Srilanka :Witness to History -நூல் விமர்சனம்

.
                                                                                                                          பராசக்தி சுந்தரலிங்கம்


'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்ற ஆங்கில நூலைப் பார்த்தபோது பல எண்ணங்கள் மனதிலே வந்தன.

எழுபதுகளிலே, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கில வார இதழான Saturday Review என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்து வாசகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்ற " Saturday Review சிவநாயகம்" என்று அன்போடு அழைக்கப்பட்ட முதுபெரும் பத்திரிகையாளர் ஒருவரால் இது எழுதப்பட்டுள்ளது.






எமது இனப்பிரச்சனை உருவாகிய ஆரம்ப காலங்களிலே வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்களும், உள்ளுரிலே வாழ்ந்த தமிழ் மக்களும், வாரம்தோறும் வெளிவந்த "Saturday Review" பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அழகிய ஆங்கிலத்தில் உண்மையைச் சுவையாக எழுதும் ஆற்றல் படைத்தவர் சிவநாயகம். அவருடைய பேனா, அரசியலின் ஆழங்களை அநாயாசமாக, அழகிய சொற்சித்திரங்களாக வடித்துத் தந்தது. தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, சிங்களப் பத்திரிகையாளர்கள், பிறநாட்டு பத்திரிகையாளர்களின் மதிப்பையும் பெற்று உயர்ந்தவர். Saturday Review என்னும் பத்திரிகைச் செயலகத்தை தேடி யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்கத் தூதுவர் முதல் பிறநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளரும் ஒரு காலத்தில் செல்வதற்கான நிலையை உண்டாக்கியவர் திரு சிவநாயகம்.

அவர் இன்று தமது எழுபத்தி ஐந்தாவது வயதிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் நூல் தான் 'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி". கிட்டத்தட்ட 57 வருடகால ஈழத்தமிழினத்தின் வரலாற்றை (இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல்) அவர் மிகவும் துல்லியமாக இந்நூலில் பதிய வைக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இனவிடுதலைக்கான போராட்டங்கள் ஆரம்பிப்பதைச் சரித்திர வாயிலாகப் பார்க்கலாம். நோர்வே, சுவீடன், ஐயர்லாந்து போன்றவை தமது தனித்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் தனியாக பிரிந்து போயின. இந்த வரிசையிலேயே தமிழினத்தின் விடுதலையையும் திரு சிவநாயகம் இந்நூலில் ஆராய்கிறார்.

வரலாற்றாசிரியர் ஒருவர் தேதி வாரியாக, செய்திகளைப் பதியும்பொழுது, அவற்றின் தொகுதி, அவை கூறும் பாதிப்பு, காரணமாக வாசிப்பவர்களின் மனதிலே பாரத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும் தன்மை ஒன்று உள்ளது. ஆனாலும் வரலாற்றையும் சுவையாகக் கூறமுடியும் என்பதற்கு திரு சிவநாயகம் அவர்களின் எழுத்து சிறந்ததோர் எடுத்துக்காட்டு.


83 ஆம் ஆண்டுமுதல் தமது பத்திரிகையில் சிங்கள அரசைத் தாக்கி எழுதிய காரணத்தால் இரவோடிரவாக நாட்டை விட்டுக் கடல் வழியே இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் புகுந்தவர், அங்கேயிருந்த அரசின் ஆதரவுடன் Tamil Nation என்னும் பத்திரிகையை ஆரம்பித்து எமது விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்தார். ஆனால் அரசியல் பழிவாங்கல் காரணமாக வேலூர்ச் சிறையில் மூன்று வருட காலம் அல்லல்பட்டு இந்திய அரசால் நாடு கடத்தப்பட்டு பிரான்சில் தஞ்சம் புகுந்து அகதியாகப் பல இன்னல்களைச் சந்தித்தார். எனினும் மேல்நாட்டு நூல் நிலைய வசதிகளின் பயனாக, அரசியல் ஆவணங்களைப் பெற்று உண்மையான சரித்திரச் சான்றுகள் நிறைந்த இந்நூலை அவரால் எழுத முடிந்துள்ளது. புற்று நோயாளியான இவர், தமது முதுமைக் காலத்தை பிறந்த மண்ணிலே கழிப்பதற்காக இன்று நாடு திரும்பியிருக்கிறார்.

'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்னும் இந்நூலில் தானே ஒரு சாட்சியாக நின்று எழுதுவது போல எழுதுகிறார் - அரசியலும் இவர் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால், இந்நூல் சுயசரிதை போலவும் சரித்திர நூல் போலவும் விளங்குவது தவிர்க்க முடியாதது.

1956 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்திலிருந்து தொடரூந்து மூலம் கொழும்பு நோக்கி வரும் இவர் நடுவழியிலே சிங்களக் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு, தொடரூந்திலிருந்து வெளியே தள்ளி விடப்பட்ட கதையோடு நூலை ஆரம்பிக்கிறார். இவர் மாத்திரமல்ல வேறு பல தமிழர்களும் தன்னோடு அடி வாங்கியதையும் பார்த்தபோதுதான், தனது பிறந்த மண்ணிலே வாழமுடியாத காரணம், தான் தமிழனாகப் பிறந்த குற்றம் ஒன்றே என்பதை உணர்ந்ததாகவும் எழுதுகிறார். அன்று அவர் ஓர் இளைஞன். அப்பொழுது ஏற்பட்ட இந்த வடு அவரை ஒரு தார்மீக எழுத்தாளனாக உருவாக்கியது என்பதை இந்நூல் மூலம் அறிகிறோம். டெய்லி நியூஸ், டெய்லி மிரர் பத்திரிகைகளிலே அவர் தொடர்ந்து செயலாற்றிய போதும், Saturday Review இன் பின்னரே இன விடுதலையைப் பற்றி எழுதும் வலுமிக்க எழுத்தாளராக மாறுகிறார்.

இந்தப் பதிவைப் பார்த்தபோது மகாத்மா காந்தியை இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக தென்னாபிரிக்க வெள்ளையர் ரயிலிலிருந்து வெளியே இழுத்துத் தள்ளிய நிகழ்வும், காந்திஜியின் வாழ்வில் அந்நிகழ்ச்சி ஏற்படுத்திய பாரிய மாற்றமும் நினைவில் வந்தது. இன விடுதலைக்காகச் சிறை சென்ற நெல்சன் மண்டேலா, இனத்துக்காகப் போராடி உயிரிழந்த சேகுவேரா போன்றவர்களின் வரிசையிலே திரு சிவநாயகத்தின் எழுத்துக்களையும் சேர்த்துப் பார்க்க முடிகிறது. இவரின் ஆயுதம் பேனா ஒன்றே. இந்தப் பலம் பொருந்திய ஆயுதத்தை அவர் கையாளும் முறையை இந்நூலிலே பார்த்து அதிசயப்படுகிறோம்.

இந்நூலின் பிரதான அம்சம் எமது இளைஞர்களின் இன விடுதலைக்கான தார்மீகப் போராட்டம் - அவர்களின் தியாகம். புலிப்படை வீரரின் தியாக உணர்வு அவரின் எழுத்தில் புதியதோர் உத்வேகம் பெறுகிறது. ஆழமாக எமது உணர்வைத் தாக்கி, எம்மை மெல்ல மெல்ல உலுக்கி விடுகிறது இவருடைய எழுத்துத் திறன். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாம்" என்பதை அவரின் எழுத்தின் சத்தியத்தில் தரிசிக்கிறோம்;. பெரும்பான்மையினரின் தந்திரங்கள், படைபலத்திற்கு முன் எமது மூத்த அரசியல்வாதிகளின் சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியை, இயலாமையை, உணர்ந்து செயல்பட்ட இளைஞர்களின் எழுச்சியை, நியாயப்படுத்துவதன் மூலம், தேதி வாரியாக, போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இவர் பதிய வைத்துள்ள முறையில் இது சிறந்ததோர் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

இந்தியாவிலே வாழ்ந்த காலத்திலே, அவருடைய அனுபவப் பதிவுகள், இன்றைய நிலையில் பின்னோக்கிப் பார்க்கும் போது பல செய்திகளை விளக்கி நிற்கிறது. தமிழ் மக்கள் இந்தியாவைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் எப்பொழுதும் நினைத்திருந்தமையையும், பின்னர் ஏமாற்றமடைந்ததையும் வேதனையோடு பதிகிறார். தமிழரின் இன்றைய நிலைக்கு இது ஒரு முக்கிய காரணம் என்கிறார். இந்தியாவின் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப் போராட்டம், ஒரு இக்கட்டான சூழலில் இன்று இருப்பதையும் வல்லரசுகள் சிறிய இனங்களைப் பகடைக் காய்களாகக் கருதுவதையும் அரசியலாளரான இவரின் எழுத்தில் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலே தன்னைச் சிறையிலே அடைத்த போது, அங்கே காரணமில்லாமல் பல இலங்கையர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைப் பற்றி இந்த மனிதாபிமானி வேதனையுடன் எழுதுகிறார். சிறைவாசத்தின் போது அவர் அனுபவித்த துன்பம் வாசிப்பவர்களின் மனதை உலுக்கி விடுகிறது. சிறையிலிருந்து தன்னை விடுவிக்கவும், பின்னர் தனக்கு அரசியல் தஞ்சம் பெற்றுத் தரவும், தன்னுடைய எழுத்துப் பணிக்குப் பல வழிகளிலும் உதவி அளித்த புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நன்றியுடன் இந்நூலில் நினைவுகூர்கிறார்.

யாழ்ப்பாணத்தில் IPKF இனரின் செயல்களைக் கண்டித்து எழுதுகையில், அவர்களின் தளபதிகள் சிலர் புலிப்படைத் தளபதிகள் மீது வைத்திருந்த பெருமதிப்பையும் இந்நூலில் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. அரசியல் காரணங்களால், இனவிடுதலை எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை ஆராயும் வகையில் போராட்ட வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத பலருக்கும் இவரது விளக்கம்; தெளிவை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாண நூல் நிலையம் எரிந்த கதை பற்றி எழுதும்போது ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழித்தால் அந்த இனத்தையே அழித்துவிடலாமென்று மனப்பால் குடித்தவர்களின் அறியாமையை எள்ளி நகையாடும் அவருடைய எழுத்து பல உண்மைகளை உணர்த்துகிறது. நூல் நிலையத்தின் நடு மாடியிலே புராதன ஏட்டுச் சுவடிகளும் அரிய ஆவணங்களுமிருந்தன என்றும் அவற்றிற்கே முதலில் இனவாதிகள் தீயிட்டனர் என்ற செய்தியை எழுதுகையில், ஏனைய நூல்களைக் காப்பாற்ற முடிந்தாலும், இவற்றை அழிக்க வேண்டும் என்பதே துவேச மனப்பான்மை கொண்டவர்களின் நோக்கம் என்ற உண்மையை உணர வைக்கிறார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே, சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழர்களான சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர்கள், இலங்கைக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் என்றும், ஆனாலும் அதே சிங்கள மக்களின் துரோகத்தைத் தமிழ் மக்கள் காலம் கடந்து உணர்ந்ததையும் காட்டும் சிவநாயகம் அவர்கள், பிரிட்டிசாரிடம் திரு ஜின்னா பாகிஸ்தானைப் பெற்றது போல தமிழ் மக்களும் சுதந்திரம் பெற்ற பொழுதே தமது உரிமைகளைப் பெற்றிருந்தால் இன்று இந்நிலை வந்திருக்காது என்று வருந்துகிறார். 'நம்பிக் கெட்டவர்கள்" தமிழர் என்ற வருத்தத்தைப் பதிவு செய்கையில், அனிதா பிரதாப் என்னும் இந்தியப் பத்திரிகையாளருக்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய வாசகத்தையும் இங்கே பதிவு செய்கிறார்.

'திரு ஜயவர்த்தனா ஒரு நல்ல பௌத்தராக இருந்திருந்தால், நான் இப்படி துப்பாக்கியோடு திரிய வேண்டியதில்லை" என்பதே தலைவரின் வாசகம்.

இவருடைய எழுத்தைப் பெரிதும் மதிக்கும் சிங்கள அறிஞர், திரு ஏட்றியன் விஜயமான (Adrianne Wijeyamanne) இந்த நூலுக்கு சிறந்ததோர் முன்னுரையை வழங்கி, எமது இன விடுதலையின் நியாயப்பாட்டை வலியுறுத்துவது நூலின் மதிப்பை உயர்த்திவிடுகிறது.

அன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையைச் சுவைபட எழுதும். சிவநாயகம் அவர்கள் தான் பிறந்து வளர்ந்த கொக்குவில் கிராமம் பற்றிய அழகிய சொற் சித்திரம் ஒன்றை இங்கே பதிய வைத்திருப்பது இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

'கொக்குவில், யாழ்ப்பாண நகர எல்லையில் அமைந்திருக்கிறது. அது கிராமமுமில்லை நகரமுமில்லை. சிறு சிறு ஒழுங்கைகள் ஒவ்வொரு வீட்டிலும் போய் முடியும். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒழுங்கைகளுக்குள்ளால் சுற்றலாம். நினைத்தவுடன் யாழ்ப்பாண நகரத்திற்குப் போய் வந்து விடலாம். பின்னர் இந்தக் கிராமப் பண்பாட்டுக்குள் வந்து அமைதியாக இருக்கலாம்" என்று வர்ணிக்கிறார்.

யாழ்ப்பாணத்திலேயுள்ள எந்த ஒரு கிராமத்திற்கும் இவை பொருந்தும் என்றாலும், அவர் எழுதியுள்ள முறையில் அவருடைய கொக்குவிலைப் போன்ற அழகிய கிராமமே இல்லை என்பது அவருடைய ஊர்ப்பற்றையே காட்டுகிறது. இந்தப் பற்றே அவரின் இனப்பற்றாகவும் பின்னர் மலர்கிறது. கொக்குவிலிலே ஒரு பல்லினக் கலாச்சாரம் இருந்தது என்று எம்மை ஆச்சரியத்திலே ஆழ்த்துகிறார். வீடு வீடாகச் சென்று, சீனத்துப் பட்டு விற்ற சீன தேசத்து வியாபாரி, தலையிலே பெட்டியைச் சுமந்தபடி விசுக்கோத்து, சீனிப் பணிஸ், கேக் விற்ற சிங்கள பாண் வியாபாரி, பள்ளிகளிலே கர்நாடக இசை, ஆங்கிலம் கற்பித்த தென்னிந்திய தமிழ், மலையாளப் பட்டதாரிகள், சிங்களம் கற்பித்த பௌத்த பிக்கு என்று பலரைப் பற்றி எழுதுகிறார். இந்தப் பிக்கு தமிழை விரும்பிக் கற்று சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் பின்னர் சிங்களத்தில் மொழிபெயர்த்து எழுதிய செய்தியையும் அறிகிறோம். தமிழறிஞர் தனிநாயக அடிகளார், இப் பௌத்த அறிஞரரன தம்மரத்ன தேரரை முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு அழைத்துக் கௌரவித்த போது அவர் 'சிங்கள எழுத்துக்களில் தமிழ் மொழியின் பாதிப்பு" என்னும் பொருள் பற்றி உரையாற்றியவர் என்று அறிய வியப்பாக இருந்தது.

கொக்குவிலை ஒர் உலகக் கிராமம் Global Village போல உருவாக்கி விடுவது அவரின் எழுத்தின் சிறப்பு. பல்லினக் கலாச்சாரம் என்ற கருத்து இந்நாட்களில் ஏதோவொரு புதிய கருத்துப் போலத் தோன்றினாலும், அன்றே எம்மவர் இவற்றை இயல்பாக ஏற்று பண்புடன் வாழ்ந்ததை பெருமையோடு குறிப்பிடும் வகையில் அவரது இனப்பற்று தெரிகிறது. மேலும் இவருடைய முன்னோரான முதலியார் இராசநாயகம் அவர்கள் ஈழத் தமிழரின் பெருமையை விளக்கும் "பண்டைய யாழ்ப்பாணம்"Ancient Jaffna என்னும் நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளார் என்பதையும் இந்நூல் மூலம் அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்விடத்தில், சிவநாயகம் அவர்கள் இந்நூலில் குறிப்பிடும் ஒரு கதையைப் பற்றிக் கூறி இவ்விமர்சனத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

அமெரிக்க எழுத்தாளரான ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்பவர் The Old Man and the Sea (கிழவனும் கடலும்) என்ற ஒரு நாவலை எழுதியுள்ளார்.

ஒரு கிழவனுக்கு கடலிலே மீன் பிடிக்கும்பொழுது தூண்டிலிலே பெரிய மீன் ஒன்று சிக்கியது. அவனுக்கு அதனைக் கரைக்குக் இழுத்துவரும் சக்தி இருக்காததால், அதனை ஒரு சிறுவனின் உதவியோடு கரை சேர்க்கிறான். ஆனால் கரைக்கு வந்தபின் பார்த்தால், மீனைக், காணவில்லை - அங்கே மீனின் எலும்புக்கூடு மாத்திரமே இருந்தது. வலிய சுறா மீன்கள் மீனின் சதையை உண்டுவிட்டன. இந்த நூலை எழுதும்போதெல்லாம் இந்தக் கதை தனது மனதில் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருந்ததாக சிவநாயகம் அவர்கள் எழுதுவதை வாசிக்க வேதனையாக இருந்தாலும், கதையில் வந்த முதியவரைப் போலல்லாமல், அவர், தனது முதுமையிலும், நோய் வாய்ப்பட்ட நிலையிலும், மனவலிமை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு, ஒரு சிறந்த பொக்கிசத்தைத் தமிழ் மக்களுக்கு, உலக வரலாற்றுக்கே தந்துவிட்டார் என்று நாம் பெருமைப்படலாம். அவருடைய ஆங்கில சொற்பிரயோகத்தின் வன்மை, அதனூடு இழையோடும் நகைச்சுவை, அரசியல் உண்மைகளை மனதில் பதியவைக்கும் திறமை ஆகியன இவ்வரலாற்று நூலை ஏனைய வரலாற்று நூல்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதால் இன்றைய எமது இளம் தமிழ்ச் சந்ததியினருக்கு இந்நூல் ஒரு சிறந்த கொடை என்பதில் சந்தேகமில்லை.

"Que Sera Sera

Whatever will be,will be,

நடப்பதுதான் நடக்கும்"

என்னும் பாடல் வரிகளோடு நூலை நிறைவு செய்யும் சிவநாயகம் அவர்கள் - தனது வாழ்வு 'பாம்பும் ஏணிப்படியும்" (Snake & The Ladder) போன்றது என்றும், ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்று தன்னை வழிநடத்தியது என்றுதான் சொல்லலாம் என தனது கதையை முடிக்கும்போது

'எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதிச் மேற் செல்லுமே"

என்ற உமர் கய்யாமின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

Nanri:  தமிழ்நாதம்

1 comment:

kirrukan said...

நல்லஒரு கட்டுரை தந்த தமிழ்நாதத்திற்கு நன்றிகள்...


[quote]இனத்துக்காகப் போராடி உயிரிழந்த சேகுவேரா போன்றவர்களின்[/quote]
சேகுவாரா இனத்திற்காக போராடியவரா? சிந்தாந்தத்திற்கா போராடியவரா?