பூமியைக் காப்போம் - ப.மதியழகன் -கவிதை


காற்றில்
கரியமில வாயுவையும்
நதிநீரில்
கழிவு நீரையும்
கலக்க விடுகிறாய்
பருவம் தப்பும்போது
கடவுளின் சாபம் என்கிறாய்
வனப்பாதையில்
கட்டிடங்கள் கட்டுகிறாய்
பாலிதீன் பைகளை
உபயோக்கிறாய்



இயற்கையை வெல்ல கையில்
ஏன் ஆயுதம் ஏந்துகிறாய்
பறவைகளை
நகரத்தை விட்டு துரத்துகிறாய்
வனவிலங்குகளின் வழித்தடங்களில்
மின்சார வேலி அமைக்கிறாய்
உன் சுயநலத்துக்காக
பூமிப்பந்தை ஏன் சிதைக்கிறாய்
ஆழ்குழாய் கிணறு மூலம்
பூமியின் உதிரத்தை உறிஞ்சுகிறாய்
திருட்டுத்தனமாக
ஆற்று மணலை அள்ளுகிறாய்
நீ வாழ இடம் தந்த பூமியை
அழிப்பதற்கு
எல்லோருக்கும் முன்னால் ஏன் வந்து
நிற்கிறாய்
கங்கையில் குளித்தால்
பாவம் போகும் என்கிறாய்
கூவத்தை யார் இப்படி
மாற்றியது என்று கேட்டால்
பதில் சொல்ல மறுக்கிறாய்
காற்றை வாயுபகவான்
என்கிறாய்
பிறகு ஏன் சிகரெட்டை ஊதி
நிக்கோடினை கக்குகிறாய்
அணுக்கழிவுகளை
கடலில் வந்து கொட்டுகிறாய்
கடலை குப்பை தொட்டியாய்
ஏன் எண்ணுகிறாய்
வல்லரசு நாடுகள் என்கிறாய்
ஆயுத வியாபாரம் செய்கிறாய்
பூமியை மனிதர்கள் வாழ
தகுதியற்றதாக்கிவிட்டு
வேற்றுக் கிரகத்தில்
குடியேறலாமா என
யோசனை செய்து கொண்டு
இருக்கிறாய். 

No comments: