நல்லூர் பதியில் நடனமாட ஆசை

.

சர்வதேசப் புகழ்பெற்ற நடனக்கலைஞர், நடனநெறியாள்கையாளர் ரவிபந்து வித்யாபதியின் ஆசைகள், அனுபவங்கள், கற்றவைகள் ஆகியவற்றை கலைக்கேசரி உடன் பகிர்ந்து கொள்கிறார்.நாட்டியம் மனிதனின் உணர்வுகளை, அல்லது கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஊடகமாகப் பயன்படுகின்றது. கிறிஸ்துவிற்கு முன்பு இந்தியாவில் தோற்றம் பெற்ற நாட்டியக்கலைகள் அழகியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறன. நாட்டியக் கலையில் ராகம், பாவம், தாளம் என்ற மூன்று அம்சங்களை அவதானிக்கலாம்.

இதில் ராகமானது எம் செவிக்கும் மனதிற்கும் விருந்தாவது மட்டுமல்ல அந்த நடனத்துடன் எம்மை ஒன்றிப்போகவும் வைக்கின்றது. நடனமாடுபவர் தனது உள்ளத்தில் ஏற்படும் பல்வேறு கருத்துகளை தன்னுடைய கண், முகம் என்பவற்றின் பாவனைகள் மூலம் வெளிப்படுத்தலே பாவம் ஆகும். ராகம், பாவம் என்பவற்றிற்கு மெருகு ஊட்டுவதுபோல அமைவது தாளமாகும். இந்த தாளமானது பார்ப்போருக்கு மட்டுமல்ல நடனம் ஆடுபவருக்கும் உற்சாகத்தையும் ரசனையையும் ஊட்டவல்லதாகும். இந்த மூன்று அம்சங்களையும் சரிவரப் பொருந்தி ஒருவர் நடனமாடுவாராகில் சிறியோர் முதல் பெரியோர்வரை மிக இலகுவாக நடனத்துடன் லயமாகிவிடுவர். எனவேதான் நாட்டியத்தைப் பார்த்து ரசிப்பதற்கு எந்தவொரு மொழியும் தேவையில்லை. இது ஒரு ஆன்ம மொழி என்றே கூறலாம்'' என்று நாட்டியம் குறித்து சிறு அறிமுகம் செய்துவைத்த ரவிபந்து, திராவிட நாட்டிய கலைகள் குறித்து பின்வருமாறு விளக்கினார்.

இந்திய இலங்கை நடனபாரம்பரியத்தின் ஆணி வேர் வெவ்வேறானவையல்ல. கேரள மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கதகளி, தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பரதநாட்டியம், சிங்களவர்களது கலாசாரத்தை பறைசாற்றும் கண்டிய நடனம் போன்ற நடன வகைகளை அவதானித்தால் பல ஒற்றுமைகள் புலனாகும். கதகளி நடனம், கண்டிய நடனம், பரதநாட்டியம் ஆகிய மூன்றும் சமய கலாசார நிகழ்வுகளில் அதிகம் ஆடப்படுகின்றன. சிங்கள கண்டிய நடனம், தென்இந்திய பழந்தமிழர் மற்றும் இலங்கை இரண்டுக்குமான தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. திராவிட கலாசார நடனங்களில் ஒன்றான கதக்களி நடனத்தில் இருந்து தோன்றியதே இந்த சிங்கள கலாசார நடனக்கலை.

கண்டிய நடனத்துக்கும் கதகளி நடனத்துக்கும் தாளலயம் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகின்றது. அதேபோல் கண்டிய நடனத்தில் கலச என்பது கதகளியில் கலசம் எனவும் கண்டிய நடனத்தில் ஹஸ்தகட என்பது கதகளியில் கஸ்தகடன் எனவும் அழைக்கப்படுகின்றது. பரதநாட்டியத்துக்கும் கண்டிய நடனத்துக்கும் இதே போன்று ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவை பெயர்களில் மட்டுமல்ல அவற்றின் பொருளிலும் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. உதாரணமாக பரதநாட்டியத்தில் அடைவு கண்டிய நடனத்திலும் அடைவு என்றே குறிப்பிடப்படுகிறது. இதேபோல் மண்டி என்பது மண்டிய எனவும் வர்ணம் என்பது வண்ணம் எனப் பலசொற்கள் பொருளிலும் கருத்திலும் ஒன்றித்துக் காணப்படுகின்றன.

இசைக்கருவிகளிலும் ஒத்த தன்மை காணப்படுகின்றது. கதகளியில் சுத்தமத்தளம் மற்றும் செண்ட ஆகிய மேளங்களும் கண்டிய நடனத்தில் கட்டபெரவும் பயன்படுத்தப் படுகின்றது. இவற்றின் சத்தம் வித்தியாசமாக இருந்தாலும் வடிவம் ஒன்றாகவே காணப்படுகின்றது. சிலசமயங்களில் ஒரே தாள வகைகள் கதகளியிலும் கண்டிய நடனத்திலும் வேறுவேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறன.

கண்டிய நடனம்


சிங்கள சமூகத்தில் மூன்று விதமான நடன வகைகள் காணப்படுகின்றன. ஒன்று கண்டிய நடனம்; இரண்டு தென்பகுதி நடனம் (முகமூடி அணிந்த நடனம்); மூன்று சப்ரகமுவ பகுதி நடனம் ஆகியனவாகும். பயன்படுத்தப்படும் மேள வகைகள், கை அசைவுகள், ஆடை அலங்கார வேறுபாடுகள், ஒரே தாளத்திற்கு வித்தியாசமான அசைவுகள், வித்தியாசமான பாட்டு முறைகளினால் ஒவ்வொரு நடன முறைகளும் வேறுபடுகின்றன.

இரண்டாம் நூற்றாண்டில் ஹட்டஹத்மங்கல்ய கதையுடன் ஆரம்பித்த கண்டிய நடனத்தின் வரலாறு கோம்ப தெய்யோ எனப்படும் முக்கிய கடவுளை அடியொற்றி கோம்பஹங்காரிய என்ற கதையை அடிப்படையாக வைத்து வளர்ச்சிகண்டது. 16 ஆம் நூற்றாண்டில் கண்டி பெரகராவில் கண்டிய நடனம் இடம்பிடித்துக் கொண்டது. 1940 இல் மேடை நாட்டியமாக மெருகுபெற்றது. 16 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இந்நடனத்தில் இந்து புராண கதை, புராண நாயகர்கள், மிருகங்களின் நடத்தைகள் ஆடப்படுகின்றன. கண்டியில் இந்த நடனம் உருப்பெற்றாலும் நாட்டின் பிற பாகங்களிலும் பிரசித்தித்தமானது. நடனக்காரர்களின் ஆடை அலங்காரங்களும், ஆபரணங்களும் பார்ப்போரை ஈர்க்கும் தன்மை வாய்ந்தன. கண்டிய நடனத்தின் பாரம்பரிய ஆடைகள் வெள்ளை சில்வர் மற்றும் சிவப்பு நிறங்களில் அமையும். தலையில் குஞ்சத்துடன் கூடிய முடியுடன், உடலெங்கும் பலவிதமான நகைகளை அணிந்திருப்பர்.

கண்டிய நடனத்தின் அடிப்படையாக அமைவது அந்த நடனத்தின் ஆட்ட நிலைகளாகும். வெவ்வேறு நடன நிலைகளுக்கு இடையிலான ஒரு அசைவியக்கமாக நடனக்கோவை வளர்ந்து செல்கிறது. கண்டிய நடனக்காரரின் ஆட்டத்தை வழிநடத்தும் பிரதான சாதனம் மத்தளமாகும். வாத்தியம் இசைப்பவரும் நடனக்காரருடன் இணைந்து ஆடல் கோலங்களை வழங்குவது கண்டிய நடனத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். ஆதிகாலத்தில் இலங்கையில் ஒரு மன்னனுக்கு அச்சம் காரணமாக மர்ம நோய் ஏற்பட்டதாகவும், அதனையடுத்து அந்ந அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய ஆவிஉலகத்துடன் தொடர்புகொள்பவர்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்ததாகவும், இந்த மர்ம நோயை விரட்டியடிப்பதற்கு பேயோட்டும் சடங்கினை நடத்தி மன்னனின் நோயினை அவர்கள் போக்கியதாகவும் கூறப்படுகிறது.

கதகளி நடனம்

கதகளி நடனத்தின் கருப்பொருளாக இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் அமைகின்றன. இது பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களில் இருந்தும் தோன்றியது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாக அக்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன. ஒப்பனையும், உடையலங்காரமும் கதகளியை தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன. கதகளி நடிகர்கள் பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப்படுகின்றனர்.

தேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்களுக்கு, அரிசி மாவையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் "சுட்டி' அமைப்பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும்பை பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும்படி ஒப்பனை செய்வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச்சாயம் தீட்டப்படும். இதழில் சிவப்பும், புருவத்தில் மைக்கறுப்பும் நெற்றியில் நாமம் முதலியன இடம்பெறும்.

மூக்கின் கீழிருந்து கண்வரை கத்தரிபோல, வெள்ளை பூசி, அதில் ரத்தச் சிவப்புப் பூசினால் மேலே குறித்த பச்சை வேஷத்தில் மாறுதல் ஏற்பட்டு கத்தி வேஷம் ஆகிறது. நெற்றியிலே புருவங்களுக்கிடையிலும், மூக்கு நுனியிலும் வெள்ளை உருண்டைகள் ஒட்டப் பெற்று, முகத்தின் தோற்றமே மாறுபாடடைந்து இராவணன், ஹம்சன், சிசுபாலன் முதலிய அசுரர்களைக் குறிக்கின்றது.

சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத் தாடிகளைத் தாங்கியிருப்பதனால் இந்த வகைக்குத் தாடி வேஷம் என்று பெயர். சிவப்புத் தாடி துச்சாதனனைப் போன்ற கொடியவர்களையும், வெள்ளைத்தாடி அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களையும் குறிக்கிறது. கறுப்பு சாயத்திலும், கறுப்பு உடையிலும் தோன்றும் சூர்ப்பனகை போன்ற பாத்திரங்களுக்கு கரி வேஷம் என்று பெயர். உடம்பில் அழகிய நிறமாக இலேசாக வர்ணம் பூசி, மைக்கா தூளை தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர்கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக்கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல்களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடையிலும் அணிகலங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும்பாலானோர் கீரீடம் அணிந்திருப்பர்.

1630 இல் மானதேவன் என்ற ஸாமூதிரி அரசன் கிருஷ்ணனைப் பற்றிய கதைகளை நாடகமாக்கி, கிருஷ்ணாட்டம் என்ற பெயருடன் எட்டு நாடகங்களை நடத்தினான். இந்த சாமூத்திரி தனது நடிகர்கள் கொட்டாரக்கரை அரசனுடைய சபையில் நடிக்க மறுத்ததினால், கொட்டாரக்கரை அரசன் வருந்தி இராமனுடைய கதைகளை நாடகமாக்கி கேரள நாடகமேடைச் சம்பிரதாயங்களைக் கையாண்டு இராமனாட்டத்தை ஏற்பாடு செய்தானென்று வரலாறு கூறுகின்றது. கிருஷ்ணாட்டத்தில் முகமூடி பாவிப்பார்கள். இராமனாட்டத்தில் முகமூடிக்கு பதிலாக முகத்திற்கு வர்ணம் பூசுவார்கள்.

கதகளிக்கு முன்வடிவங்களாக மூன்று மரபுக்கலைகள் உள்ளன. ஒன்று தெய்யமாட்டம். வேலன் என்று சொல்லப்படும் பெருவண்ணார்சாதியினரின் தெய்யம் வழிபாடே கலையாக ஆடப்படுகின்றது. ஆபிரிக்கப் பழங்குடிகளிடம் உள்ள சடங்குகளைப் பலவகையிலும் நினைவூட்டுவது தெய்யம். மோகினி ஆட்டம் பெண்கள் மட்டும் பங்கேற்கும் தனிநபர் நடனமாகும். கதகளி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் குழுநடனம் ஆகும்.

கை மற்றும் முக அசைவிற்கு கதகளியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நடனத்தில் கண்களின் அசைவும் தசைகளின் ஓர் அசைவும், கைவிரல்களின் கற்பனைத் திறன் ஆகிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் கூறுவதாக அமையும். அனைத்து அசைவுகளும் தாளக்கோப்புடன் காணப்படும். கதகளி குருகுல முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்கலையைப் 10 அல்லது 12 வயதில் கற்பிக்கத் தொடங்குவார்கள். பயிற்சி விடியற்காலையில் தொடங்கும். தினமும் உடலில் மருத்துவ எண்ணெய் தடவி உடற்பயிற்சி செய்வதால் உடல் எளிமையாக வளைந்து அழகாக அபிநயம் செய்ய முடிகிறது. புருவம், கண், கன்னம், உதடு, தலை, கழுத்து போன்றவற்றிற்கு தனித்தனியாகப் பயிற்சி அளிக்கப்படுகின்றது'' என்று திராவிடக் கலைகளின் ஒற்றுமை குறித்து ரவிபந்து கூறினார்.

சாதனைக் கலைஞர் ரவிபந்து

சர்வதேச ரீதியில் நடைபெறும் கலை நிகழ்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் கண்டிய, கதக்களி நாட்டியக் கலைஞர் ரவிபந்து, வோமாட் டான்ஸ் என்ற உலகில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி உட்பட கென்னடி சென்ரர் (அமெரிக்கா), சிற்றி ஒப்ரா ஹவுஸ், ஒபரா சிற்றி ஹோல் ( ரோக்கியோ), கௌமன் கொன்சற் ஹோல் (நியூயோர்க்)போன்ற முதன்மையான அரங்குகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சர்வதேச, தேசிய ரீதியில் பெரும் புகழ் பெற்றவர். கண்டிய நடனத்தில் பாரம்பரியமான, முக்கியமானவையாக 18 வர்ணங்கள் உண்டு. இவற்றில் சிங்க வர்ணம் இவரால் உருவாக்கப்பட்டதாகும். ""தந்தை, சித்திரசேனா வஜிர, பேராசிரியர் சரத் சந்திர ஆகியோர் எனது கலைத்துறை வாழ்க்கையின் குருக்களாகவும் வழிகாட்டியாளர்களாகவும் திகழ்ந்தார்கள்'' என்றும் நன்றியுடன் கூறினார்.

""நல்லூர் முருகன் ஆலயத்தில் நாதஸ்வரம் இசைக்க, நட்டுவமேளம் முழங்க நான் நடனமாட வேண்டும். இது எனது நெஞ்சில் பதிந்திருக்கும் இதுவரை தீராத ஆசை'' என்று கூறும் ரவிபந்து, நேசன் தியாகராஜாவுடன் 30 வருடங்களுக்கும் மேலாக கலாசார பாரம்பரியங்களைப் பேணி வடக்கு தெற்கு பாலமாக திகழ்ந்துள்ளார்கள். உலகெங்கும் பயணம் செய்து கலைகள், தனித்துவங்கள், கலைஞர்கள் குறித்த பரந்த அறிவைப் பெற்ற இவர் ""உலகில் எந்த டான்சாக இருந்தாலும் மண்டி, ரிதம் இரண்டும் பொதுவாக அமைந்துள்ளன'' என்று கூறிய ரவிபந்து ஒருவர் பிறருடைய கலைகலாசார பாரம்பரியங்களை மதிக்கவில்லையென்றால் தனது கலாசாரம் பண்பாடுகளை மதிக்கவில்லை என்று அர்த்தம் என்றும் மிக அழுத்தமாக கூறுகிறார்.

""எனது அப்பா ஒர் ஆசிரியர், ஸ்கொலர் ஆர்ட்டிஸ்ட். சோமபந்து வித்யாபதி; சண்முகநாதன் என்ற ஓவியரும் டாக்டர் கருணானந்தனும் (புல்லாங்குழல் வித்துவான்) இவருடைய வழிகாட்டிகள். அந்த நாட்களில் இலங்கை வானொலி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகும் கர்நாடக இசையை போட்டு, எங்களை கேட்கும்படி உற்சாகப்படுதுவார். கிளாசிக்கல் தமிழிசை, திராவிட பாரம்பரியங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பரராசசிங்கம், அருந்ததி, ரவிசங்கர், ஜம்புநாதன், ரட்ணம் ரட்ணதுரை போன்றவர்கள் எனது கலையுலக வாழ்க்கையில் மதிப்புக்குரியவர்கள்'' என்று நட்புணர்வுடன் கூறினார்.

கண்டிய நடனத்தைக் கற்று 1981இல் அரங்கேற்றம் செய்த பின், 1984 இல் கதகளி நடன அரங்கேற்றத்தையும் இந்தியாவில் நிகழ்த்தினார். கொச்சியிலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள கலைமண்டலம் என்ற கதகளி பயிற்சிப் பாடசாலையிலேயே இவர் கதகளி நடனத்தை மூன்று வருடங்கள் கற்றார். கண்டியன்ரம், ரம்கொம்பி, லோக்கன்றிரம், தபேலா, தவில், மிருதங்கம், கஞ்சிரா, நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், வடஇந்திய இசைக்கருவிகள், மேற்கத்திய இசைக்கருவிகள் ஆகியவற்றை இசைக்கும் திறமையுள்ள இவர், சார்க் விளையாட்டுப் போட்டியில் ஆரம்ப இறுதி வைபவங்களில் கலந்துகொண்ட எட்டுக் கலைஞர்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வருகை தரும் விரியுரையாளராகவும் கடமையாற்றுகின்றார்.


நேர்காணல் : அமலகுமார்
நன்றி கலைகேசரி

No comments: