உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?

.
venugopal thayanithi


உயிரோடு உட்கார்ந்து இந்தக்கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நானும் உயிரோடு இருப்பதால்தான் காப்பியைக் குடித்து விட்டு கண்விழித்து இதை எழுத முடிந்தது.

மீன், தவளை, பல்லி, காகம், நாய், மற்றும் பூச்சிகள், தாவரங்கள் எல்லாம் நம்மைப் போலவே உணவை எடுத்துக்கொண்டு கழிவை வெளிவிடுகின்றன; மூச்சு விடுகின்றன; வளர்கின்றன. இவற்றுக்கும் உயிர் இருக்கிறது.

ஆனால், மீன் மாதிரி தண்ணீருக்குள் சுவாசித்து நம்மால் வாழ முடியாது. குதிரை மாதிரி ஓடவோ, புறா போல பறக்கவோ முடியாது. பாக்டீரியா போல பல மாதங்கள் உணவு இல்லாமல் இருக்கவோ தென்னை மரம் மாதிரி வெயிலில் நின்று ஒளிச்சேர்க்கையால் உணவைத் தயாரித்துக் கொள்ளவோ முடியாது.பொங்கல் வடை பூரி சாப்பிட்டு சிங்கம் சவுகர்யமாய் இருக்காது. துருவப் பிரதேசத்தில் இருக்கும் பனிக்கரடி நம்மூர் மண்டை வறட்டும் வெயிலில் சந்தோஷமாய் இருக்காது. ஏ.ஸி, ஹீட்டர், தகுந்த துணிகள் இல்லை என்றால் ஒட்டகம் போல வெப்பத்திலோ, பனிக்கரடி போல குளிரிலோ வாழ நம்மால் முடியாது.

உயிரிகள் உருவம், அமைப்பு, செயல், பரிணாமம் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. ஒவ்வொரு உயிரிக்கும் அது உயிர் வாழ என்று ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்குள் தான் உயிரோடு இருக்க முடிகிறது.

’உயிர்’ என்ற சொல் பழமையானது. ’அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை’ என்ற குறள் அன்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. ராமனும் சீதையும் கண்டவுடன் காதல் கொள்வதை ’ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்‘ என்கிறார் கம்பர். ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ ‘மண் உயிர் ஓம்பும் பாத்திரம்’ என்று உணவையும் அமுதசுரபியையும் குறிப்பிடுகிறார் இளங்கோ அடிகள்.

தலைவியின் பெருங் காதலை ‘உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே’ என்கிறார் கபிலர். ’ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்’ ’ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி’ ’ஊனவ ஊயிரினோடு மூலகங்களுள் ஊழியாகி’ -என்று இறைவனை வருணிப்பவர் மாணிக்க வாசகர்.

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

-தத்துவத் தேடலை முகத்தில் வீசுகிறார், சிவவாக்கியர்.

வரிகள் எளிதில் புரிந்தாலும் பதில் நம் எவரிடமும் இல்லை.

மனம் என்றால் என்ன, என்ற கேள்வியைப் போன்றதே உயிர் என்றால் என்ன என்ற கேள்வியும். அறிவியல் தத்துவம் இரண்டிலும் ஆழ்ந்து சென்று அடைய வேண்டியவை. அல்லாமல் அனைவருக்குமான பொது வெளியில் சிறு விவாதத்தின் வழி கிடைக்கும் இக்கட்டுரை ஒரு எளிய சித்திரம் மட்டுமே என்பதை கவனமாக நினைவில் கொள்வோம்.

ஒரு எளிய தத்துவப் பயிற்சியாக ஜாலியாக மூளையைக் கசக்காமல் யோசித்துப் பார்க்கலாம். உயிர் என்றால் என்ன?

நாய் நடக்கிறது; ஓடுகிறது. அதற்கு உயிர் இருக்கிறது. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் கணினி, உட்கார்ந்திருக்கும் நாற்காலி, இவற்றை நீங்கள் நகர்த்தினால் தான் உண்டு. தானாக அசையா. காரணம் இவற்றிற்கு உயிர் இல்லை.

உயிரோடு இருக்கையில் வாலைக் குழைத்து வரும் நாய் செத்துப் போனால் அசையாமல் ஆகி விடுகிறது. பறந்து வந்து உட்கார்ந்து கையில் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த கொசு நசுங்கி இறந்ததும் இயங்காமல் ஆகி விடுகிறது.

அசைவு, இயக்கம், இடப்பெயர்ச்சி உயிரின் அடையாளம் என்றால்,

காற்றில் ஜன்னல் திரையும்தான் அசைகிறது. கைத்திருகலில் பைக் உறுமி இயங்கி ஓடுகிறது. சோடியம் உலோகத்தை சிறிது உடைத்து தண்ணீரில் போட்டால் ஓடி நகர்ந்து கரைகிறது.

காற்றில், ஆற்றில், இலைகளும் சருகுகளும் சுழிப்பின் போக்கில் சுழன்று மிதந்து திரிகின்றன. மரம் கிளைகளை மட்டும் அசைத்து விட்டு இடம் பெயராமல் இருக்கிறது.

குழந்தை வளர்கிறது; செடி வளர்கிறது. இரண்டும் உருவில் பெரிதாகின்றன, இவற்றிற்கு உயிர் இருக்கிறது. உருவில் எற்படும் பெருக்கம் உயிரின் அடையாளமா?

ஊதினால் பலூன் உப்பிப் பெருக்கிறது. ஒரு குவளைத் தண்ணீரில் ஸ்பூன் உப்பை சேர்த்துக் கலக்குங்கள், கரைந்து விடும். இன்னும் ஏழெட்டு ஸ்பூன் போட்டால் கரைய முடியாமல் உப்பு மீந்து, படிய ஆரம்பிக்கும். இதை அப்படியே வைத்திருந்தால் சில நாட்களில் சிறு உப்புப் படிகங்கள் தோன்றுவதையும் இன்னும் சில நாட்களில் அவை வளர்ந்து பெரிதாவதையும் காணலாம்.

முட்டை/ குட்டி போட்டு விலங்குகள் தன்னைப் போல பிரதிகளை உண்டாக்குகின்றன. விதை, கிழங்கு, தண்டு மூலம் தாவரங்கள் தன்னைப் போன்ற புதிய தாவரங்களை உண்டாக்குகின்றன. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளும் தன்னைப் போன்ற பிரதிகளை உண்டாக்கிப் பெருகி நமக்கு சளி, இருமல், தேமல் உண்டாக்குகின்றன. இவ்வாறு தன்னைப் போன்ற பிரதிகளை உருவாக்கும் முறையை ’இனப்பெருக்கம்’ (Reproduction) என அறிகிறோம்.

இவ்வாறு இனப்பெருக்கம் மூலம் பெருகும் ஒரே மாதிரி தோற்றம், அமைப்பு, செயல் கொண்ட உயிரிகளை ஒரு ’இனம்’ (Species) என அறிகிறோம். இனப்பெருக்கம் செய்யும் பொருள்கள் மட்டுமே பெருகி, தொடர்ந்து ஒரு இனமாக ”உயிரோடு” இருக்க முடிகிறது. ஆகவே, இனப்பெருக்கம் செய்யும் திறனுள்ள பொருள்களை ‘உயிருள்ளவை’ என வகைப்படுத்தலாம்.

”அதாவது முட்டையிலிருந்து வருவதால் அதைக் கோழி என்றும் கோழியே இடுவதால் அதை முட்டை என்றும் சொல்கிறீர், போகட்டும்! பிரதி உண்டாக்க வல்ல எல்லாம் உயிருள்ளவை என்றால், ஜெராக்ஸ் மெஷினுக்கு உயிர் உண்டா? குழந்தை இல்லாமல் கருத்தரிக்கும் பொருட்டு விசேஷ சிகிச்சை எடுத்து வருகிறாள் என் உறவுக்காரப் பெண். உம்முடைய இந்த வரையறையினால் அவள் உயிரில்லாத ஒரு பொருளாகி விடுவாளா?”

-என்பது என் நண்பரின் எக்ஸின் கேள்வி. இக்கேள்வியில் உள்ள குறைகள் என்ன, என்பதை யோசித்துப் பார்க்கவும்.

சிக்கலான பிரபஞ்ச அடிப்படைகளின் நுட்பத்தை முழுமையாகக் கற்பது விரிவான, ஆழமான வாசிப்பு/ விவாதத்தின் வழி மட்டுமே சாத்தியம். அவற்றின் மீதான பொதுவெளி விவாதங்கள் எளிய உவமைகளாகச் சுருக்கப் படுவதால் முழுமையற்றவை.

நாற்காலியையும் நாய்க்குட்டியையும் எளிதில் நம்மால் வேறுபடுத்தி உணர முடியும். ஒரு உயிரியை உயிரற்ற இன்னொன்றிலிருந்து எந்த சிரமமும் இல்லாமல் உடனடியாகப் பிரித்தறிய, நம்மால் முடியும்.

ஆனால் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கோட்பாட்டு ரீதியாக வறையறுக்க, கேள்விகளை நீட்டிக் கொண்டே ரொம்ப தூரம் போக வேண்டும். அல்லால் முரட்டு வாதங்களால் சல்லிக் கேள்விகள் பதிலின்றி நிற்கும்.

இதையெல்லாம் ரொம்ப யோசித்துத்தான் நான் எழுதினேன். இதோ, இதைப் படித்து விட்டு நீங்களும் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

ஆனால் நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி உங்களைப் போல யோசிக்க வாய்ப்பு இல்லை. எனென்றால் அதற்கு உயிர் இல்லை.

”உயிரிகள் சிந்திக்கும் திறன் கொண்டவை. என்றால், தயிர்ப் பானையில் உள்ள பாக்டீரியா சிந்திக்கிறதா? பூச்செடி, வாழைமரம், மண்புழு இவையெல்லாம் என்ன யோசிக்கின்றன? பிறந்த குழந்தை பால் குடித்துவிட்டு சும்மா தூங்கிக் கொண்டே இருக்கிறதே, அது சிந்திக்கிறதா? இவற்றுக் கெல்லாம் உயிர் இருக்கிறது தானே?” –நண்பர் எக்ஸின் கேள்வி.

உயிரற்றவை சிந்திக்க முடியாது. என்றால் கால்குலேட்டர் உங்கள் கணக்கின் பதிலை உடனே தருகிறதே எப்படி? நீங்கள் கேட்கும் பணத்தை ஏ.டி.ம் மெஷின் எப்படிப் புரிந்து கொள்கிறது? கூப்பிட்டவுடன் கேள்விக்குப் பதில் சொல்லும், குடிக்க தண்ணீர் எடுத்து வரும் வேலைக்கார ரோபோவை உயிருள்ளது என்று சொல்லமுடியாதே ஏன்? இவை எல்லாம் சிந்திக்கின்றன என்று சொல்லலாமா? ’சிந்தனை’ என்பதை எப்படி வரையறை செய்வது? சிந்தியுங்கள்.

உயிரிகளுக்கு, பின்வரும் பண்புகள் (quality/ character) குணாதிசயங்கள் உண்டு. இவை அதிசயங்கள் தான்.

அ) தன்னைப் போன்ற பிரதிகளை உண்டாக்குதல். அதாவது இனப்பெருக்கம் செய்யும் திறன்.

ஜெராக்ஸ் மெஷினால் ஒரு பக்க செய்தியை இன்னொரு பிரதியாக மட்டுமே உண்டாக்க முடியும். இன்னொரு ஜெராக்ஸ் மெஷினை உண்டாக்க முடியாது.

தயிர்ப் பானையின் பாக்டீரியா, பூச்செடி, வாழைமரம், மண்புழு இவையெல்லாம் என்ன யோசிக்கின்றன என்பதை நண்பர் எக்ஸுக்குச் சொல்ல முடியா விட்டாலும், இவையெல்லாம் உயிருள்ளவை என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். இவையெல்லாம் இனப்பெருக்கம் செய்கின்றன என்பதால்.

ஆ) வளர்ச்சி, மற்றும் மாற்றம். ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த கமலா பேபி, ’கமலா பேப்’ ஆக மாறியது. பிறகு அவளே கமலா அம்மாவாகவும் கமலாப் பாட்டியாகவும் மாறுவது. இறுதியில் பதினைஞ்சு வாட்ஸ் பல்புக்குக் கீழே புன்னகைக்கும் புகைப் படமாக எஞ்சுவது. அதைக் காட்டி ”அப்புடியே பாட்டி மாதிரியே இருக்கே”. என்று கமலாப் பாட்டியின் மகள், தன் மகளைக் கொஞ்சும் காட்சியையும் கற்பனை செய்து கொள்ளவும்.

சின்ன வேப்பங் கொட்டை அஞ்சாறு வருசத்தில் பல டன் எடை மரமாக மாறுவது. புளிக்கும் மாவடு இனிக்கும் மாம்பழமாவது.

கடுகு போன்ற முட்டையிலிருந்து வந்து தேமே என்று இலையைத் தின்று கொண்டிருந்த கம்பளிப் பூச்சி இலைக்கடியில் கூட்டுப் புழுவாகத் தூங்கி, பிறிதொரு மாலை வெயிலில் வண்ணத்துப் பூச்சியாக மாறிப் பறப்பது -போன்ற அதிசயங்கள்.

உப்பில் தண்ணீர் சேர உப்புக் கரைசலாகிறது. உப்புக் கரைசலில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி விட்டால் அதில் இருக்கும் உப்பு கரையாமல் படிகமாக எஞ்சுகிறது அவ்வளவுதான். ஒரு பிடி உப்பை எவ்வளவு நாட்கள் வைத்திருந்தாலும் அது இரண்டு பிடி உப்பாகவோ உப்புமாவாகவோ ஆகாது. (இந்த மாதிரித் தத்துவங்களை டிவிட்டரில் தொடராக எழுதலாமே: சொல்வது நண்பர் எக்ஸ்).

இ) வளர்சிதை மாற்றம். சுற்றுப் புறத்திலிருந்து உணவை எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்தி இயங்கி தன்னைப் புதுப்பித்து, கழிவை வெளியேற்றி, வளர்வது.

இட்டிலி வடை சாப்பிட்டு நம்மால் பைக் ஓட்டவும் ஃபிலாசஃபி பேசவும் முடிவது. காப்பி மூச்சாவாகவும் இட்லி வடை நம்பர்டூ ஆகவும் மாறுவது.

நீங்கள் சாப்பிட்ட எக்ஸ்ட்ரா இட்லியும், கேசரியும் உடலில் சேகரமாகிறது. பட்டினி நேரத்தில் கரைந்து சக்தி தருகிறது. பெட்ரோலைக் கொழுப்பாக மாற்றி சேமிக்கும் திறன் காருக்குக் கிடையாது.

”நான் பாட்டுக்கு சொல்லிகிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு குத்துக் கல்லாட்டம் உக்காந்துட்டு இருக்கீங்களே” என்று உங்கள் மனைவி சொன்னாலும் பரவாயில்லை. முடி நகம் வளருவது, இதயம் துடிப்பது, ஸெல்கள் புதுப்பித்து வளர்ந்து மூடுவதால் விரலின் வெட்டுக்காயம் ஆறுவது -இவைகளை வைத்து உங்களுக்கு இன்னும் உயிர் இருக்கிறது என்று சொல்ல முடியும்.

உங்கள் காரின் பக்கவாட்டில் ஏற்பட்ட கீறல்களை நீங்கள் தான் புதுப்பிக்க வேண்டும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

ஈ) சுற்றுப் புறத்தின் தூண்டுதலுக்கு எதிர்வினை ஆற்றும் திறன். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது டார்ச் வெளிச்சம் பட்டு கண்ணைச் சுருக்குவது. டிக்கெட் பரிசோதகரை அடிக்க வேண்டும் என்று ஆத்திரம் வருவது. பிறகு கொசுக் கடி பட்டு அதை அடிப்பது. எதிர் சீட்டு நபரின் தலை மறைக்க சீட் மாறி உட்காருவது.

வீட்டுக்குள் வளரும் செடி வெளிச்சம் வரும் ஜன்னலை நோக்கி வளர்வதையும் தண்ணீர் இருக்கும் திசை நோக்கி வேர்கள் வளர்ந்து போவதையும் சொல்லலாம்.

வளர்ச்சி, இனப்பெருக்கம், வளர்சிதை மாற்றம் ஆகிய திறன் கொண்ட பொருள்கள் உயிருள்ளவை. வளராத, வளர்சிதை மாற்றம் செய்யாத, இனப்பெருக்கம் செய்யாத பொருள்கள் உயிரற்றவை என்று எளிதாக்கிச் சொல்லலாம்.

உயிர் என்பது பண்புப்பெயர். உயிரி காரணப் பெயர். உயிர் என்ற பண்பைக் கொண்டுள்ள ஒரு பொருள்.

சுடு நீர், புளி காய், பச்சை இலை போலவே உயிரோடு உள்ள நாய் என்பது. ஓடி நடந்து குரைத்து சாப்பிட்டு சுவாசித்து நட்புணர்வின் வாலாட்டலாக வெளிப்படும் பண்புகள். இவைகளை வைத்து ஒரு நாய் உயிரோடு இருப்பதை அறிகிறோம்.

நாய் உயிர் இழக்கவும் கூடும். சுடு நீர் ஆறியும், காய் புளிப்பை இழந்தும், இலை நிறம் இழந்தும் போவது போல.

உயிர் என்பது, உருண்டை வடிவில் பச்சை நிறத்தில் ஒரு கிலோ எடையில் உள்ள ஒரு பொருள் அல்ல. கால் பந்துக்குள் இருக்கும் காற்று போன்றதும் அல்ல. ’உயிர்’ என்று நாம் அறிவது உயிரியின் ஒரு தனித்த பண்பு அல்லது பண்புகளின் தொகுப்பையே.

அன்றி, சினிமாவில் வருவது போல நாயகி இறந்ததும் அவள் உடலில் இருந்து பிரிந்து வெளியேறி, வானத்தில் மிதந்து செல்லும் ஒளிச்சுடரும் அல்ல. கற்பகம் படத்தில் வருவது போல செத்துப்போன கே.ஆர். விஜயா மாமி திரும்ப வந்து ஜெமினி மாமாவைப் பார்த்து, ’மன்னவனே அழலாமா’ என்று சுசீலாவின் குரலில் பாடுவது அறிவியலின்படி சாத்தியமில்லை.

எளிமை கருதி தத்துவ/ ஆன்மீக விளக்கங்களை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆன்மீகம் தரும் அகவயமான விளக்கம் ’ஆத்மா’ (soul) என்பது. (மனம் என்பதைத் தவிர) உயிரியின் பண்புகளாக நாம் விவாதித்த எல்லா விஷயங்களையும் ஆன்மீகம் ’ஆத்மா’ என்ற ஒரே சொல்லில் அடக்கி விடுகிறது.

அறிவியலும் தத்துவமும் இணைந்தும் முரண்பட்டும் இயங்கி ஒன்றை ஒன்று முழுமை செய்யும் அறிதல் முறைகள். சொல்லப் போனால், ஆழ்ந்த சிந்தனை நோக்கில் இவை இரண்டும் ஒன்றே. ’ஆத்மா’ என்பது கருத்து ரீதியான ஒரு உருவகம் மட்டுமே என்று கொண்டு, அது அறிவியலுக்கு எதிரானது அல்ல, இணையானது என்றும் கருதலாம்.

எல்லை காண முடியாத இப்பிரபஞ்சத்தின் சிறு துளியே மனிதன். ஆகவே, இப்பிரபஞ்சத்தில் உள்ளதே மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்ற ஞானத்தின் வெளிப்பாடாக இதைப் புரிந்து கொள்ளவதே பொருத்தமாக இருக்கும். அத்வைதம் சொல்வதும் இதுவே என்று நான் சொன்னால் துவைதிகள், விஷிஷ்டாத்வைதிகள் மற்றும் பலரும் கோபித்துக் கொள்ளக் கூடும்.

இப்பிரபஞ்சத்தில் இருப்பது அணுக்களும் வெற்றிடமும் மட்டுமே; மீதி அனைத்தும் நம் கருத்துக்களே -என்ற டெமக்ரடீஸ் வரிகளின் உட்கிடக்கை இதுவே. இதையே, I, a universe of atoms, an atom in the universe -என்று ரிச்சர்ட் ஃபெய்ன்மன் (Richard Feynman) போல வியக்கலாம்.

”கால் பந்துக்குள் இருக்கும் காற்று போன்றது அல்ல உயிர் என்கிறீர். அப்படியானால் மனிதனின் உடலில் உயிர் எங்கே இருக்கிறது?” - நண்பர் எக்ஸின் கேள்வி.

பதில் கிடைக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.

நன்றி சொல்வனம்

No comments: