"சத்யசாயி சென்ரர்" மானிப்பாய் வீதி, தாவடி - கானா பிரபா

.

முற்குறிப்பு: இந்தப் பதிவு சத்யசாயி பாபா குறித்த மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கான பதிவு அல்ல, அந்தத் தரப்பு அன்பர்கள் தொடர்ந்து படிக்க கஷ்டமாக இருந்தால் இப்பதிவைத் தவிர்க்குமாறும், பின்னூட்ட விமர்சனங்களை விலக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களின் மனைவியரும் அப்படியே. சின்னஞ்சிறுசுகள் நாங்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாயில் நோகாமல் உட்கார்ந்தார்கள். அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் போட்டோவில் பார்த்துப் பழகிய ஆர்மோனியப் பெட்டியோடு ஒருத்தர், தபேலாவோடு இன்னொருத்தர், சுருதிப்பெட்டியோடு ஒரு அம்மா.

முன்னால் வைரவருக்குப் பக்கத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்ட கதிரையில் ஒரு ப்ரேம் போட்ட படம் உட்கார்த்தப்படுகிறது. சுருள் சுருளான முடிகளும் செம்மஞ்சள் நிற உடுப்பும் போட்ட அந்தப் படத்தில் இருப்பவர் தான் சாய் பாபாவாம்.அயலட்டைச் சனம் கும்பலில் கோவிந்தாவாக, முன்னே குழுமியிருந்த அந்த அன்னிய மனிதர்களுக்குப் பின்னால் இருந்த பாய்களில் இடம்பிடிக்கின்றது. சாய்ராம் என்று முன்னே இருந்தவர் ஒருவர் குரல் கொடுக்க, ஓம் என்ற ஓம்கார மந்திரத்தை ஒலிக்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு ஒரு நிமிடத் தியானத்தின் பின் முன்னே இருந்த அந்த பக்தர்கள் தெய்வீகப் பாடல்களை பிள்ளையாரில் இருந்து ஆரம்பித்த்து ஒவ்வொரு தெய்வங்களாகப் பாடுகின்றார்கள். ஒருவர் ஒரு அடியைப் பாட அதே அடியை கூட்டத்தில் குழுமியிருந்தோர் பாடுகிறார்கள். அதுவரை தேவார திருவாசகங்களைக் கேட்டுப் பழகிய நமக்குப் புதுமையாக இருந்தது. இந்த சாய்பாபா பஜனைகள் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும், கூடவே முருகேசம்பிள்ளை அவர்களின் வீட்டில் சனிக்கிழமைகள் தோறும் பாலவிகாஸ் வகுப்புக்களும் இடம்பெற உள்ளன என்ற அறிவிப்பும் அங்கே சொல்லப்படுகின்றது. எல்லாமே விநோதமாக எமக்குப்பட்டது.


அடுத்த சனிக்கிழமை வழக்கமாகக் கள்ளன் பொலிஸ் விளையாடும் கூட்டாளிகளைக் காணவில்லை. எல்லாரும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போயிட்டினமாம். கை கால் அலம்பிப் புதுச் சட்டை போட்டு நானும் வேடிக்கை பார்க்க முருகேசம்பிள்ளை மாமா வீட்டில் நடக்கும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போகிறேன். அங்கே முதற்கிழமை பஜனைக் கோஷ்டியோடு வந்திருந்த பெண்மணி தான் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடசாலை சென்றால் தான் சமய பாடம் படிக்கலாம் என்ற நிலையில் இருந்து இன்னொரு புது அனுபவமாகப்பட்டது. அந்தப் பெண்மணி தான் டீச்சராம். எப்படியெல்லாம் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் என்று என்று நீதிக் கதைகளையும், கருத்துக்களையும் சொன்னார். சப்பாணி கட்டி விரிக்கப்பட்ட பாயில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிவில் சின்ன பஜனைப் பாடல்களோடு நிறைவு பெற்றது. இதுவே நாளாக நாளாக பாலவிகாஸ் வகுப்பில் முழுமையாக நம்மை அர்ப்பணித்துக் கொண்டோம். பிள்ளைகளோடு கடிந்து பேசாது நல்ல நீதிகளைத் தன் வகுப்பில் போதித்த அந்த டீச்சர் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரின் அமைப்பாளர் சரவணபவனின் மனைவியார். இந்த வகுப்பில் நீதிக்கதைகளை எல்லாம் நாமே அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களாகத் தோன்றி நாடகங்களாக நடித்துக் காட்ட டீச்சர் உதவினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த பாலவிகாஸ் வகுப்பில் பாடம் படிக்கக் கூடியதாக இருந்தது. மானிப்பாய் வீதி தாவடியில் இருந்த சத்யசாயி சென்ரரில் வாராந்த சாயி பஜனைகளுக்கும் போய் வரத் தொடங்கினோம். காலப்போக்கில் இன்னொரு சத்யசாயி சென்ரர் தேவை என்ற அளவில் பக்தர்கள் கூட்டம் பெருகிவிட இப்போது ஞாயிற்றுக்கிழமை வாராந்த பஜனை இணுவில் அண்ணாகோப்பி நிறுவனத்தின் மூன்றாம் மாடிக்கு நகர்ந்தது. இணுவில் ஆஸ்பத்திரியில் தலைமை வைத்தியராக இருந்த டொக்டர் பவளத்துரை ஆர்மோனியத்தோடு முன்னால் இருக்க, பக்கத்தில் கமலாகரன் சேர் தன் பிள்ளைகளோடு அமர, அவர்களுக்குப் பின்னால் விரித்த பாயை நிரப்பும் கூட்டம். முன்னால் சத்யசாயி பாபாவின் பெரும் படம் ஒன்று கதிரையில் சாய்த்து வைத்திருக்க, ஒரு மணி நேர பஜனையில் முழுக்க முழுக்க இறைவனை நோக்கிய துதிப்பாடல்களை விரித்து வைத்த பஜனைப்பாடல்கள் புத்தகத்தில் இருந்து பிள்ளையார் தொடங்கி சிவன், அம்மன், விஷ்ணு, முருகன் என்று ஒவ்வொரு தெய்வங்களாகத் துதித்து ஓம் ஜெய் ஜெகதீச ஹரே என்று நிறைவு பெறும்.

கோவிந்தா மாதவா கோபாலா கேசவா என்று பாடிக்கொண்டிருப்பவர் கிரிதாரி கிரிதாரி ஜெய நந்தன கோபாலா என்று வரும் போது மெய்மறந்த நிலையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்ல பின் தொடரும் பக்தர்களின் குரல்களும் அந்த எல்லையைத் தொட முனையும். எங்களோடு கிட்டிப்புள்ளு விளையாடிய அகிலன் தான் கற்ற மிருதங்கத்தில் தன் கைவண்ணத்தைக் காட்ட கூடவே அவனுக்கு அன்புப் பரிசாக தபேலா ஒன்றைக் கொடுத்து நிரந்தர பஜனை வித்துவானாக்கிவிட்டார்கள். லோக்கல் எஸ்.பி.பாலசுப்ரமணியமாகத் தன்னைக் கற்பனை செய்து பாடிக்கொண்டிருந்த பாலகுமாரும் பஜனைப் பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைப் பாடும் அளவுக்கு ப்ரமோஷன் பெற்று விட்டான்.

ஆனால் நமக்கோ இந்த இரண்டு விஷயங்களும் விஷப்பரீட்சை ஆயிற்றே. அதனால் இந்த பஜனைப் பாடல்களைப் பாட நல்ல குரல் வளம் பொருந்தியவர்கள் எல்லாம் இருக்க கூட்டத்தோடு கூட்டமாகப் பாடும் போது அதே பாங்கில் பாடுவது போலக் கற்பனை செய்து பாடமுனைவேன். எனது எல்லை வைரவர் கோயிலடி தான் என்று நினைத்துக் கொள்வேன். எங்கள் வைரவர் கோயில்பூசையை சித்தப்பா தான் கவனித்துக் கொள்வார். அவரும் சாயிபக்தராக மாறிவிட்டதால் காலையில் பஜனைப் பாடல்களைப் பாட எங்களைப் போன்ற வாண்டுகளை அழைத்தார். முதற்கிழமை பஜனையில் பாடிய அந்தப் பாடகரை நினைத்துக் கொண்டு கார்த்திகேசு அண்ணர் மகன் ராசனும் நானும் மாறி மாறி ஒவ்வொரு பாடல்களாகப் பாடி எம் தீரா ஆசையைத் தீர்த்துக் கொள்வோம்.

அகண்ட பஜனை என்று ஒரு சமாச்சாரத்தை அப்போது தான் கேள்விப்பட்டோம். வழக்கமாக ஒரு மணி நேரமோ அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரமோ கொள்ளும் பஜனைப் பாடல்கள் இந்த அகண்ட பஜனையில் இருபத்து நான்கு மணி நேரம் வரை செல்லுமாம். அந்தப் புதுமையைக் காண நாம் சத்யசாயி சென்ரர் தாவடிக்குத் தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் மற்றைய சாயி சென்ரர்களில் இருந்தெல்லாம் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு மணி நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். பின்னாளில் நாச்சிமார் கோயிலடியில் இருந்த கண்ணன் கோஷ்டி என்று அறியப்பட்ட இசைவாணர் கண்ணன் வீட்டில் நடந்த இந்த அகண்ட பஜனைகளிலும் கலந்து கொள்வோம். கண்ணன் எங்களூர் பஜனை நிகழ்வுகளுக்கு தன் நண்பர் அப்பி என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாயி பக்தரையும் அழைத்து வருவார். வெற்றிலை குதப்பிய செவ்வாயும் சிரித்த முகமுமாக இருக்கும் அப்பி அவர்கள் தபேலா வாசிப்பதில் திறமைசாலி, சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார் என்றறிந்து கொண்டேன்.

சாயி பக்தர்கள் புட்டபர்த்தி சென்று விபூதிப் பிரசாதங்களோடு, சாயி முகம் தரித்த மோதிரங்களையும், கை வளையல்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்த நேரத்தில் இப்படியான வஸ்துக்களை யார் அதிகம் வைத்திருப்பது என்பது நண்பர்களுக்குள் அறிவிக்கப்படாத போட்டியாக இருக்கும். சனாதன சாரதி என்ற சஞ்சிகையை வாங்கிப் படிக்கும் வழக்கமும், ஸ்வாமி எழுதிய நூல்களைத் தேடிப் படிக்கும் ஆவலும் மெல்ல மெல்ல ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேடிக்கை பார்க்க வைத்த இந்த ஆன்மீக விஷயங்களை ஈடுபாட்டோடு பார்க்கத் தொடங்கினேன். புலம்பெயர் சூழலில் இந்த வாராந்திர ஆன்மீக வட்டத்தை விட்டு விலகியிருக்க வேண்டிய வகையில் தேவைகளும் சோலிகளும் அமைந்து விட்டன. ஆனாலும் என்னளவில் இன்று வரை சத்யசாயி பாபாவை கடவுள் என்ற ஸ்தானத்தில் வைக்காவிட்டாலும் அவர் சொன்ன போதனைகளும் சரி, அவரின் கீழ் கட்டமைக்கப்பட்ட சமய, சமூக நிர்வாக அலகுகளும் சரி அவருக்கான தனி இடத்தை என் மனதில் இருத்தி வைத்திருக்க உதவியிருக்கின்றன.


Nantri:kanapraba.blospot

17 comments:

kirrukan said...

[quote]முற்குறிப்பு: இந்தப் பதிவு சத்யசாயி பாபா குறித்த மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கான பதிவு அல்ல, அந்தத் தரப்பு அன்பர்கள் தொடர்ந்து படிக்க கஷ்டமாக இருந்தால் இப்பதிவைத் தவிர்க்குமாறும், பின்னூட்ட விமர்சனங்களை விலக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்[/quote]

என்ன கொடுமை சார் இது,கருத்துக்கள ஜான்பவானிடமிருந்து இப்படி ஒர் வேண்டுதல்.
ஆயுதத்தால் கருத்து தடை போடுவதும் ,அன்பால் கருத்து தடை போடுவதும் என்னை பொருத்தவரை ஒன்றுதான்.

commrnts இருந்தால் எவனாவது கிறுக்கத்தான் செய்வான்..நிர்வாகத்திடம் சொல்லி அதை நீக்கிவிடவும்

கானா பிரபா said...

கிறுக்கரே

உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்ல எண்ணம் தான், ஏன் வீணாக வாசிச்சுக் கஷ்டப்படுவான் ;)

திருநந்தகுமார் said...

கானா பிரபாவின் ஆக்கம் அவர் வலைப்பூவிலிருது மறுபிரசுரமானது பொருத்தமானது. எனது கிராமத்து நினைவுகளை அசைபோடவைத்தது. அந்தச் செம்புலத்தில் சாயிபாபாவின் அறிமுகத்தை நன்றாகச் சொல்லியிருந்தார். இணுவிலில் சாயி நிலையம் நிலைபெற பெரியவர் முருகேசம்பிள்ளையே முதற்காரணமாவார். அவருக்கு முன்னரும் வேறு சிலர் சாயி பக்தர்களாக இருந்துள்ளனர். இந்திய இராணுவம் இணுவிலுக்கு வந்தபோது மக்கள் எல்லோரும் கோவில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்திருதோம். அண்ணாகோப்பி தொழிற்சாலையிலும் அதன் அருகிருந்த சிலர் துணிச்சலுடன் தங்கியிருந்ததாகவும் சாயி பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதாகவும் கந்தசுவாமி கோவிலில் இருந்த சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒருநாள் மழை கொட்டும் நேரம் அமைதிப்படை கே.கே.எஸ் வீதியில் இருந்து கோவில் வீதியூடாக கந்தசுவாமி கோவிலுக்கு தலையாட்டி சகிதம் வந்து ஒரு அப்பாவி இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றபோது எல்லோரும் கலங்கி நின்றோம். வெள்ளைக்கொடியோடு அமைதிப்படையை சந்திக்க பெரியவர்கள் முடிவு செய்தனர். அதற்கு தலைமையேற்று பெரியவர் முருகேசம்பிள்ளை அவர்கள் முன்னே செல்ல இளம்பெண்ணின் பெற்றோரும் வேறு சில பெரியவர்களும் பின்னே சென்றனர். அப்போது முருகேசம்பிள்ளை அவர்களின் சாயிபாபா தொடர்பு பற்றிப் பேசப்பட்டது.
இணுவிலில் அவர்கள் குறிப்ப்பிடத்தக்க சமூகப்பணி செய்ததாக நினைவில் இல்லை. எனினும் கானா பிரபா சொன்னது போல சாயிபாபா என்ற ஆன்மீகத் தலைவரின் சமூகப்பணிகளை பிரமிப்போடு பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.

Ramesh said...

ஆச்சரியப்படும் அளவு செய்தார் என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவதில் பிழையில்லை. ஆராய்ந்து பார்த்தால் சாயிபாபா அடிமட்டத்தில் உள்ள அப்பாவி ஏழைமக்களுக்கு எதுவும் செய்திருக்கின்றாரா? புட்டபர்த்தி சென்றவர்களுக்கு தெரியும். பாபாவின் ஆசிரமத்தில் வெளியில் இருந்து போபவர்களுக்கு வசதியான தங்குமிடம் இலவசம் நல்ல சாப்பாடு எல்லாமே கிடைக்கும். ஆனால் சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் உட் செல்லவும் முடியாது. சாப்பிடவும் முடியாது. சாப்பாடு போட்டு பிச்சைக்காரரை ஊக்குவித்தல் பாவம் என்று சிலர் கூறலாம். அப்படியானால் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை செய்து கொடுத்தலுமா பாவம்? இதுதான் றால் போட்டு சுறா பிடிக்கும் தத்துவம். வெளிநாட்டுக்காறர் தங்க இலவசம் என்று சொன்னாலும் போகிறவர்கள் அன்பளிப்பாக அள்ளிக் கொட்டுவார்கள் என்பது நன்றாகவே தெரியும். பாபா ஆஸ்பத்திரியைப்பற்றி நிறையவே கதைகள் வந்தது பலருக்குத் தெரியும். வெள்ளை இனத்தவர்கள் பலர் சிறுநீரக மாற்று சிகிச்சை அதிகம் செய்து கொள்வதும் அங்குதான் என்பது பலருக்கு தெரியும் அது எப்படி? அவரின் சமூக சேவையில் ஆச்சரியப்படத்தான் வேண்டும்.

Anonymous said...

வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லிவைப்பாங்க நம் வீரத்தை முளையினிலேயே கிள்ளி வைப்பாங்க. ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா ........... பட்டுக்கோட்டையார் எழுதியது அதனால்தான் அவர் காலத்தால் மறையாத எழுத்தாளன்

செல்வி

Nesan said...

பட்டுக்கோட்டையார் பாடல்களை பாடமாக்கினால் மட்டும் போதாது அதன் படி நடக்க்வேண்டும் அப்பதான் காலம் கடந்தும் அவர் வாழ்வார்

Nesan said...

Ramesh said...

ஆச்சரியப்படும் அளவு செய்தார் என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவதில் பிழையில்லை. ஆராய்ந்து பார்த்தால் சாயிபாபா அடிமட்டத்தில் உள்ள அப்பாவி ஏழைமக்களுக்கு எதுவும் செய்திருக்கின்றாரா?//

இந்த இணைப்பைப் படித்தால் போதும் நுனிப்புல் மேய்பவர்களுக்குப் பதில் கிடைக்கும்

http://www.hindu.com/2011/04/26/stories/2011042652590300.htm

கானா பிரபா said...

சமூகப் பணியுடன் கூடிய ஆன்மீகம் - சாயிகுடில் வியாபாரிமூலை. http://suvaithacinema.blogspot.com/2010/08/blog-post.html

kirrukan said...

யாழ்ப்பாணத்தில மற்றும் அங்கிருந்து புலம்பெயர்ந்த உயர்குடி மக்கள் இருக்கினமே அவையளுக்கு சீசனுக்கு சீசன் ஒரு மனித சாமியார் தேவை...

ஒருகாலத்தில யோகர் சுவாமியை குரு என்றார்கள்
இப்ப சாய்பாபா குரு எங்கிறார்கள் நாளை யாரோ?
நேற்று யோகர்
இன்று சாய்பாபா
நாளை யாரோ?......பிறேம் சாயி.....

C.Paskaran said...

நன்றி வாசகர்களே உங்கள் வருகைக்கும் இடுகைக்கும். கானா பிரபா திருநந்தகுமார் கிறுக்கன் ரமேஸ் செல்வி நேசன் உங்கள் பதிவுகளால் பல விடயங்கள் முன் கொண்டு வரப்படுகின்றது. தொடர்ந்து விவாதியுங்கள்.

நன்றி
ஆசிரியர் குழு

kalai said...

எந்தச் சாமியார், கடவுள் வந்தாலும் வன்னி அவலத்தினைத் தடுக்க முடியவில்லை. இராணுவம் எறிகணை வீசும் போது அங்கு இருந்தவர்கள் சிவனே, முருகா, ஜேசுவே, பாபாவே என்று தங்களுக்கு இட்டமான தெய்வத்தை நிச்சயம் கும்பிட்டு இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டார்கள். டிசம்பர் 26 2004 ல் ஜேசு பிரானைக் கும்பிட கடற்கரைகளில் அமைத்திருக்கும் தேவாலயங்களுக்கு, சென்றவர்கள் வெள்ளத்தினால் இழுத்து கொல்லப்பட்டார்கள். 2005ல் ஜோசப் பராஜசிங்கம் தேவலாயத்துக்கு சென்ற போது கொல்லப்பட்டார். செல்லாது விட்டால் சில வேளை தப்பி இருப்பார். கொழும்பில் ஆங்கிலப் புதுவருடத்துக்கு(ஜேசுவின் 2008வது பிறந்த நாளுக்கு) சைவக் கோவிலில் கும்பிடச் சென்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். அண்மையில் சபரி மலைக்கு கும்பிட சென்ற பக்தர்கள் பலர் நெரிசலில் கொல்லப்பட்டார்கள். சவூதியில் மக்காவுக்கு சென்றவர்களில் பலர் நெரிசலில் கொல்லப்பட்டு வருகிறார்கள். புதுசு, புதுசாக பல கடவுள்கள் வந்தாலும் வராவிட்டாலும் இருக்கிற கடவுள்களினாலும் ,புதுசாக வருகிற கடவுள்களிலானும் இறப்பதினைத் தடுக்கமுடியாது. கேட்டால் விதி என்று சொல்வார்கள். விதிப்படிதான் நடக்கும் என்றால் கடவுள் ஏன்?.

திருநந்தகுமார் said...

சில நண்பர்க்ளின் இடுகை பார்த்தபின் சில குறிப்புகள் சொல்ல விளைகின்றேன்.
கடவுள் ஏன் என்று கேட்பவர்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதனாலேயே விடை கிடைத்துவிடும் என்றில்லை.
யாழ்ப்பாணத்து உயர்குடி மக்கள் என்று எதற்கெடுதாலும் சொல்வது இப்போது வழமையாகிவிட்டது. சமூகத்தின் அவலங்களைச் சொல்கையில் வேறுபாடுகளை வலிந்து இழுபது எழுடுபவருக்கு வேண்டுமானால் திருப்தியாக இருக்கலாம், மற்றவர்க்கு எவ்வித பயனும் ஏற்படாது.
சிட்னியில் இன்னமும் யோகர் சுவாமிகளின் பக்தர்கள் மாதந்தோற்ம் ஒன்று கூடி கூட்டுப்பிரார்த்தனை செய்கின்றனர். நற்சிந்தனையும், தேவாரம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்களைப் பாடி வணங்குகின்றனர். அவர்களில் எத்தனை பேர் சாய்பாபாவிடம் வருகிறார்கள் என்று தெரியவில்லை. எழுந்தமானமாக ஒரு குழுமத்தினரை சுட்டிக்காட்டுவது சரியாகத் தெரியவில்லை.
நேசன் அனுப்பிவைத்த சுட்டியில் சாயி அறக்கட்டளை ஆற்றியுள்ள பணியைப் பார்த்தேன்.
இது சாதாரண சாயி பக்தர்களுக்குத் தெரிந்திராத ஒன்று. ஆன்மீக நாட்டத்தில் ஒரு புறம், சமுகப்பணியில் மறு புறம் என அறகட்டளை பயணித்ததை வியப்போடு பார்த்தோரில் நானும் ஒருவன்.

kirrukan said...

ஆசிரியர் குழு பச்சை கொடி காட்டிப்போட்டினம்.இனி எங்கன்ட காட்டில மழை....கிறுக்க வேண்டியதுதான்...


நந்தா ஜயா நீங்கள் சொன்னமாதிரி யோகர் சுவாமிகளுக்கு வழிபாடு நடக்கின்றதுதான்,ஆனால் ஒருகாலத்தில்70ஆம் ஆண்டளவில் இருந்த எழுச்சியுடன் கூடிய பக்தர்கள் இல்லை...எண்ணிக்கையில் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவு.

சாய்பாபாவின் நிலைமையும் இன்னும் 50 வருடங்களின் பின்பு இந்த நிலைதான்வரும்...

சமுகப்பணி காரணமாக பாபாவை பிடித்துள்ளது என அநேகர் எழுதியுள்ளார்கள்.
ஏன் அவர் இந்த சமுகபணியை ஒரு இந்துவாக இருந்து செய்யாமல் ,தனக்கு என ஒரு கருத்துருவாக்கமையத்தை உருவாக்கி(சாய் சென்றர்) ,அதன் மூலம் தனது கருத்தை(ஏற்கனவே இந்து மதத்தில் உள்ளவற்றை )மக்களுக்கு புகட்ட வேண்டும்?

இந்த கருத்துருவாக்க மையத்தால், சமுகத்தில் பல புது சொல்களும் சடங்குகளும்தான் மிகுதியானது....பழையன அழிவடைந்து போகின்றது...

சமுகப்பணி செய்வதற்கு கருத்துருவாக்க மையங்கள் தேவையில்லை.கீரோ படங்கள் தேவையில்லை,நான் ராமர் அவதாரம்,நான் விஷ்னு அவதாரம் என குரல் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை
யோகர் சுவாமியின் கூட்டுப்பிரார்த்தனையில் தேவாரம்,சிவபுராணம் பாடக்கூடும்,ஆனால்சாய் பஜனையில் எல்லாம் தெலுங்கும் ,சமஸ்கிருதமும்தான்

Anonymous said...

kirrukan said... ஆனால்சாய் பஜனையில் எல்லாம் தெலுங்கும் ,சமஸ்கிருதமும்தான்// இவர் சாய் பஜனையில் பிரசாதம் வழங்கும் நேரம் போனாரா என்ன? சாயி பஜனை தமிழ்ப் பாடல்களையும் சேர்ப்பதுண்டு.

சேந்தன்

Ramesh said...

வணக்கம் நான் மீண்டும் வரவேண்டி வந்து விட்டது. ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றது. அங்கே மனிதனை வழிபடுவதில்லை . ஆனால் சாயிபாபா என்ற மனிதர் அற்புதங்கள் நிகழ்த்தியதாக மனிதர்களை நம்பவைத்து தன்னை ஒரு கடவுள் என்று பாமரர்களை (படித்தவர்களையும்தான் - புத்தக படிப்பு) நம்பவைத்த கெட்டித்தனம் உள்ள மனிதர்தான். அவர் கும்பிடும் அளவிற்கு உயர்ந்தவராக இருந்தால் காலன் அணுகியது எப்படி? புட்டபர்த்திக்கு வருபவர்கள் ஆயுதம் கொண்டு வருகின்றார்களா என்று கண்டுபிடிக்க ஸ்கானிங் மிசின் எதர்க்கு? முக்காலமும் அறிந்தவர் என்கின்றார்கள் அடுத்து 8 ஆண்டுகளில் எங்கோ மீண்டும் அவதாரம் எடுக்கப்போவதாக சொன்னாராம் அதை பக்தர்களும் நம்பி சுவாமி மீண்டும் அவதாரம் எடுப்பார் என்று கூறத் தொடங்கிவிட்டார்கள்.அப்படி நடக்கப் போவதை கூறுபவர் ஏன் தற்காப்புக்கு குண்டு துளைக்காத வாகனமும். பொலிஸ் படையும் கொண்டிருந்தார்.ரஜனீஸ் சுவாமிகள் பிரம்மானந்தா இப்படி எத்தனை சாமிகள் உலகம் முழுக்க ஆசிரமம் வைத்துக் கொண்டு பணம் பண்ணிக்கொண்டு அதில் ஆயிரத்தில் ஒன்று கூட இல்லாத பகுதியை மக்கள் நலனுக்கு என்று கொடுப்பது இருப்பதை பெருக்கிக் கொள்வதற்குத்தான். இது ஒரு சமன் பாடுதான் என்பது அறிவு ரீதியாக சிந்தித்தால் புரியும் என்று நம்புகிறேன்

Nesan said...

Ramesh அவர்களே நீங்கள் முன்னர் போட்ட கருத்தில் ஏழைப்களுக்கு என்ன செய்தார் என்று கேட்டீர்கள் அதற்குப் பதில் இணைப்பைத் தந்தேன் இப்போது இன்னொரு விஷயத்தோடு வருகிறீர்கள் எல்லாம் பேசலாம், எல்லாத்துக்கும் பதிலும் உண்டு, வீண்விதண்டாவாதங்களில் மட்டுமே நம்மை வளர்த்துக் கொண்டுவிட்டோம் இல்லையா? செயல்வீரர்கள், கடவுள் மறுப்பாளர்கள், சீர் திருத்த வாதிகளை எழுத்தில் தான் தரிசிக்க முடிகிறது, இப்படியான சிந்தனையோட்டம் மிக்கவர்கள் செயலில் இறங்கினால் எல்லாருக்கும் பெரும் காரியமாக இருக்கும்.

kirrukan said...

[quote]சாய் பஜனையில் பிரசாதம் வழங்கும் நேரம் போனாரா என்ன? சாயி பஜனை தமிழ்ப் பாடல்களையும் சேர்ப்பதுண்டு.

சேந்தன் [/quote]

பிரசாத நேரத்திலதான் போனேன் சேந்தன், அதில முட்டையில்லா கேக் என்று ஒரு பிரசாதம் கொடுப்பினம் பாருங்கோ அதை விரும்பி சாப்பிடுவேன் ,அடுத்த வாரம் வேசாக் வருகிறது,பிரசாதம் கிறிபத்தும் சம்பலும்,கவுன்கொண்டயும்...நீங்களும் வாங்கோவன்