தமிழ் சினிமா

.
அவன் இவன்

 தாமகன் சீயானை தட்டி ஒட்டியது விஷால் காதாபாத்திரம். சூர்யாவின் சாமர்த்தியத்தை மட்டும் உருவினால் அது தான் ஆர்யா கதாபாத்திரம்.

நந்தா ரா‌ஜ்கிரணை அப்பாவியாக அசமந்தாக காட்டினால் அவன் இவன் ‌ஜி.எம்.குமார். திரையங்கு அதிர அதிர சி‌ரிப்பொலி. இப்படியொரு சி‌ரிப்பொலி கேட்டு நாளாச்சு.





கமுதிக்கோட்டை ஜமீனை கள்வர்கள் கோட்டைன்னு சொல்ற அளவுக்கு அது திருடர்களின் ரா‌ஜ்‌ஜியம். பொலிஸ் வந்தால் சிக்னல் கொடுப்பதற்கென்றே கட்டி வைத்திருக்கும் காண்டாமணி, கறி சோறு போட்டு, இனி திருட மாட்டேன்னு சத்தியம் வாங்கும் பொலிஸ் என்று கதைக்களமே புரையேற்றுகிறது. அண்ணன் விஷால். தம்பி ஆர்யா. ஆனால் இருவருக்கும் இரண்டு அம்மாக்கள். இவர்கள் போட்டுக் கொள்ளும் ஈகோ யுத்தம். அம்பிகா, ஆர்யாவை சதாய்ப்பதும், ஜட்‌ஜ் வண்டியில் வந்திறங்கும் ஆர்யா தனது அம்மாவுடன் ஆட்டம் போட்டு அம்பிகாவை வெறுப்பேற்றுவதுமாக கதற கதற சி‌ரிக்க வைக்கிறார்கள்.

விஷாலுக்கு இது ராஜபாட்டை. புழுதி கிளப்பியிருக்கிறார். பெண் வேடத்தில் அவர் போடும் ஆட்டத்திற்கு திரையரங்கு சேர்ந்தாடுகிறது. மாறுகண்ணும், உடல் மொழியும் நம்முன் காட்டுவது விஷாலையல்ல, ரத்தமும் சதையுமான வேறொரு மனிதனை. கறி சோறு போடும் இடத்தில் கான்ஸ்டபிள் ஜனனியை பின் தொடர்ந்து வழிவதும், கேப்பையில் நெய் வழியும் அதிசயமாக ஆர்யா அவர்களை பின் தொடர்வதும் கிளாசிகல் டச்.

சூர்யா வரும் நவரச எபிசோடும் அற்புதம். உற்சாகத்தை ஊற்றி வடித்திருப்பார் போலிருக்கிறது ஆர்யாவின் கதாபாத்திரத்தை. இசைக்கேற்ப பாய்ந்து வரும் முதல் காட்சியிலேயே மனதில் நச்சென்று உட்கார்ந்துவிடுகிறார். போதாதற்கு கூடவே ஒரு குண்டுப் பையன். ஆர்யாவின் லவ் ட்ராக் தான் ஒட்டாமல் குட்டிக்கரணம் போடுகிறது. பாவம் மது ஷாலினி. ஜனனிக்கு கான்ஸ்டபிள் வேடம். சட்டம் ஒழுங்கை நாமதானே காப்பாத்தணும்ணே என்று வீறாப்பாக கிளம்பும் போது விலா நோக வைக்கிறார்.

ஜி.எம்.குமாருக்கு அவரது உடம்பைப் போலவே வெயிட்டான கதாபாத்திரம். கலா ரசிகராக, ஏமாந்த ஜமீன்தாராக வாழ்ந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி ஆர்கே சாட்டையால் வெட்டவெளியில் அடித்து துரத்துவது உச்சக்கட்ட வன்முறை. ‌ஜி.எம்.குமாருக்காக விஷால் ஆக்ரோஷமாக கிளம்புகையில் திரையரங்கில் எழும் கைத்தட்டல் அந்த வன்முறையின் தாக்கத்தை உணர்த்திவிடுகிறது. ‌

ஜி.எம்.குமார் கண்ணாடி முன் நின்று அழுததை விஷால் நடித்துக் காட்டும் போது மற்றவர்கள் சி‌ரிக்க ஆர்யா மட்டும் அழுவதும், எம் புள்ளைக்கு ஒண்ணுன்னா அறுத்துப்புடுவேன் என்று அம்பிகா ஆர்யாவுக்காக இன்ஸ்பெக்ட‌ரிடம் சண்டையிடுவதும் அடித்தட்டு மக்களின், சண்டையை தாண்டிய அன்பை பதிவு செய்யும் நுணுக்கமான காட்சிகள்.

நடிகர்கள்: ஆர்யா, விஷால், சூர்யா, ஆர்.கே., ஜி.எம்.குமார்.
நடிகைகள்: மதுஷாலினி, ஜனனி, அம்பிகா
இசை: யுவன் சங்கர் ராஜா.
இயக்கம்: பாலா.
தயாரிப்பு: கல்பாத்தி எஸ. அகோரம்.

நன்றி விடுப்பு


No comments: