எனது இலங்கைப் பயணம் -செ பாஸ்கரன்

.
தவிர்கமுடியாத காரணத்தால் எனது இலங்கைப்பயணத்தின் 6ம் பகுதி இவ்வாரம் வெளிவரவில்லை அடுத்தவாரம் தொடரும்

பாகம் 5

கீரிமலை நோக்கி புறப்பட்டு செல்லும்போது யாருமற்ற பிரதேசமாக காணப்படுகின்றது. சந்தியை அண்மித்த பாதையின் ஒரு பக்கத்தில் சிறிய தெருவோர பிள்ளையார் தென்படுகின்றார் குங்கும பொட்டுவைத்து பட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான பிள்ளையாரைக் காணக்கூடியதாக இருந்தது. யார் இவரைக்கவனிப்பார்கள் என்று கேட்பதற்கு ஆட்கள் எவருமே தென்படாததால் விடையில்லாது தொடர்ந்தேன்.
 ஒரு நாறு மீற்றருக்கு அப்பால் பாதையின் மறுகரையில் ஒரு அரசமரம் அந்த அரசமரத்தின் கீழ் ஒரு புத்தர் பீடமொன்றில் அமர்ந்திருக்கின்றார்.





அதன் முன்பாக வாகனங்கள் நிறுத்தக் கூடியதாக சிறிய மணற் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எந்தக்கபடமும் இல்லாது புத்தர் கருணையோடு காணப்படுகின்றார். உள்மனதில் யாருமற்ற பிரதேசத்தில் தன்னை கொண்டுவந்து வைத்துள்ளவர்களை திட்டியிருப்பாரோ என்று என்மனம் எண்ணியது. கோயில் இல்லா ஊரில் குடியிக்காதே என்று அறிந்துள்ளேன். குடிகள் இல்லா ஊரில் கோயில் வைக்காதே என்று யாரும் சொன்னதாக ஞாபகம் இல்லை அப்படிச் சொல்லியிருந்தால் சிலவேளை வைப்பதற்கு முன்பு யோசித்திருப்பார்கள்.
வாகனம் கோவிலுக்கு அண்மையில் போகும்போது சனக்கூட்டம் தென்பட்டது நாங்களும் அந்த இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினோம் கீரிமலை கேணிக்கு அண்மையில் வேலைப்பாடுகளுடன் அமைந்த ஒரு அழகிய மண்டபம் இருக்கிறது இது எப்போ கட்டப்பட்டது என்று எனக்குத் தெரியாது. அந்த மண்டபத்தில் இருந்து தமிழ்ப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்க ஒரு அழகிய பெண் பரதம் ஆடிக்கொண்டிருக்கின்றார். படப்பிடிப்பு என்று புரிந்துகொள்கின்றேன்.
அண்மையில் நின்ற அவர்களின் வாகன ஓட்டியிடம் கதைத்ததில் செல்வம் என்ற படம் எடுக்கின்றார்கள் என்றும் சிங்கள நெறியாளர் என்றும் அறிகின்றேன். சிங்கள நெறியாளர் ஏன் தமிழ்ப்படம் எடுக்கவேண்டும் நடிகை சிங்கள பெண்ணா அல்லது தமிழ்ப்பெண்ணா இப்படியான எண்ணங்கள் என் மனதில் எழுந்தது. ஒரு இளைஞன் கதாநாயகனாக இருக்கலாம் என்று நினைத்தேன் மிக இயல்பாக பரதநாட்டியத்தை செய்கின்றான் ஆனால் பெண்ணுக்கு திரும்பத் திரும்ப நெறியாளர் ஆடிக்காண்பிக்கின்றார். அடப்பாவி சிங்கள நெறியாளர் மிக நன்றாக ஆடுகின்றானே என்று நான் கற்றுக்கொள்ளாத பரதநாட்டியம் பற்றி நினைக்கின்றேன். கதாநாயகனாக நான் நினைக்கும் அந்த இளைஞனை எங்கோ பார்த்த ஞாபகமாக இருக்கின்றதே என்று நினை;கின்றேன் ஆனால் அவனுக்கு ஏறக்குறைய 25 அல்லது 26 வயதுதான் இருக்கலாம் ஆகவே பார்த்திருக்கவே முடியாது என்று நினைக்கின்றேன். உதவி ஒளிப்பதிவாளர் வாகனத்தை நோக்கி வருகின்றார் அவரோடு உரையாடுகின்றேன். அவர் மட்டக்களப்பை சேர்தவரென்றும் இந்தியாவில் பாலுமகேந்திராவிற்கு உதவியாளராக இருந்ததாகவும். இந்தியாவில் இருந்துதான் இந்தக் கமறாக்கள் வாடகைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் இங்கு இப்படியான கமறாக்கள் இல்லை என்றும் கூறுகின்றார். நாயகி சிங்கள திரையுலகில் முன்னணி நடிகை எனவும் திரைக்கதை சமாதானத்தைப் பற்றிய கதை என்றும் கதாநாயகன் புலிகள் அமைப்பின் ஆஸ்தான பாடகர் சாந்தனின் மகன் எனவும் கூறுகின்றார். இப்போது எனக்கு பொறிதட்டியது ஆம் சாந்தன் எனக்கு நன்கு பழக்கமானவர் அவரின் மகன் தந்தையைப் போன்றே தோற்றமளிக்கின்றார். இளமையில் சாந்தன் இருந்ததுபோலவே இருக்கிறார்.
நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவரும் வருகின்றார்கள். நான் நெறியாளரிடம் உரையாடுகின்றேன் அப்போதுதான் தெரிகின்றது இவர் முன்னைநாள் சிங்கள நடிகர் சன்ஜய லீலாரட்ன. இவரே இத்திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகின்றார். ஜயனாத் குனவர்தன ஒளிப்பதிவு இயக்குனராக மாறுபட்ட வடிவில் ஒளிப்பதிவு செய்கின்றார். இத்திரைப்படத்தில் மாலினி பொன்சேகா, ஜோ அபேவிக்ரம, லக்ஷ்மன் மெண்டிஸ், ஜயனி சேனாநாயக்க, சந்திக நானயக்கார, சன்ஜய லீலாரட்ன, சாந்தலிங்கம் கோகுலராஜ், நடராஜசிவம் ஆகியோர் நடிக்கின்றார்கள் என அறிந்தேன்.  டோகோமோ திரைப்பட நிறுவனத்திற்காக "செல்வம்" திரைப்படத்தை மொஹமட் முபாரக் அவர்கள் தயாரிக்கின்றார்.



சமாதானத்தைப் பற்றிய கதையே இந்தக்கதை பயங்கரவாதத்தை முறியடித்த பின்பு தமிழ்மக்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் நாட்டுமக்களில் வித்தியாசம் காட்டப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டார். நீங்கள் ஒரு கலைஞன் என்றவகையில் நீங்கள் நினைப்பது நல்லது ஆனால் பயங்கரவாதத்தை முறியடித்தது என்று குறிப்பிட்டீர்கள் இது ஆரம்பித்தது ஒரு விடுதலைவேண்டியல்லவா என்றேன். தவறுதான் இந்தப்போரை முடித்தது என்று கூறலாம் என்றார். இராணுவத்தினுடைய தியாகங்கள் மறைக்கப்படுகின்றது அவர்களுடைய தியாகங்களை இதில் தெளிவாக காட்ட முற்படுகின்றேன் என்றார். பெரும்பான்மை இனத்தவர் என்ற வகையில் அவர் பார்வை அப்படி இருந்தாலும் ஒரு நல்ல கலைஞன் என்றவகையில் அவர் சிந்திக்க தவறுகின்றாரா என்றகேள்வி என்னுள் எழுந்தது. விடைபெற்றுக்கொண்டு சாந்தன் கோகுலராஜிடம் நெருங்கினேன். சிரித்தபடி உரையாடினார் இயக்கத்தில் இருந்து பின் சிறைவைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளதாகவும். இப்போது இத்திரைப்படத்தில் நடிப்பதாகவும் கூறினார். இயக்கத்தில் கலைக்குழுவோடு பணியாற்றிய இவருக்கு நிறைய திறமை உள்ளதாகவும் அதை சிறையில் வெளிக்காட்டியதாகவும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புலி உறுப்பினர் பாத்திரத்திற்கு பாத்திரப்பொருத்தம் கருதி அவரையே தெரிவு செய்ததாகவும் நெறியாளரே விளக்கினார். சாந்தனைப்பற்றி கேட்டு அறிந்து கொண்டு விடைபெற்றுக்கொண்டு கேணியை நோக்கி சென்றேன்.
கேணி ஆண்களும் பெண்களும் நிறைந்த குளமாக இருந்தது. தண்ணீர் முன்பு போலல்லாது அசுத்தமாக உள்ளது போல் தோன்றியது. அதற்கு காரணம் இப்போது அங்கு செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் அதிகமானவர்கள் வந்து குளிக்கின்றார்கள் சிங்கள உல்லாசப்பயணிகளும் நிறையவே வருகின்றார்கள் அதுவாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். குளிக்கும் எண்ணமும் அத்தோடு கைவிடப்பட்டது.
கோவிலை நோக்கி சென்றபோது கண்ணில் பட்டது ஓர் அறிவித்தல் பலகை அது பொலிசாரினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் நகுலேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது சிங்களத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுத்துப்பிழை இருந்தபோதும் அது திருத்தப்படாமலே இருக்கின்றது. யாருடைய தப்பென்று கூறுவது. பொலிஸ் என்ற காரணத்தால் மன்னிக்கப்ட்டுள்ளதா என்ற எண்ணம் எனக்குள் பரவ நகர்ந்தேன்.


 கடையொன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அர்ச்சனைப்பொருட்ககைளை குடும்பத்தினர் வாங்கிக் கொள்ள உள்ளே சென்றோம். இங்கும் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழமைபோல் தகவல்களை பரிமாறிக்கொண்டேன் அமைச்சர் தேவானந்தா அள்ளிக் கொடுத்துள்ளார் என்றார்கள். அத்தோடு வெளிநாட்டுக் காசும் சேர்ந்து பழைய அழகை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகின்றார்கள். செய்யவேண்டியதுதான். இந்த அவசரம் ஏன் நகர அமைப்பிலும் மக்கள் முன்னேற்றத்திலும் காட்டப்படுவதில்லை என்ற கேள்வி தலையைக் குடைந்து கொண்டிருக்க நடந்தேன்.



 இந்தக் கோவிலில் நிறைய பக்தர்கள் நின்றார்கள். நகுலேஸ்வரரை பார்த்துவிட்டு செல்வச் சன்னதியை நோக்கிப் புறப்பட்டோம். போகின்ற பாதையில் காளிகோவில் ஒன்று இருந்ததாகவும் அது இப்போது காடுபோன்று கிடப்பதாகவும் சாரதி கூறினார் அதையும் பார்த்தேன் கோவிலின் உள்ளும் புறமும் விருட்சங்கள் வளர்ந்து மறைத்திருந்தது

.அந்த காடுபோன்ற பிரதேசத்துக்குள்கும் உயரமான சென்றி பொயிற்ரில் ஆமி காவல் இருப்பதை பார்க்க கூடியதாக இருந்தது. வரவு செலவுத்திட்டத்தில் யுத்தம் இல்லாதபோதும் ஏன் இந்த தொகை ஒதுக்குகின்றார்கள் என்ற கேள்விக்கு இப்போ விடை கிடைத்ததுபோல் இருந்தது. அந்த அடர்ந்த பகுதிக்குள்ளால் வட பகுதியில் இருந்த மிகப்பெரிய தொழிற்சாலையான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை. காட்டின் நடுவே கட்டப்பட்டிருப்பதுபோல் காட்சியளித்தது.

மனதில் ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்களிக் ஞாபகம் வந்து சென்றது. வடபகுதிக்கு அரசியல் தலைமைகளால் கிடைத்த ஒரு சில தொழிற்சாலைகள் கூட இன்று தொழிற்படாமல் போனதிற்கு காரணமான நிகழ்வுகள் நினைவுத்திரைகளாக மனதில் ஓடி மறைகிறது.
அடுத்து செல்வச்சன்னதியும் அதைத் தொடர்ந்து வன்னி பயணமும் தொடரும்.

இந்தக் கட்டுரையின் ஐந்தாவது  பாகம் இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். 

1 comment:

kirrukan said...

[quote]அலங்கரிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான பிள்ளையாரைக் காணக்கூடியதாக இருந்தது[/quote]

சித்திரத்தில் இருந்து சிலைவரை இப்ப மொர்டென் கண்டியளோ அதுதான் இந்த பிள்ளையார் இந்த தோற்றம்...



இந்த பிள்ளையாரை தமிழன் படுத்தும் பாடு ஜயோ தாங்க முடியவில்லை....ஆணை முகத்தானை எந்த முகத்தானையாக மாற்றியுள்ளார்கள் என்று மாற்றியவனுக்கே தெரியாது ......



அரசமரத்தின் கீழ் புத்தர்
ஆழமரத்தின் கீழ் பிள்ளையார்