நூல்வெளியீட்டு விழாவும் குறும்பட விழாவும்

.
மெல்பேணில் நடைபெற்ற
நூல்வெளியீட்டு விழாவும் குறும்பட விழாவும்
                                                                                               தேவி திருமுருகன்

மனிதநேய எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதிய “வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்”, மலேசிய எழுத்தாளர் திருமதி. மாக்கிறட் செல்லத்துரை எழுதிய “போதும் உங்கள் ஜாலமே” மற்றும் “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே” ஆகிய மூன்று நூல்களினதும் வெளியீட்டுவிழாவும் குறும்பட விழாவும் கடந்த நொவம்பர்மாதம் 20 ஆம் திகதி மெல்பேணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

விக்ரோறியப் பல்லினக்கலாசார ஆணையகத்தின் அனுசரணையுடன் மெல்பேணதமிழ்ச்சங்கத்தினால் இந்த விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

திரு. ந. சுந்தரேசனின் தலைமையில் நடைபெற்ற இந்த இரண்டுவிழாக்களிலும் முதன்மை விருந்தினராக தமிழ்நாடு, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குனர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் திருமதி ஜெயபாரதி கனகசபேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருமதி. மாக்கிறட் செல்லத்துரையின் “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே” என்ற நூலுக்கு மெல்பேண், பல்கலைக் கழஞ்சியத்தின் இயக்குனரும், பிரபல கேக் அலங்காரக் கலைஞரும், எழுத்தாளருமான திருமதி. சாந்தா ஜெயராஜ் அறிமுக உரை நிகழ்த்தினார். பிரபல மூத்த ஒலிபரப்பாளர் திரு. இரத்தினம் கந்தசாமி நூலை வெளியிட்டு வைக்க, ஈழத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. ஆ.தர்மராஜா, பிரபல ஒலிபரப்பாளர் சண்முகம் சபேசன், திரு. சுரேஸ்குமார் பிள்ளை ஆகியோர் முதற் பிரதிகளைப் பெற்று சிறப்புச் செய்தனர்.

திருமதி மாக்கிறட் செல்லத்துரையின் மற்றொரு படைப்பான “போதும் உங்கள் ஜாலமே” என்ற நூலை, மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் திரு வெங்கட்ராமன் வெளியிட்டு வைக்க, இலங்கை சக்தி வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளர் திருமதி அபிராமி மணிவண்ணன் அறிமுக உரையை நிகழ்த்தினார்.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் தலைவரும், மூத்த கலைஞருமான திரு சிசு நாகேந்திரம், மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் உபசெயலாளர் திரு.இராஜ இராஜேஸ்வரன், திரு.லொய்ட் வேதமாணிக்கம், கலாநிதி மகேந்திரன், ஆகியோர் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நூலாசிரியை மாக்கிரட் செல்லத்துரை தமது ஏற்புரையில், தமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இந்த நாட்டில் இவ்வளவு சிறப்பாகத் தனது நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், மூத்த எழுத்தாளரான மாத்தளை சோமு அவர்களின் நூலும் தனது நூலும் ஒரே மேடையில் வெளியிடப்படுவதில் தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டு, இதனை ஒழுங்கு செய்த திரு.பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

நூலாசிரியைக்குத் திருமதி சாந்தா ஜெயராஜ் பொன்னாடை போர்த்தியும், திருமதி ஜெயபாரதி கனகசபேசன் சந்தன மணிமாலை அணிவித்தும் கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து திரு.மாத்தளை சோமுவின் “வியக்கவைக்கும் தமிழர் அறிவியல் நூலை பாமும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அறிமுகம் செய்தார். திரு. சண்முகம் கபேசன் நூலை வெயியிட்டார். திரு இரத்தினம் கந்தசாமி, திரு. சோ. விஜயசாரதி, திரைப்படத் தயாரிப்பாளர் திரு ஜெயராஜ் ஆகியோர் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

ஏற்புரை வழங்கிய மாத்தளை சோமு, பண்டைத் தமிழ்மக்கள்  அறிவியலில் தனித்துவம் மிக்கவர்களாக விளங்கியவர்கள் எனவும், இப்போது அவற்றையெல்லாம் தெரியாத நிலையில் நமது இன்றைய தமிழினம் உள்ளது எனவும், எனவே அத்தகைய அரிய அறிவுச் செல்வங்களைத் தமிழ் மக்களுக்கு அறியத் தரும் முயற்சியாகவே தான் இந்த நூலை எழுதியதாகவும் கூறினார். விழாத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, திரு.மாத்தளை சோமுவுக்கு திரு.சு.ஸ்ரீகந்தராசா பொன்னாடை போர்த்திச் சந்தனமணி மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

முதன்மை விருந்தினர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தமதுரையில் நூலாசிரியர்களையும், பலம்பெயர்ந்த நாடொன்றில் இத்தகைய விழாவை ஒழுங்குசெய்தவர்களையும் தான் மிகவும் பாராட்டுவதாகக் கூறினார். விழாத் தலைவரால் முதன்மை விருந்தினர் பொன்னாடை போர்த்தப்பட்டு, சந்தன மாலை அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

சிற்றுண்டி இடைவேளையின் பின்னர் குறும்படக்காட்சி இடம்பெற்றது. “வயலாரும் திருவள்ளுவரும்”;, “என்று மடியும்” முதலிய குறும்படங்கள் காட்சியில் இடம்பெற்றன. பயனுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகத் அந்தப்படங்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


கச்சிதமாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நூல்வெளியீட்டு விழா,  அருமையானதோர் இலக்கிய விழாவாக நடைபெற்று, தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிகலந்த மனநிறைவை ஏற்படுத்தியதுடன்  அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குறும்படக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது என்று சொல்லலாம்.

No comments: