படித்து சுவைத்தது

.


ஒரு புத்துணர்ச்சிக்காக, கொஞ்சம் மாறுதலுக்காகவும் கவிதை 

முதலில் சூஃபி கவிஞரான முகமது ஜலாலுதீன் ரூமியின் கவிதை



கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், இந்த கவிதை வரிகளுக்குள் இருக்கும் ஆன்மீக அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்பதோடு, இதே விஷயத்தை நம்மூர் ஞானிகளுமே தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லி 
ருக்கிறார்கள்  என்பதையும் பார்க்க முடியும்! இறைவன், இறையனுபவம் என்பது ஒன்றே! மதங்கள், மதவாதிகள்  பிரித்துச் சொல்வது போல, அவர்கள் குறிப்பிடும் பாதையில் போனால் தான் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் புருடா என்பதையும் சேர்த்தே பார்க்க முடியும்! ரூமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?






நீ!

உயிராய்ப்  பூமியில் தோன்றிய தருணமே
ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!
ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன்  பயம் கொள்ள வேண்டும்?
மரணம்  உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை  ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே! தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறு துளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறு துளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறு துளியாய் ஆனதைப்பார்!
 
முகமது ஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில், காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்ம நேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதை வரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்!காதல் கவிதை மாதிரித் தோன்றினாலும் உயர்ந்த ஆன்மீகத் தேடலோடு கூடிய உயிரின் வேட்கையாக இந்தக் கவிதை வரிகளைப் பாருங்கள்!


காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும். 
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு 
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"

இயற்கையிடமிருந்து வெகுதூரம்  விலகி வாழுகிற இயந்திரத் தனமான வாழ்க்கை, இயல்பான, இயற்கையான சில விஷயங்களைக் கூட ரசிக்கத் தெரியாமல், வாழுகிற போலித் தனமான அவலம் இவைகளை முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்! 

No comments: