ஒற்றையாட்சியை நீக்கினால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் – பேராசிரியர் சிற்றம்பலம்

.

இலங்கையில் இனமுரண்பாடுகள் கூர்மையடையவதற்கு மிக அடிப்படைக் காரணம், சிங்கள மக்கள் மத்தியில் தமது ஆதிக் குடியேற்றம் சம்பந்தமாகச் செல்வாக்குப் பெற்றுள்ள ஐதீகங்களேயாகும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.


சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘நிறைநிலாநாள்’; கருத்தரங்கில் ‘தமிழர் அரசியலின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறுஇன்று இந்த இலங்கைத் தீவில் காணப்படும் அரசியல் ரீதியான நெருக்குவாரங்களுக்குப் பிரதான காரணம் தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பேயாகும். இத்தீவில் வாழும் அனைத்துச் சமூகத்தவரதும் நியாய பூர்வமான அபிலாசைகளை உள்வாங்காது உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பானது சமூகத்தவரிடையே ‘நாம் இலங்கையர்’ என்ற அடையாளத்தினை வளர்ப்பதற்குப் பதிலாக இன ரீதியான பிளவுகளையும் சமூக நல்லிணக்கமின்மையையுமே ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய இனமுரண்பாடுகள் கூர்மையடைய மிக அடிப்படைக் காரணம், சிங்கள மக்கள் மத்தியில் தமது ஆதிக் குடியேற்றம் சம்பந்தமாகச் செல்வாக்குப் பெற்றுள்ள ஐதீகங்களேயாகும். இந்த ஐதீகங்கள் அவர்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்ற பாளி மொழியிலான வரலாறு சார்பான இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. மூத்த பிரபல வரலாற்றாசிரியரான பு.ஊ மென்டிஸ் அவர்கள் விஜயன் பற்றிய ஐதீகங்கள் எந்தவிதமான வரலாற்றடிப்படைகளைக் கொண்டவை அல்ல என்றும் சிங்கள மக்களின் ஆதிக்குடியேற்றத்திற்கும் அவற்றிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்தின் பிரகாரம் தற்போது வழக்கிலுள்ள சிங்கள இனத்தினைச் சுட்டும் ‘ சிஹல’ அல்லது சிங்ஹல’ என்னும் பெயர் ஆரம்பத்தில் இந்நாட்டினைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. விஜயன் சம்பந்தப்பட்டதாகப் பாளி வரலாற்றிலக்கியங்கள் கூறும் ஐதீகங்களும் மேற்போந்த பதங்களை விளக்க எழுந்தனவாகும். ஆனால் இப் பெயர்கள் விஜயன் ஐதீகத்தைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஓர் இனப் பிரிவினரையே குறிக்கப்; பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

மறுபுறத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வரும் தொல்பொருளாய்வுகள் விஜயன் பற்றிய ஐதீகங்கள் எவ்விதமான வரலாற்றடிப்படைகளும் அற்றவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன,; இன்று இத்தீவில் வாழும் தமிழர், சிங்களவர் ஆகியோரின் மூதாதையர்கள் கி.மு. 1000 அளவிலே தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் நாகரிகத்தின் கூறுகள் அவர்களாலேயே இத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டன என்றும் எடுத்துக்காட்டின. சிங்கள தமிழ் இரத்தத் தொடர்புகள், மொழியியல் ஒற்றுமை, சமூக சமய ஒற்றுமைகள் ஆகியன தொல்லியற் தரவுகளை மேலும் உறுதிசெய்கின்றன.

சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கலாசாரப் பாதிப்பினை ஏற்படுத்திய பொளத்த மதத்தின் வருகையைத் தொடர்ந்தே சிங்கள இனம் பற்றிய கருத்துநிலைகள் கூர்மையடைந்தன’ என சுசந்த குணதிலகா மிகத் தொளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். அவரது முடிவுகளின் பிரகாரம் பௌத்தமதம் பரவிய பின்னரே சிங்கள மயமாக்கம் கூர்மையடைந்தது என்பதும் அதற்கு முன்னர் – பௌத்தம் பரவுவதற்கு முன் – அத்தகைய பார்வைகள் இத்தீவில் வாழ்ந்த மக்களிடையே காணப்படவில்லை என்பதும் புலனாகின்றன. ஈழத்தில் தமிழர் பண்டைய காலந்தொட்டு வாழ்ந்து வந்ததை வரலாற்றுத் தொல்லியல் ஆதாரங்கள் எந்தவித ஐயமுமில்லாமல் உறுதிப்படுத்தியுள்ளன. பாளி வரலாற்றிலக்கியங்கள் குறிப்பிடுவது போல் பண்டைய, இடைக்கால இலங்கையில் ஓர்; ஒற்றையாட்சி முறை இத்தீவு பூராகவும் இருந்தமைக்கு வரலாற்றடிப்படையான ஆதார பூர்வமான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.

சுருக்கமாகக் கூறுவதானால் ஆரம்ப காலங்களிலிருந்தே இலங்கை பன்மொழி பேசுகின்றதும் பல்லினங்கள் வாழ்கின்றதுமான தீவாகவே இருந்து வந்துள்ளது. இலங்கையின் ஆரம்பகால மற்றும் பிற்கால அரசகட்டுமானங்கள் பற்றி ஆராய்கின்ற போது பிரதேச அரசுகள் மிகமுக்கியமான அங்கங்களாக அதில் அமைந்து வந்துள்ளன. இத்தீவு முழுமையையும் ஒருங்கிணைத்த மைய அரசும் அது பற்றிய எண்ணக்கருவும் போக்குவரத்து வசதியீனத்தாலும் தகுதிவாய்ந்ததொரு அரசகட்டமைப்புச் செற்படாததாலும் நடைமுறைச் சாத்தியமற்றதாயிற்று.. நாளடைவில் மொழியடிப்படையில் நாடு இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. தமிழர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலும் சிங்களவர் ஏனைய பிரதேசங்களிலும் பெரும்பான்மையாக வாழ்கின்ற சூழ்நிலை ஏற்பட்டது. புpன்னர் இத்தீவில் காலனித்துவ ஆதிக்கம் செலுத்திய அந்நிய சக்திகளும் இத்தனித்துவங்களை அடையாளங் கண்டுகொண்டனர். இந்த அந்நிய சக்திகளுள் பிரித்தானியர் மிகத் தெளிவாக இத்தீவில் வாழும் தமிழர், சிங்களவருக்கிடையிலான இன அடையாளங்களையும் தனித்துவங்களையும் அடையாளங் கண்டதோடு நாட்டை ஒரு மைய அரசின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்தனர். தற்போது காணப்படும் இனநெருக்கடிகளுக்கு ஒற்றையாட்சி மட்டும் காரணமல்ல, அதற்குமேல் இலங்கையில் உருவாக்கப்பட்ட தீர்க்கதரிசனமற்ற அரசியலமைப்பு முறையும் ஒரு காரணமாகும்.

1. டொனமூர் அரசியலமைப்பு நடைமுறைக்கு வர இருந்த காலங்களில் அது ஒரே ஒரு பொரும்பான்மை வாக்கினாலேயே அங்கீகரிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் அரசியல் சீர்திருத்தமாக விளங்கிய சோல்பரி அரசியல் யாப்பு வெறுமனே பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மந்திரி சபையின் தயாரிப்பேயாகும். இந்தியாவில் நிகழ்ந்ததைப் போல் சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பினை எழுதுதற்கு முன்னதாக எல்லாச் சமூகத்தவரதும் அரசியல் அபிலாசைகளை வினாவுதற்கு வசதியாக ஓர் அரசியல் யாப்புப் பற்றியதான ஒருங்கிணைப்புக் கூட்டம் இலங்கையில் நிகழவுமில்லை.

2. 1972 இல் சோல்பரி அரசியல் யாப்பு முறையினை அகற்றிவிட்டு குடியரசு யாப்புமுறை வகுக்கப்பட்டபோதும் அது வடக்குக் கிழக்கினைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவில்லை. பத்தொன்பது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுள் பதினைந்து பேர் அதனை முற்றாக எதிர்த்தார்கள். புதிய அரசியலமைப்பினைத் தயாரிப்பதற்கு மக்களிடம் ஆணை கேட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்குக் கிழக்கில் அதற்காதரவாக 14வீதமான வாக்குகளே கிடைத்தன.

3. அதைப் போலவே ஐக்கிய தேசியக்கட்சி தனது புதிய அரசியல் சீர்திருத்தத்தைத் தயாரிப்பதற்கு மக்களாணையைக் கேட்டபோது 23வீதமான வாக்குகளே வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அதனால் பெறமுடிந்தது. தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகளாக அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அக் கூட்டத்தினைப் புறக்கணித்ததுடன் அதைத் தொடர்ந்து அவ்வரசியலமைப்புத் தொடர்பாக நிகழ்ந்த கூட்டங்களிலும் பங்குபற்றவில்;லை.

ஆதலால் சகல இலங்கை மக்களினதும் நியாயபூர்வமான அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் அமைப்புமுறை ஒன்றே தற்போதைய தேவையாகவுள்ளது. இந்த இடத்தில் 1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள் தெரிவித்த தூரநோக்குடைய கூற்று ஒன்றினை ஞாபகப்படுத்திப் பார்த்தல் வேண்டும்.

‘சமஷ்டிக் கோரிக்கைக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளை எழுப்பினாலும் அவை வலுகுன்ற இறுதியில் ஏதாவது ஒரு சமஷ்டி அமைப்பு என்பதுதான் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்’

என்றார். சமஷ்;டி முறையிலான அரசியலமைப்பே இத்தகைய பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக அமைய முடியுமென்றும் அவர் நம்பினார்.

1926 ஆம் ஆண்டு கண்டிப் பிரதானிகள் டொனமூர் சீர்திருத்தக் குழுவினரின் முன் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்தபோது அதில் இலங்கைத் தீவினை மூன்றாகப் பிரித்த சமஷ்;டி ஆட்சிமுறை வேண்டி நின்றனர். அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்ட மூன்று சமஷ்;டி அலகுகளும் கீழே தரப்படுகின்றன.

1. தமிழர் மிக அதிகமாகவும் ஆதிக்கம் பெற்றும் வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள்

2. கண்டி மாகாணங்கள்

3. தெற்கு மேற்கு மாகாணங்கள்

மேற்போந்த மூன்று அலகுகளும் அவற்றுக்கெனத் தனியான அரசமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டினர். ஆனால் இத்தீவின் நலனைக் கருத்திற்கொண்டு இம்மூன்று அலகுகளையும் ஒருங்கிணைத்த சமஷ்டி அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் சமஷ்டித் திட்டத்தில் எந்த ஓர் அரசியல் அலகும் ஒன்றை மற்றொன்று அடக்கி ஆளுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இலங்கைத் தேசிய காங்கிரஸுக்கு 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த மகஜரில் எதிர்காலத்தில் பொதுவானதும் தனித்தனியானதுமான இலங்கை மக்களின் விருப்புக்கமைவாக ஒருங்கிணைந்த ஜனநாயக குடியரசொன்று தன்னாட்சியதிகாரங்கள் கொண்ட பிரதேச அலகுகளுடன் (சமஷ்டி அலகுகளுடன்) உருவாக்கப்பட வேண்டும் என வெளிப்படுத்தினர்.

மேலும், வடக்கில் தமிழர்கள் பொரும்பான்மையினராக வாழ்கிறார்கள் என்றும் கிழக்கில் முஸ்லீம் மக்களுடன் சேர்ந்து பெருந்தொகையினராக அவர்கள் வாழ்கிறர்கள் என்றும் தெரிவித்திருந்தனர். 1946 இல் நடைபெற்ற குடிசன மதிப்பீடு இதனை உறுதிப்படுத்தியது குடிசன மதிப்பீட்டடினடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழர்களின் தொகை 78.6வீதமாகவும், முஸ்லீம்களின் தொகை 16.8 வீதமாகவும் சிங்களவரின் தொகை 4.4வீதமாகவும் காணப்பட்டது.

இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் வரலாற்றுப் பின்னணியும், தனக்கெனத் தனித்துவமான மொழியும் பண்பாடும் சிந்தனையும் பொருளாதார வாழ்வும் கொண்ட தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழவோ அல்லது விரும்பின் பிரிந்து சென்று தமது தாயகப் பிரதேசங்களில் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்கின்ற ஆட்சியை அமைத்துக் கொள்ளவோ அருகதையுடையவர்களாக இருக்கின்றனர் என வற்புறுத்தியது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களது பூர்வீக பிரதேசங்கள் என்பது 1957 இல் நிகழ்ந்த பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தத்திலும் 1965 இல் எழுதப்பட்ட டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தத்திலும் இறுதியாக 1987 இல் நிகழ்ந்த இந்தியா – இலங்கை உடன்பாட்டிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியா – இலங்கை ஒப்பந்தம் இதனைப் பின்வருமாறு குறிப்பிட்டது.

‘இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் வரலாற்றடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் நெருங்கி வாழும் பிரதேசமாக இனங்காணப்படுகின்றது. மேற்படி பிரதேசங்களில் பிற இனக்குழுவினருடன் இவர்கள் ஒன்றாகப் பலகாலமாக வாழ்ந்து வந்துள்ளனர்’

இறுதியாக ஒற்றையாட்சி அமைப்பானது வரலாற்றடிப்படையில் எமது நாட்டுக்கு அந்நியமானதும் புறம்பானதும் என வெளிப்படுத்த விரும்புகின்றேன். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதற்கொண்டு நாம் அனுபவிக்கும் பிரச்சினைகளை அவதானிக்கின்றபோது பிரித்தானியரால் கையளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆட்சிமுறை 1948 இல் சுதந்திரம் கிட்டியது முதல் சிறுபான்மையினரின் நியாயபூர்வமான அபிலாசைகளை குறிப்பாகத் தமிழ்மக்களின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதென்றே குறிப்பிட வேண்டும். ஆதலால் இத்தருணத்தில் தமிழர்கள் தமது தாயகப் பிரதேசங்களில் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்வதற்கும் மத்திய அரசுடன் தமது அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்குமான சமஷ்டடியடிப்படையிலான தீர்வொன்று பற்றிச் சிந்திப்பதே பொருத்தமாக அமையும்.

இத்தகைய தீர்வு 1926 இல் கண்டிப் பிரதானிகள் தமது அறிக்கையில் குறிப்பிட்டது போல் மூன்று சமஷ்டி அலகுகளாகவோ அன்றி இலங்கைத் தமிழரசுக்கட்சி 1972 இல் அரசியலமைப்புச் சட்டசபைக்கு அளித்த மகஜரில் குறிப்பிட்டது போன்று ஐந்து அலகுகள் கொண்ட சமஷ்டி அமைப்பாகவோ இருக்கலாம். மாநிலத்தில் பூரண சுயாட்சியுள்ள அரசியலமைப்பில் மத்தியில் பெரும்பான்மை சிறுபான்மை இனங்களுக்கிடையில் 60% – 40% என்ற வீதத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.

நன்றி தாய்நிலம்


No comments: