இலங்கை இந்திய செய்திகள்

.

த.தே.கூ தாக்குதல் பின்னணியில் இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழு: வாசுதேவ _

உடனடியாகத் தேவைப்படுவது தமிழ்ப்பகுதிகளில் இராணுவமயத்தளர்வே


இலங்கையின் இன ஒற்றுமைக்காக அமைச்சர் ராஜித உரைத்த மகா தத்துவம்


தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இன்னொரு பிரபாகரன் வரும் வரை காத்திருக்கக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இந்தக் கருத்து மிகவும் மரியாதைக்குரியதும், சரியான நேரத்தில் சொல்லப்பட்டதுமாகும். அதிலும் அமைச்சராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு கூறியமை அவரின் நேர்மையையும் யதார்த்தமான சிந்தனையையும் எடுத்துக்காட்டும்.


ஒரு தடவை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, தென்மராட்சிப் பகுதியில் ஏற்பட்ட யுத்த அழிவுகளை வியட்நாம் அழிவுக்கு ஒப்பானதெனக் கூறியிருந்தார். அழிவுகளை, அதன் தாக்கங்களை தமிழ், சிங்கள இனத்துவ அடிப்படையில் நோக்காமல் இந்த நாட்டில் ஏற்பட்ட அழிவு என்ற நோக்கில் பார்ப்பதே நல்ல மனிதர்களுக்கான உயர்ந்த பண்புடைமை.

அத்தகைய உயர்ந்த பண்புடமையை அமைச்சர் ராஜித சேனாரத்ன கொண்டுள்ளார் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபணம் செய்வதாக ‘இன்னொரு பிரபாகரன் வரும்வரை காத்திராமல், அதிகாரப் பரவலாக்கலை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்’ என்ற அவரின் கருத்து அமைந்துள்ளது.

போர் வெற்றி, விடுதலைப் புலிகளின் தோல்வி என்ற மகிழ்ச்சியில் மார்தட்டும் தென்பகுதி அரசியல் அறியாமை என்னும் இருளில் மூழ்கிப் போயுள்ளது.

யுத்தம் முடிந்துவிட்டது என்றால் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதாகும். தமிழ் இனத்தின் பிரச்சினைக்குரிய தீர்வை உடனடியாக முன்வைப்பதன் ஊடாக தமிழ் மக்கள் சந்தித்த போர் அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கவும் இலங்கைத் தீவில் இன ஒற்றுமையை ஏற்படுத்தவும் முடியும்.

ஆனால் போருக்குப் பின் இலங்கை அரசு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை முற்றாகத் தவிர்த்து, தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் நடவடிக்கைகளிலேயே அதீத அக்கறை செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை அரச தலைமைக்கும் சிங்கள மக்களுக்கும் ஒரு பெரும் தத்துவத்தை போதித்துள்ளார்.

இந்தத் தத்துவம் இலங்கையில் இன ஒற்றுமைக்காக உரைக்கப்பட்ட மகாதத்துவம் என்றே கூறவேண்டும். ஏனெனில் ,அரசு எதைச் சொல்கிறதோ அதுவே சரியயன கூறுவதே அரசியல் எனக் கருதும் இன்றைய காலநிலையில், அரசின் அமைச்சராக இருக்கும் ராஜித மிகப்பெரியதொரு யதார்த்தத்தை எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகக் கூறியிருப்பது ஒரு மந்திரிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பத்தையும் அஞ்சாமையையும் காட்டுவதாகும்.

அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கு ஆட்சியாளர்கள் கொடுக்கின்ற முக்கியத்துவம் எத்தகையது என்பதைக் கூறமுடியாவிட்டாலும், அமைச்சர் ராஜித கூறியதை செய்யத் தவறின் அவர் கூறியது நிதர்சனமாகும் என்பதை மட்டும் எம்மால் அறுதியிட்டுச் சொல்லமுடியும்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உடனடியாகத் தேவைப்படுவது தமிழ்ப்பகுதிகளில் இராணுவமயத்தளர்வே



கடந்த வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணக் குடாநாட்டில் அளவெட்டிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது படையினரும் சிவில் உடையில் வந்தவர்களும் தாக்குதலை நடத்தி

விளைவித்த குழப்பம் மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுகின்ற கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மேலதிகமாக தேசியப் பட்டியல் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்த நிலையிலேயே ஆயுதபாணிகள் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக் கடமைக்காக அமர்த்தப்பட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு தடுத்திருக்காவிட்டால் அந்த உறுப்பினர்களும் படுகாயமடைந்து நிலைவரம் படுமோசமானதாக மாறியிருக்கக்கூடும் என்பதை அவர்கள் தெரிவித்திருக்கும் தகவல்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் இத்தகைய சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யுமாறும் கோரிக்கைவிடுத்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் அதிகரித்திருந்த ஆயுதபாணிகளின் வன்செயல்கள் ஓரளவுக்கு தணிவடைந்து கொண்டு வருவதாகத் தென்படுகின்ற ஒரு சூழ்நிலைக்கு மத்தியிலேயே வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான தமிழ் அரசியல் அணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆயுதபாணிகள் அடாவடித்தனம் செய்திருக்கிறார்கள். எதிரணிக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல்களின் இரண்டாம் கட்டத்தின் ஆரம்பத்திலேயே குடாநாட்டில் குடியியல் மற்றும் அரசியல் சுதந்திரங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சக்திகள் இவ்வாறு செயற்படக் கூடியதாக இருக்கிறதென்றால் பிரசாரங்கள் தீவிரமடையப் போகும் அடுத்துவரும் நாட்களில் நிலைவரம் எந்தளவுக்குப் பாரதூரமானதாக மாறுமோ என்று மக்கள் பெரும் பீதியடைந்திருக்கிறார்கள்.

ஜனநாயக அரசியல் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய சம்பவம் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் குடாநாட்டில் இடம்பெற்றிருப்பது இதுதான் முதற்தடவையல்ல. ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்நகரில் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் உள்ளடங்கலாக பல சம்பவங்களை எடுத்துக் கூறமுடியும். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு குடாநாட்டு மக்கள் தங்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு அமைதியான சூழலை எதிர்பார்த்து நிற்கும் இன்றைய தருணத்தில், அதுவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு தேர்தல் செயன்முறைகளில் ஆர்வத்தைக் காட்டுவதற்கான உத்வேகத்தைப் பெறவேண்டிய தருணத்தில் ஜனநாயக ரீதியான அரசியல் செயற்பாடுகளை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட நாசகாரத்தனமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன. குடாநாட்டில் மாத்திரமல்ல வடபகுதி முழுமையிலும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான ஜனநாயகச் செயற்பாடுகளில் சகல அரசியல் கட்சிகள் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு ஏதுவான சுமுகமான சூழ்நிலையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும்.

அளவெட்டியில் கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் இன்னொரு முக்கியமான விடயத்தையும் உணர்த்தி நிற்கிறது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக, வடமாகாணத்தில் இராணுவ மயப்படுத்தல் செயன்முறைகள் தளர்வடைய வேண்டியதற்குப் பதிலாக தீவிரமடைந்து கொண்டிருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. முழுமையான குடியியல் வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவதற்கு அத்தியாவசியமான இராணுவ மயத்தளர்வை படிப்படியாகச் செய்வதில் நீண்டகால அடிப்படையிலாவது அரசாங்கத்துக்குத் திட்டமேதாவது இருக்கிறதா என்றால், அதற்கான சமிக்ஞை எதையுமே காணக்கூடியதாக இல்லை. இதன் காரணத்தினால் போரின் முடிவுக்குப் பின்னரான "அமைதி' தமிழ் மக்களைப் பொறுத்தவரை அடிப்படையில் அர்த்தமற்றதொன்றாகவே இருக்கிறது என்பது எமது உறுதியான அபிப்பிராயமாகும். இதை கடந்த இரு வருடகாலத்தில் ஏற்கனவே பல தடவைகள் எமது ஆசிரிய தலையகங்கத்தில் குறிப்பிட்டு வந்திருக்கிறோம்.

புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரினால் இலங்கையின் ஏனைய சமூகங்கள் சகலதையும் விட படுமோசமான அவலங்களுக்கு உள்ளான தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் கூட முன்னெடுக்கப்படாத ஒரு சூழ்நிலையில் இராணுவ மயத்திலான தீவிரம் மேலும் அவர்களை உள ரீதியாகப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. போருக்குப் பின்னர் இலங்கையில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அத்தியாவசியமானவை என்று அடையாளப்படுத்தப்படக்கூடிய செயன்முறைகளில் உடனடி முக்கியத்துவம் வாய்ந்ததாக தங்கள் பிரதேசங்களிலான இராணுவ மயத்தளர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிர்த்திசையிலேயே அரசாங்கத்தின் நோக்கமும் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. இராணுவமயத்தளர்வைச் செய்வதில் அக்கறை காட்டாமல் தமிழ் மக்களின் மனங்களை ஒருபோதுமே வெல்ல முடியாது!

நன்றி தினக்குரல்

த.தே.கூ தாக்குதல் பின்னணியில் இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழு: வாசுதேவ _


6/21/2011 8:32:02 AM

இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குடைய இரகசிய குழுவினரே யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில குழுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பிரபாகரனின் தயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுக் கொன்று வீசியவர்களும் இத்தகைய குழுவினரேயாவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

யாழ்ப்பாணத்தில் அளவெட்டியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அப்பிரதேசத்தில் உருவாகப் போகும் ஜனநாயகச் சூழலை இல்லாதொழிப்பதே இத் தாக்குதலின் நோக்கமாகும். இதன் மூலம் ஜனநாயக அரசியலை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள் தள்ளுவதுமே சூத்திரதாரிகளின் நோக்கமாகும்.

இராணுவத்தில் உள்ள பிடிவாதமுடைய தமிழ் மக்களுக்கு எதிரான இரகசியக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றனர். இக்குழுவினர் தான் பிரபாகரனின் தாயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவ்விடத்தில் வீசியவர்களுமாவர்.

இக்குழு அரசியல் ரீதியாக செயற்படுவதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் குழுவாகும். எனவே இராணுவத்தில் இயங்கும் இந்த இரகசிய குழு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி கண்டுபிடித்து களைய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பயங்கரமான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். இக்குழுவினரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இன்று ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே அமெரிக்காவில் ஒரு பிராந்தியத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் பிராந்திய மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே எதுவும் செல்லுபடியாகாது. எமது நாட்டுக்குள்ளேயே வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு அதனை இரத்து செய்யும் அதிகாரம் உண்டு. சனல் 4இல் ஒளிபரப்பாகிய எமது இராணுவத்தினர் தொடர்பான வீடியோ நாடாவை கோரியுள்ளோம். அது தொடர்பில் ஆராய்ந்து இராணுவத்தினர் குற்றங்கள் செய்திருப்பின் அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே வெறுமனே ஆதாரங்கள் இன்றி திரைப்படத்தை காண்பிப்பது போன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நன்றி வீரகேசரி இணையம்

தொழில்நுட்பவியலாளர் இன்மை
21 / ௦06/ 2011
யாழ்.பண்ணை மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்தில் ஊடு கதிர் இயந்திரத்தை (எக்ஸ்றே) இயக்குவதற்கான மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் இன்மையால் நோயாளர்களுக்கு உரிய சிகிச்சையை வழங்க முடியாதுள்ளதாக மாவட்டக் காசநோய்க் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

மேற்படி ஊடுகதிர் இயந்திரம் கடந்த ஒரு வருடகாலமாகப் பழுதடைந்த நிலையில் இருந்தது. தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரின் உதவியுடன் அது தற்போது திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆயினும் மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் இன்மையால் அதனை இயக்கமுடியாதுள்ளதோடு நோயாளர்களுக்கான சேவையையும் வழங்கமுடியாதுள்ளதென்றும் வைத்தியர் யமுனானந்தா தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

இதனால் தினந்தோறும் இங்கு வருகின்ற நோயாளர்கள் திரும்பிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (பி)

நன்றி தினக்குரல்


செங்கல்பட்டு அகதி முகாமில் இலங்கை தமிழர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரதம்
21 / 06 / 2011
refugesசெங்கல்பட்டு:செங்கல்பட்டு அகதி முகாமிலுள்ள மூவர் தமது வழக்குகளை விரைவாக நிறைவு செய்யுமாறு கோரி ஏழாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கியூ பிரிவு பொலிஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 44 பேர் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கக்கோரி கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை மேலும் 2 பேர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். 3 ஆவது நாள் புதன்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் செல்வம் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில் 6 ஆவது நாள் சனிக்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தன்ராஜ்,யோகநாதன் ஆகிய இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தினமணி
நன்றி தினக்குரல்

No comments: