.
மட்டுநகரில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நூல் வெளியீடு
கடந்த மே மாதம் 21 ஆம்திகதி அவுஸ்திரேலியாவில் வாழும் சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் “சங்ககாலமும் சங்க இலக்கியங்களும்” என்ற நூலின் வெளியீட்டுவிழா மட்டக்களப்பு பொதுநூலக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. செல்வன். மு.புருN~hத்தமனின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவில் மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் திரு. செ.தவராசா வரவேற்புரை நிகழ்த்தினார்.
பொதுநூலக வாசகர் வட்டத்தின் அனுசரணையுடன் “செங்கதிர்” இலக்கிய வட்டத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த விழாவுக்கு “செங்கதிர்” சஞ்சிகையின் ஆசிரியர் திரு.த.கோபாலகிரு~;ணன் தலைமை வகித்தார். தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கியத்திற்காகவும் பல்வேறு பணிகளை ஆற்றிவருபவர் சட்டத்தரணி திரு.சு.ஸ்ரீகந்தராசா என்றும் அவரது நூல்வெளியீட்டு விழாவினை மட்டக்களப்பில் ஒழுங்கு செய்வதில் தாம் மிகுந்த பெருமையடைவதாகவும் திரு.கோபாலகிரு~;ணன் தமது தலைமையுரையில் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் வரலாற்றாசிரியையுமான செல்வி.தங்கேஸ்வரி கதிராமர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அவர் தமதுரையில், திரு. சு.ஸ்ரீகந்தராசா நிகழ்ச்சிகளையும் விழாக்களையும் நடாத்தவதில் மிகவும் திறமையானவர் என்பதையும். எப்போதும் சுறுசுறுப்பாகத் தனது கடமைகளை ஆற்றுபவர் என்றும் கூறி அவரது பணிகளைப் பாராட்டிப் பொன்னாடைபோர்த்திக் கௌரவித்தார்.
மூத்த எழுத்தாளரும், இளைப்பாறிய நிர்வாகசேவை அதிகாரியுமான திரு.இரா.நாகலிங்கம் (அன்புமணி) அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் நூலாசிரியர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் இளமைக்காலச் சமய, சமூக மற்றும் கலைப்பணிகளை நினைவுகூர்ந்து எடுத்துரைத்ததுடன், புலம்பெயர்ந்தபின்னரும் தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைக்கும் அவர் ஆற்றிவரும் சேவைகள் பற்றியும் விதந்துரைத்தார்.
வடகிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சின் முன்னார் பணிப்பாளரான திரு. எஸ். ஏதிர்மன்னசிங்கம் நூலாய்வுரை நிகழ்த்தினார். அவர் தமது ஆய்வுரையில் இந்த நூல் கல்லூரிகளில் உயர்வகுப்புக்களில் படிக்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தமிழ் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளது என்பதுடன், சாதாரண மக்களும் சங்க இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ள மிகச் சிறந்ததொரு கருவியாகவும் உள்ளது என்றும் கூறினார். எல்லோரையும் கவரக்கூடிய அழகான தமிழ் நடை நூலுக்கு அணிசேர்ப்பதாகவும் பாராட்டிய அவர் நூலின் சில பகுதிகளைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். மேலும் அவர் தமதுரையில், நூலாசிரியர் திரு.சு.ஸ்ரீகந்தராசா இளமைக்காலத்தில் மிகச்சிறந்ததொரு நாடகக் கலைஞராகவும், வில்விசைக் கலைஞராகவும் திகழ்ந்தவர் என்பதை நினைவுகூர்ந்துரைத்தார். அவரது நாடகங்கள் மட்டுமன்றி, வில்லுப்பாட்டுக்களும் சமூகசீர்திருத்தக் கருத்துக்களை அறிவுறுத்தும் வகையில் அமைந்திருந்தனவென்றும் அவற்றைப்பார்க்கவும், மதிப்பீடு செய்யவும் பலதடவைகள் தமக்கு வாய்ப்புக்கிடைத்தமை பற்றியும் எடுத்துக்கூறி, “கற்பனையில் தேவலோகம்” என்னும் அவரது அற்புதமான நாடகமும், அதில் நாரதராக அவர் நடித்தமையும் இன்னும் தமது நினைவில் பசுமையாக உள்ளன என்றும் கூறினார்.
பிரபல தொழிலதிபர் திரு.வி.ரஞ்சிதமூர்த்தி. நீர்பாபாசனப் பொறியியலாளர் திரு.பா.தணிகாசலன், தொழிலதிபர் திரு.எம்.செல்வராசா முதலியோர் முதற்பிரதிகளைப் பெற்றுச் சிறப்புச்செய்தனர்.
மூத்த எழுத்தாளர் அன்புமணி, இலக்கியமணி கவிஞர் செ.குணரெத்தினம், வாசகர் வட்டத்தலைவரும், பிரபல யோக சிகிச்சை நிபுணருமான திரு.செ.துரையப்பா ஆகியோர் நூலாசிரியருக்கு மலர்மாலை, சந்தனமாலை முதலியவற்றை அணிவித்துக் கௌரவித்தனர்.
நூலாசிரியார் தமது பதிலுரையில், புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் தாய் நாட்டையும், தமது உறவுகளையும், தமிழ் மொழியையும் எப்பொதுமே நேசித்துக்கொண்டும், அந்த உணர்வுகளையே சுவாசித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள் என்றும் கூறி விழாவை ஒழுங்கு செய்தவர்களுக்கும், விழாவில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்களுக்கும் நன்றி கூறினார். மேலும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும், பத்திரிகைகளிலும் தமிழ் மொழி தப்பும் தவறுமாகப் பிரயோகிக்கப்டுவதையும், கொச்சைப்படுத்தப்படுவதையும் சில உதாரணங்களுடன் எடுத்துக்கூறி இதனைச் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பெருமைமிக்க நமது தமிழ் மொழியைச் சிதைக்கவோ, சிறுமைப்படுத்தவோ வேண்டாம் என்றும், ஊடகங்கள் இந்த விடயத்தில் உன்னத பணியை ஆற்றவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மண்டபம் நிறைந்த தமிழ் ஆர்வலர்கள் நிறைந்திருந்த இந்த விழாவின் நிகழ்ச்சிகளை முன்னாள் அதிபர் திரு.மு.தவராசா தொகுத்து வழங்கினார். விழாவைத் தொடர்ந்து இலக்கியக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
- அன்பழகன் குரூஸ், இணையாசிரியர், “செங்கதிர்”. மட்டக்களப்பு
No comments:
Post a Comment