மனதில் பதிந்த சுருதி இசை இரவு என்பார்வையில்

.                                                                                          
                                                                                                                       C.Paskaran

சனிக்கிழமை இயந்திரமயமான வாழ்க்கையின் அங்கமாக இரவு நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளின் போது கடிகாரத்தைப் பார்க்கிறேன் மாலை 5.30 மணி இன்னும் ஒரு மணித்தியாலத்தில் Castel Hill hills centre  ரில் இருக்கவேண்டும் 6.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என போடப்பட்டுள்ளது. தமிழ் நிகழ்ச்சிகள் என்றால் எப்படியும் பிந்தித்தான் தொடங்குவார்கள் (ஒரு சில அமைப்புகளைத் தவிர) இது சாரங்கனின் நிகழ்ச்சி என்பதால் சரியான நேரத்தில் தொடங்கிவிடுவார் என்ற எண்ணம் அவசர அவசரமாக விரைகின்றேன்

6.20 மணிக்கு Cark Park கில் காரை நிறுத்திவிட்டு உள்ளேசென்று அமர்ந்து விடுகின்றேன் 6.30 மணி தாண்டிச் செல்கிறது. மேடையில் வாத்தியக்கருவிகள் அடுக்கிவைக்கப்பட்டு வண்ண விளக்குகள் எரிய விடப்பட்டிருக்கிறது. ஏன் தொடங்கவில்லை என்ற எண்ணம் சுழன்று சுழன்று வந்துகொண்டே இருக்க கடிகாரத்தையும் இருக்கைகளில் வந்து அமரும் தெரிந்த முகங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 6.45 மணி பக்கத்தில் இருந்தவரிடமும் நேரத்தை கேட்கிறேன் 6.45 என்பதை அவரும் உறுதி செய்கிறார். அப்போது நல்ல தமிழில் கவி நடையில் கணீர் என்ற குரலில் வரவேற்புரை வருகிறது. குரலைத்தவிர எவரையும் மேடையில் காணவில்லை. குரலை வைத்து பழக்கப்பட்ட பல அறிவிப்பாளர்களை நினைவுபடுத்திப்பார்க்கிறேன் யாரும் அக்குரலுக்கு பொருந்துவதாக இல்லை. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்கிறேன் யாரென்று அவரும் கையை விரிக்கிறார். மனிதர் மேடைக்கு வந்தால் யாரென்று பார்க்கலாம் என்றால் அவர் வருவதாகவே தெரியவில்லை. சரி வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று என்ஆவலுக்கு ஒரு ஆப்புவைக்கிறேன்.அறிவிப்பாளர் வாத்தியக்கலைஞர்களை அழைக்க அவர்கள் வந்து தத்தமது இசைக்கருவிகளின் முன்னால் அமர்கின்றார்கள. அப்பாடா 17 இற்கு மேற்பட்ட இசைக்கலைஞர்கள். அவர் அழைத்த கலைஞர்களின் பெயர்களை Family Name  மை விட்டுவிட்டு பார்த்தால் இப்படித்தான் இருந்தது. Mathiew, Sandy, Lish,Jemes,Rechal, Elizabeth, Lio, Carolyn, Vilo, Jona, Magas, Girish,William,Ratnam Ratnathurai,Cristopher  (சிலவற்றை விட்டுவிட்டேன்) கேட்டதும் ஓ இடம்மாறி வந்துவிட்டோமா என்று ஒரு எண்ணம் தோன்றியது இருந்தாலும் நம்மாள் ரட்ணம் தபேலாவுடன் இருந்தது சரியான இடம்தான் என்பதை உறுதிப்படுத்தியது.
அடுத்து ஒஸ்ரேலியாவின் மத்திய பகுதியில் இருந்து வருகைதந்திருந்த Indigenous Austrlia  கலைஞரான ரெஸ்னல் மேடையில் தோன்றி தங்கள் பாசையிலும் ஆங்கிலத்திலும் வணக்கம் தெரிவித்துவிட்டு Didgiridoo கருவியில் அருமையான இசையை மீட்ட பத்மஸ்ரீ ஹரிகரன் கர்நாடக இசையை வழங்கினார் இது அற்புதமான தொடக்கமாக இருந்தது.அதனைத்தொடர்ந்து ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என்று சரணத்தை ஆரம்பிக்க சபையினரின் கரவொலியுடன் நெஞ்சுக்குள் மாமழை பொழிவதுபோல் இருந்தது அவர்பாடிய நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என்ற பாடல். இந்த பாடலுக்கு வேற்று இனத்தவர்களான இசைக்கலைஞர்கள் இசைமழை பொழிந்தது நிச்சயம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை தந்திருக்கும் என்பதில் ஜயமில்லை. இவர்கள் தமிழ்ப்பாடல்களுக்கு ஒழுங்காக இசைப்பார்களா என்று எனக்கு ஏற்பட்டிருந்த ஜயத்திற்கு இசைக்கு ஏதடா மொழி என்று செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது அவர்கள் வழங்கிய இசை. இத்தனை கலைஞர்களையும் ஒன்றிணைத்த சாரங்கனுக்கு ஒரு பாராட்டு.
மண்டபம் எங்கும் கரவோசை எந்தப்பக்கம் திரும்பினாலும் மனிதத்தலைகள் அந்தப் பெரியமண்டபம் நிறைந்து காணப்பட்டது.நீல நிற ஒளிக்கற்றைகள் மேடையை நீலமாக அலங்கரிக்க இரண்டாவது பாடலின் பெண்குரலுக்காக நீல உடையில் பாடகி அங்கிதா வந்தார் தமிழில் அதிகம் தெரிந்திராத அவர் வேற்று மொழிகளில் பாடியதாக அறிவிக்கப்பட்டது. ஹரிகரன் அங்கிதாவுடன் “ஏதோ ஒரு பாட்டு” என்ற பாடலை பாடியது மட்டுமல்லாது சபையோரையும் பாடவைத்து தானும் மகிழ்ந்து சபையினரையும் மகிழவைத்தார். ஹரிகரன் தனக்கே உரிய பாணியில் உற்சாகமாக ஆடிக்கொண்டேபாடியது நன்றாக இருந்தது. அங்கிதாவின் குரல் மிக மிக அருமையான குரல் அத்தோடு சிரித்துக்கொண்டே அவர்பாடியது இன்னும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் என்ற பாடலும் இசையும் மண்டபத்தை அதிரவைத்தது.
அடுத்தபாடலை பாடவந்த சாரங்கன் மிக அமைதியானதும் ஆழ்ந்த கருத்துள்ளதுமான பாடலான வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற ஏ ஆர் ரகுமானின் பாடலை மிக அருமையாக பாடினார் இந்தபாடலில் சங்கதிகளை மிக அற்புதமாக சேர்த்தது ரசிக்கக் கூடியதாக இருந்தது. தொடர்ந்து பாடிய காலம் காத்தாலே என்ற பாடலுக்கு ஆண்களும் பெண்களுமாக ஒரு நடனகுழுவினர் சேர்ந்து கொண்டது பார்வையாளர்களை உற்சாகம் கொள்ள வைத்தது.பிரம்மாண்டமான பின்திரையில் காட்சிஅமைப்பாக ஆகாயம் நட்சத்திரங்களோடு ஓடிப்பிடித்து விளையாடும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மீண்டும் அந்த அறிவிப்பாளர் தன் இனிய குரலோடு மேடைக்குவந்தார் புதுமுகமாக இருந்தாலும் நல்ல குரல் மட்டுமல்ல நல்ல தமிழும் அவரிடம் இருந்தது.சத்தியசுதன் என்ற அந்த இளைஞரை இனி பல மேடைகளில் பார்க்கலாம் என்று நம்பலாம்.
21 கலைஞர்களோடு பயணித்த அந்த இசைக்குழுவில் சகியே சகியே என வந்த ஹரிகரன் என்னைத் தாலாட்டவருவாளா என்று கேட்டு சபையை அசர வைத்துவிட்டார். இந்த பாடலுக்கான இசையை குழுவினர் மிக அருமையாக அமைத்தார்கள். ஓர் இடத்தில் எல்லா இசைக்கருவிகளையும் நிறுத்திவிட்டு கொடுத்த கொலுசுச் சத்தம் நெஞ்சை கொள்ளை கொண்டது சாரங்கனுக்கு ஒரு சபாஸ் கொடுக்கலாம்.பெண்குரல் கொடுத்த கோரஸ் பாடகியின் குரல் ஒலியை மிகக் குறைத்து வைத்திருந்தது ஹரிகரனின் குரலோடு பொருந்தாதது போல் இருந்தது கவனித்திருக்கலாம்.
அடுத்து வந்த கசல் பாடலில் சாரங்கனின் சித்தாரும் ரட்ணத்தின் தபேலாவும் தூள்கிளப்பியது.அடுத்து சாரங்கனின் தம்பியான ஸ்ரீசியாமலங்கன் எழுதி இசையமைத்த பாடலான ஏனடா மானிடா சொல்லமறந்தாய் உன்காதலை என்ற பாடலை அண்ணன் சாரங்கன் பாடியது பெருமைக்குரியது. ஸ்ரீசியாமலங்கன் அதற்கு தானே பியானோ வாசித்தார்.
அடுத்து எல்லோரையும் கவர்ந்த பாடல் அக்கம் பக்கம் யாரும் இல்லா என்ற அகிற்ரா  பாடிய பாடல்.உச்சஸ்தாயியில் High Pitch ) சில் பாடிய வரிகள் மிக அற்புதமாக இருந்தது."உன்அருகே நான் வாழவேண்டும்" என்ற வரிகள் கொஞ்சும் குயிலோசை போல் மிகஅருமையாக பாடினார்.

மச்சானைப்பாத்தீங்களா என்ற பாடலை இன்னுமொரு பெண்பாடகி பாடியது துள்ளல் மட்டுமல்ல அவரிடம் ஒரு நடன அசைவே காணப்பட்டது. ரசிகர்களை அந்த அசைவாலேயே கட்டிப்போட்டு விட்டார்.அந்தப்பாடலில் வரும் நாதஸ்வர இசைக்குப்பதிலாக Saxophone இல் இசையை பரவவிட்டார் Sandy என்ற பெண் கலைஞர்.  அத்தோடு சாரங்கனின் வேண்டு கோளுக்கிணங்க வாதாபி என்ற பாடலை வாசித்துக்காட்டி பார்வையாளர்களின் கரகோசத்தை பெற்றுக்கொண்டார்.
இப்படியே தொடர்ந்து அருமையான பாடல்களை தந்தது அந்த சுருதி இசைக்குழு.அவற்றுள் சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா, பொய்சொல்லக் கூடாது காதலி, என்று பாடிய ஹரிகரன் அதோபோகிறது வானம் என்று தொடங்கி நிலாகாய்கிறது என்றபாடலை பலத்த கரகோசத்தின் மத்தில் தந்ததும் இடைவேளை என்று அறிவித்தார்கள்.
இடைவேளையின் பின்பும் ஹரிகரனின் உயிரே உயிரே என்ற பாடல் உயிரை உருக்கியபாடலாக அமைந்தது.தொடர்ந்து வெள்ளி வெள்ளி நிலவே பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடல்களோடு ஹரிகரன் அங்கிதாவுடன் இணைந்து வெண்ணிலவே வெண்ணிலவே என்றபாடலை நடனத்தோடு தந்ததும் பார்வையாளர்களோடு சேர்ந்து பாடியதும் நன்றாக இருந்தது.
அதன் பின்பு கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக சுருதி நிகழ்ச்சியின் ஆதரவாளரான ராம்ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு சிவா அவர்கள் பத்மஸ்ரீ ஹரிகரனுக்கும் திரு சாரங்கன் ஸ்ரீரங்கநாதனுக்கும் பொன்னாடை போர்த்த திரு ரட்ணம் அவர்கள் மலர்ச் செண்டு வழங்கினார். இப்படியான தரமான நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு ஆதரவளிக்கும் ராம்ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு சிவா அவர்கள் பாராட்டுக்குரியவரே. இசைக்கலைஞர்களை பத்மஸ்ரீ ஹரிகரன் அவர்களும் திரு சாரங்கன் அவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவித்தார்கள். அத்தனை கலைஞர்களையும் கௌரவிப்பதற்கு நேரம் சற்று அதிகம் எடுக்கும் என்ற காரணத்தாலோ என்னவோ ஹரிகரன் கலைஞர்களின் முன்புறமாக சென்று வழங்கியபோது சாரங்கன் சில கலைஞர்களுக்கு பின்பக்கமாக சென்று அதை வழங்கினார். அதை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கலைஞர்களுக்கு எல்லாவற்றையும் விட உயர்வானது கௌரவித்தல் அல்லது பாராட்டு அதை சற்று நேரம் எடுத்தாலும் முறையாக செய்வது நன்று.
பாராட்டுதலைத் தொடர்ந்து இரண்டுவருடங்களுக்கு முன்பு சாரங்கன் மும்பே சென்று ஹரிகரனுடன் பதிவுசெய்த பாடலான அவளொரு மெல்லிய பூங்காற்று என்ற பாடலை இருவரும் சேர்ந்து பாடியது மெல்லிய பூங்காற்றாக மனதை வருடிச் சென்றாலும் ஏனோ மதராசுப்பட்டண பாடலொன்றை மனதுக்குள் கொண்டுவந்து நிறுத்தியது. இனிமையான இசையுடன் அந்தப்பாடல் இருந்தது.
நன்றிமறத்தல் நன்றன்று என்று மேடைக்கு வந்த சத்தியசுதன் இந்நிகழ்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள், மற்றும் தமிழ்முரசு ஒஸ்ரேலியா உட்பட விளம்பரம் செய்த பத்திரிகைகள் வானொலிகள் பார்வையாளர்கள் அனைவருக்கும் சுருதி நன்றியை தெரிவிப்பதாக நன்றியுடன் அறிவித்துக்கொண்டு பாடலைத் தொடர்ந்தார்கள்.
தெலுங்கு காரர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டசாரங்கன் அடுத்து ஒரு தெலுங்குப்பாடல் என்று கூறி சங்கராபரண பாடலான சங்கரா என்ற பாடலை பாடினார் அருமையான இசையோடு அந்தப்பாடலை அவர்தந்திருந்தாலும் எஸ் பி பாலாவின் குரலில் கேட்ட அந்த பாடல்தான் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

நிகழ்ச்சியை நிறைவு செய்யும் வகையில் சாரங்கன் பாடிய Who is the hero  விஸ்வநாதன் வேலை வேண்டும் என்ற பாடலும் அந்தப்பாடலுக்கு நடனக் குழுவினர் வழங்கிய நடனமும் மனதைவிட்டு அகலாது நிற்கின்றது. அந்தப்பாடலுக்கு இடையில் தபேலா கலைஞர் ரட்ணம் ரட்ணதுரையும் Drum கலைஞரானChrishஅவர்களும் கர்நாடக இசையை போட்டி போட்டு செய்து சபையோரின் பலத்த கரகோசத்தை பெற்றுக்கொண்டார்கள்.முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தோடு பார்வைளாளர்கள் அமர்ந்தே இருக்க ஹரிகரனின் இன்னுமொரு பாடல் வேண்டுமா என்று கேட்டதுதான் தாமதம் சபை அதிர கரவொலி எழுந்தது ஹரிகரனின் பாடலோடு இந்த சுருதி குறையாத சுருதி நிகழ்வு நிறைவுற்றது. நெஞ்சைவிட்டகலாத ஒரு இனிய இரவை தந்த திரு சாரங்கன் ஸ்ரீரங்கநாதனையும் நிகழ்சிசியின் ஆதரவாளர்களையும் வாழ்த்தி மீண்டும் இப்படியான ஒரு நிகழ்வை எதிர்பார்த்து வீடு திரும்பினேன்.
பிரம்மாண்டமான தயாரிப்பு அதிக பொருட்செலவு எந்தவித உதவியும் செய்யாது இப்படி ஒன்று தேவைதானா என்று கேட்கும் குரல்கள் காதில் கேட்கிறது.
இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருந்தது என்ற குரலும் அதேகாதில் விழுகிறது. காய்த்தமரம் கல்லடி படாமல் போகுமா?

செ.பாஸ்கரன் 

5 comments:

Anonymous said...

நிகழ்ச்சி மிகவும் அருமையான ஒரு நிகழ்வாக அமைந்ததில் எந்த வித ஐயமும் இல்லை. வழமைபோல் இல்லாது சற்று வித்தியாசமானதொரு நிகழ்வாக இருந்தது எல்லோராலும் வரவேற்கப் பட்டது. அங்கிதா சச்தேவா மிகவும் இனிமையான தனது குரலால் சிட்னி வாழ் தமிழ் நெஞ்சங்களை கட்டிப் போட்டுவிட்டார். இசைக் கருவிகளை வாசித்த அனைத்து கலைஞர்களும் மிகவும் திறமையாக வாசித்து இருந்தார்கள்.

ஹரிஹரன் தனது வசீகரக் குரலால் மிகவும் இனிமையாகப் பாடியிருந்தார். இன்னும் பல பாடல்களைப் பாடியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. சாரங்கனும் மிகவும் நன்றாகப் பாடியிருந்தார். ஆனால் சங்கராபரணப் பாடல் அவ்வளவாக வாய்க்கவில்லை. ஒரு சிலருக்குப் பிடித்திருந்தது. பாலாவின் பரம ரசிகர்களை அவ்வளவாகக் கவரவில்லை என்பதே எனது கருந்து. ஒலி அமைப்பு மிகவும் துல்லியமாக இருந்தது. மிகவும் திறமாக ஒருங்கமைக்கப் பட்டதொரு நிகழ்ச்சி.

Charity Show என்று விளம்பரப் படுத்தப் படவில்லையே.... இது அவரின் சொந்த பிசினஸ். எந்தனை இசை நிகழ்ச்சிகள் தமது சொந்த பிழைப்புக்காக சிட்னியில் நிகழ்த்தப் பட்டது நம்மவருக்கு தெரியாமலா போய்விட்டது?

Anandan

Ramesh said...

உண்மையிலேயே நல்ல நிகழ்ச்சி சாரங்கன் வழமைபோல் சாதனையாளன்தான்.குடுதத காசுக்கு திருப்தி. அது என்ன ஹரிஜி போட்டிருந்த உடுப்பு மனைவியின் காற்சட்டையை மாறிப்போட்டுவிட்டாரோ. இனிமேல் ஆரும் இசை நிகழ்ச்சி வைக்கிறதெண்டால் அங்கிதாவயே கொண்டுவாருங்கோ பார்த்துக் கொண்டிருக்கலாம் சே கேட்டுக்கொண்டிருக்கலாம்.
சாரங்கன் இசையால எங்கள தொட்டுட்டேர் ஏன் Sentiment ரா தொடவேணும் என்டு யோசிச்சவரோ தெரியாது.இந்நாட்டு பூர்வீக குடிமகனைக் காட்டி அவரும் நாட்டை ஆழமுடியாமல் இருக்கிறேர் நாங்களும் நாட்டை ஆழமுடியாமல் இருக்கிறம் எண்டு போட்டாரே ஒரு போடு. இல்ல அவர் ஆண்டிருந்தா இவர் வந்திருப்பாரா இல்ல நிகழ்சிதான் நடத்தியிருப்பாரா? இது கேள்விமட்டும்தான் விடைய தெரிஞ்சாக்கள் சொல்லுங்க. இதென்னடா முட்டையிலமயிர்புடுங்குறான் எண்டு நினைக்ககூடாது சங்காராபரணத்த சாரங்கன் சாயம் போகப்பண்ணிப் போட்டேர். அதுக்கும் சேர்த்து வேலைவேண்டம் என்று வெளுத்துக் கட்டியது மிகநன்று. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மிக சிறந்த நிகழ்ச்சி.

kalai said...

இந்த பாடலுக்கு வேற்று இனத்தவர்களான இசைக்கலைஞர்கள் இசைமழை பொழிந்தது நிச்சயம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை தந்திருக்கும் என்பதில் ஜயமில்லை.
-------------------
தாங்கள் தமிழர் மருத்துவ நிதிக்காக வருடாவருடம் நடைபெறும் முத்தமிழ் மாலை நிகழ்ச்சிக்கு செல்லவில்லையா?. 2008ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சாரங்கனின் இசைக்குழு வேற்று இனத்தவர்களான இசைக்கலைஞர்கள் வைத்து இசைபடைத்ததினைப் பார்த்தவர்கள் பலர்.

karuppi said...

நல்லதொரு நிகழ்வை பார்த்த திருப்தி கிடைத்தது. நல்ல பாடல் தெரிவுகள் மட்டுமல்ல நல்ல குரல் வளம் கொண்ட பாடகர்கள் . அருமையான நிகழ்வு. அங்கிதா வின் பாடல்களை
நிச்சயமாக குபிட வேண்டும் . அவரது குரல் கணீரென்று இருந்தது. புதிய அறிவிப்பாளரின் வரவு நல்வரவாகட்டும். நல்ல கணீரென்ற குரலில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அதிகப் பிரசங்கம் செய்யாமல் நல்ல தமிழில் , கவி நயத்துடன் சுருக்கமாக அறிவித்தது நிகழ்வுக்கு மெருகூட்டியது.
இவரைப் பார்த்து இங்குள்ள அறிவிப்பாளர்களும் பழகினால் நல்லது. நடன நிகழ்வு நீண்ட காலத்தின் பின் தரமான நடனமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாரங்கனின் நிகழ்ச்சி எப்போதும் தரமானதாக இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருகின்றார் என்றால் அது மிகையாகாது.

kirrukan said...

சிட்னியில் இசை நிகழ்ச்சி நடந்தால்தான் டமிழ்முரசுக்கு ஆட்கள் அதிகம் பின்னூட்டம் விடுகினம்...இசை என்றால் சிட்னிடமிழ்ஸ்க்கு ஒரு இது போலகிடக்குது..