மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

.
Melb 2010 Maveerar Naal 17.jpgஅவுஸ்திரேலியாவின் மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள், விக்ரோரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மிகவும் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை(28.11.2010) நான்கு மணிக்கு ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் வயதுவேறுபாடின்றி எண்ணூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.  இவர்களுடன் அவுஸ்திரேலியா பல்லின சமூகத்து பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
Melb 2010 Maveerar Naal 7.jpg
பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியும் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதல் களப்பலியான லெப் சங்கர் அவர்களின் உருவப்படத்திற்கும் முதல்பெண்புலி மாவீரரான 2ஆம் லெப் மாலதியின் உருவப்படத்திற்கும் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் ஏனைய மாவீரர்களுக்கு ஈகச்சுடர்களை ஏற்றிவைத்தனர். அதன்பின்னர் அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செய்யப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து ”கலைச்சுடர்” நடனபள்ளி மாணவிகள் வழங்கிய மாவீரர் புகழ்பாடுவோம் பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. 
அதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய சிட்னி, மெல்பேர்ன் கலைஞர்களின் படைப்பில் உருவான, அவுஸ்திரேலிய கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்ட ”தணியாத தாகம்” பாடல் இறுவட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது. மருத்துவர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள் இறுவட்டை வெளியிட்டுவைக்க மாவீரர் நம்பியின் தாயார் திருமதி தில்லை நடராஜா அதனை பெற்றுக்கொண்டார். தணியாத தாகம் பாடல் இறுவட்டைப் பற்றிய காணொளி அகலத் திரையில் காண்பிக்கப் பட்டது.
இதனை தொடர்ந்து “பரத சூடாமணி“ நடனபள்ளி மாணவிகள் வழங்கிய கார்த்திகை 27 என்ற பாடலுக்கான நடனம் இடம்பெற்றது.
அதன்பின்னர் மாவீரர் நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தினால் வெளியிட்டுவைக்கப்பட்ட அறிக்கை புலிகளின் குரல் வானொலியின் இணைப்பின் ஊடாக ஒலிபரப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கருத்துரை வழங்கிய சபேசன் அவர்கள் தற்போதைய சமகால நிகழ்வுகள் தொடர்பாக உரையாற்றினார். அதனை தொடர்ந்து அனைத்து மக்களாலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்பின்னர் “நடனாலாயா“ நாட்டியப்பள்ளி மாணவர்களின் “முகவரி அற்றவர்களின் வாழ்க்கை“ எனும் நாட்டிய நாடகம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்களின் அவலநிலையையும் அதனை உடைப்பதற்கான எழுகையாகவும் நாட்டியம் அமைந்திருந்தது.
இடைவேளைக்கு பின்னர், விக்ரோரிய கலை பண்பாட்டுக்கழகத்தின் “விடியலைத் தேடி“ எனும் நாடகம் சிறப்பாக இடம்பெற்றது. தமிழ்மக்கள் பல்வேறு வழிமுறைகள் ஊடாக பயணித்தாலும் தமது இலக்கை அடைவதில் உறுதியாக இருக்கின்றனர் எனவும், ஒன்றுபட்ட சக்தியாக எழவேண்டியதன் அவசியத்தையும் அந்நாடகம் பிரதிபலித்தது.
இதனை தொடர்ந்து ”வரலாறான வல்லமைகள்” எனும் காணொளி காட்சி அகலத்திரையில் காண்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் வாழ்வும் அதனை தொடர்ந்து தமிழ் நிலங்கள் பறிபோன வரலாறும் அதனை மீட்பதற்கான போராட்டமும் அப்போராட்டத்தில் தமிழர் சேனையின் கட்டுமானமும் தனிநாட்டுக்கான கட்டுமானங்களும் வல்லாதிக்க சக்திகளின் கூட்டிணைவால் அத்தேசம் அழிக்கப்பட்டதையும் அதனை எதிர்த்துநின்ற வல்லமைகளின் பதிவாகவும் அக்காணொளி பதிவு இடம்பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து தாயகத்தில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிதிட்டங்களை முன்னெடுக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அதன் ஒருவடிவமாக நம்பிக்கை ஒளி எனும் திட்டத்தின் ஊடாக அங்குவாழும் குடும்பங்களுக்கு உதவிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக தேசிய கொடிகள் இறக்கப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எனும் உறுதி மொழியுடன், நிகழ்வுகள் 7.45 மணியளவில் முழுமையடைந்தது

No comments: