புருஷோத்தமா மாதம் - முதல் பகுதி
ஹரே கிருஷ்ணா! வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். புராணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதாகவும், ஏதாவது ஒரு புராணத்தில் இருந்து ஒரு பகுதியைப் பற்றி எழுதுமாறு ஒரு வாசகர் எனக்கு இனைய அஞ்சல் அனுப்பி இருந்தார். அவருக்காக பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தம மாதத்தின் புகழ் குறித்து இதோ ஒரு பகுதி. இந்த வரலாற்றை மொழிபெயர்ப்பு செய்து உதவிய சகோதரி ஸ்ரீ குரு பக்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தக் கட்டுரை சற்று நீலமாதலால், மூன்று பகுதிகளாக இந்தவாரமும், இனி வரும் அடுத்த இரண்டு வாரமும் வெளி வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். புராணங்கள் மிக விரிவானவை. சிலர் இதைப் படிப்பதில் சிரமம் இருப்பதாகக் கூட உணரலாம். இவற்றை படிப்பதால் நாம் பகவத் கீதையை இன்னும் அதிக மரியாதையுடன் கற்க முடியும். ஆதலால் சற்று பொறுமையுடன் இந்த மூன்று பகுதிகளையும் படிக்கும் படி வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.
முன்னொரு காலத்தில் நைமிசாரண்யம் என்ற புண்ணியஷேத்திரத்தில் ஆயிரக்கணக்கான முனிவர்கள் யக்ஞம் செய்ய ஒன்று கூடினார்கள்.அவர்களது நற்பேரால்,பல புண்ணியஷேத்திரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த ஸூதகோஸ்வாமி தனது சீடர்களுடன் அங்கு வந்தார்.அங்கு இருந்த முனிவர்கள் இவரை கண்டு உயிரூட்டம் பெற்றார்கள்.அவர்கள் எழுந்து அந்த உயர்ந்த மகானிற்கு மரியாதை செலுத்தி, சிறந்த வியாசசனம் அளித்து,கூப்பிய கைகளுடன் அவரை அதில் அமரும்படி வேண்டிக்கொண்டனர்.
நைமிசாரண்யம் முனிவர்கள் கூப்பிய கைகளுடன் சுதகோஸ்வாமியிடம் கீழ்க்கண்டவாறு கேட்டுக்கொண்டார்கள் "ஸூதரே,முழுமுதற்கடவுளின் அற்புத செயல்களைப் பற்றியும்,அவரது லீலைகளைப் பற்றியும் தயவு செய்து எங்களுக்கு கூறுங்கள்.அவரை பற்றி ஆயிரக்கணக்கான வரலாறு இருப்பினும்,அவற்றில் மிகுந்த பூரணமான ஒன்றை கேட்க விரும்புகிறோம்.அதன் மூலமாக இந்த சம்சார கடலிலிருந்து மீண்டு இறை நாட்டிற்கு நாங்கள் திரும்பவேண்டுகிறோம்.
சௌனக மகரிஷியின் தலைமையில் மற்ற முனிவர்களின் இந்த வேண்டுகோளை கேட்ட ஸூதகோஸ்வாமி கீழ்கண்டவாறு கூற தொடங்கினார். "ஓ முனிவர்களே! தயவு செய்து நான் கூறுவதை கேளுங்கள்.நான் முதலில் புஸ்கர தீர்த்ததிற்கு சென்றேன், பிறகு ஆயிர கணக்கான புண்ய ஸ்தலங்களுக்கு சென்ற பிறகு ஹஸ்தினபுரத்தை அடைந்தேன். அங்கு கங்கை கரையில்,ஆயிரகணக்கான முனிகள் பரிஷித் மஹாராஜாவுடன் அமர்ந்திருப்பதை கண்டேன். அப்பொழுது சிறந்த முனியான ஸுகதேவர் தோன்றினார்,மேலும் அங்கு இருந்த அனைத்து முனிவர்களும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து கூப்பிய கைகளுடன் தங்களது மரியாதையை செலுத்தினர். எல்லா முனிவர்களும் ஒருமனதாக ஸுகதேவருக்கு வியாசசனத்தைக் கொடுத்து,பரீஷித் மஹராஜாவிற்கு கிருஷ்ணா கதையை கூறும்படி வேண்டினர்.
ஸுதர் கூறினார் "முனிவர்களே,நான் இப்பொழுதுதான் ஹஸ்தினாபுரத்தில்,சுகதேவரின் திருவாயால் ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டு வந்துள்ளேன்.இப்பொழுது நான் பகவானின் வசீகர செயல்களையும், லீலைகளையும் உங்களுக்கு கூறுகிறேன் என்றார்.
பல காலங்களுக்கு முன்னர் ஒரு முறை, நாரத முனி, நாராயண ரிஷியின் இருப்பிடமான பத்ரிகா ஆஷிரமத்தை அடைந்தார்.அவரது பாத கமலங்களிருந்து அலகநந்தா அருவி வழிந்து கொண்டிருந்தது. நாரதர் நாரயணரை நமஸ்கரித்து கீழ்கண்டவாறு துதித்தார்."தேவர்களின் எஜமானனே,கருணையின் கடலே,படைப்புகளின் தலைவனே!உண்மையின் உருவே, உண்மையின் சாரமே ,தங்களுக்கு எனது நமஸ்காரங்களை அர்ப்பணிக்கிறேன்”. பகவானே!இந்த ஜட உலகில், அனைத்து ஜீவராசிகளும்,தங்களது புலனின்ப மகிழ்ச்சியில் மும்மரமாக இருக்கின்றார்கள்.அவர்கள் அனைவரும் வாழ்க்கையின் லட்சியத்தை மறந்துவிட்டனர். ஆதலால் தாங்கள், குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், என்னை போன்ற துறவறத்தை மேற்கொண்ட சந்நியாசிகளுக்கும்,தன்னை அறிந்து இறைநாட்டிற்கு செல்ல உதவும் விஷயங்களை தயவு செய்து விளக்குங்கள் என்றார்.
நாரதரின் இந்த இனிமையான வார்த்தைகளை கேட்ட பகவான் நாரயணர் புன்னகைத்தார்.ஓ நாரதா! முழுமுதற்கடவுளான பகவான் கிருஷ்ணரின்,அற்புத லீலை ஒன்றை கூறுகிறேன் கேள், இது அனைத்து பாவங்களையும் அழித்துவிடும். நீ பகவானின் அனைத்து லீலைகளையும் அறிவாய், இருப்பினும் மற்றவர்களின் பயனுக்காக நீ இதனை கேட்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆதலால் இப்பொழுது நான் மிகசிறந்த புருஷோத்தம மாதத்தின் புகழை கூறுகிறேன்.புருஷோத்தம மாதத்தின் புகழானது ஜட உலகின் மகிழ்ச்சியை மட்டும் அளிப்பத்தன்று,வாழ்வின் இறுதியில் இறைநாட்டிற்கு செல்ல எல்லா தகுதியையும் அளிக்கவள்ளது.
நாரதர் கூறினார்,"பகவானே நான் கார்த்திகை,சித்திரை போன்ற மாதங்களின் புகழை கேட்டுள்ளேன், ஆனால் எந்த மாதம் புருஷோத்தம மாதம்? கருணையின் கடலே, தயவு செய்து இந்த புனித மாதத்தை பற்றி கூறுங்கள். இந்த மாதத்தை எவ்வாறு புகழ வேண்டும்?இந்த மாதத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?எவ்வாறு நீராட வேண்டும்?எதனை தானமாக தர வேண்டும்?எந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்?யாரை வழிப்பட வேண்டும்? இந்த மாதத்தில் உபவாசம் இருக்க வேண்டுமா? தயவு செய்தி எல்லாவற்றையும் விளக்கமாக கூறுங்கள் என்றார்.
ஸுதர் கூறினார் "ஓ முனிவர்களே நாரதரின் கேள்விகளை கேட்ட பகவான் நாரயணர் தனது தாமரை திருவாயால் கீழ்கண்டவாறு கூறினார் "ஓ நாரதரே நான் முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மஹராஜ் யுதிஷ்டரிடம் விவரித்ததை உனக்கு கூறுகிறேன். ஒருமுறை தருமராஜாவான யுதிஷ்டர், சூதாட்டத்தில் தனது ராஜ்ஜியம்,அரண்மனை,தர்ம பத்தினியான திரௌபதி ஆகியவற்றை துரியோதனிடம் இழந்தார்.அப்பொழுது திரௌபதி துச்சாதனனால் அனைத்து சபையோர் முன்பாக அவமானப் படுத்தப்பட்டாள். ஆனால் துச்சாதனன் திரௌபதியை துயிலுரிக்க முயன்றபொழுது,அவள் பகவான் கிருஷ்ணரால் அந்த கடினமான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றபட்டாள்.இந்த நிகழ்ச்சிற்கு பின்னர்,யுதிஷ்டர மகராஜா, தனது சகோதரர்களுடன் தனது ராஜ்ஜியத்தை விட்டு, காம்யாவனம் விருந்தவனத்தில் வசித்து வந்தனர்.
ஒரு முறை, தேவகியின் மகனான கிருஷ்ணர்,பாண்டவர்களை காண காட்டிற்கு சென்றார்.திரௌபதி உட்பட அனைத்து பாண்டவர்களும் அவரை கண்டதும் மகிழ்ந்தனர், தங்களது காட்டில் வசிக்கும் கடினமான நிலையை மறந்தனர். கிருஷ்ணரின் தரிசனத்தை பெற்ற அவர்கள் புத்துணர்வு பெற்றதை உணர்ந்தார்கள்.பகவானின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.பாண்டவர்களின் துயர நிலையை கண்ட கிருஷ்ணர் வேதனை அடைந்தார்.அதே சமயம் துச்சாதனின் மீது கோபமும் அடைந்தார். பகவானின் கோபமானது அவர் இந்த பிரபஞ்சத்தையே அழித்து விடுவார் போல இருந்தது,அதனை கண்டு அஞ்சிய பாண்டவர்கள், பணிவான மனநிலையில் அவரை துதிக்க தொடங்கினர்.அர்ஜுனனின் பிரார்த்தனையை கேட்ட பகவான் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு கூற தொடங்கினார் "ஓ அர்ஜுனா! நான் உங்கள் அனைவரையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், நான் உங்களது பக்திற்கு கட்டுப்பட்டுள்ளேன்.இப்பொழுது நான் உங்களுக்கு புருஷோத்தம மாதத்தின் மகிமையை கூறுகிறேன்.
ஒருமுறை பகவானின் விருப்படி இந்த உலகில் ஒரு உபரி மாதம் தோன்றிற்று. அனவரும் இந்த மாதத்தை மிகுந்த துரதிருஷ்டமான மாதமாய்,ஸ்தூல மாதமாய் கருதினர்.எவ்வாறு ஒருவர் மலத்தை சீண்ட மாட்டர்களோ அவ்வாறே இந்த மாதத்தை யாரும் சீண்டவில்லை. அது ஓயாது பாதுகாப்பற்று,இழிக்கப்பட்டு, ஆன்மீக காரியங்களுக்கும்,நல்ல காரியங்களுக்கும் தகுதியற்ற மாதமாய் நிராகரிக்கப்பட்டது.
அனைத்து மனிதர்களால் நிராகரிக்கப்பட்டு, தொடர்ந்து இழிசொற்களையும்,சாபத்தையும் கேட்டு வந்த இந்த மாதம் மிகுந்த துக்கத்தை பெற்றது.அவள் தனது சோகமான நிலையை பகவானிடம் விளக்கி கூற வைகுந்தம் வந்தாள். பகவான் விஷ்ணுவை அவரது சிம்ஹாசனத்தில் கண்ட அவள், மிகுந்த துயரத்துடன் அவரது பாத கமலங்களில் வீழ்ந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அவள் பகவானை துதிக்க தொடங்கினாள்."கருணையின் கடலே!எனக்கு யாரும் உதவாதலால் நான் உன்னிடம் வந்துள்ளேன்.என்னை உலகில் உள்ள அனைவரும் நிராகரிக்கிறார்கள், சபிக்கிறார்கள். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்,தயவு செய்து உங்களது கருணையை என்னிடத்தில் காட்டுங்கள்,என்னை அலட்சியபடுத்தி விடாதீர்கள்.இவ்வாறு கூறிய அந்த உபரி மாதம் தொடர்ந்து அழுது அவர் முன்னால் மிக்க துயரத்துடன் அமர்ந்தாள். அவளது பணிவையும்,துக்கம் நிறைந்த சூழ்நிலையையும் கண்ட விஷ்ணு அவளிடம் இரக்கம் கொண்டார். அவர் வருத்தப்படாதே !நான் உனக்கு எல்லா விதமான பாதுகாப்பும் தருகிறேன்.தயவு செய்து அழாதே !எனது பாத கமலங்களில் சரணடைந்த பின்னர் வருத்தப்படுவது முறையல்ல என்றார்.
பகவானின் வார்த்தைகளை கேட்டு தேற்றமடைந்த உபரி மாதம் "ஓ பகவானே!எனது வேதனை நிலையை நீ அறிவாய்.இந்த மூன்று உலகங்களில் என்னைப் போல வேதனையை அனுபவிப்பவர் யாரும் இல்லை. முதலவாதாக, மற்ற அனைத்து மாதங்களும்,வருடங்களும், நாளும், இரவும் ,திசையும் உனது பாதுகாப்பின் கீழ் உள்ளனர்,ஆகையால் அவர்கள் எந்தவித பயமுமின்றி உற்சாகத்துடன் உலா வருகிறார்கள். ஆனால் உபரி மாதமான எனக்கு,பெயரோ,பாதுகாவலரோ,பாதுகாப்பு அளிக்க கணவரோ இல்லை. எல்லா தேவர்களும், மனிதர்களும் என்னை எல்லா நல்ல காரியங்களில் இருந்தும் ஒதுக்கிவிட்டனர்.இந்த காரணத்தால் நான் இறக்க வேண்டும் என்றாள்.ஓ நாரதரே! இந்த மாதமானது மீண்டும் மீண்டும் நான் இறக்க வேண்டும் !நான் இறக்க வேண்டும் !நான் இறக்க வேண்டும் ! என்று கூறி பகவானின் பாதங்களில் மயக்கமடைந்தாள்.
பகவானின் வேண்டுக்கோளுக்கிணங்க கருடன் அவளுக்கு சாமரம் வீசினார்.சிறிது நேரத்திற்கு பின்பு கண்விழித்த அவள் மீண்டும் பேச தொடங்கினாள் "இந்த பிரபஞ்சத்தின் இறைவனே எனக்கு உங்களது பாதுகாப்பு வேண்டும்,என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்றாள்.
பகவான் விஷ்ணு அந்த உபரி மாதத்திடம் கூறினார் "குழந்தாய், தயவுசெய்து புலம்பாதே, கூடிய விரைவில் உனது துன்பம் முடிந்து விடும். எழுந்து என்னோடு முனிவர்களால் கூட அடைய முடியாத கோலோக விருந்தாவனதிற்கு வா. கோலோகம் என்பது கிருஷ்ணர் வசிக்கும் இடம் ஆகும். இங்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது இரு கை உருவத்தோடு, கோபியர்கள் சூழ, தனது நித்ய லீலைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். கோலோக வாசியான ஸ்ரீ கிருஷ்ணரால் உனக்கு துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். ஆதலால், என்னோடு வா" என்றார். அதன் பிறகு, பகவான் விஷ்ணு மலமாஸத்தை(உபரி மாதம்) கை பிடித்து கோலோகம் கூட்டிச்சென்றார்.
சிறிது தூரத்திலிருந்து பகவான் விஷ்ணுவும் மலமாசமும் கோலோகத்தின் ஒளிப்பிழம்பை கவனித்தனர். இந்த பிரகாசமான ஒளிப்பிழம்பால் மலமாசத்தின் கண்கள் தானாக மூடின. அதனால், பகவான் விஷ்ணு மலமாசத்தை தனது பின்னிற்கு தள்ளி நுழை வாயில் நோக்கி சென்றார். அங்கே, நுழை வாயில் காப்பாளன் அவருக்கு மரியாதை செலுத்தினான்.
அடுத்த வாரம் தொடரும்...
என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்
No comments:
Post a Comment