' படத்திற்கு பிறகு தமிழில் எதுவும் ஹிட் கொடுக்காத பிரபு தேவா தெலுங்கு படமான 'சௌர்யம்' கதையை தேர்ந்தெடுத்தது சௌர்யமாக இல்லை.

இந்த மாதிரி படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் பொலிசாக இருந்து கொண்டு ஒரு தகவலும் சொல்லாமல் தங்கைக்காக திடீரென விஷால் கொல்கொத்தா சென்று விடுவது, கிளைமாக்சில் ஏ.சி.பி.யான விஷால் இறந்து விட்டதாக வில்லன் டி.வி.யில் விளம்பரம் கொடுத்து அவர் தங்கையை பிடிப்பது என்று லாஜிக் சொதப்பல்கள் ஏராளம். பிரபு தேவா - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்களும் சொல்லும்படி பெரிதாக இல்லாததும் ஒரு குறை ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. இரண்டே மணி நேரத்தில் முடிந்து விடுவதால் பொழுதுபோக்கை மட்டும் மனதில் வைத்து பார்ப்பவர்களுக்கு படம் ஓரளவு பிடிக்கலாம்.


சதுரங்கம்

ரு நிருபரின் வாழ்க்கையில் நடக்கும் சதுரங்க ஆட்டம்தான் கதை.

திசைகள் பத்திரிகையில் நிருபராக பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த். அவர் எழுதும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் பாராட்டும், அதிகாரிகள் மத்தியில் சலசலப்பும் ஏற்படுகிறது.

அவரால் பாதிக்கப்படும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஸ்ரீகாந்தை எச்சரிக்கின்றனர். என்றாலும் நெஞ்சை நிமிர்த்தி எதற்கும் பயப்படாமல் தில்லாக நிற்கிறார் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது காதலியான சோனியா அகர்வால் அவர் கண்ணெதிரே ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார். யார் கடத்தினார்கள் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. பொலிசில் புகார் செய்தும் அலட்சியம் செய்கிறார்கள். இதனால் பல எதிரிகள் இருப்பதால் காதலியை கடத்தியவர் யார் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் காதலியை கண்டு பிடித்தாரா? கடத்தியது யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு லேசான புன்முறுவலோடு எதிராளியின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யும் ஸ்ரீகாந்த், அதே அலட்சியத்தை இறுதிவரை காட்ட முடியாதளவுக்கு யதார்த்த வலையில் சிக்கிக் கொள்வதை ஊசி செருகியதை போல உணர வைக்கிறார் டைரக்டர். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை இவ்வளவு அழகாக வெளிப்படுத்துவார் ஸ்ரீகாந்த் என்று யாருமே யூகித்திருக்கவும் போவதில்லை.

இவருக்கும் சோனியாவுக்குமான காதல் அழகான பூங்கொத்து. கரு.பழனியப்பனின் கதாநாயகிகள் வெறும் மரம் சுற்றிகள் அல்ல என்பதை சோனியாவும் நிரூபிக்கிறார். பேங்க்குக்கு பேனா இல்லாமல் வரும் ஸ்ரீகாந்திடம் நான் பேனா கொடுக்க மாட்டேன் என்று முகத்திற்கு நேரே கோபம் காட்டுவதும், அதற்காக அவர் தரும் விளக்கமும் ஆஹா. பீச்சில் வெகு நேர காத்திருப்புக்கு பின் எப்பவும் நான்தான் உனக்காக காத்திருக்கேன் என்று துவங்கி அவர் பேசும் அந்த டயலாக் மனசை பிசைகிறது. பின்னணி குரல் கொடுத்தவருக்கும் சேர்த்தே ஒரு பாராட்டு பத்திரம் தரலாம்.

ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் அரசியல், அரசு அதிகாரிகளுடன் மோதல் என்று முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. சோனியாவை கடத்தி வைத்திருக்கும் ஜெயில் அதிகாரி, ஸ்ரீகாந்தை அங்குமிங்கும் அலைய விடும் காட்சிகள் முதலில் சீரியசாக இருந்தாலும் பின்னர் எதிர்பார்த்த திரில் இல்லை. வழக்கமான திரைக்கதையாக செல்கிறது. சரண்யா பொன்வண்ணன், இளவரசு, மனோபாலா, பத்திரிகை ஆசிரியராக வரும் மணிவண்ணன் என அவரவர் தங்களின் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பத்திரிகை சார்ந்த கதையை கே.வி.ஆனந்த் 'கோ' படம் மூலம் கொடுத்து வெற்றி பெற்று விட்டார்.

இந்த 'சதுரங்கம்' 2004-ல் எடுத்த படம். அப்போதே இது வெளி வந்திருந்தால் சினிமா ரசிகர்களுக்கு புதுமையானதாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கரு.பழனியப்பன் பத்திரிகையாளராக இருந்தவர் என்பதால் ஸ்ரீகாந்தை அச்சு அசலாய் பத்திரிகையாளராக மாற்றியிருக்கிறார். மந்திரியாக வரும் மகாதேவன், ஸ்ரீகாந்தைப் பார்த்து "எங்கள மாதிரி தப்பானவங்க ஜெயிப்போம்னு நம்புறோம்.

உங்களை மாதிரியான நல்லவங்க தோத்துடுவோம்னு நம்புறீங்க. முதல்ல ஜெயிப்போம்னு நம்புங்க.." என்று பேசுகையில் பத்திரிகையாளர்களை உயர்த்தி வைக்கிறார். வித்யாசாகரின் இசையில் மகாகவி பாரதியாரின் 'ஆடுவோமே...' பாடல் மனதில் நிறைகிறது. 'விழியும் விழியும்...' பாடல் இனிமை. 'என்ன தந்திடுவேன்... நான் என்னை தந்திடுவேன்' பாடல் 'தைய தா தைய தா... தைய தைய தா...' பாடலை நினைவு படுத்தினாலும், காதுக்கு இதமாய்த்தான் இருக்கிறது. வித்யாசாகரின் பின்னணி இசை தேவையான இடத்தில் ஒலித்து நமக்கு திருப்தியை தருகிறது.

திவாகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் நிற்கு, அதற்கு உறுதுணையாய் இருக்கிறது சுரேஷ் அர்ஸ்ஸின் படத்தொகுப்பு. ராஜீவனின் கலை வண்ணத்தில் உருவான பத்திரிகை அலுவலகம் கலக்கல்.

கதையை புதுமையான பாதையை நோக்கி கொண்டு செல்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன் என்று பார்த்தால் க்ளைமாக்சில் வழக்கமான முடிவை சொல்லி ஏமாற்றமே தந்திருக்கிறார். 2004-ல் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கின்றன என்றாலும் இந்த காலகட்டத்தில் நிறைய படங்களில் அவைகள் எல்லாம் வந்து விட்டதால் எதுவும் புதிதாய் தோன்றவில்லே. ஆனால் படம் ரசிக்கும் வகையில் உள்ளது.

நன்றி விடுப்பு




No comments: