அன்னையர் தினத்தையொட்டி எழுதப்பட்ட சிறுவர் பாடல்கள்

.
அன்புத் தெய்வம் அம்மா

இயற்றியவர் -
வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி

நேசக் கரத்தால் என்னைத் தூக்கி
நெஞ்சில் அணைக்கும் அம்மா!
பாசத் தோடு ஆசை பொங்கப்
பாலைப் பருக்கும் அம்மா!

மெள்ளப் பாலைக் குடிக்கும் போது
விருப்போ டினிக்கும் தமிழை
அள்ளிக் அள்ளிக் கலந்து ஊட்டும்
அன்புத் தெய்வம் அம்மா!,

பஞ்சு அஞ்சும் பாதந் தன்னைப்
பற்றிக் கண்ணில் ஒற்றியே
பிஞ்சுக் கையின் அஞ்சு விரலைப்
பிடித்து வருடும் அம்மா!

விரத மிருந்து பரனைத் தொழுது
வேண்டும் வரங்கள் கேட்டு
இரவு பகலாய் கண்ணின் மணிபோல்
என்னைக் காக்கும் அம்மா!

நாணி நின்று உடலைக் கோணி
நாவால் மழலை பொழிந்து
வீணி வடிக்கும் என்னைத் தூக்கி
விடாது கொஞ்சும் அம்மா!,

மழலைக் குரலால் மதுரஞ் சொட்ட
மகன்நான் பாடும் நேரம்
நிழலைப் போலத் தொடர்ந்து கேட்டு
நித்தம் மகிழும் அம்மா!,

சின்னப் பிள்ளை நான் தினமும்
செய்யும் குறும்பை எல்லாம்
மன்னித் தணைத்து வழி நடத்தும்
மனித தெய்வம் அம்மா!,

மாசி லாத தூய அன்பை
மகிழ்ந்து பொழியுந்  தாயைப்
பேசிப் போற்ற வார்த்தை இல்லை
பெற்ற தெய்வம் அம்மா!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments: