மெல்லியலாள் நினைவு பதிகிறது xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கவிஞர். வைகை வளவன்
வன்னி மண்ணின் வாய்க்கால் அழகும்
வளைந்து செல்லும் மண் பாதைகளும்
குளக் கட்டில் படுத்துறங்கும்
கபறக் கொய்யாக்களும்
ஒற்றை வயல் வரம்பில் சைக்கிள் ஓட்டியதும்
இன்னும் பசுமையான நினைவுகளாக இருக்கிறது
இளமைத் துடிப்போடு உலகை அளந்தநேரம்
வெள்ளைச் சீருடையோடு மெல்ல நடந்த உன் அழகு
தங்க முலாம் பூசிய உன் முகத்தழகில்
கருநாவல் காய் இரண்டை
ஒட்டிவைத்த விந்தையென
உன் இரு கண்கள்
இமைத் துடிப்பில் சிறைப் பட்டு
நசிந்து கொள்ளும்
நான் பார்க்கின்ற போதெல்லாம்
தரை நோக்கும் உன் விழிகள்
கையை தொட்டபடி நான் நடக்க
பின்னி தடுக்கி விழும் கால் நடையில் நீ விலக
எட்டியுனை நான் இழுக்க
கோபக் கனல் கொண்ட பார்வையினை வீசிவிட்டு
ஓடி மரத்தடியில் நீ மறைவாய்
பொய்க் கோபம் என்றதனை நானறிவேன்
வட்ட முகமழகு, ஒரு கன்னக் குழியழகு
ஒற்றைச் சடையழகு வீசும் சிரிப்பழகு
உன் அழகை நான் சொல்ல வார்த்தைகளே கிடையாது
மெல்லிழையாள் மெல்லிடையாள்
நடந்து வரும் பாதையிலே- ஒரு எறும்பு தனும்
சாகாது நடக்கின்ற பாதங்கள்
பார்த்தேன்
இளவயதில் பைங்கிளியாள் நீயென்று
பூமிச் சுழற்சியிலே நீ அன்று சிக்குண்டாய்
மெல்ல நடந்த உன் பாதம்தனை மூடி
கனத்த தோல் பாதணிகள்
செல்லும் உயிரினங்கள் செத்துமடிந்திட
நீ காடெல்லாம் புகுந்து கடுகி நடந்திட்டாய்
என் கைபிடியில் இருந்த உன் பிஞ்சு விரல்
கனத்த துவக்குகளை அணைத்தபடி இருக்கிறது
நீ சுமந்த கனவெல்லாம் காகிதப்பூ போலாச்சு
உறவை இழந்தாய் உன்இளமை தனை இழந்தாய்
கண்ட கனவும் சரிந்து விட்ட நடை பிணமாய்
நாட்களை நீ எண்ணுகிறாய்
கல்லறையில் இன்னுமொரு மெல்லிழையாள்
பெயர் பதியும்
காடும் வயல் வெளியும் குளக்கட்டும்
இன்னுமொரு காதலர்க்கு இதமூட்டும்
05.02,2008
2 comments:
கவிஞனரின் கவிதை என்னை என் சொந்த ஊரில் சுற்றித்திரிந்த காலத்தைக் கொண்டு வந்து நிறுத்தியது. இவர் எதைப்பற்றிச் சொன்னாரோ தெரியாது. அத்தனையும் ஒரு படம்போல தெரிந்தது. கிளிநொச்சியிலிருந்து இரணமடுபோகின்றபோது தரிசித்த இடங்களும் அந்த காலத்தில் பள்ளிப்பிள்ளையள் வெள்ளையாக உடுத்தி செல்வதும் நாங்கள் சிலர் சக்கிளில் சுற்றிச் சுற்றி திரிந்ததும் பார்த்தவுடன் கண்கள் குளமாகி விட்டது. உண்மையிலேயே என் சொந்த மச்சாள் போராடப்போய் செத்தும் போய்விட்டா. எனக்கு அவவப்பற்றி எழுதிய மாதிரியாய் இருக்கு.

Post a Comment