நமது திருமணச் சடங்குகளில் மாற்றம் தேவையா?

   .
                                                                                                      நா. மகேசன்-

தோற்றுவாய்

பண்டைத் தமிழர்களுடைய திருமணங்கள் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் என்னும் முறையில் நடந்து வந்தன. வயதுவந்த ஆடவரும், மகளிரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு எற்பற்பட்ட இடத்து மனமொத்த காதல் அன்பில் திழைத்தபோது, தமக்குள் திருமணம் செய்துகொண்டு இனிதேவாழ்ந்து வந்தனர்.அக்காலத்தில் ஒருவரை ஒருவர் வஞ்சிச்தலும், பொய்யும் தலைக்காட்டவில்லை. பின்னர் நாட்செல்லச் செல்ல, சொன்னசொற் பொய்த்தலும், கரவெழுக்கமும், காதல் ஒழுக்கத்திடை தோன்றி வாழ்க்கையைச் சீர்குலைக்கலாயின. அந்த மாறுதலைக் கண்டபின்னர் தமிழ்ச் சான்றோர்கள் முதலில் காதல் கொண்ட இருவரையும், பலர் அறியும் பொருட்டு தமராற் கூட்டுவித்து இல்வாழ்க்கையில் புகப்பண்ணும் திருமணச் சடங்கை வகுத்து வைத்தனர்.

இவ்வாறு வகுக்கப் பட்ட திருமணச் சடங்கை, உயர்ந்து அகன்ற பந்தர் அமைத்து, அதனுள் வெண்மையான ஆற்றுமணல் பரப்பி, மனையகம் எங்கும் விளக்குகள் ஏற்றி வைத்து, பூமாலைகள் கட்டி, நிறை குடம் வைத்துச் சுற்றத்தார் சூழஇருக்க, வயதில் மூத்த பெண்கள் நால்வர் நடத்தி வைத்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து “கற்பொழுக்கத்தில் நின்றும் வழுவாத திட்பம் வாய்ந்தவளாய், அறவேர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், விருந்தெதிர் கோடலுமாய நல்ல பல கடமைகளைச் செய்துகொண்டு, நின்னை மனைவியாகப் பெற்றவனைப் பேணும் மங்கையாகக் கடவாய்” என்று மொழிந்தபடியே, ஈரந்தோய்ந்த அலரிப் பூவையும் நெல்லையும நீருடன் மணமகளின் கூந்தலிற் சொரிந்து வாழ்த்தி நிற்க, உறவினா சிலர் முன்வந்து “பெரிய இல்லக் கிழத்தியாய்ப் பொலிவாயாக” என வாழ்த்தி மணமகள் யைப்பிடித்து மணமகன் கையிற் கொடுத்துத் திருமணச் சடங்கை நிறைவுசெய்தனர். திருமண நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினருக்கு உளத்தங்களியும், சுவைமிகுந்த சோற்றுத்திரணையும் வழங்கப்பட்டது.

இனக் கலப்பினால் மாற்றம்

மேற்கண்ட சங்ககாலத் தமிழரிடையே, அவர்களுக்கே உரிய இறை வழிபாடு இருந்து வந்தது.    சமயம் தனிப்பட்டவர்களுடைய மெய்யுணர்வு வளர்ச்சிக்காக அமைந்திருந்ததே தவிரப் பொதுவாகச் சமுதாயத்தைப் பாதிக்கின்ற ஒரு அமைப்பாகச் சங்ககாலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கலை, காதல், வீரம், வாய்மை, நீதி, நேர்மை, மனிதநேயம் முதலியவற்றில் ஈடு பட்டது போலச் சங்ககாலத் தமிழர் மதவழிபாடுகளைப் பெருக்குவதில் ஈடுபட்டதாகத் தோன்றவில்லை. ஆனால், சங்க காலத்தின் இறுதியில் தமிழரின் நம்பிக்கைகளில், சடங்குகளில் ஆரியரால் மாற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பண்டைத் தமிழரின் சடங்குகளில் யாகங்கள் செய்தல், பலியிடுதல் முதலிய சடங்கு முறைகள் ஆரியரால் புகுத்தப்பட்டன. தமிழரும் ஆரியரின் வைதிகச் சடங்கு முறைகளைச் சிறிது சிறிதாக மேற்கொள்ளத் தொடங்கினர்.

இன்று நடைபெறுகின்ற திருமணங்கள்

இவ்வாறு திரிபடைந்த தற்காலத் தமிழ் சைவத் திருமணங்களின் நடைமுறைகள் மிகுந்த நீளமானவை. செயல் முறையளும் சிக்கலாகவும் அர்த்தம் அற்றவையாகவும் இருக்கின்றன. திருமணத்தில் இடம்பெறுகிற செயல் முறைகள் அங்கு கூடுவேருக்கு விளக்கப்படுத்தப் படுவதில்லை.
ஒருவருக்கும் ஒன்றும் விளங்காத நிலையினால், திருமணத்துக்கு வந்தவர்கள் ஆளுக்காள் கதைத்துக் கொண்டு, கொடுக்கப்படும் சிற்றுண்டிகளைச் சுவைப்பதிலும், சுகசேமம் விசாரிப்பதிலும் கரிசனையாக இருக்கிறார்களளே தவிர திருமணத் தம்பதிகளின் நடைமுறைகளிலும், அவர்கள் இல்லறம் சிறப்புற வேண்டும் என்று மனதார எண்ணுவதோ அன்றி அமைதியா இருப்பதோ இல்லை.

வைபவத்துக்கு அழைக்கப்படுவேரின் தொகையும், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. அழைக்கப்படுவேரின் தொகை கூடும்போது இட நெருக்கடியும் இரைச்சலுமாவே இருக்கிறது. மண்டப அலங்காரங்கள், உணவு பரிமாறும் முறைகள், விருந்தினரை வழியனுப்பும் போது கொடுக்கப்படும் அன்பளிப்புப் பைகளும் வேறு பொருட்களும் விதவிதமாக அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒருவரை ஒருவர் பார்த்து, ஒருவரை ஒருவர் விஞ்சிசிடவேண்டும் என்று படாடோபமான முறைகளைக் கைக்கொண்டு, கையாற் கிழிக்கும் பனங்கிழங்கை ஆப்பும் வல்லிட்டுக் குத்தியும் கொண்டு பிளப்பது போன்ற செயற்பாடுகள் பெருகுகின்றன. திருமணத்தில் கடைப்பிடிக்கப் பட்ட இலகு முறைகள் எல்லாம் பெருப்பிக்கப்பட்டுப் பெருந்தொகைப் பணச்செலவுக்கு வழிவகுப்பதாகவே இருக்கின்றன.     தாய் தந்தையரின் நண்பர்கள், இனசனத்தாரின் நண்பர்ள் என்றும், முன்பு தாய் தந்தையரைத் திருமணத்து அழைத்தவர்களை அழைக்க வேண்டும் என்ற கடப்பாட்டுக்காக என்றும் அழைகப்படுவோரின் தொகையே அதிகமாக இருக்கின்றது. இந்த வழிமுறைகளில் எல்லாம் மாற்றம் கொண்டுவர வேண்டிய அவசியம் தற்காலத் தமிழ் மக்களுக்கு இன்றியமையாத ஓர் சீர்திருத்தம் என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

தற்காலத்தில் திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிப் பழகிய பின்னரே திருமண நிலைக்கு வருகிறார்கள. மணமக்களின் பெற்றோரும் முன்பின் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தாதவர்களாக இருப்பதும் இல்லை. எனவே முற்காலத்தில் ஒருவரை ஒருவர் அறியாத சூழ்நிலையில் சடங்குகளில் சேர்க்கப்பட்ட நடைமுறைகளைத் தற்போதைய திருமணங்களில் நீக்கிவிடுவதே அறிவுபூர்வமான செயலாகும். உதாணமாகச் சில செயற்பாடுகளை இங்கே குறிப்பது நல்லதெனக் கருதுகிறேன்.

மாப்பிள்ளைத் தோழன் காலுக்குத் தண்ணீர் வார்த்தல்

முற்காலத்தில் வாகனங்கள் அதிகம் இருந்ததில்லை. மாப்பிள்ளை கால் நடையாகத்தான் மணப்பெண் வீட்டுக்கு வரவேண்டியிருந்தது. எனவே வீட்டு வாசலுக்கு வந்த மணமகனுக் காலிற் படிந்த புழுதியைக் கழுவிக்கொள்வதற்குத் தேழன் தண்ணீர் வார்த்தான். அந்த உதவிக்குக் கைமாறாக மணமகன்  தோழனுக்கு ஒரு தங்க மோதிரத்தைக் கொடுத்தான். இது அந்தக் காலத்துக்கு ஒத்ததாக இருந்தது. இக்காலத்தில் எந்த மணமகனும் கால் நடையில் வருவதில்லை. காலுறைகள் பேட்டுக்கொண்டு காரில் வந்து இறங்குகிறார்கள். அப்படியிருக்கப பழைய வழக்கம் என்று சொல்லி வெறுமனே தண்ணீரைத் தோழன் நிலத்தில் ஊற்றுகிறான். இதில் ஏதாவது அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் விளக்கத்தை எவரும் அத்தருணம் எவரும் சொல்லுவதும் இல்லை, இது தேவை அற்றது என்று சிந்திப்பதும் இல்லை. யாராவது சிந்தித்து அதை நீக்கிவிட்டால், பெருந் தவறு செய்துவிட்டதாக் குற்றம் கூறுவதும் உண்டு.

மணமகன் தாலி கட்டும்போது பொண் ஒருத்தி விளக்குப் பிடித்தல்

மணமகன் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டும்போது, ஒரு பெண்ணின் கையில் அம்மாள்
விளக்கொன்றைக் கொழுத்திக் கொடுத்து மணப்பெண்ணின் பின்புறமாக நிற்கச் செய்கிறார்கள். முற்காலத்தில், தற்காலத்தைப் போல் மின்விளக்குகளோ அன்றி மிகப் பிரகாசமான விளக்குகளோ கிடையாது. மணப்பந்தர் பெரும்பாரும்பாலும் மங்கிய ஒளியாகத்தான் இருந்திருக்கும். மங்கிய ஒளியில் தாலிக் கொடியின் பின் கோர்க்கிச் சுரையை சரியாகப் பார்த்துப் பூட்ட மேலதிக வெளிச்சம் வேண்டும் என்பதற்காகப் பெண்ணின் கையில் விளக்கைக் கொடுத்து நிற்கச் செய்தார்கள். தற்காலத்தில் ஒளிமிகுந்த மண்டபங்களில் இந்தக் கைவிளக்கின் தேவை கிடையாது. இருப்பினும் பழைய வழக்கம் தொடர்கிறது.

நிறைவுரை

இவ்வாறு நமது திருமணங்களிலே தவிர்க்கப்பட வேண்டியனவும், சுருக்கப்பட வேண்டியனவும,; புதுப்பிக்கப்பட வேண்டியனவும் எனப் பல செயற்பாடுக்ள் இருக்கின்றன. இவற்றைப்பற்றிச் சிந்தித்து ஆவன செய்தால், நேரம், சிரமம், பணச்செலவு முதலியவற்றைக் கட்டுப்படுத்திச் சிக்கன வாழ்வு வாழலாமல்லவா? “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவநத்தியாரின் நன்னூலின் கூற்றை மனதிற் கொண்டு நமது திருமணச் சடங்குகளில் மாற்றங்கள் கொண்டுவரச் சிந்திக்க வேண்டாமா?

No comments: