.
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் விசாரணை

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்திய பாதாள உலகக் குழுவான தாவூத் இப்ராகிமின் குழு உறுப்பினரிடம் மும்பாய் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு மே 8 ம் திகதி தாவூத் இப்ராகிம், குழு உறுப்பினர் மிர்சா முகைதீன்பெய்க் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.புலிகள் இயக்கத்துடன் ஆயுத விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இவர் இந்திய நீதித்துறையினரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இவரிடம் மும்பாய் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இவர் தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், மும்பாய்த் தாக்குதலுடன் தொடர்புடைய லக்ஷ்கர் ஈ தொய்பா இயக்கத்துடன் இவர் தொடர்பு கொண்டிருப்பதாகவும் மும்பாய் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: