இலக்கியம் / படித்துசுவைத்தவை

.
கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை – பகிர்வு 9 : கவிதா(நோர்வே)

கனிமொழியின் கவிதைகளுக்கும் அவரின் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை.

பொருள் புதைந்து, பரந்து வரியும் கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை. எந்த ஒளிப்பும் மறைப்பும் இன்றி, நடைமுறையை இலகு மொழியில் எளிமையாக எடுத்துவரக்கூடியது புதுக்கவிதை.. தமிழ் பெண்களின் கவிதை வெளிப்பாடுகள் என்பது தமிழ் இலக்கிய பரப்பில் சமீப காலமாக நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று. சமூகத்தின் பிரச்சனைகளை ஏதோ ஒரு இடத்தில் தன்னுடையதாக கவிஞர் உணரும் போது படைப்பின் வீரியம் வலுப்பெறுகின்றது. இந்த உணர்வுகளை பெண்கள் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் தமது படைப்புகளில் கையாள்வதை காணக்கூடியதாகவே இருக்கிறது. பெண் கவிஞர்களது எழுச்சி என்பது இன்றைய தினங்களில் மகத்தான ஒரு விடயம்.

இத்தனை காலங்களும் கவிதை மரபுக்குள் சேர்க்கப்படாத பெண்சார்ந்த விடயங்கள், நிதர்சனங்கள், சாதாரண நடைமுறை வாழ்கையின் நிஜங்கள், ரணங்கள், காலகாலமாய் சேர்ந்து குவிந்த கோபங்கள் அனைத்தும் போர்வீரர்கள் போல எழுந்து வரும் காலத்தில் இன்று இருக்கின்றோம்.

பெண் எழுத்து என்றும் பெண்மொழி என்றும் பெண்களின் கவிதைகள் பற்றிய விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. பெண்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக மொழி என்ற விவாதமும் பெண்மொழி என்ற வார்த்தைப் பிரயோகமும் ஆண்களின் உருவாக்கமே என்ற எதிர்ப்புக் குரல்கள் பெண் கவிஞர்கள் மத்தியில் எழுந்து இவை பற்றிய விவாதங்களும் தொடர்கின்றன. சமீபத்தில் கவிஞர் கனிமொழியின் கவிதைத் தொகுதி அகத்திணை என் கைசேர்ந்தது. இத்தொகுதியில் என்னை கவர்ந்த சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஓவ்வொரு பெண் வாழ்விலும் நடக்கக்கூடிய சின்ன சின்ன விசயங்கள் என்று நாம் கடந்து செல்லக்கூடிய சம்பவங்கள் கூட எத்தனை ரணங்களை கொண்டது என்பதை காட்டும் ஒரு கவிதையோடு கனிமொழியின் கவிதைகளுக்குள் நுழைவோம்.

புருவம் செப்பனிடப்பட்டது
ஊடலின்
ஊபரி மயிர்
நீக்கப்பட்டது
முகம் பொலிவூட்டப்பட்டது
கைகளில் கோலம் போட்டார்கள்
குடியேறப் போகுமுன்
சீர் செய்யப்படும் வீடுபோல
வேலைகள்
நடந்து கொண்டிருந்தன

தம்மைப் பாதித்த விசயங்களையும் தான் சொல்ல நினைத்த விசயங்களையும் நேரடியாகவும் எளிமையாகவும் சொல்லிவிடுவதால்தான் கவிதைகள் வாசகர்களுக்கு நெருக்கமான கவிதைகளாகிப் போய்ச் சேரக்கூடியதான படைப்பாக வெளிவருகிறது. கனிமொழியின் கவிதைகளிலும் இப்படியான அலங்காரமறுத்து வரும் கவிதைநடையை நாம் காணக்கூடியதா இருக்கிறது.


அப்பா பற்றிய சில வரிகளில்…
சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த உன் நேசத்தை
ஏன் ஒளித்துவைத்திருந்தாய்

என்ற வரிகளிள் எம் சமூகத்தில் அப்பாக்காளுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் இடைவெளியையும் நேசத்தையும் மொழி நயத்துடன் சொல்லியிருக்கிறார் கவிஞர்.


பாவ விமோசனத்திற்கு
ராமனுக்காக காத்திருக்காதே…
அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்

இராவணன் கற்புக்கும்
இவளே பொறுப்பு

கற்பென்று வந்தாலே அது பெண் என்ற ஜீவனுக்குள் அடங்கிவிடுவதாகவும், பெண்ணக்கே உரிய ஒரு தமிழ் சொற்பதமாகவும் மாறிவிட்டிருக்கும் சமூகத்திற்கு வேறு எப்படி சொல்ல முடியும்.

சமூகத்தின் அவலங்களை தாண்டிச் செல்வது என்பது படைப்பாளிகளுக்கு இலகுவானதல்ல. அவஸ்த்தையின் குடைச்சலில் உருண்டு பிரண்டு வெடிக்கத்தயாரான நிலையில் கவிதைகள் வந்து விழுவதுண்டு. அதன் கனத்தை மேற் கண்ட கவிதையில் காணமுடிகிறது.

மரபுவழிப் பழக்கமாக பெண்கள் தெய்வமாகவோ அல்லது அரக்க குணமுள்ள பூதமாகவோ பார்க்கப்படும் காலத்தை நாம் இன்னும் கடக்கவில்லை. ஒரு பெண்ணுக்குரிய சாதாரண மனித இயல்புகள் என்பது மரபு வழிப் போர்வையிலிருந்து இன்னும் கலைக்கப்படாமலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த கவிதை வரிகளைப் படிக்கும் போது சிந்தையில், எமது இலக்கியங்களில் எதிலும் ஒரு பெண்ணால் ஒரு ஆண் பாவவிமோசனம் பெற்றதாக புகழ் பெற்ற கதைகளே இல்லையே என்ற கேள்விதான் எனக்குள் எழுகிறது.

இப்படியாக மரபுவழிப் போர்வைகளை விலக்கி எழுந்து வர முயற்சிபவர்கள்கூட பலர் தெய்வம் போன்ற தோன்றந்தரும் தன் பெண்தன்மைக்கு இழுக்கு வருவானேன் என்று பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மரபுவழிப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்வதை தொடர்ந்து வரும்

கவிஞரின் வரிகள் சித்தரிக்கின்றன.
புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கோடி பிடிப்போம்
கோஷம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு
கீழ்ப்படிவோம்

பெண்ணியச் சிந்தனைகளும், எழுத்துக்களும், கூச்சல்களும் கூர்மையான வீச்சுடன் வெளிவந்தாலும் அதன் செயல்பாடுகள் என்பது பல நேரங்களில் வெறும் சொல் வடிவிலும் கூச்சலிலும் காணமல் போய்விடுகின்றதே என்ற ஆதங்கம் பெண் மீதான குற்றச்சாட்டாய் கவிதையில் வெளிப்படுகிறது. பெண் தன்மையென்பது சிக்குண்ட சுயம் என்ற சமூகத்தில் அதன் நிஜத்தன்மையை வெளிப்படையாப் பேச தயங்கும் பெண் படைப்பாளிகளுக்கான கேலி நிறைந்த வரிகள் இவை.

தனது ஆற்றாமையை இப்படி கவிதை செய்கிறார்.

என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு

கருத்தரிப்பதற்காக உடல் உருவாக்கும் குருதி, பிறப்பு நிகழ்வதற்கான உனதும் எனதுமான வாய்ப்பு தூமையிடம் கிடக்கும் போது, தூமை என்பது ஒரு இழிவுச்சொல்லாகவும், தீட்டின் பொருளாகவும் மாறிக் கிடக்கும் தன்மை கலைந்தால் நாம் சில தூரம் போகலாம் என்பதை எம் சமூகம் புரிந்து கொள்ளும் என்ற என் எண்ணம் எப்போதோ கலைந்துபொய்விட்டது. இன்னும் பல ஆண்டுகள் கடந்த பின்னும் இதே கோபத்தை வேறு வரிகளில் வேறு பெயரில் காணநேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


திருப்பதிக்கு போக முடியாவிட்டால்
தி நகர் கிளையில் காணிக்கை செலுத்தலாம்
மூன்று நாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
ஹரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனீசியக் கோயிலில்
செருப்புப் போட்டுக்கொள்ளலாம்
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை

சங்ககாலப் பெண்கவிஞர்களின் படைப்புகள் சுதந்திரம் காணப்பட்டாலும் சமகால பெண்கவிகளின் கவிதைகளே துணிவையும், சீற்றத்தையும் கனமாகத் தாங்கி வருகிறது. பெண்மையின் தனித்துவ அடையாளமே தூமை. இத்துமையை அடையும் பெண்னைக் நீராட்டுவிழா என்ற பெயரில் கொண்டாடுவது என்பதுகூட ஒரு ஆணுக்கு அறிவிப்பதற்காகவே என்றால் மிகையல்ல. பின் மாதங்களில் மூன்று நாட்கள் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவதும், தீட்டு என்ற பெயரில் முடக்கி வைக்கப்படுவதும் பல இடங்களில் மருவிப்போயிருந்தாலும், கோயில்களில் இன்னும் இந்தத் தீண்டாமை சற்றும் மாறாமலேயே இருப்பதையிட்டு மேற்கண்ட வரிகளில் அதற்கான தனது எதிர்குரலையும் நேரடியாகவே வைக்கிறார் கவிஞர்.

அகன்றுகொண்டே போகிறது
எப்போதும் போல் இடைவெளி

கோடான கோடிக் கோளங்கள் ஒன்றில்
என்றேனும் ஒரு கணப்பொழுதில்
நம் கனவுகள் உரசக்கூடும்
நம்பிக்கையில்
வீசியெறியாமல் வைத்திருக்கிறேன்
இவ்விருட்சத்தின் விதையை

நம்பிக்கையை மீறி இந்த கவிதையில் நான் தெரிந்து கொண்டது காதலைத்தான். ஐம்பூதங்களில் ஒன்று விடுபட்டுவிட்டது என்றால் அது காதல்தான். நம்பிக்கையோடு காத்திருக்கும் கண்களுக்கான ஒத்தடம் போல கவிதை மனவெளியை நிரப்புகிறது.

திடுக்கிட்டு எழுந்து அலைகிறது கை
முனங்குகிறாய்
கதகதப்பான அணைப்பில்
உறங்கிப்போகிறாய் நிம்மதியாக..-

வாழ்வதற்கான பட்டியல்
நீள்கிறது

என்று சின்ன சின்ன வாழ்க்கைக் குறிப்புகளால் உணர்வுகள் புகுத்திக் கவிதை நெய்கிறார் கவிஞர்.

கனிமொழியின் கவிதைகள் பிரபலமாக இருப்பதற்கும் அவருடைய படைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புகளுக்கும் தனது பின்புலமும் ஒரு காரணம் என்பதை ஒரு அசௌகரியமாகவே உணருவதாக செவ்விகளில் கவிஞர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். யாரும் நிமிர்ந்து பார்க்கவைக்க்கூடிய பின்புலத்தைக் கொண்டிருப்பதால் மட்டும் இவரது சமூகப்பார்ரவகளையும் படைப்புகளையும் நாம் கடந்து போய்விட முடியாது. தனக்கென ஒரு இடத்தை படைப்புலகத்தில் கவிஞர் கனிமொழி பதித்திருப்பது திண்ணம் என்றாலும் திடமான சமூகப்பார்வையைக் கொண்ட கவிஞர் என்பதை இவர் நடைமுறையிலும் சாதித்துக்காட்டவேண்டிய எதிர்பார்ப்பு இருப்பது சாதரணமானவையே.

No comments: