காலத்தின் மதிப்பீடுகளை பதிவுசெய்யும் இதழியலாளர் தேவராஜ்


.
வீரகேசரி வாரவெளியீடுகளுக்கு பொறுப்பான ஆசிரியரின் வாழ்வும் பணியும்

முருகபூபதி

“எவ்வளவு காலம் படிக்கவேண்டும்?”

இந்தக்கேள்வியை பல வருடகாலமாக மிகுந்த பரிவோடு தனது அருமை மகனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஒரு தாயார். இக்கேள்வியின் தொனிப்பொருள் காலம்காலமாக எம்மத்தியில் பேசுபொருள்தான்.

கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு- என்று எம்முன்னோர்கள் சொல்லிவந்திருக்கிறார்கள். கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று இந்த கணினி யுகத்திலும்; நாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.


பசுமையும் குளிர்மையும் நிரந்தரமான மலையகப்பிராந்தியத்தில் பதுளையில் நாராங்களை என்ற கிராமத்தில் பிறந்து, அங்கே தோட்டப்பாடசாலையில் ஆரம்பக்கல்வியைக்கற்று, பின்னர் கந்தேகெதரவில் இயங்கிய பாடசாலைக்குச்சென்று அங்கிருந்து பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் பயின்று, சித்தியடைந்து யாழ். பல்கலைக்கழகம் பிரவேசித்து, இதழியல் துறைக்குள் வந்து தற்போது வீரகேசரி வாரவெளியீடுகளுக்கான பொறுப்பாசிரியர் பதவியிலிருக்கும் தேவராஜ் அவர்களை அவரது தாயார் இன்றும் கேட்கும் கேள்விதான் மேலே குறிப்பிட்ட “ எவ்வளவு காலம் படிக்கவேண்டும்.?”

ஆம். தேவராஜ் படித்துக்கொண்டுதானிருக்கிறார். இதழியலில் மட்டுமல்ல சமூகத்திலும் அரசியலிலும் கலை, இலக்கிய ஊடகத்துறையிலும் படித்துக்கொண்டே இருக்கிறார். அவரைப்பொறுத்தளவில் இது முற்றுப்பெறாத பயணம்தான்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் ஒரு மருத்துவராக, பொறியியலாளராக கணக்காளராக சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவு என்றைக்கும் இருந்ததில்லை. ஒரு ஆசிரியராகவேண்டும் என்ற விருப்பம் ஆரம்பப் பாடசாலையில் கற்கும் காலத்திலேயே இவருக்கு இருந்தமையால், தனது கனவை கல்வி சார்ந்தே வளர்த்துக்கொண்டிருந்திருக்கிறார். சிறுவயதில் சகமாணவ நண்பர்களுக்கு பாடங்களில், பரீட்சைக்கான காலங்களில் உதவும் மனப்பாங்கு, ஆசிரியராகவேண்டும் என்ற கனவையே மெய்ப்படுத்த விரும்பியிருக்கிறது.

பேராசிரியர் க. கைலாசபதி யாழ் .பல்கலைக்கழக வளாகத்தலைவராக பதவியேற்ற காலப்பகுதியில் தேவராஜ் அங்கே வரலாறு படிக்;க வந்தார். பட்டதாரியாகி ஒரு ஆசிரியராகவோ விரிவுரையாளராகவோ வந்திருக்க வேண்டியவர், எண்பது ஆண்டுகால ஆயுளுடன் விருட்சமாக வளர்ந்துள்ள வீரகேசரியின் வாரவெளியீட்டுக்கு வரும் படைப்புகளை படித்து பிரசுரத்துக்கு தேர்வுசெய்துகொண்டிருக்கிறார்.

படைப்புகளை தேர்வுசெய்வதும் ஒரு கலைதான். இக்கலையை இவர் இளம்பராயத்திலேயே கற்றுக்கொண்டு தன்னை வளர்த்திருக்கிறார். தேவராஜின் மலையக இல்லத்திற்கு அருகாமையில் வசித்த சிதம்பர ஈஸ்வரக்குருக்கள் வீட்டில் இருந்த நூலகத்தை நன்கு பயன்படுத்தியிருக்கிறார். அங்கே. பெரியாரின் எழுத்துக்கள், மற்றும் திராவிடக்கழக இலக்கியங்கள் இவரை பெரிதும் கவர்ந்திருக்கின்றன.

இவருக்கு மட்டுமல்ல இன்று பவளவிழா கண்ட பலருக்கும் ஆரம்பத்தில் திராவிட இயக்க இலக்கியங்களும் எழுத்துக்களுமே ஆதர்சமானவை என்பது புதிய செய்தியல்ல. நாரங்களையில் திண்ணையில் அமர்ந்து ‘பெரிசுகள்’ மகாபாரதமும் இராமாயணமும் நல்லதங்காள் கதையும் கேட்டுக்கொண்டிருந்தபோது ‘சிறிசான’ தேவராஜ் விடியவிடிய காவிய கதாபாத்திரங்களின் சித்திரிப்பின் சுவாரஸ்யத்தில் மூழ்கினார்.

ஐந்தாம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டிய இவருக்கு காலப்போக்கில் செ. கணேசலிங்கனின் ‘குமரன்’ இதழ்கள் வரப்பிரசாதமாகியிருக்கின்றன. அதில் வெளியான பாட்டாளிவர்க்கக்கவிதைகள் மலையக தோட்டப்புறங்களில் தொழிலாளர் குடும்பங்களின் உள்ளக்குமுறல்களை உணர்த்தியதனால் சமூகம் குறித்த தனது பார்வையை விசாலப்படுத்தியிருக்கிறார்.

தோட்டத்தொழிலார்களின் உரிமைப்பிரச்சினைகளை சுவரொட்டிகளில் எழுதி தோட்ட நிருவாகத்தினது கண்காணிப்புக்கும் ஆளாகியிருக்கிறார். சோவியத்நாடு மற்றும் இன்றைய சீனா முதலான இதழ்களை தபாலில் வரவழைத்து படித்திருக்கிறார்.

கல்வியை கற்பதிலும் நூல்களை படிப்பதிலும் இவருக்கு இருந்த ஆர்வம் ஒருபுறமிருக்க சமூகம் தொடர்பான சிந்தனையும் நாளுக்கு நாள் வளர்ந்திருக்கிறது. தன்னைவிட பதினைந்து வயது மூத்த ஒரு இளைஞனின் வாழ்வு சீரழிந்துகொண்டிருந்தபோது அவனை அரவணைத்து திருத்துவதற்கும் முயன்றுள்ளார். தோட்டத்தில் நடக்கும் சிறுசிறு களவுகளுக்கெல்லாம் கைதாகும் அந்த இளைஞன் 17 தடவைகள் தற்கொலை செய்துகொள்வதற்கும் முயன்றிருக்கிறான். அவனை திருத்துவதற்கு முயன்ற காலங்களில் தனது படிப்பறிவு அனுபவங்களையே பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்.

யாழ். பல்கலைக்கழக பிரவேசம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று சொல்லும் தேவராஜ், தமது பல்கலைக்கழக வாழ்விலும் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சூறாவளி அனர்த்தங்கள் நிகழ்ந்தபோதும் கைதடியில் சாதிப்பிரச்சினைகள் தலைவிரித்தாடியபோதும் சக மாணவ நண்பர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் களத்திலிறங்கியிருக்கிறார். பல்கலைக்கழக மாணவர் அமைப்பிலிருந்தபோது தேசிய இனப்பிரச்சினையும் கூர்மையடைந்திருந்தமையால் நிதானமாக இயங்கவேண்டியிருந்திருக்கிறது.

“ எவ்வளவு காலம் படிக்கவேண்டும்” என்ற மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியை மலையகத்திலிருந்து அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கும் அருமைத்தாயாரின் கனவை நனவாக்கவேண்டிய தேவராஜ், சமூகம் - கல்வி இவை இரண்டுக்கும் இடையே தான் எந்தத்திசை நோக்கிச்செல்லப்போகிறேன் என்பதில் தெளிவோடு இருந்தமையால் வரலாற்றுத்துறையில் கற்றுக்கொண்டே தொல்பொருள் ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்;டார். பேராசிரியர் இந்திரபாலா, விரிவுரையாளர் ரகுபதி ஆகியோருடன் ஆனைக்கோட்டையில் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் சான்றாதாரங்களை கண்டெடுத்திருக்கிறார். ஒரு வரலாற்றுச்சின்னத்தை பேராசியர் கைலாசபதியின் கரத்தில் வைத்து எடுத்த ஒளிப்படத்தை தேவராஜ் காண்பித்தபோது அதைனைப்பார்த்து வியந்துபோனோம்.

ரகுபதியுடன் அகழ்வாராய்ச்சிகளுக்காக அலைந்து திரிந்த அக்காலப்பகுதியை தம்மால் மறக்க முடியாது. என்று கண்கள் மின்னிடச்சொன்னார்.

லயன்ஸ் கழகத்திற்காக தேவராஜ் தயாரித்துக்கொடுத்த திட்டம் ஒன்றும் மிகுந்த பாராட்டுதல்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமது பரீட்சைகளில் கூடுதலான பலனை குறைந்த செலவில் விரைவில் பெற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை தேவராஜ் வடிவமைத்துக்கொடுத்து லயன்ஸ் கழக நிருவாகத்தின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

இளம்பராயத்திலிருந்தே தேடல் மனப்பான்மையுடன் இயங்கியவர் , இதழியலிலும் தரமான படைப்பாளிகளை தேடிக்கொண்டிருப்பதனால் அசௌகரியங்களையும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இதழுக்கு வரும் படைப்புகளை ‘எடிட்’ செய்யத்தெரியாத ஒருவர் எடிட்டராக இருக்க முடியாது. அவரிடம் பிரசுரத்துக்கு ஏதும் படைப்புகளை அனுப்பிவிட்டு ‘ஒரு வசனத்தையும் வெட்டாமல் அப்படியே பிரசுரியுங்கள்”- என்று ஒருவர் கேட்டுக்கொண்டால், “அப்படியானால் தான் எதற்கு இந்தப்பதவியிலிருக்கவேண்டும்” என்று திருப்பிக்கேட்பவர் தேவராஜ்.

இதழியலில் சமரசம் என்பது பற்றி தேவராஜிடம் விவாதித்தால் அவர் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் தகவல்களையும் சொல்லுவார். இதற்காகவே நாம் தனியாக ஒரு கருத்தரங்கை நடத்தலாம்.

இதழியலில் வளரக்கூடியவர்களை இனம்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி களம்கொடுப்பதிலும் தேவராஜ் கைதேர்ந்தவர்.

உதாரணத்துக்கு வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமாகும் ‘நான் சித்தன்’ கேள்வி- பதில் பகுதி. உலகெங்கும் இதனை வாரந்தோறும் தவறாமல் படிக்கும் வாசகர்கள் அநேகர். குறிப்பிட்ட பக்கங்கள் தனிநூலகவே வெளிவந்திருக்கும் தகவல் தெரியாத பலர் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை வந்ததும் வீரகேசரி வாரவெளியீட்டில் அதனைப்படித்த பின்னர் பக்குவமாக குறிப்பிட்ட பக்கத்தை கத்திரித்து எடுத்து பேரேடுகளில் ஒட்டிவைத்து வீட்டுக்கு வருபவர்களிடம் காண்பித்து படிக்கக்கொடுப்பதையும் பாரத்திருக்கிறோம்.

குறிப்பிட்ட கேள்வி – பதில் நான் சித்தனை இதழியலில் அறிமுகப்படுத்திய பெருமையும் தேவராஜ் அவர்களை சாரும்.

மலையகத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு மலையக இலக்கியத்தின் வளர்ச்சியில் மற்றுமொரு பரிமாணத்துக்கு மலையக படைப்பாளிகள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது. மலையக படைப்பாளிகள் நிறுவனரீதியதாக இயங்கி பல பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது ஒரு வகையான TEAM WORK. தேவராஜ் இதுவிடயத்தில் மலையக படைப்பாளிகளுடன் இணைந்து ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டிய காலத்தின் தேவையும் இருக்கிறது.

அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணித்துள்ள தேவராஜ், தொடர்ந்தும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம் ஊடகம்.... என்று தேடல் மனப்பான்மையுடனேயே இயங்குவதனால் இன்றும் கற்றுக்கொண்;டுதானிருக்கிறார்.

சமீபத்தில் கனடா உதயன் பத்திரிகையின் வருடாந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட தேவராஜ், இதழியல் பணிகளுக்காக பாராட்டி விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது புதிய தகவல்.

“ இன்னும் எவ்வளவு காலம் படிக்கவேண்டும்?” என்று அவரது தாயார் இன்றும் கேட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.

No comments: