இரண்டு பெண்கள் - அ.முத்துலிங்கம்


.
மங்களநாயகம் தம்பையா என்பது மிகவும் பரிச்சயமான பெயர். பல வருடங்களுக்கு முன்னரே  இவர் எழுதிய ‘நொறுங்கிய இருதயம்’நாவல் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஓர் இலங்கைப் பெண் எழுதிய முதல் தமிழ் நாவல். இந்தியாவில் அ.மாதவையா ‘பத்மாவதி சரித்திரம்’ எழுதி 16 வருடங்களின் பின்னர் மங்களநாயகம் தன் நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவலை நான் பலமுறை படிக்கத் திட்டமிட்டு தோற்றிருந்தேன். இதை கடைகளில் வாங்கமுடியாது. நூலகங்களில் அகப்படாது. ஆனால் நண்பரிடம் அந்தப் புத்தகம் இருந்தது தற்செயலாகத் தெரியவந்தது.

என்னுடைய பிரச்சினை என்னவென்றால் இரவல் வாங்குவது. பல வருடங்களாக புத்தகம் இரவல் வாங்குவதை நான் நிறுத்தியிருந்தேன். திருப்பிக்கொடுக்க மறந்துவிடுவேன். அப்படி மறந்துவிடுவேன் என்ற பதற்றம் என்னை நூலை ஆசுவாசமாகப் படிக்க விடாது. பழக்கத்தில் இரவல் புத்தகத்தில் அடிக்கோடிட்டும், ஓரத்தில் குறிப்புகள் எழுதியும், புத்தக பக்க மூலைகளை மடித்துவிட்டும் புத்தகத்தை முடிந்தமட்டும் நாசமாக்கியிருப்பேன். ஆனால் வேறு வழியில்லை. நண்பரிடம் புத்தகத்தை இரவல் வாங்கி ஓர் இரவு முழுக்க படித்து முடித்துவிட்டு அடுத்தநாள் காலையே அதை திருப்பிவிட்டேன்.


சிலப்பதிகாரம் எப்படி இரண்டு பெண்களின் கதையை சொல்கிறதோ அப்படித்தான் இந்த நாவலும். கண்மணி, பொன்மணி  என்ற இரண்டு பெண்களின் கதையை சொல்கிறது. கண்மணி ஒரு குணவதி. நாவலின் ஆரம்பத்தில் ஒரு விபத்தில் அவளும் அருளப்பாவும் சந்தித்து அவர்களுக்கிடையில் காதல் அரும்புகிறது. அருளப்பாவின் தகப்பனுக்கு அவர்கள் மணமுடிப்பதில் சம்மதமில்லையெனினும் அவர்கள் திருமணம் இனிதே நடக்கிறது. கண்மணி கணவனில் அன்புகாட்டும், அவனுக்கு அடங்கிய, விசுவாசமான மனைவியாக அமைகிறாள். அவள் கணவனுக்கு கல்கத்தாவில் ஒரு காதலி இருப்பதும் தொடர்ந்து கடிதம் வருவதும் அவர்களுக்குள் பிரச்சினையை கிளப்புகிறது. அத்துடன் கண்மணிமேல் கணவனே திருட்டுப்பட்டமும் சுமத்துகிறான். விரைவில் கணவனால் வெறுக்கப்படுகிற மனைவியாகிறாள். அருளப்பா கண்மணியை கொடுமைப்படுத்தினாலும் வேறு வழியின்றி  பிள்ளைகளுடன் அவனே கதியென்று வாழ்கின்றாள்.

கண்மணிக்கு ஒரு சிநேகிதி, அவள் பெயர் பொன்மணி. அவளும் அழகான அடக்கமான பெண் என்றாலும் தன் உரிமையை விட்டுக்கொடுக்காமல் போராடும் குணமுடையவள். கண்மணியின் தமையன் பொன்னுத்துரை பொன்மணியை காதலிக்கிறான். அருளப்பாவின் சகோதரன் அப்பாத்துரையும் பொன்மணியை காதலிக்கிறான். அப்பாத்துரை பணக்காரன் என்பதால் தன்னுடைய பணபலத்தினால் பொன்மணி பொன்னுத்துரையின் காதலை முறிக்கப் பார்க்கிறான். இறுதியில் பெரியோர்களின் பலவந்தத்தால் அப்பாத்துரைக்கும் பொன்மணிக்கும் எழுத்து நடைபெறுகிறது. பொன்மணி சபையிலே, அத்தனை பேர் முன்னிலையிலும்,‘பெரியோரே, கனவான்களே. இது எனக்குச் சற்றும் பிரியமில்லாத செய்கையென்பதையும், என் பெற்றோர்களின் நெருக்குதலினால் கையொப்பத்தை வைக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்’என்று சொல்லிவிட்டு கையொப்பமிடுகிறாள். ஆனால் கல்யாண நாள் அன்று பொன்மணி மாறுவேடத்தில் தப்பி தன் காதலன் பொன்னுத்துரையுடன் ஓடிவிடுகிறாள்.

அருளப்பாவின் கொடுமையை மேலும் பொறுக்கமுடியாத கண்மணியும் தன் பிள்ளைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி தன் அண்ணன் பொன்னுத்துரையுடன் வசிக்கும் நேரத்தில் அவள் நோய்வாய்ப்படுகிறாள். அவளுடைய கணவன் அருளப்பா தன் குற்றத்தை உணர்ந்து, அவள் இருக்கும் இடத்துக்கு தேடிவந்து, அவளிடம் மன்னிப்பு கேட்கிறான். படுத்த படுக்கையாக கிடக்கும் கண்மணி கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய பின்னர் இறக்கிறாள். கண்மணி இறப்பதற்கு முன்னர் யேசுவின் மகிமை பற்றி பேசுகிறாள். பொன்னுத்துரையும் அவன் புது மனைவி பொன்மணியும் கிறிஸ்தவ மதத்தை தழுவுகிறார்கள்.

நாவலில் வரும் வர்ணனைகள் 100 வருடத்திற்கு முந்திய யாழ்ப்பாண நிலத்தையும் அதன் மாந்தரையும் கண்முன்னே கொண்டுவருகின்றன. கதைமாந்தர்களின் செயல்களை வைத்தே அவர்களைப் பற்றிய ஓர் உருவம் மனதில் படிந்துவிடுகிறது. கண்மணி மீது அனுதாபமும் பொன்மணிமீது மரியாதையும் ஏற்படுகிறது. ஒரு நூறு பெண்களில் இந்த இரண்டு பெண்களை கலந்துவிட்டால் வாசகர் இவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். அப்படி ஒரு தெளிவான உருவம் கிடைக்கிறது.

நூறுவருடத்துக்கு முன்னர் நாவலாசிரியர் இப்படி எழுதியிருக்கிறாரே என்று அடிக்கடி வியக்கத் தோன்றுகிறது. கதை மாந்தர்கள் பேசும்போது சொற்கள் எழுத்து வழக்கிலிருந்து பேச்சு வழக்குக்கு இயல்பாக மாறிவிடுகின்றன. அதுவும் இந்தியத் தமிழ் வாசனையின்றி முழுக்க முழுக்க யாழ்ப்பாணத் தமிழ் சொற்களாக இருப்பது நம்பமுடியாமலிருக்கிறது. நாவல் நிறையப் பழமொழிகள் வந்துபோகின்றன. அந்தக் காலத்தில் வெளிவந்த எல்லா நாவல்களிலும் இதைப் பார்க்கலாம்.  புழக்கத்திலிருக்கும் அத்தனை  உவமைத் தொடர்களையும், பழமொழிகளையும் முன்கூட்டியே எழுதிவைத்துவிட்டு தகுந்த இடங்களில் அவற்றை ஆசிரியர் புகுத்தியிருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.  ’பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’, ‘சாரை வாய்ப்பட்ட தேரை’, ‘ஆடு நினைத்த இடத்திலா பட்டி அடைக்கிறது’ போன்ற தொடர்கள் சுவாரஸ்யமாக இருந்தன. நான் நிறைய ரசித்தது அந்தக் காலத்தில் வழக்கிலிருந்து இப்பொழுதெல்லாம், கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட வார்த்தைகள். கெறுவம், இடம்பம், சுகவாளி, சவுக்கியவீனம், பரிகரிப்பு, சமுசயம் போன்ற சொற்கள் ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் முற்றிலும் மறைந்துவிட்டன என்பது அதிசயம்தான்.

நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவலை இந்தக் காலத்து அளவுகோல் கொண்டு அளக்க முடியாது. இருப்பினும் சில விசயங்கள் இடிக்கின்றன. பொன்னுத்துரை குதிரை வண்டிக்காரனாக வேடம்போட்டு வருவதும், பொன்மணி ஆண்வேடமிட்டு தப்பியோடுவதும் சிறுபிள்ளைத்தனமான கற்பனையாக இருக்கிறது. பனைமரத்தில் இருக்கும் ஒருவன் விளக்கு அணைந்ததும் கீழே இறங்கிவந்து அடித்துவிட்டு பின்னர் ஓடிப்போய் மரத்திலேறி ஒளிந்துகொள்வதும்கூட அப்படிப்பட்ட நம்பமுடியாத கற்பனைதான்.

ஒருவித பிரசார நெடியும் இல்லாமல்தான் முதலில் நாவல் எழுதப்பட்டிருக்கவேண்டும். பின் பகுதியில் வரும் மத மாற்றத்திற்கான ஒருவித தயாரிப்புகளும் நாவலின் முன் பகுதியில் இல்லை. நாவலை எழுதி முடித்த பிறகு இரண்டாம் யோசனையாக கதை மாந்தர்கள் எல்லாம் கிறிஸ்தவத்துக்கு மாறினார்கள் என்று எழுதி சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதே என் ஊகம்.

இந்த நாவல் வெளியாவதற்கு அறுபது வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் Emily Bronte என்ற இளம்பெண்மணி Wuthering Heights என்ற நாவலை எழுதியிருக்கிறார். அந்த நாவல் ஆங்கில இலக்கிய ஆர்வலர்களால் இன்றுவரை பேசப்படுகிறது. அதிலே வரும் கதாநாயகி ஏழையான கதாநாயகனை காதலித்துவிட்டு ஆடம்பரவாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ஒரு செல்வந்தனை மணமுடிக்கிறாள். ஆனால் நொறுங்குண்ட இருதயத்தில் வரும் பொன்மணி ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து தான் காதலித்தவனையே கரம்பிடிக்கிறாள். இரண்டு நாவல்களும் ஒரு காலகட்டத்தை சரியாக பிரதிபலிக்கும் நல்ல நாவல்கள்.

மங்களநாயகத்தின் நாவல் பெரிய திட்டமிடல் இல்லாமல் எழுதியது தெரிகிறது. அதுவே அதன் பலம். நாவலின் கட்டுமானமும் இயற்கையான சொல்முறையும் அதன் அழகை கூட்டுகின்றன. பாத்திரச் சித்தரிப்புகள் அளவோடு ஒருவித மிகையுமில்லாமல் வருவதால் நம்பகத்தன்மை நிறைந்திருக்கிறது. இரட்டைப் பிள்ளைகளில் ஒரு பிள்ளை சாகும் காட்சி மிக உருக்கமாகவும் உண்மையாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. பின்னால் இதன் தொடர்ச்சி சொல்லப்படாவிட்டாலும்கூட அந்தக் காட்சி நினைவில் இருந்து அழிவதில்லை.

நாவலை படித்து முடித்துவிட்டு அடுத்தநாள் காலை திருப்பி கொடுக்கவேண்டிய கட்டாயம் எனக்கிருந்தது. அப்படி ஒரு நிர்ப்பந்தம் எனக்கு இருந்திருக்காவிட்டாலும்கூட நான் இரவிரவாக நாவலை படித்து முடித்திருப்பேன். அத்தனை சுவாரஸ்யமாகவும், இயற்கையாவும், கவர்ச்சியாகவும் அதன் சொல்முறை இருந்தது.  நாவலில் ஒரு பழமொழி வரும். ’பொக்கைவாய்ச்சி பொரிமாவை மெச்சியது’ என்று. ஓர் ஈழத்து நாவலை ஓர் ஈழத்துக்காரர் மெச்சுவார்தானே என்றில்லாமல் உண்மையிலேயே இந்த நாவல் சுவாரஸ்யம் குறையாமல் ஒருவரால் படிக்கக்கூடியதுதான். யாராவது நண்பர் ஓர் இரவு இரவல் தருவாராயிருந்தால் இன்னொரு தடவை படிக்கலாம்
நன்றி: http://amuttu.net

No comments: