இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 08

.
இலங்கையில் சோழர்கள்

பொலன்னறுவையிற் கிடைத்த கல்வெட்டு ஒன்று பரதன் ஒருவனைப் பற்றி குறிப்பிடுகின்றது. அது அவனைச் 'சாகரிக' என்று வர்ணிக்கின்றது. 'சாகரிக' என்பது கடலன் என்பதன் பிராகிருத மொழிபெயர்ப்பாகும். கடலன் என்பது புராதனமான தமிழகத்துச் சாசனங்களிற் பாண்டியர்கள் தொடர்பாகச் சொல்லப்படுகிறது.

கடலன் வழுதி என்பது அவற்றில் காணப்படுகின்ற ஒருவகை வர்ணனை. அவன் கடல் வாணிபம் செய்பவன் என்ற விளக்கம் இந்த கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் வடிவத்தினால் உறுதியாகின்றது. பரத என்று குறிப்பிடப்படுபவர் மீனவர் என்று கொள்வதற்கு நாணயம் ஒன்றில் காணப்படுகின்ற விபரங்கள் ஆதாரமாகின்றன.




அந்த நாணயத்தின் ஒரு புறத்தில் 'பரத திசக' (பரதனாகிய திசனுடையது) என்ற வாசகம் பிராகிருத மொழியிலும் பிராமி வரி வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மீன் உருவம் அமைந்திருக்கின்றது. பரத எனும் திசன் குலத்தால் மீனவரோடு தொடர்புடையவன் என்பது இதனால் புலனாகிறது.

பரதனைப் பற்றி 20க்கும் மேற்பட்ட சாசனங்களில் காணப்படுவது குறிப்பிடக்கூடியது. புராதன காலத்து இலங்கையில் வாழ்ந்த பிராமணரில் சிலர் தமிழராய் இருந்தனர். அரண்மனையில் பிராமணரைப் புரோகிதராக நியமிப்பது வழக்கம்.

கி.மு. காலத்தில் அநுரா என்ற அரசி அதிகாரம் செலுத்திய காலத்தில் நீலிய என்ற தமிழ்ப் பிராமணன் புரோகிதராக இருந்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. கிழக்கிலங்கையிலும் சைவசமய தொடர்புடைய பிராமணர் இருந்தனர் என்பதை அந்நூல் மூலமாக அறிய முடிந்தது.

கலந்த என்ற பெயருடைய கிராமத்திற் சிவாலயம் இருந்தமை பற்றிய குறிப்பு அதிலே உண்டு. சாசனங்களிலும் மகா வம்சத்திலும் காணப்படுகின்ற குறிப்புகளின் அடிப்படையில் பரத, வணிகர், பிராமணர் எனப் பல தொழில்கள் புரிகின்ற சமூகத்தவர்கள் இலங்கையில் தமிழ் சமுதாயத்தில் அடங்கியிருந்தார்கள் என்பது இப்போது தெளிவாகின்றது.

அரசின் தோற்றம்

வட இலங்கையில் உள்ள வரலாற்றுச் சார்புடைய தமிழ் நூல்களில் ஆதிகால வரலாற்றைப் பற்றி அறிவதற்கு அவை எந்த வகையிலும் பயன்படவில்லை. அவை காலத்தால் பிற்பட்டவை. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஆரிய சக்கரவர்த்தியின் குலத்து, யாழ்ப்பாணத்து அரசர்களுக்கு முற்பட்ட சமுதாய நிலைகள் பற்றி அவற்றின் ஆசிரியர்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை.

பெருங்கற்காலப் பண்பாடு பரவியபோது காலப்போக்கில் சில ஊர்களை மையமாகக் கொண்டு சிற்றரசுகள் தோன்றியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலக் கல்லறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெண்கல மோதிரம் ஒன்றில் கோவேதன் என்ற சொல் காணப்படுகின்றது. பழந்தமிழ் வழக்கில் குறுநிலப் பகுதிகளான நாட்டுப் பிரிவுகளிலே தலைமை அதிகாரங்களைப் பெற்றிருந்தவர்களைக் கோ என்று குறிப்பிடுவது வழக்கம். அவ்வண்ணமாக கி.மு. 2ஆம் நூற்றாண்டிலும் ஆனைக்கோட்டை பகுதியிலே கோ என வழங்கிய தலைவர் இருந்திருக்கலாம் என கருதலாம்.

அகித்தி ஜாதகம் அதே காலமளவில் ஆட்சி புரிந்த ஒரு சிற்றரசைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த சில அரிய காசுகள் கிடைத்துள்ளன. அவற்றிலும் நாக பொலம் என்ற வாசகம் ஒரு நாணயத்தில் காணப்படுகின்றது. நாக அரசன் வழங்கிய காசு என்று அதனை விளக்கலாம். அவ்வாறாகில் கந்தரோடைப் பகுதியை மையமாகக் கொண்டு தமிழ் மொழியைப் பேசிய நாக வம்சத்தினர் ஆட்சி புரிந்தனர் என்றும் நாணயங்களை வெளியிட்டனர் என்றும் கொள்ள முடிகின்றது.

யாழ்ப்பாணத்திலும் அதற்குத் தெற்கிலும் உள்ள வன்னிப் பகுதியிலும் பெரும் அளவிலான எழுத்துப் பொறித்த கலவோடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வேளான், அபிசிதன் எனும் முழுச் சொற்கள் காணப்படுகின்றன. பல கலவோடுகளிலே தமிழ் மொழிக்குச் சிறப்பான எழுத்தாகிய 'ழ', 'ள', 'ற' காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கி.மு. காலத்தில் தமிழ் அங்கு பேச்சு வழக்கு மொழியாக இருந்தமைக்கு இவை ஆதாரமாகும்.

கந்தரோடை ஒரு வணிக தளமாகும். கலாசார பரிவர்த்தனை நிலையமாகவும் விளங்கியது. ஆந்திர பிரதேசத்திலும் தமிழ் நாட்டிலும் உள்ள பௌத்த நிறுவனங்களும் அநுராதபுரம் போன்ற இடங்களிலுள்ள சங்கத்தாரும் அங்கிருந்த பௌத்தப் பள்ளிகளோடு தொடர்பு கொண்டிருந்தனர்.

கந்தரோடை ஏறக்குறைய 2500 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு குடியிருப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வல்லிபுரம் கல்வெட்டில் நாகதீவினை ஆளுகின்ற ஒரு அரசனைப் பற்றி கூறப்படுகின்றது. நாகதீவு என்பது ஒரு தனியான அரசியல் பிரிவாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அந்தச் சாசனத்தில் உள்ள பிராகிருதத்தில் தமிழ் செல்வாக்கு மிகுந்து காணப்படுவது கவனத்திற்குரியது.

13ஆம் நூற்றாண்டிலே தான் யாழ்ப்பாணத்தில் இராச்சியம் முதன் முதலாக அமைக்கப்பட்டதென்ற கருத்து நிலைபெற்று வந்துள்ளது. ஆனால் கந்தரோடை, மாந்தை, பூநகரி முதலான இடங்களில் பெருமளவில் கிடைத்த நாணயங்கள் அதற்கு முற்பட்ட காலங்களில் வடபிராந்தியத்தில் அரச வம்சங்கள் வெவ்வேறு காலங்களில் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்தமைக்குச் சான்றுகளாக உள்ளன.

கங்கவம்சம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட நாணயங்களும் காணப்படுகின்றன. அவற்றை மாதிரியாகக் கொண்டே ஆரியச் சக்கரவர்த்திகள் சேது நாணயங்களை வெளியிட்டார்கள். மீன் வடிவங்களையும் நாணயங்களில் பொறித்தார்கள். அதுவும் மூன்று மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அங்கு பெருமளவில் கிடைத்தன. அந்தப் பிரதேசங்களிலே வெவ்வேறு காலப் பகுதியில் அரசு புரிந்தவர்களால் அவை வெளியிடப்பட்டிருத்தல் வேண்டும். அந்த நாணயங்கள் தனித்துவமானவை. இவற்றைப் போன்ற காசுகள் தென்னிந்தியக் கரையோரங்களிலும் காணப்பட்டன.

தொடரும்..

கலாநிதி சி.பத்மநாதன்

ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: