கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, "இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்தபோது, முகாம்களில் இன்னமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செய்தி வேதனை அளிக்கிறது.

முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிப்பது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும், இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் சொந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், மறுவாழ்வுப் பணிகள், மீள் குடியமர்வுப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிகிறேன்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்கு ஆளாகி சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழர்களின் துயர் களைவதற்கு, இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் கட்டப்பட்டு வரும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வும், அதிகாரப் பகிர்வும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. எனவே, இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வும் காணப்பட வேண்டும்" என முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.


நன்றி தேனீ

1 comment:

kalai said...

கருணாநிதி எழுதும் 10000வது கடிதம். 10000000வது கடிதம் எழுத வாழ்த்துகிறேன்.