உலகச் செய்திகள்

* ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய வைத்தியருக்கு தூக்குத் தண்டனை வழங்குமா பாகிஸ்தான்?: வலுக்கும் அமெ. பாக் மோதல்

* சமாதானத்திற்கான நோபல் பரிசு ஆபிரிக்க பெண்கள் மூவருக்கு


* எகிப்தில் மதக் கலவரம்: 24 பேர் பலி


* உக்ரேன் முன்னாள் பிரதமர் ஜுலியாவுக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிப்பு* மியான்மரில் 6,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு


* இந்தோனேசிய பாலி தீவில் 6.0 ரிச்டர் பூமியதிர்ச்சி
ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய வைத்தியருக்கு தூக்குத் தண்டனை வழங்குமா பாகிஸ்தான்?: வலுக்கும் அமெ. பாக் மோதல் _

கவின்
7 /102011
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் அபோதாபாத்தில் வசிப்பதனை உறுதி செய்யும் பொருட்டு அவ்விடத்தில் போலி மருத்துவ முகாமொன்றினை நடத்தி அமெரிக்க உளவுப் பிரிவினருக்கு தகவல் வழங்கிய வைத்தியருக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சகில் அப்ரிடி என்ற குறித்த வைத்தியர் அந்நாட்டு உளவுப் பிரிவினரால் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது கடும் சித்திரவதைக்குள்ளாகி வருவதாகவும், அவருக்கென வாதாட வழக்கறிஞர் ஒருவரைக்கூட நியமிக்க அந்நட்டு உளவுப் பிரிவினர் அனுமதிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் தூக்குத்தண்டனை வழங்கப்படாலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் அவரை விடுதலை செய்யும் படியும், அவரை அமெரிக்காவில் குடியமர்த்த தாம் தயாராகவுள்ளதாகவும் அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் பாகிஸ்தான் இதற்கு இணங்கவில்லையெனத்தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, சேதமடைந்த அமெரிக்க ஹெலிகொப்டரை பரிசோதிக்க சீன பொறியியலாளருக்கு பாகிஸ்தான் அனுமதியளித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் இவ்விரு நாடுகளுக்கிடையேயான உறவு சுமூகமான நிலையில் இல்லாதபோது இச்சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


சமாதானத்திற்கான நோபல் பரிசு ஆபிரிக்க பெண்கள் மூவருக்கு

8/10/2011

மாதானத்திற்கான நோபல் பரிசு, இவ்வாண்டு மூன்று பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள, லைபீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள்,ஒருவர் ஏமன் நாட்டவர்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், இந்தாண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆபிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில், அமைந்துள்ள லைபீரிய நாட்டின் ஜனாதிபதி எலன் ஜொன்சன் செர்லீவ், அந்நாட்டின் அமைதிப் போராளி லேமா கபோவீ மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவாக்குல் கர்மான் ஆகிய மூன்று பேருக்கு, இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

சமாதானத்தை கட்டியெழுப்பும் பணியில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் முழுமையான பங்களிப்பு செய்யவும் வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டமைக்காகவே இந்த மூவருக்கும் சமாதனத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் லைபீரிய நாட்டவரான லேமா போவீ, அந்நாட்டில் இடம்பெறுவந்த, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றினார். அவரது அமைதி இயக்கம், உள்நாட்டுப் போரை 2003ல் முடிவுக்குக் கொண்டு வந்தது.

அதன் பலனாக, அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, ஜனாதிபதியாக எலன் ஜொன்சன் செர்லீவ் (72) தேர்ந்தெடுக்கப்பட்டார். லைபீரியாவிலும், ஆபிரிக்காவிலும் முதன் முறையாக ஜனாதிபதியான பெருமை செர்லீவிற்கு கிடைத்தது.

ஏமன் நாட்டில், தற்போது நடந்து வரும் அதிபருக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார் தவாக்குல் கர்மான் (32) பத்திரிகையாளரான இவர், "விமன் ஜெர்னலிஸ்ட்ஸ் வித்தவுட் செயின்ஸ்' என்ற மனித உரிமை அமைப்பை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


எகிப்தில் மதக் கலவரம்: 24 பேர் பலி


10/10/2011

கிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் திடீரென ஏற்பட்ட கலவரத்தி்ல் சுமார் 24 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கெய்ரோவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலையே பாரிய கலவரமாக மாறியுள்ளது.

அங்கு வழிபாடு நடத்திக்கொண்டிருந்த மக்கள் மீது வாகனம் ஒன்றில் வந்தநபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலி்ல் சுமார் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்நகர் முழுவதும் கலவரம் பரவியது.

இச்சம்பவத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி

உக்ரேன் முன்னாள் பிரதமர் ஜுலியாவுக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிப்பு

12/10/2011

உக்ரேனின் முன்னாள் பிரதமர் ஜுலியா தைமோ ஷென் கோவுக்கு எரிவாயு உடன்படிக்கையொன்று தொடர்பில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையொன்று தொடர்பிலேயே அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவரது இந்த உடன்படிக்கையால் அந்நாட்டு அரசாங்க எரிவாயு கம்பனிக்கு 186 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யூலியா தைமோஷென்கோ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேற்படி குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என தெரிவித்த அவர் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக போராடப் போவதாக கூறினார்.

நன்றி வீரகேசரி
மியான்மரில் 6,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

12/10/2011

மியான்மர் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும், எத்தனை பேர் விடுவிக்கப்படுவர் என்பது தெரிவிக்கப்படவில்லை.

மியான்மர் ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்பாக, இன்னும் சில நாட்களில் இவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மியான்மரில் இராணுவ ஆட்சி அமுலில் இருந்த போது பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள், அரசுக்கு எதிராகப் போராடிய புத்தமதத் துறவிகள் என ஆயிரக்கணக்கானோர் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்தாண்டின் இறுதியில் அங்கு, அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, சமீபத்தில் ஜனாதிபதியாக தெய்ன் செய்ன் பொறுப்பேற்றார். மியான்மர் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவும், சர்வதேச சமூகத்தின் ஆதரவு கோரியும், அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, சிறையில் உள்ள 6,300 கைதிகளுக்கு அதிபர் பொது மன்னிப்பு அளிக்க இருப்பதாக, அந்நாட்டு தொலைக்காட்சியில் நேற்று அறிவிக்கப்பட்டது. எனினும், எத்தனை பேர் விடுவிக்கப்படுவர் எனத் தெரியவில்லை.

இவர்களில், அரசியல் கைதிகள் என 1,900 பேர் இருப்பதாக, அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்களில் 1,250 பேர் மட்டும் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பொது மன்னிப்பு, அரசியல் கைதிகளையும் உள்ளடக்கியதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. கடந்த மே மாதம், 15 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 2009இல் ஏழாயிரம் பேர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


இந்தோனேசிய பாலி தீவில் 6.0 ரிச்டர் பூமியதிர்ச்சி


13/10/2011

இந்தோனேசிய பாலி தீவுக்கு அப்பால் இன்று தாக்கிய 6.0 ரிச்டர் பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் பல சேதமடைந்ததால் பெருந்தொகையான மக்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலி தீவின் தலைநகர் டென்பாஸரிலிருந்து தென் மேற்கே 130 கிலோ மீற்றர் தூரத்தில் 61.3 கிலோ மீற்றர் ஆழத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பூமியதிர்ச்சியின் போது கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அலறிடியடித்துக் கொண்டு வீடு வாசல்களை விட்டு ஓடியுள்ளனர்.

சுமார் 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

"நெருப்பு வளையம்' என அழைக்கப்படும் இந்தோனேசியாவானது அடிக்கடி பூமியதிர்ச்சி சம்பவங்களையும் எரிமலை குமுறல்களையும் எதிர்கொண்டு வரும் நாடாக உள்ளது.
நன்றி வீரகேசரிNo comments: