தொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை -கானா பிரபா


.


"சின்ராசா அண்ணை! நாளைக்கு கரம்பன் பக்கம் போகோணும் என்னமாதிரி வசதியோ" என்று எனது ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணருக்கு செல்போனினேன்.
"ஓம் முன்னைப்பின்னை அந்தப்பக்கம் போனதில்லை, ஆனாலும் போகலாம்" சின்னராசா அண்ணரே துணிவோடு சொல்லிவிட்டார் பிறகென்ன.

கரம்பனுக்குப் போகும் அந்த நாட்காலை சின்னராசா அண்ணரின் ஆட்டோ சரியாக 6 மணிக்கு எங்கள் வீட்டு முகப்பில் வந்து நின்றது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பிரதேசங்களில் ஒன்றான ஊர்காவற்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தக் கரம்பனுக்கு, இதுவரை நானோ சின்னராசா அண்ணரோ இதுவரை போகாத இடத்துக்குப் போகப்போகிறோம் எந்தவிதமான வழிகாட்டலும் இன்றி. காரணமில்லாமல் இல்லை, எனது யாழ்ப்பாணப் பயணத்தில் இந்த முறை போகத் தீர்மானித்த இடங்களில் இதுவுமொன்று. இங்கே என் உறவினர் ஒருவரின் வீடு இருக்கு. 20 வருஷங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றும் படை நடவடிக்கையின் முன்னோடியாகக் கைப்பற்றப்பட்ட தீவகப் பிரதேசங்களில் அந்த வீடு இருக்கும் கரம்பன் பிரதேசமும் உள்ளடங்கும். எனவே அந்த உறவினரை விட எனக்கு அந்த இடமெல்லாம் எப்படி இருக்கும் என்று என்று ஆவல் மேலிட இந்தப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகச் சேர்த்துக் கொண்டேன். என் ஆட்டோகிராப் காலம் ஆரம்பித்தது கூட இந்தத் தீவுப்பகுதி இடப்பெயர்வால் அவள் எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்த அந்தக் காலம் தான். சரி சரி ஆட்டோகிராப் பக்கம் போகாமல் மீண்டும் என் மனதை நிகழ்காலத்துக்குக் கட்டி இழுத்து வருகிறேன்.

சின்னராசா அண்ணரின் ஓட்டோ அந்த விடிகாலையில் குச்சொழுங்கை எல்லாம் அளந்து கொண்டு போய்க்கொண்டிருக்க, இணுவில், சுதுமலை, மானிப்பாய், நவாலி, வழுக்கியாறு வட்டுக்கோட்டை கடந்து பயணிக்கிறோம். அந்த சந்துபொந்துகளில் தற்காலிக நித்திரை முகாம்களை அமைத்துத் துயில் கொண்டிருந்த நாய்கள் எங்களின் திடீர் முற்றுகையைப் பொறுக்காமல் ஆட்டோவைத் துரத்தித் துரத்திக் குலைத்துக் கொண்டு பின்னால் ஓடி வந்து களைத்து ஓய்ந்தன.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள், யாழ்ப்பாணத்தில் ஆறு இல்லை ஆனால் கொள்ளை அழகு என்பது பழமொழியை உருவாக்கினவருக்கு இடித்துரைத்துச் சொல்லவேண்டும். ஆனாலும்
யாழ்ப்பாணத்தார் பெருமையடித்துக் கொள்ள ஒரு ஆறு அல்லது ஆறு போல உள்ள ஓடை உண்டு. அதுதான் வழுக்கியாறு. இந்த வழுக்கியாற்றின் பெருமையை வைத்து செங்கை ஆழியான் "நடந்தாய் வாழி வழுக்கியாறு" என்ற ஒரு புதினம் படைத்திருக்கின்றார். வழுக்கியாற்றின் படம் இங்கே

போகிற வழியில் திடீரென்று பொலிவான கட்டிடங்கள், என்ன ஏது என்று விசாரிக்க முன்னர் "யாழ்ப்பாணக் கல்லூரி" என்று கொட்டை எழுத்துக்களோடு தன் விளக்கம் சொன்ன அந்தப் பாடசாலைச் சூழலை ஆட்டோவை நிறுத்தி வியந்து பார்க்கின்றேன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கல்லூரி அன்றிலிருந்து இன்று வரை யாழ்ப்பாணத்தில் முன்னணியில் வைத்துப் பார்க்கப்படும் கல்விக்கூடங்களில் ஒன்று.

எத்தனையோ கல்விமான்களையும், அறிஞர்களையும் கொடுத்து விட்டு அடக்கமாக அமைதியாக நிற்கின்றாயே என்று கேட்கலாம் போலத் தோன்றியது. இரண்டு பக்கமும் பரந்து விரிந்த காணிகளில் எழுப்பப்பட்ட அந்தக்காலத்துச் சுண்ணாம்புக்கற் கட்டிடங்கள் காவி உடை தரித்து நிற்கின்றன. நாங்கள் நிற்கும் இடம் வட்டுக்கோட்டை.
வட்டுக்கோட்டைக்குப் போகின்ற வழி தெரியாமல் ஒருவர் தடுமாறிக்கொண்டே நடந்து வந்தாராம். எதிரே பாக்குமரங்கள் கொண்ட தோப்பு அங்கே ஒரு பாக்குமரத்தின் மேலே ஒருவன் இருந்து பாக்குப் பிடுங்கிக் கொண்டிருக்க, இவரோ "தம்பி! வட்டுக்கோட்டைக்குப் போற வழி என்ன" என்று கேட்கவும், மேலே இருந்து கேட்ட அவனுக்கோ பாக்கு விலை விசாரிக்கிறாரோ என்று நினைத்து
"துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" என்றானாம்.


"அண்ணோய்! காரைநகர்ச் சிவன் கோயிலுக்குப் போயிட்டு அப்படியே கரம்பனுக்குப் போவமே" என்று திடீரென என் பயணத் திட்டத்தில் புதிய மாற்றத்தைச் சேர்க்க, சின்னராசா அண்ணர் தலையாட்டிக் கொண்டே காரை நகர்ப்பக்கம் விட்டார் ஆட்டோவை.

இடையில் ஒரு இராணுவச் சாவடியில் நின்ற இராணுவச் சிப்பாய் கையைக் காட்டி மறித்து ஆட்டோவில் ஏறி என் பக்கத்தில் இருந்தான். எங்கே போகிறான் என்று அவனும் சொல்லவில்லை நாங்களும் கேட்கவில்லை. பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஒரு சந்தி தென்பட நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு இறங்கிப் போனான்.

காரைநகர் வீதி பளபளப்பான கறுப்பு வெல்வெட் விரிப்புப் போலப் பளிச்சிட்டுக்கொண்டிருக்க அதை ஆசையோடு முத்தமிட்டுக்கொண்டே ஆட்டோ.
இரண்டு கரையும் வெளிர் நீல வேட்டியை நீளமாகக் கட்டிக் காற்றில் மெதுவாக ஆட்டுவது போலச் சாந்தமான கடல். ஆங்காங்கே கடலில் கழிகள் நடப்பட்டு மீன்களை நோட்டம் விடும் வேவு பார்க்கப்படுகின்றது.

"தம்பி சுனாமி வரேக்கை காரைநகர்ச் சனம் கோயிலுக்குள்ள இருந்தது, ஒருத்தருக்கும் ஒண்டுமே நடக்கேல்லை என்பது புதுமை தானே" சின்னராசா அண்ணர்.

"கசோரினா பீச் பக்கம் போகாதேங்கோ தம்பி, இந்தப் பெடிபெட்டையளும், வெளிநாட்டுக்காரரும் செய்யிற அநியாயம் கொஞ்ச நஞ்சமில்லை, அவையின்ர உடுப்பும் ஆட்களும்" என்று சின்னராசா அண்ணர் சொல்ல, இன்னொரு நாள் அவரோடு கசோரினா பீச் இற்குப் போகும் ஆசையை மூடி வைத்துக் கொண்டேன்.

ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்குக் கண்டு அன்று கும்பாபிஷேக தினம் அன்று என்பதை முதல் நாள் உதயன் பேப்பர் சொல்லியிருந்தது. ஈழத்தின் சிவன் கோயில்களில் காரைநகர்ச் சிவன் கோயிலுக்கும் தனி இடமுண்டு. மார்கழியில் திருவெம்பாவை நாட்களும், ஆருத்ரா தரிசனமும் இந்த ஈழத்துச் சிதம்பரத்தின் தனிச்சிறப்பென்பர்.
கோயிலுக்குப் போகும் பாதை எங்கும் ஒரே தோரண மயம். அந்தக் காலை வேளையிலேயே ஊரே கோயிற்புறத்துக்குக் குடிபுகுந்தது மாதிரி அவ்வளவு சனக்கூட்டமும் வாகனங்களின் முற்றுகையும். எனக்கு நினைவு தெரிய நான் முதன்முதலாக இன்று தான் காரைநகர்ச்சிவன் கோயிலுக்கு வருகின்றேன். ஆலயத்தின் எழில் மிகு புதுக்கோபுரம் மிடுக்காகக் கலர்ச் சிரிப்பில் மின்னியது. கோயிலுக்குள் நுழைகின்றோம். அங்கே ஒவ்வொரு பிரகாரத்திலும் இருக்கும் எழுந்தருளி மூர்த்திகளுக்கு வரிசையாகப் பூசை நடந்துகொண்டிருக்க, வாய் தேவாரம் முணுமுணுக்க, கையைக் கூப்பிக்கொண்டே வேடிக்கையும் பக்தியும் கலந்து உட்பிரகாரத்தைச் சுற்றுகிறேன்.

கோயிலுக்குள்ளே சனக்கூட்டம், எல்லோருமே பக்திப்பரவசத்தில் வயது , பால் வேறுபாடின்றி உரக்க "அரோகரா" "அரோகரா" என்று கத்திக்கொண்டே திரைச்சீலை விலக்கப்படும் நேரத்தில் காணும் மூர்த்தியைப் பரவசத்தோடு வழிபடுகின்றார்கள். முண்டியடித்துக்கொண்டே அந்தப் பிரகாரத்தின் வாய்க்காலில் வழிந்தோடும் தீர்த்தத்தை கையில் ஏந்தி வாயில் உறிஞ்சிக் குடித்துத் தலையிலும் தெளித்துக் கொண்டே அடுத்த பிரகாரத்துக்குத் தாவுகின்றார்கள். இணுவிலார் தான் கோயில் எண்டா உயிரையே கொடுப்பினம் என்று நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பை அன்று காரைநகர்ச் சிவன் மாற்றிவிட்டார்.

கோயிலில் இருந்து வெளிக்கிட்டாச்சு, அடுத்தது நாங்கள் செல்லவேண்டியது கரம்பனுக்கு. எப்படிப் போவது என்று எனக்கும் சின்னராசா அண்ணருக்கும் தெரியாத நிலையில் ஆட்டோ சந்தியில் வந்து முன்னே தெரியும் பஸ் தரிப்பு நிலையத்தில் வந்து நிற்கிறது. அங்கே ஒரு ஐம்பதுகளில் மிதக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கின்றார்கள்.
"ஐயா இந்த வழியால கரம்பன் பக்கம் போலமோ" சின்னராசா அண்ணர் கேட்க,
"ஓ தாராளமா, இப்பிடியே நேரப்போய் சீனோர்ப்பக்கம் ஒரு ஜெற்றி பிடித்துப் போனால் மற்றப்பக்கம் ஊர்காவற்துறை, நானும் அந்தப் பக்கம் தான் போறன்" என்றவாறே அந்தப் பெண்மணி எந்தவிதமான அனுமதியையும் எதிர்பார்க்காமல் என் பக்கத்தில் உட்கார்ந்து,
"எடுங்கோ ஆட்டோவை நான் வழியைக் காட்டுறன்" என்றார்.
கொஞ்சத்தூரம் போனதும் சின்னராசா அண்ணருக்குச் சந்தேகம் வலுத்துவிட்டது.
"உண்மையாத் தான் சொல்லுறியளோ? இதால போகலாமோ" என்று கேட்க,
"ஓமோம் போலாம் போலாம்" என்று கையைக் காட்டுகிறார் அந்தப் பெண்மணி. இடைவழியில்
"சரி நான் இறங்க வேண்டிய இடம் வந்துட்டுது, உதால நேர போங்கோ" என்று கையைக் காட்டி விட்டுத் தன் போக்கில் போய்விட்டார்.


பனைக்கும் முட்கம்பி வேலியோ?
சீனோர்ப்பக்கம் ஆட்டோ, அங்கே ஒன்றிரண்டு பேரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடலும்.
ஜெற்றியைப் பிடிக்கும் கரைப்பக்கம் போக அங்கே பஸ் தரிப்பிடத்தில் ஒரு சிலர். ஒரு நேவிக்காரன் வந்து இங்கே நிற்கவேண்டாம் ஜெற்றி வந்ததும் வரலாம் என்று எங்களைத் திருப்பி அனுப்பப் போக்கிடமின்றித் திரும்புகின்றோம். இன்னும் 45 நிமிடம் காத்திருக்க வேண்டும்.
ஒரு தேனீர்ச்சாலை பக்கத்தில் தென்படுகின்றது. காலையில் இருந்து ஒன்றுமே வயிற்றில் போடவில்லை, தேனீர் குடிக்கலாமே என்று நினைத்துச் சின்னராசா அண்ணரை அழைத்தேன்.


"தம்பி ரெண்டு பிளேன்ரீ போடுங்கோ" என்ற சின்னராசா அண்ணரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு தேனீர்த்தம்பி தயாரிக்கிறார். உவர் நீரும் சீனியும் கலந்த புதுச்சுவையாக இருக்கின்றது. 45 நிமிட நேரத்தையும் தேனீர்ச்சாலையின் உரிமையாளரான அந்த வயதானவரிடம் பேச்சுக்கொடுத்துக் கழித்தோம். ஜெற்றி வருவது தெரிகின்றது.

ஆட்டோ ஜெற்றியில் ஏற, ஆட்டோவுக்குள் நானும் சின்னராசா அண்ணரும், எங்களோடு மறுகரைக்குப் போகும் தொழில் செய்வோர், மற்றும் குடிமக்கள் என்று சைக்கிள், மோட்டார் சைக்கிளோடு நிறைய ஜெற்றி என்ற அந்தத் திறந்த இரும்புப்பாதை ஆட்களை அள்ளியணைத்துக் கொண்டு மறுகரை நோக்கிப்பயணிக்கின்றது. "உப்பிடித்தான் தம்பி நான் மகாதேவாக்குருக்களைக் அனலை தீவு காண, போட்டில ஓட்டோவை ஏத்திக் கொண்டுபோயிருக்கிறன்" சின்னராசா அண்ணை பெருமிதத்தோடு சொல்கிறார்.

தூரத்தே ஒரு கோட்டை தெரிகிறது. ஊர்காவற்துறைக் கடற்கோட்டை தான் அது. யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்ட போர்த்துக்கேயர் காலத்தில் கட்டி, ஒல்லாந்தர் காலத்தில் கட்டியாண்ட கடற்கோட்டை கடலுக்கு நடுவே கம்பீரமாக நிற்கின்றது.
இந்தக் கோட்டைக்குள் கடற்படையின் முகாம் இன்னமும் இருக்கின்றது. "கடற்கோட்டை" என்ற செங்கை ஆழியான் நாவலில் வந்த பூதத்தம்பி விலாசமும், அவன் மனவி அழகவல்லியும் நினைவில் மிதக்கின்றார்கள் அப்போது.


ஜெற்றி மறுகரையில் நெருங்கி நிற்க மெல்ல ஒவ்வொருவராக இறங்குகின்றோம். சரி, ஊர்காவற்துறை வந்தாச்சு இனிக் கரம்பன் எப்படிப் போவது? கூட வந்த பயணிகளில் ஒருவரைக் கேட்டால் ஒரு வழியைக் காட்டுகிறார். அந்த வழியே பயணிக்கின்றோம்.


"கரம்பன் முருகமூர்த்தி கோயிலடிக்குக் கிட்டத்தான் வீடு இருக்காம் அந்தப் பக்கம் போய்ப்பார்ப்பம்" என்று நான் சொல்ல சின்னராசா அண்ணர் இடையில் எதிர்ப்படுவோரை நிறுத்தி விசாரித்து வழிகேட்டு முருகமூர்த்தி கோயிலுக்கும் வந்தாச்சு.

அந்த ஆலயச் சூழலில் ஒரு குருவி, காக்காய் கூட இல்லை. அழிந்து போன சகடை, பாழடைந்து போன தீர்த்தக்கேணி, இரும்புக்கதவால் பூட்டப்பட்ட கோயில் என்று இருக்கிறது ஆலயச் சூழல். திருநீறைப் பூசி, சந்தனம் வச்சு, இரும்புக் கதவுக்குள்ளால் மூடிய பிரகாரத்துக்குள்ளே இருக்கும் ஆண்டவனை நினைந்து தேவாரம் பாடிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று உறவினரின் செல் போனுக்கு அழைக்கிறேன்.


"எங்கட வீடு முருகமூர்த்தி கோயிலுக்குக் கிட்ட இல்லை, அந்தக் கோயிலுக்கு நாங்கள் வாறனாங்கள் என்று சொன்னேன், எங்கட வீடு அங்காலை தள்ளிப் போகோணும்" என்றார் அவர், கூடவே இன்னொரு விலாசத்தைக் கொடுத்தார்.
"சுத்தம்" என்று மனசுக்குள் நான் சொல்ல, "என்னவாம்" என்றார் சின்னராசா அண்ணர்.
"அங்காலை தள்ளிப் போகோணுமாம் அண்ணை" என்றவாறே ஆட்டோவில் ஏறி இந்த முறை நானே இடையில் எதிர்ப்படுவோரை விசாரித்து ஏறக்குறையக் கரம்பனை மூன்று சுற்றுச் சுற்றியிருப்போம்.

எல்லாம் அலுத்துப் போய் இனி வீட்டை போகலாம் என்று நினைத்துக் கடைசி முயற்சியாக அந்த வனாந்தரத்தில் இருந்த ஒரேயொரு வீட்டின் கதவைத் தட்டினோம். ஒரு இளம் தம்பதி. கூலிவேலை செய்து பிழைப்பவர்கள் என்று தெரிகின்றது. அந்த இளைஞரிடம் விலாசத்தைக் கூறி இந்த இடத்துக்கு எப்படிப் போகலாம் என்று கேட்டேன். இது மற்றப்பக்கம் எல்லோ,வாங்கோ நான் காட்டுறன் என்று ஆட்டோவில் ஏறி வழிகாட்ட ஆரம்பித்தார். போகும் பாதை எல்லாம் புதர் மண்டிய காடுகள் புதருக்குள் உற்றுப்பார்த்தால் வீடுகள்.

எல்லாமே அநாதரவாக விடப்பட்ட வீடுகள். இருபது வருஷங்களுக்கு மேல் இந்த ஊர்கள் எல்லாமே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களுக்குப் போயிவிட்டன. இப்போது தான் மெல்ல மெல்ல ஒருவர் இருவராக மீளக் குடியேறுகின்றார்கள்.

அந்த இளைஞர் காட்டிய பக்கம் வந்து ஒருவாறு நாங்கள் வரவேண்டிய இடத்துக்கும் வந்தாச்சு. இனி வீட்டை எங்கே கண்டுபிடிப்பது. யாரையாவது விசாரிப்போம் என்று அந்தப் புதர்க்காட்டிலும் புடலங்காய் பயிரிட்ட ஒரு வீட்டுக்காரரைக் கண்டு கதவைத் தட்டினோம். நான் தேடிவந்த வீட்டுக்காரர் பெயரைச் சொல்ல, "ஓம் அவயை எனக்கு நல்லாத் தெரியுமே? இது அவையின்ர தங்கச்சி வீடுதான் அங்கை பாருங்கோ அதான் அவையின்ர வீடு" பக்கத்தில் இருக்கும் இன்னொரு புதர்க்காட்டைக் காட்டியவாறே அந்தப்பக்கமாக அவர் நடக்கப் பின்னால் மந்திரத்தால் கட்டுப்பட்டது போல வழிகாட்டியும், சின்னராசா அண்ணரும் பின்னே நானும். அந்தக் காட்சியின் ஒளிவடிவம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் நேரடிச் சண்டைகள் அதிகம் இல்லாது மீட்கப்பட்ட இடங்கள் என்பதால் அங்கே தென்படும் வீடுகள் விமானக்குண்டுகள் போன்றவற்றின் சேதாரமின்றிக் கட்டிடம் தனித்திருக்கக் கூரையும் நிலைக்கதவுகளும் தளவாடங்களும் சூறையாடப்பட, வீட்டுக்குள்ளே மரங்களும், ஊர்வனவும் குடிகொண்டிருக்கின்றன. இந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.
ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

Nantri:kanapraba.blogspot.com

1 comment:

kirrukan said...

(quote)இணுவிலார் தான் கோயில் எண்டா உயிரையே கொடுப்பினம் என்று நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பை அன்று காரைநகர்ச் சிவன் மாற்றிவிட்டார்(quote)

சிட்னி முருகனிட்ட போகவில்லையோ? சிட்னி முருகனிட்ட வந்த பின்பும் அப்படி ஒரு எண்ணம் இருந்ததோ?
(quote)இராணுவச் சாவடியில் நின்ற இராணுவச் சிப்பாய் கையைக் காட்டி மறித்து ஆட்டோவில் ஏறி என் பக்கத்தில் இருந்தான்.
அந்தப் பெண்மணி எந்தவிதமான அனுமதியையும் எதிர்பார்க்காமல் என் பக்கத்தில் உட்கார்ந்து(quote),

ஆமிக்காரன் அதிகாரத்துடன் ஒட்டோவில் ஏறியிருப்பான்.
தம்பதிகள் இது நம்ம ஆளு என்று ஒட்டோவில் ஏறியிருப்பினம்...

யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு என்று சனம் சொல்லியினம் உண்மையோ?????