சிறுகதை

.
அழியாச்சுடர்கள் வலைப்பதிவிலிருந்து .. அவர் நினைவாக ஒரு சிறுகதை:
இணைப் பறவை - ஆர்.சூடாமணி 

ஆர். சூடாமணியின் அமைதியான இலக்கியப் பங்களிப்பு!

வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள்.
 "யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா"
 "தெரியும்."
 "அங்கே வரேளா?"
 "ம்ஹூம்."
 "உங்களைப் பார்க்கத்தானே அவா...."
"எனக்கு யாரையும் பார்க்கவேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சுடு."

"உங்களைப் பார்க்காம போவாளா ?"

"ஏதானும் காரணம் சொல்வேன். எனக்கு உடம்பு சரியாயில்லேன்னு சொல்லேன்"

"நம்பவே மாட்டா"

"அப்போ நான் செத்துப் போயிட்டேன்னு சொல்லு போ"

ஸ்ரீமதி மறு பேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனை பேர் வந்து விட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன்! பாடம் ஒப்பிகிற மாதிரிதான். "பாவம் இந்த வயசில் உங்களுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க வேணாம்". "போனவ புண்ணியவதி, பழுத்த சுமங்கலியாய் மஞ்சக் குங்குமத்தோட ஜம்னு கல்யாணப் பொண்ணாட்டம் போய்ட்டா. அதை நினைச்சுத்தான் நீங்க மனசைத் தேத்திக்கணும்". "பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் உங்களை உள்ளங்கையில் வச்சுத் தாங்கறா. பேரன் பேத்திகளுக்கு உங்க மேல உசிரு. அதை நினைச்சு ஆறுதாலாயிருங்கோ."

"பாவம் தள்ளாத வயசில் உங்களுக்கு எப்பேர்ப்பட்ட இடி !...." ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத, வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதென்றால். தாத்தாவுக்கு எப்படி இருக்கும்...?

வந்தவர்களை அப்படி பேசி வெளியே அனுப்பிவிட வேண்டுமென்ற உறுதியோடு அவள் சென்றாள். ஆனால் பயனில்லை; அவள் நாசூக்காக எவ்வளவு உணர்த்தியும் கேட்காமல் அவர்களில் ஒருவர் தாத்தாவைப் பார்த்தே தீருவதென்று பின் கட்டுக்கு வந்து விட்டார்.

"என்ன, மிஸ்டர் சாரி...."

மாட்டுக்கொட்டிலின் பக்கத்தில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் உடல் விறைத்துக் கொண்டது.

"யாரு! வரதனா ? வாங்கோ, ஆகாசத்தைப் பார்த்தேளா ? மழை வரும்போல இல்லே?" என்றார் தாத்தா திரும்பாமலே.

வந்தவர் திகைத்துப் போனார். சட்டென்று பேச முடியவில்லை....

"என்ன பேசவே காணோம் ? மழை வந்தா இப்போ ஊரிலிருக்கிற தண்ணிக் கஷ்டத்துக்கு விமோசனம் பிறக்கும், இல்லையா ?" என்றார் தாத்தா தொடர்ந்து. பிறகு திரும்பி நின்று வந்தவரைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

"நீங்க அப்படி நினைக்கல போலிருக்கு. அதுவும் சரிதான். நம்ம வறட்சிக்கு கொஞ்ச மழை போறாதுதான். நன்னா அடிச்சுப் பெய்யணும், உங்களுக்கு என்ன தோண்றது?"

துக்கம் விசாரிக்க வந்தவர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார். "விஷயத்தைக் கேள்விப்பட்டேன் மிஸ்டர் சாரி. அப்போ நான் ஊரில்லே. திருச்சிக்கு ஒரு காரிய்மாப் போயிருந்தேன். வந்ததுமே இப்படின்னு சொன்னா. மனசு ரொம்ப சங்கடப்பட்டுது. ஆறுதலா உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே...."

"உங்க ரெண்டாவது பையன் ஏதோ இன்ட்டர்வ்யூக்குப் போயிருந்தானே என்ன ஆச்சு ?"

"நீங்க அதை நெனைக்கூடாதுன்னு இருக்காப்ல இருக்கு. ரொம்ப விவேகந்தான். துக்கத்துக்கு இடம் கொடுத்தா அப்புறம் மனுஷன் மீளமுடியாது. நீங்களாவே தான் எப்படியோ மனசைத் தேத்திக்கணும். இந்த வயசில் உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்கப்படாது. என்னதான் மாமி தன் வரைக்கும் ஒரு குறையும் இல்லாம மகாலக்ஷ்மியாட்டம் போய்ட்டாள்னாகூட......"

"பாங்க் வேலையாத்தானே அந்த இன்ட்டர்வ்யூ ? அல்லது வேறேதும் கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டுருந்தானா ? "

வரதன் அவரை வெறிக்கப் பார்த்தார். ஒரு விநாடி மனத்தில் மின்னிய சந்தேகத்தை அடக்கிக் கொண்டார். சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.

"சில சிநேகிதாளோடு வந்திருக்கேன். அவாளுக்கு எங்கேயோ கடைத் தெருவுக்குப் போகணுமாம்...இத்தனைப் பெரிய உலகித்தில் மாமிக்குத்தான் இடமில்லாமல் போய்டுத்து ? ஆனா நம்ம கையில் என்ன இருக்கு ? எல்லாம் அவன் செயல். உயிர் என்னிக்கிருந்தாலும் அநித்தியந்தான். மனசைச் சமாதானப் படுத்திகணும். பெருமாள் உங்களுக்கு அதுக்கான தெம்பை கொடுக்கட்டும். தைரியமாய் இருங்கோ ஸார்... இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்வா...."

"அப்போ கிளம்பிட்டேளா ? சரி போயிட்டு வாங்கோ. இன்னொரு நாள் சாவகாசமா வாங்களேன். வெய்யத்தாழ வந்தால் 'ப்ளெஸண்ட் வாக்'காகவும்
இருக்கும்" என்றார் தாத்தா.

வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , "என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !" என்று சொல்லிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.

தாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் !.

வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.

"என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க ?"

ஸ்ரீமதி எச்சிலை விழுங்கிக்கொண்டாள். அறுபதாண்டுகால உறுதுணையின் இழப்பு. அதை இழப்பு என்று சொல்லிவிட்டால் போதுமா ? அதை ஏந்துவதற்கு வார்த்தையில் இடமுண்டா ? அறுபது ஆண்டுகள் ! பிரபவ, விபவ என்று தொடங்கி அக்ஷய வரையில் ஒரு வட்டமே முழுசாக அடங்கிவிட்ட தாம்பத்தியம். அறுபது வருடத் தோழமை மட்டுந்தானா? பாட்டியைத் தவிர இன்னொரு பெண்ணை இவர் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. "நான் ரொம்ப குடுத்து வச்சவடீ" என்று பாட்டி எத்தனைதரம் கண்களில் நீர் மல்கச் சொல்லிக் கசிந்திருக்கிறாள் !. செத்த முகத்தில் கூட அந்த பரவசம் மாறாமல் இருந்தது. அதன் அர்த்ததின் விரிவுகளையெல்லாம் கேவலம் துக்க விசாரிப்பு என்ற சம்பிரதாயத்தின் எல்லைகளுக்கு அடக்கி வைக்க முடியுமா? வார்த்தைகளுக்கு எப்போது மௌனமாய் இருக்கவேண்டும் என்று தெரிவதில்லை.

"இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை" என்றார் தாத்தா.

"சரி தாத்தா. யாரும் வராம பாத்துக்கறேன்"

"நல்ல பொண்ணு. இப்படி வா"

பின்கட்டுத் தாழ்வாரப் படிகளிலே மேல் படியில் பாட்டி வழக்கமாக உட்கார்ந்து காற்று வாங்கும் படியில் தாத்தா உட்கார்ந்துக் கொண்டார். அவளை அருகில் இருத்திக் கொண்டு அவள் கையைத் தம் கையில் பற்றிக் கொண்டார். பார்வை மறுபடியும் மல்லிகைக் கொடியில் நிலைத்தது. அவர் எதுவும் பேசவில்லை. நிறைந்து ததும்பும் பாத்திரத்திலிருந்து துளிகள் சிந்திவிடாதபடி ஜாக்கிரதையாகப் பற்றுவதுபோல், ஸ்ரீமதி அந்த மௌனத்தை வெகு கவனமாகப் பாதுகாத்தாள். தாத்தாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் சிறு சலனங்கூட ஒரு குறுக்கீடென்று கருதி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது அவர் உடம்பில் ஒரு நடுக்கம் பாய்வதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

"அப்பா, சாப்பிட போகலாமா ?"

இரவு ஆகிவிட்டதா என்ன ? ஸ்ரீமதியின் தந்தை பின்னால் நின்று குரல் கொடுத்தப் போது, அந்த ஒலி ஒரு பாறாங்கல்லாக மௌனத்தின் மீது விழுந்தது. ஸ்ரீமதி பதறிக் கொண்டு தாத்தாவைப் பார்த்தாள். ஆனால் அவர், "ம்.. வரேன் போ" என்றார். சாதாரணமாக, ஸ்ரீமதியின் கையை விட்டுவிட்டு, "நீயும் போய் எலையிலே உக்காரு, வந்துடறேன்" என்றார். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் அவர் வரவில்லை.

"இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்" என்றார் ஸ்ரீமதியின் தந்தை.

"சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு" என்றான் ஸ்ரீமதியின் தம்பி. "பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா"

ஸ்ரீமதியின் அண்ணன் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் புதிதாகத் திருமணம் ஆனவன். மனைவி இன்னம் வீட்டுக்கு வரவில்லை.

"இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து" என்றாள் ஸ்ரீமதியின் தாய்.

"பாவம் அப்பா ! அவர் வாய்விட்டுக் கதறி அழுத்துட்டார்னா தேவலைன்னு எனக்கு தோன்றது. துக்கத்தை எல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது" என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.

"அது என்ன துக்கமோ ! என்னதான் மனசை அடக்கிண்டாலும் நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிற போதுகூடவா கண்ணில ஜலமே வராமல் இருக்கும்?"

"நீ என்ன, அப்பாவுக்கு அம்மாமேல பிரியமே இல்லேன்னு சொல்றியா"

"நான் என்னத்தைக் கண்டேன். ஆனா இந்த ஆண்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது"

ஸ்ரீமதி எழுந்துவிட்டாள். "நான் போய்த் தாத்தாவைக் கூப்பிட்டு வர்ரேன்" என்று சொல்லி வேகமாய் அறையை விட்டுச் சென்றாள்.

தாத்தா வந்து உட்கார்ந்துச் சாப்பிட்டார். எதுவுமே பேசவில்லை. ஸ்ரீமதியின் தாய் எப்போதும் போல அவருக்கு மரியாதையுடன் பரிமாறினாள். தாத்தா அவ்வப்போது தலை நிமிர்ந்த போதெல்லாம் அவர் பார்வை நாற்புறமும் ஏதோ தேடுவதுபோல் அலைந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்துப் போய்க் கைக்கழுவிக் கொண்டார்.

சிப்பல் தட்டில் சாதம் எடுத்து வந்த ஸ்ரீமதியின் தாய் வியப்புடன், "என்ன மாமா, அதுக்குள்ளே எழுந்துட்டேளே?" என்றாள்.

"ஏன் ? சாப்டுட்டேன், எழுந்துண்டேன்" என்று தாத்தா பதிலளித்தார்.

"மோர் சாதம் சாப்பிடலையே இன்னும் ?"

"ஓ" என்றார் தாத்தா. பிறகு, "பரவாயில்லை, வயிறு ரொம்பிடுத்து" என்றார்.

ஸ்ரீமதியின் தந்தை அவரை அனுதாபத்துடன் நோக்கினார். "புரியறது அப்பா! எனக்கும் அதே மாதிரிதான் இருக்கு. துக்கம் நெஞ்சை அடைக்கற போது என்ன செய்யறோம்னே சில சமயம் நினைவிருக்கிறதில்ல. ஒவ்வொரு நிமிஷமும் அம்மா ஞாபகம் வந்துண்டே இருக்கு. எங்கே பாத்தாலும் அவ நிக்கற மாதிரியே தோண்றது. அம்மா உயிரோடு இல்லேன்னே இன்னமும் நம்ப முடியலே...."

"ஸ்ரீமதி நன்னா வளர்ந்துட்டா. சீக்கிரம் அவளுக்கும் வரன் பார்க்க ஆரம்பிக்கணும்" என்றார் தாத்தா.

அவர் அந்த அறையை விட்டுச் சென்றதும் ஸ்ரீமதியின் தம்பி தன் தந்தையிடம், "தாத்தாவுக்கு கல்யாணம் ஆகறச்சே அவருக்கு என்ன வயசுப்பா ?"
என்று கேட்டான்.

"நீ அவசியம் தெரிஞ்சுண்டாகணுமோ. போடா, சாப்ட்டாச்சுன்னா எழுந்து கையலம்பிண்டு போய்ப் படி"

ஸ்ரீமதியும் அவள் சகோதரர்களும் அங்கிருந்து சென்றார்கள்.

ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அப்பா ஆனாலும் அழுத்ந்தான்" என்றான் ரங்கன்.

"எனக்கு அவரைப் பாக்கறபோது பயமா இருக்கு" என்றாள் கனகம்.

"ஏன்?"

"இப்படி உணர்ச்சியில்லாம மனுஷன் நடந்துக்க முடியுமான்னுதான். பாவம் உங்கம்மா அவருக்காக கொஞ்சமாவ உழைச்சா? ஆயுசெல்லாம் கூடவே இருந்தவள் போய்ட்டாளேன்னு துளிக்கூட இல்லையே"

"உனக்கு என் அம்மாக்கிட்டே இது என்ன புதுக் கரிசனம்! அவள் உயிரோடு இருந்தப்போ அப்படி ஒன்னும் நீ ரொம்ப அனுசரிச்சுப் போகலையே ! அவள் தேமேன்னு மாட்டைக் குளிப்பாட்டினாலும், தன் புடவையைத் தோய்ச்சுண்டாலும் கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணக் கூடக் கிட்டப் போகமாட்டியே !" என்று ரங்கன் சிரித்தப் போது கனகம் கோபமாய் அவரை விழித்துப் பார்த்தாள்.

"நீங்களும் சமயம் பாத்துதான் சொல்லிக்காட்றாப்ல இருக்கு! ஏன், அப்போ சொல்றதுக்கென்ன, என் அம்மாவுக்கும் போய் ஒத்தாசைப் பண்ணுடீன்னு ?"

"இதெல்லாம், சொல்லித்தான் தெரியணுமா ?"

"மனசுக்குள்ளே வைச்சுண்டால் மத்தவாளுக்கு மூக்கிலே வேர்க்குமா என்ன ? நான் கொஞ்சம் கிட்டே போனாலும் என்னமோ ஆசாரம் கெட்டுபோயிடுத்துன்னு உங்கம்மா ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிப்பாளே, அது எங்கே தெரிஞ்சிருக்கப்போறது உங்களுக்கு! நான் செய்யறதுதானே கண்ணிலேபடும்"

"அவள் போனப்புறம் கூடவா அவள் மேலே குத்தம் சொல்லணும்? அதான் இருக்கிறவரைக்கும் தினம் வீட்டிலே குரு§க்ஷத்திரம் நடத்தியாச்சே?"

"அடேயப்பா, இத்தனை ஆங்காரம் இருக்கா உங்களுக்கு மனசுக்குள்ளே ? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருந்தேளே அப்போ ! ம்ஹ்ம், ஆயிரம்தான் இருந்தாலும், ஆம்பிள்ளை ஒவ்வொருத்தருமே கடைசியில் அம்மாக் கோதண்டராமன்தான். பொண்டாட்டி எத்தனை செஞ்சாலும் எடுபடாது. மனசிலே ஆழமான இடம் என்னிக்கும் அம்மாவுக்குன்னு தத்தம் பண்ணினதுதான்."

"அப்படித்தான் வச்சுக்கோயேன், நம்ம நாணுவும் அதே மாதிரி பொண்டாட்டிகிட்ட எத்தனை ஆசையாயிருந்தாலும், மனசில் முக்கிய இடத்தை உனக்கு தத்தம் பண்ணியிருப்பான்னு நீயும் சந்தோஷப்படேன்! அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டதனால் இனிமே இந்த சந்தோஷம் எனக்கு ரொம்ப அவசியமில்லையா? இந்த உணர்ச்சி இல்லேன்னா எந்த அம்மாவானாலும் தன் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவாளான்னு சந்தேகம்தான்."

"நான் ஒன்னும் அப்படி இல்லே. பாவம்னு உங்கம்மாவுக்குப் பரிஞ்சுண்டு வந்ததுக்கு எனக்கு இது நன்னா வேணும்" என்று கனகம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

உள்ளதைச் சொன்னால் கோபம் வருகிறது என்று நினைத்துக் கொண்டு ரங்கன் கூறினார், "கோவிச்சுக்காதே கனகம், சும்மா சொன்னேன். அப்பா போக்கு எனக்கு மட்டும் பிடிக்கிறதா என்ன? சாவு என்கிறதே ஒரு அன்னியமான எண்ணம். அழுது அதுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அந்த திகைப்பு குறையறாப்பலே இருக்கும். அதைக் கொடுக்காம ஒருத்தர் கல்லாட்டாம் இருந்தால் நீ சொன்னாப்பலே
ஒருவிதத்தில் பயமாத்தானிருக்கு."

"அதுக்கில்லேன்னா! உங்கம்மாவுக்காக உங்கப்பா அழாமலிருக்கிறத பாக்கிறபோது, ஒரு பொண்டாட்டியாய்ப் பாடுபடறது எல்லாமே கடைசியில் இத்தனை வியர்த்தம் தானான்னு தோணிப்போறது. நம்மை நிராகரிச்சுட்டா பாத்தியான்னு மனசைத் தாக்கறது..." கனகத்தின் குரல் கம்மியது.

தன்னை அந்த இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறாள் இவள்! உலகத்தில் எல்லோருமே... மரணம் என்ற மகாகர்மம் கூட - ஒரு சிறு தன்னுணர்ச்சியில்தான் அஸ்திவாரம் கொண்டிருக்கிறதா? ம்ஹ்ம் ! மனிதனைப் பொறுத்தவரையில் உலகம் என்றுமே சிறியதுதான். அதற்குச் சந்திரமண்டலம் போகவேண்டியதில்லை.

"என்னத்தையானும் நினைச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காதே கனகம் " என்று ரங்கன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

"நம்ம மாட்டுப் பொண்ணு ஆத்துக்கு வரட்டும். அவளும் நானும் எத்தனை ஒத்துமையாயிருக்கப்போறோம் பாருங்கோ" என்றாள் கனகம்.

**********************

ஸ்ரீமதியின் அண்ணன் சாப்பாடு முடிந்ததுமே ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு தன் வேட்டகத்துக்குச் சென்றான். வத்ஸலாவின் முகம் அவனைப் பார்த்ததுமே மலர்ந்து விட்டது.

"என்ன திடீர்னு? இன்னிக்கு வரப்போறதாச் சொல்லவே இல்லையே? சாப்பாடு ஆச்சா? " என்று விசாரித்தாள்.

"ஆச்சு" என்றான் நாராயணன். இருவரும் வத்ஸலாவின் அறைக்குச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்யாணமாகி ஒரு மாதமாகியிருந்தது. அவளை அவனுடைய வீட்டுக்கு அழைத்துவர நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் பாட்டி இறந்துவிடவே அது தள்ளிப் போய்விட்டது.

"வீட்டிலே பாட்டி பேச்சாவே இருந்தது. பாட்டிக்காத் துக்கம் கொண்டாடறவா பாட்டியை புரிஞ்சுக்காதவா. அப்படிப் பார்த்தால் தாத்தா நடந்துகிட்ட விதம் சரின்னுதான் சொல்லனும்"

"உங்க தாத்தா துளிகூட அழவேயில்லையாமே? இது வரை ஒருவார்த்தைக்கூட உங்க பாட்டியப்பத்தி பேசவும் இல்லையாம்? ஆமா, உங்க குடும்பத்தில எல்லா ஆம்பிள்ளைகளுக்குமே இந்த மாதிரிக் கல்லு மனசுதானா? "

"போக்கிரி!... புருஷன் பெண்டாட்டிக்குள் எத்தனையோ இருக்கும். தாத்தா போக்குக்குத் தக்க காரணம் ஏதாவது இருக்கலாம். மத்தவாளுக்குப் புரிய முடியுமா? நான் அதைச் சொல்லலே."

"பின்னே?"

நாராயணன் கண்கள் மிருதுவாயின.

"எங்க பாட்டி ரொம்ப அருமையான மனுஷி."

"உங்க எல்லாருக்குமே அவள் கிட்ட உயிராம், ஸ்ரீமதி சொல்லியிருக்கா."

"பாட்டியைத் தெரிஞ்ச யாரும் அதைப்பற்றி ஆச்சரியப்பட முடியாது. அவளோட எலியும் பூனையுமா சண்டை போட்ட எங்கம்மா கூட..."

"ஐயையோ, மாமியார் மாட்டுப் பெண் சண்டை உண்டா உங்க வீட்டிலே? எனக்கு இப்பவே பயமா இருக்கே!... வந்து எங்கப்பா கூடச் சொன்னார், முதல்லேருந்தே தனிக் குடித்தனமாய்ப் போயிடுங்களேன்னு...."

நாராயணன் சிரித்துக் கொண்டே அவள் காதை விளையாட்டாகக் கிள்ளினான். "ஸில்லி! பயம் எதுக்கு? மாமியார் மாட்டுப் பெண் சண்டைங்கிறது எல்லாம் அவாளுக்குள் சும்மா ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். வெளியிலே வெட்டி மடிஞ்சும்பா. ஆனா தினம், பாட்டிக்கு ராத்திரியில் பாலை எங்கம்மா தன் கையாலேதான் குங்குமப்பூச் சேர்த்துச் சுண்டக் காய்ச்சித் தயார் பண்ணுவா, அந்த வேலையை ஸ்ரீமதி கிட்டகூட நம்பி விடமாட்டா. அதே மாதிரி பாட்டியும் எதை மறந்தாலும் எங்கம்மாவின் பிறந்த நாளை மறக்காம அன்னிக்குக் கோவிலுக்குப் போய் அவள் பேரிலே அர்ச்சனை பண்ணிட்டு வருவா."

"ஓ. அப்படியா அது !"

"எதுக்குச் சொல்றேன்னா, பாட்டியோடு பழகினவாளிலே அவள் அருமை தெரியாதவாளே கிடையாது. அதுக்கு காரணம் என்ன தெரியுமா? "
"என்ன?"
"அவளைப் பார்த்தாலே யாருக்கும் தான் உயிரோடு இருக்கிறதைப் பத்தியே இரு சந்தோஷம் ஏற்படும். அவள் உயிரே வடிவமாயிருந்தவள். வாழ்க்கையோடு பிணைஞ்சிருந்தவள். நாங்க குழந்தைகளாயிருந்த போது அவள் எங்களுக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள், புராணக் காவியக் கதைகள், தேவதைக் கதைகள் எல்லாத்திலேயும் நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத
மாதிரின்னு."

வத்ஸலா அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். கணவனின் முகத்து பூரிப்பு. கண்களின் நினைவுப் பரவசம். அவளை ஒருமாய வட்டத்தினுள் இழுத்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

"உங்க பாட்டியை எனக்கு தெரியாதேன்னு இப்போ வருத்தமாயிருக்கு" என்றாள்.

"வருத்தமே வேணாம். வருத்தமிருக்கிற மனசாலே பாட்டியைத் தெரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கை அற்புதமானதுன்னு உணர்கிற உணர்ச்சிதான் என்
பாட்டி."
சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். நாராயணன் மனைவியைக் கனிவோடு பார்த்தான். "நாம் துக்கம் கொண்டாட வேணாம் வத்ஸலா! வாழ்க்கையைக் கொண்டாடுவோம். உயிரை அழுத்தமாய் ஆமோதிப்போம். பாட்டிக்கிட்ட என் பிரியத்தை இதைவிட அழகாயும் பொருத்தமாயும் வேறெப்படியும் காட்ட முடியாதுன்னு தோணித்தான் நான் அவள் பேச்சுலே உன்னை நினைச்சிண்டு வந்தேன்"

*****************

"ஏண்டி அழுதுண்டிருக்கே?" என்று கேட்டுக் கொண்டு ஸ்ரீமதியின் தம்பி அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். "எனக்கே தெரியலேடா ?" என்றாள்.

"பாட்டியை நெனச்சுண்டியா? எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே."

"ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன் ! எனக்கு தாத்தாவை நெனச்சாதான் அழுகை வரது"
"அவருக்கென்ன கேடு ! அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கிறது, ஸ்ரீமதி, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். கேக்கறியா?. பாட்டி செத்துப் போனதைப் பத்தி"
"எங்கே, படியேன் கேக்கலாம்."
வாசு தன் கவிதையை எடுத்து வந்து உற்சாகமாய்ப் படித்துக் காட்ட ஆரம்பித்தான். பாட்டியின் மறைவை உருக்கமாக வர்ணித்திருந்தான். சிறிது சிறிதாகப் பொருளின் உருக்கம் மறைந்து படைப்பின் கிளர்ச்சி அவன் முகத்தில் ஒளி கூட்டியது. "இந்த இடத்திலே அப்படியே அழுகை வராப்பலே
'மூவிங்'கா இல்லே?" என்று கேட்டபோது அவன் முகம் சந்தோஷமாக இருந்தது.

அவன் படித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீமதியின் கண்கள் முன்வாசல் தரையில் நிலைத்திருந்தன, அந்த இடம் கோலத்தின் சுவடு படாமல் மூளியாயிருந்தது. இன்னும் ஒரு வருஷத்துக்கு அங்கே கோலம் காணப்படாது.

வெளி வராந்தாவில் தான் ஒரு பக்கமாகத் தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பலபேரோடு இருக்கும்போது அவர் தனியாயிருப்பது போல் தெரிகிறார். ஆனால் இப்படித் தான் மட்டுமாக முகத்தில் அந்த லயிப்புடன் இருக்கும் போது அவர் தனியாயில்லாத மாதிரி தோன்றுகிறதே, என்ன ஆச்சரியம் என்றி ஸ்ரீமதி வியந்தாள்.

அவன் தம்பி எழுந்து போன பிறகுகூட தாத்தா அதே நிலையில் இருந்தார், ஸ்ரீமதி மெள்ள அவரிடம் வந்தாள். "தூக்கம் வரவில்லையா தாத்தா? முந்திமாதிரி ராமாயணம் ஏதானும் படிச்சுச் சொல்லட்டுமா? "

"வேணாம்மா. தூக்கம் வராப்பலே இருக்கு; போய்ப் படுத்துக்கறேன்."
ஹாலில் தாத்தாவும் ஸ்ரீமதியும் அவள் தம்பியும் படுத்துக் கொண்டு வெகு நேரமாகிவிட்டது. தம்பி எப்போதோ தூங்கி விட்டான். ஆனால் தாத்தா இன்னும் தூங்கவில்லை என்று ஸ்ரீமதிக்குத் தெரியும். அது அவளுக்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு இரவும் தெரிகிற விஷயம் என்பது தாத்தாவுக்குத் தெரியாது. அவர் புரண்டு புரண்டு படுப்பதும், உலகம் உறங்கும் நள்ளிரவு வேளையில் கிழக் கண்களைத் திறந்து கொண்டு விட்டத்து இருளை வெறித்துக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியாது.

அவர் படுக்கையில் எழுந்து உட்காரும் மெல்லிய சத்தம் வந்தது. அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள். "தீர்த்தம் வேணுமா?" என்று கேட்கலாமா? ஆனால் அவருடைய அந்தரங்கத்தை தீண்டத் தைரியம் வரவில்லை.
தாத்தா எழுந்து நின்றார். நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீமதி ஒர் அச்சத்துடன் எழுந்து அவர் அறியாமல் இருளில் மறைந்து மறைந்து அவரைப் பின் தொடர்ந்தாள்.
தாத்தா வீட்டினுள் ஒவ்வொரு அறையாகச் சென்றார். நின்று நின்றி இடங்களை வெறித்தார். பாட்டி பூஜை செய்த அறைக்குச் சென்று அசையாமல் சிறிது நேரம் நின்றார். பிறகு கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு பின்கட்டுக்குப் போனார். தூக்கத்தில் நடப்பது போல் நடை யந்திரப்போக்காய் இயங்கியது. தொழுவம், துவைக்கும் கல், மல்லிகைக் கொடி ஒவ்வொன்றின் அருகிலாக இருட்டினூடே சென்று நின்றார். அங்கங்கே தயங்கித் தயங்கி நின்று மண்ணிலும் வானத்திலும் பார்வையை நெடுக அலையவிட்டார். பிறகு வீட்டுக்குள் திரும்பி வந்தார். தட்டு தடுமாறி நடந்து வந்து தன் படுக்கையை மீண்டும் அடைந்தார். நடையின் தள்ளாட்டம் இருட்டினால்தானா என்று புரியவில்லை. பயத்துடன் தொடர்ந்து சென்ற ஸ்ரீமதி நிம்மதியுடன் பூனைப் போல் உள்ளே வந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்; பார்வை மட்டும் அரை இமைத் திறப்போடு தாத்தாவின் மேலே படிந்திருந்தது.
தாத்தா சிறிது நேரம் அசையாமல் படுக்கையின் மீது உட்கார்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்டார். ஆனால் தூங்கவில்லையென்று தெரிந்தது. அவர் கண்கள் திறந்துதான் இருந்தன வென்பதை கருமணிகள் இருளில் பளபளப்பதிலிருந்து ஸ்ரீமதி தெரிந்து கொண்டாள். அவர் ஆழமாகப் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்டது.
மறுநாள் காலை தாத்தா எழுந்திருக்கவில்லை
.

No comments: