எனது இலங்கைப் பயணம் .

.
                                                                                       செ.பாஸ்கரன்

இடத்தை விட்டு நகர்ந்து ஏ9 பாதையில் செல்லும்போது இன்னுமொரு குடிசையின் முன் நிறுத்துகின்றேன். இதுவும் இராணுவத்தின் அருகிலேயே இருக்கிறது. குடிசை என்ற பெயரில் மரநிழலிலே பல பொருட்களை கலந்து போடப்பட்டிருக்கும் ஒரு தடுப்புத்தான். கற்கால மனிதர்களின் வாழ்நிலை ஏனோ என் மனதில் தோன்றி மறைகிறது.







 அரசியல் வாதிகளின் பேச்சில் எப்போதும் வருகின்ற கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்ற சொற் தொடரும் வந்துசெல்கிறது. அந்தக் குடிமக்களின் வாழ்நிலை இப்படியா இருக்கிறது இதற்கு யார் காரணம்? விடை தெரியாத கேள்வியா விடை தெரிந்தும் சொல்லமுடியாத  சொல்லக் கூடாத மறுமொழியா என்று என்எண்ணக்கரு சொல்லிச் செல்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்யப்படாத அந்தப் பிரதேசத்தில் ஏ9 பாதை மிக அழகாக வெளிநாடுகளில் போடப்பட்டுள்ளது போல் போடப்பட்டிருக்கிறது.


 அது முக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது ஆனால் மனிதரின் அடிப்படைத் தேவையான உணவும் உறைவிடமும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு வெளிநாடுகள் உட்பட யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லையா?  அந்த விரைவு தெருவில் விரைந்து செல்லும் அரச சார்பற்ற நிறுவானங்களின் வாகனங்களும் அந்த வாகனத்தில் இருக்கும் வசதிகளும் இந்த மக்களின் பெயரால் வழக்கப்பட்டது தானே? அந்த குடிசையில் வாழும் சிறுவர்கள் கறுப்புக்கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அந்த வாகனங்கள் செல்லும் போது எந்த விகல்ப்பமும் இல்லாது வேடிக்கை பார்க்கின்றார்கள் பெரியவர்களோ அவர்கள் வந்து ஏதாவது செய்யமாட்டார்களா என்ற அங்கலாய்ப்போடு பார்க்கின்றார்கள்.


நான் முன்பு குறிப்பிடது போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் உறவுகளின் இழப்பும் உடல் உறுப்புக்களின் இழப்பும் பொருளாதார இழப்பை விட தாங்க முடியாதவையாக இருக்கிறது. எதிர்கால நம்பிக்கையை உடைத்தெறியும் சூத்திரமாக அது அமைகின்றது. மனைவி குடும்பத்தின் இளப்புக்களைப்பற்றி கூறி கண்ணீர் விடும்போது கணவன் கூறுகின்றார் இந்தப் பயித்திய காறி போனதுகள பற்றியே நினைச்சு கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறாள் இப்பிடியிருந்தா இருக்கிறதுகள ஆர் பாக்கிறது கோபத்தோடு வார்த்தைகள் வந்தாலும் அவரின் கண்களும் கலங்கி வழிகிறது. அங்குள்ளவர்களின் வாழ்க்கையில் வித்தியாசமான கதைகள் தனியாக கிடையாது என்றே படுகின்றது. ஒரு தனிக்குடும்பத்தின் கதை மாங்குளத்தில் உள்ள ஒரு சமூகத்தின் கதையாகவே படுகின்றது. புத்தர் மகனை இளந்த தாயிடம் இறப்பே இல்லாத வீட்டிலிருந்து கடுகு கொண்டுவந்தால் உனது மகனை எழுப்பித் தருகின்றேன் என்று கேட்ட கதை என் ஞாபகப் பொறியை தட்டிச் சென்றது.


அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்ற போது தெருவெங்கும் கட்டாக் காலி மாடுகளின் ஊர்வலம் நடக்கின்றது. அவைகளின்முகங்களிலும் எசமானர்களை இளந்த கவலை தெரிகின்றதுபோல் இருக்கறது. ஒரு துடிப்பில்லாமல் மிக ஆறுதலாக எதிலும் பற்றற்றவைகள் போல் ஆடி அசைந்து செல்கின்றன.
தெரு வெங்கும் மூன்று மொழிகளிலும் இடங்களை அடையாளம் காட்டும் போட்டுக்களும் மொபைல் போண் விளம்பர தாரர்களின் கண்ணைக்கவரும் விளம்பரங்களும் அலங்கரிக்கின்றது. அதற்கு கைமேல் பலனும் கிடைத்திருக்கிறது போலவே தெரிகிறது. யார்கையில் பார்த்தாலும் மொபைல் போண் காணப்படுகிறது.








இந்த வாழ் நிலையிலும் வெள்ளை உடையுடன் பள்ளி செல்லும் மாணவிகளைப் பார்த்த போது மனம் ப+ரிப்படைந்தது. என் சின்னவயது ஞாபகங்கள் என்னைக் கவர்ந்த அந்த வெள்ளையுடை சில நிமிட நேரம் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்க வைத்தது. கனகராயன் குளம் மாவித்தியாலயம் இது எங்கள் பாடசாலை என்ற வாசகத்தோடு புதிய கட்டிடத்தில் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. எதிர்கால கனவுகளோடு அந்தப்பாடசாலையை நோக்கிச் செல்லும் அந்தப்பிள்ளைகளின் படிப்பிற்கு அரசியல் வாதிகளின் சுயநலத்தால் எந்தத் தீங்கும் வந்துவிடக்கூடாது சூழலை எதிர்த்துப் போராடும் அந்த மாணவ பிள்ளைகளின் கனவு நிறைவேற வேண்டும் என்று மனம் பிராத்திக்கின்றது.



இப்போது தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு தலமான முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தை அடைகின்றோம். நம்பிக்கை உண்டோ இல்லையோ இந்துவோ முஸ்லிமோ பௌத்தர்களோ சாரதிகள் இந்த இடத்தில் ஒரு கணமேனும் தரித்து செல்வது வழமைதானே. நாமும் தரிக்கின்றோம் கணபதியை தரிசிக்கின்றோம். போரால் கஸ்டப்பட்ட அடையாளம் எதுவும் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்கின்றார். வர்ணங்கள் பூசப்பட்ட கோயில் புதுப் பொலிபோலிவோடு தெரிகிறது.


மலசலகூடம் செல்கின்றேன் இரண்டு ருபாய்கள் எடுத்துவிட்டு அனுமதிக்கப்படுகிறது. உள்ளே செல்ல முடியாத துர்நாற்றம் தண்ணீர் பாச்சுவதற்கு குளாய்கள் ஏதாவது இருக்கறதா என்று பார்க்கிறேன் அப்படி எதுவுமே தென்படவில்லை போகவேண்டிய தேவையிருந்ததனால் மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்துவிட்டு வரும்போது பணம் பெறுபவரிடம் கேட்கிறேன் ஏன்தம்பி காசு வாங்குகின்றீர்கள் தானே கொஞ்சம் தண்ணி ஊhத்தலாம்தானே ஊத்தக்கூட வேண்டாம் ஒரு குளாயை பொருத்திவிடலாம்தானே என்று கேட்கிறேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு என்னய்யா ரெண்டு ருபாயில என்னத்த செய்யிறது என்கிறார். ஏத்தனை ரெண்டு ருபாய்கள் எண்டு கேட்கவேண்டும் போலிருந்தாலும் ஒரு வரட்டுச் சிரிப்போடு கேட்காமலே நகர்கின்றேன். சற்றுத்தள்ளி உதவி அரசாங்க அதிகாரி என்ற அறிவித்தலோடு ஒரு ஜீப் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனருகே நான்கைந்து பேர் ஈரக்கைகளை கைக் குட்டையால் துடைத்தவண்ணம் வாய்விட்டு பெரிதாக சிரித்துக்கொண்டு நிற்கிறார்கள் நிட்சயமாக ஒரு உதவி அரசாங்க அதிபர் அதில் இருப்பார் என்று மனம் எடைபோடுகின்றது. அவரே அதே மலசல கூடத்தை பாவித்துவிட்டு எந்தவிதமான அருவருப்போ அதை நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ இல்லாது சந்தோசமாக இருக்கின்றார் உனக்கேன் கோபம் வருகின்றது என்று என் உள்மனம் இடித்துகூறுகின்றது. மக்களின் பரிதாப நிலையை நொந்து கொண்டு நகர்கின்றேன். கோவிலின் முன்பக்கமாக கடலைக்கடைகள் நிரையாக இருக்கின்றது அதில் கடலைவாங்கிக் கொள்கின்றேன்.

மிகமகிழ்ச்சியாக பேச்சும் சிரிப்புமாக அவர்கள் உரையாடி வியாபாரம் செய்கின்றார்கள். நான் இரண்டு கச்சானை உடைத்து வாயில் போட்டபடி அந்த இளைஞனிடம் கேட்கிறேன் என்ன தம்பி இந்த ஊர் கச்சான் நல்ல பெரிய கச்சானாக இருக்கும் நீர் சரியான சின்னக் கச்சான் வைச்சிருக்கிறீர்? உடனே பதில் வருகிறது என்னய்யா நாடே அழிஞ்சுபோய்கிடக்கு கச்சான் இந்த ஊரில எங்க வருகுது எல்லாம் கொழும்பில இருந்துதான் வருகுது. நாட்டு நிலை புரியாது கேட்ட கேள்விக்காக நாக்கைக் கடித்துக்கொள்கிறேன். கோவிலின் தெற்குப்பக்கமாக நகர்கின்றேன் ஒரு பெரிய நவீனமாக கட்டப்பட்ட சாப்பாட்டுக் கடை தெரிகிறது. ஊள்ளே போகின்றேன் பளிங்கு தரையாக உள்ளது ரொயிலட்ட பாவிக்கலாமா என்று கேட்கிறேன் சிங்களம் கலந்த தமிழில் பாவிக்கலாம் என்கிறார் பாவித்தால் இங்கு சாப்பிட வேண்டுமா என்று கேட்கிறேன் இல்லையாரும் பாவிக்கலாம் என்கின்றார்.


 உள்ளே நுளைகின்றேன் இந்த நாட்டில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள் நறுமணப் புட்டிகள் வைக்கப்பட்டு நறு மணம் வீசுகின்றது. கோவிலின் இரண்டு பக்கங்களிலும் உள்ள கழிவறைகளிலே எவ்வளவு வித்தியாசம் ஏன் எம்மவர்கள் இப்படி சுத்தமாக வைத்திருக்க மறுக்கிறார்கள் சிந்தித்தபடியே தேனீரும் பணிசும் சாப்பிடுகின்றேன். எங்கோ சொல்லக் கேட்ட ஞாபகம் வருகிறது முறிகண்டியில் மகிந்த கோட்டல் கட்டியிருக்கிறார் என்பது.  மனேஜர் என்ற ஜசி யோடு நின்ற இளைஞரிடம் கேட்கிறேன் இதின்ர முதலாளி முதலாளி யாரு? ஆவர் கூறுகிறார் கொழும்பில உள்ள பத்திரண கொம்பனி முதலாளி என்று தொடர்து நான் கேட்டேன் மகிந்த ராஜபக்சவின்ர எண்டு சொல்லினமே என்கிறேன். அவர் கூறுகின்றார் தனக்குஅப்;பிடித் தெரியாது. நான் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கும்போது அவர் கூறுகின்றார் தங்குவதற்கு அறை இருக்கிறது 3500 ருபாய்கள் மாத்தயா என்று. தேவைப்பட்டால் வருகிறேன் என்று கூறி விடைபெறுகின்றேன்.
கிளிநொச்சியை அடைகின்றோம் கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் அனாதை இல்லம் போன்றவற்றை பார்ப்பதற்கும் விவசாய திணைக்களம் இரணைமடு பகுதி போன்றவற்றிற்கு செல்வதற்குமான சில ஆயத்தங்களை அங்குள்ள ஒரு நண்பருடன் (அவரை அவரின் பாதுகாப்பு கருதி அடையாளப் படுத்தவில்லை) இரண்டொரு நாளில் வருவதாக ஒழுங்கு படுத்திவிட்டு யாழ் நோக்கி விரைகின்றோம் பொழுது படு;கின்ற நேரமாக இருக்கின்றது. பரந்தன் இரசானத் தொழிற்சாலை ஆனைஇறவு உப்பளம் என்பவற்றை கண்கள் தேடுகின்றது
எதுவுமே அற்ற வெளியாக இருக்கிறது.



இராணுவ வீரர்கள் இலங்கையை தூக்கிப் பிடித்தவண்ணம் ஆனையிறவு வரவேற்கிறது.
( கிளிநொச்சி முல்லைத்தீவு அவல நிலைகள் நான் பிரயாணித்த ஒழுங்கில் தொடர்ந்து வரும் வாசகர்களே)

3 comments:

Rajeswary said...

Nalla oru pathivu thodarunkal

kirrukan said...

முருகண்டி பிள்ளையாருக்கு துணையாக புத்தர் வந்திருக்கிறார் என்று சிட்னியில் கதை அடிபடுது உண்மையோ?

[quote]ஒரு உதவி அரசாங்க அதிபர் அதில் இருப்பார் என்று மனம் எடைபோடுகின்றது. அவரே அதே மலசல கூடத்தை பாவித்துவிட்டு எந்தவிதமான அருவருப்போ அதை நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ இல்லாது சந்தோசமாக இருக்கின்றார் உனக்கேன் கோபம் வருகின்றது என்று என் உள்மனம் இடித்துகூறுகின்றது[/quote]
அதிகாரம் இருந்தால் சரிதானே .....அருவருப்பாவது மண்ணாவது

Ramesh said...

அதிகாரம் மற்றவர்களை நடப்பிப்பதற்கே தவிர மக்களுக்கு உதவுறதுக்கெண்டு யார் சொன்னது மிஸ்டர் கிறுக்கன் டமில்சின்ர பொலிசியவே மாத்தப்போறீங்கள் போல. உலகத்தில உள்ள எல்லாம் மாறும் டமில்சின்ர பொலிசிய தவிர

ரமேஸ்