சிட்னியிலே மாபெரும் இசை விழா
                                                         நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


இசைக்கு ஒரு விழா மாபெரும் விழா. இது சென்னையில் வருடா வருடம் நடக்கும் மார்கழி இசை விழாவல்ல. சிட்னியிலே வருடா வருடம் ஜூன் மாதத்திலே மகாராணியாரின் பிறந்ததினத்தை கொண்டாடும் பொருட்டு வரும் நீண்ட வார விடுமுறையின் போது நடைபெறுவது. பெரும் திரளாக இசை ரசிகர்களை  கவரும் விழா. இருபதுக்கும் அதிகமான கர்நாடக இசைக்  கலைஞர்கள்  மூன்று  நாட்கள் சிட்னியிலே வந்து இசைக் கச்சேரியை வழங்குவார்கள். Swaralaya Fine Arts Society யே சிட்னியில் வருடா வருடம் இந்த விழாவை நடாத்துகிறது . சென்னைக்குப் போய் மார்கழியில் இசை கச்சேரியை கேட்டு வந்த இரசிகர்களுக்கு  இது ஒரு வரப்பிரசாதமே. நம்ம ஊரிலேயே நமக்காக இசைவிழா நடக்க நாம் எதற்கு சென்னை போக வேண்டும்? காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் இவ்விழா இரவு  ஒன்பது முப்பது மணிவரை நடைபெறும். மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில்   இன்று கர்நாடக இசை உலகின் நட்சத்திரம் என ஒளிரும் அத்தனை கலைஞர்களின்  இசையையும் கேட்டு மகிழலாம்.


காலை ஒன்பது மணியில் இருந்து ஒன்றரை  மணிநேரம் ஆஸ்திரேலியாவில் வாழும் இளம் கலைஞர்களை  ஊக்குவிக்கும் இசை நிகழ்சிகள் நடைபெறும். ஆர்வமுடன் பல இசை பயிற்சி நிலையங்களும் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்துவார்கள். இளம்  கலையர்களுக்குள் போட்டியும் நடத்தி பரிசில்களும் கொடுத்து அங்கீகாரமும் வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் இசை பிரவாகத்திலே நீங்கள் மூழ்கலாம். அத்தனை இசைக் கலைஞர்களும் வரும்போது நிச்சயமாக ஒரு தேர்ந்த நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை மரபாக்கி கொண்டனர் Swaralaya Fine Arts Society . இம்முறை ஜூன் 12 அன்றும் நாட்டிய  நிகழ்ச்சியுடனேயே இசைவிழா ஆரம்பமானது.
மானசி பிரசாத் என்பவர் "கிரிதர மீரா" என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடாத்தினார். பக்த மீராவின் வாழ்வை ஹிந்துஸ்தானி இசையுடன் ஆடி காண்பித்தார். இனிமையான குரலிலே ஹிந்துஸ்தானி மெட்டிலே இறை வாழ்த்து பாடினார். அதை தொடர்ந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட இசையை பின்னணியாக கொண்டு நாட்டியம் நடைபெற்றது. விளையாட்டுப்  பெண்ணாக  கண்ணனிலே கொண்ட அன்பு வயதின் ஓட்டத்திலே கண்ணனையே காதலனாக  மோகிக்கின்ராள்   மீரா. ஆனால் உலக வழக்கிலே சம்பிரதாய திருமணம், மன்னனான மணாளன் இறக்க உடன் கட்டை ஏற மறுத்து கண்ணன் புகழ்பாடும் பக்தையாக மீரா சித்தரிக்கப்பட்டார். மானசி பிரசாத் மீராவாக ஆடி யாவரின் பாராட்டையும் பெற்றார்.கர்நாடக இசை நிகழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது கர்நாடக சகோதரர்களான சசிகிரண் - கணேஷ் சகோதர்களின் இசை நிகழ்ச்சியே. இவர்களிடம் இருந்து பெருகிய இசை நாதமோ நடக்க இருக்கும் நிகழ்சிகளுக்கு ஆரம்பமாக அமைந்தது. இசை என்பது கர்ப்பக் கிரகத்தில் இருந்து ஆண்டவன் அருள் பரிபாலிப்பது போன்றதே. இங்கோ கலைஞர்கள்  அமர்ந்த மேடையே கர்ப்பக் கிரகம் ஆகின்றது. அங்கு அவர்கள் பெருக்கும்  நாத வெள்ளம்  ஆகர்ண சக்தியுடன் மண்டபத்தை வந்தடைகின்றது. இசையால் கவரப்பட்ட இரசிகர் தம்வயம் இழக்கின்றார்கள். கலைஞர்களும்  இரசிகர்களும் சங்கமமாவதே இசையின் நாதத்திலேதான்.

கர்நாடக இசையோ பக்தியுடன் இசையை பருகுவது. பக்தியற்ற இசைக்கு இங்கே இடமே கிடையா. நீங்கள் நாத்திகராக இருக்கலாம் கர்நாடக இசையிலே லயித்து அந்த நாதத்திலே, மோனத்திலே, மயங்கும் போது இதுதான் தெய்வீகமோ? எனக் கேட்பீர்கள். அல்லது அந்த மகோன்னத உணர்வை புரிந்து உணர்ந்து அதை விழக்குவதற்கு வார்த்தையை  தேடுவீர்கள்.


முதல் நாள் மாலை நிகழ்ச்சியாக அமைந்தது O .S தியாகராஜனின் இசை நிகழ்ச்சி.
 20 , 25 வருடங்களுக்கு முன் தியாகராஜனின் மிடுக்கான சங்கீதத்தை இரசித்தவள் நான். காலத்தின் ஓட்டத்திலே இன்றோ வயதால் மூத்த கலையர் அன்றைய மிடுக்கு இல்லைத் தான், ஆனால் சுகமான சங்கீதத்தை வழங்கினார். தென்றல் என வந்த இசையின் சுபா அனுபவத்தை பெற்றோம்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி மணிமாறனின் இசை கச்சேரியுடன் ஆரம்பமானது. பெயருக்கேற்ப மணியான தமிழ் பாடல்களையே பாடினார். "ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை கானகர்" என தில்லை சிதம்பரனை பாடியவர் மணிமணியாக தமிழிலே பாடி எம்மவர் பலரின் தாகத்தை தீர்த்தார்.
மதிய நிகழ்ச்சி கன்னியாகுமரி அவர்களின் வயலின் இசை. தனது சிஷ்யனான எம்பார்-கண்ணன் உடன் இணைந்து இசை வழங்கினார். மிருதங்கம் கடம் தவிர தவிலும் ஒத்திசையாக அமைந்தது. வாத்திய இசை என்னும் போது வார்த்தைகளையும் வென்ற இசையல்லவா. மழை என பொழிந்தது இசை இரசிகரான நாம் தோய்ந்து, நனைந்து, இசை வெள்ளத்திலே நீந்தினோம், மூழ்கினோம். வார்த்தைகளே அற்ற அந்த வசீகர இசையை நான் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியுமா?
இரண்டாம் நாள் மாலை மல்லாடி சகோதரரான ராம்பிரசாத் - ரவிகுமார் சகோதரர்களின் இசை கச்சேரி களையான கம்பீர சங்கீதம். இருவரும் இணைந்து பாடுவது இசைக்கு மெருகூட்டியது. இரண்டு நாட்கள் இருக்கையில் இருந்து சோர்ந்த இரசிகரை அவர்கள் சங்கீதமோ உத்வேகம் ஊட்டி களைப்பை போக்கியது. நேரம் போவதே தெரியவில்லை.அதை யடுத்து நித்திய ஸ்ரீ மகாதேவாவின் இசைக் கச்சேரி. அவர் இசையோ கம்பீரமும், நளினமும் கலந்த சங்கீதம். D . K . பட்டம்மாளின் பேத்தி பாரம்பரியத்தின் வாரிசு என எடுத்து கூறுவது போல ராகம், தாளம் பல்லவியை விளக்கி இசைத்தார். நித்தியஸ்ரீ 12 வயதில் இருந்து தனி கச்சேரி செய்வதை தவறாது கேட்டு இரசித்தவள். எனது கணவரோ நித்தியஸ்ரீ யின் பரம இரசிகர். ஆனால் பல வருடங்கட்கு பின்பு நித்தியஸ்ரீ ஒரு இசை மேதையாக கண்டேன். அன்று அரங்கத்திலே அங்கிள் கணேசரை கண்டால் அங்கிளுக்கு பிடித்த  இராகத்தை பாடும் பெண் இன்று மேதமையுடன் பாடுவதை காண அவர் இல்லையே என வருந்தினேன்.

 மூன்றாம் நாள் இசை சங்கமம் என்ற நிகழ்ச்சி சிட்னி கலையர்களும் வருகை தந்த கலையரும் பங்கேற்ற நிகழ்ச்சி ,  ஜனரஞ்சகமான அந்த நிகழ்சியை நான் பார்க்க முடியவில்லை. கவலை தான்.

கர்நாடக இசை வழங்க நிஷா ராஜகோபாலன் வந்தமர்ந்தார். இளமையுடன் கூடிய வசீகரத் தோற்றம். தோற்றத்திலே மயங்கினோம். இசைக்க தொடங்கினார் தன்னை மறந்து அவர் இசையிலே இணைந்தார். நாமும் அவருடன் இசையில் இணைந்தோம். அபார திறமை உள்ள இளம் கலையர். நாளை நான் நிச்சயமாக ஒரு பெரிய மேதை ஆவேன் எனக் காட்டியது அவர் சங்கீதம்.
8 வயது சிறுவனாக தனது வேணுகானத்தால் உலகை மயக்கிய சிறுவன் ஷஷான்க் இன்று இருவதுகளின் இறுதியில் இருக்கும் இளைஞன். குழல் ஓசையால் எம்மை மயக்கினான். அவனது இசை பாரம்பரியத்தையும் தாண்டி புதுமை படைக்க துடிக்கும் இளையனின் வேகத்தை கண்டோம்.

சுதா ரகுநாதன் அன்றைய இசை நிகழ்சியை தனது குருவான M . L வசந்தகுமாரிக்கும் அவரது குருவான G . N பாலசுப்ரமன்யத்திற்கும் சமர்பித்தார். இவ்வருடம் M . L . V யின் 80 ஆண்டு நிறைவு G . N . B யின் 100 ஆண்டு நிறைவு என அறிவித்தார். அன்றைய இசை உலகில் G . N . B புதுமை படைத்தவர். G . N . B பாணி என ஒரு தனி பாணியை வகுத்தவர். M . L . வசந்தகுமாரி G . N . B யின் பிரதம சிஷ்யை சுதா ரகுநாதன் M . L . V யின் வாரிசு. இன்று G . N . B வகுத்த இசை பாணி சுதாவின் இனிய சங்கீதமே.T . M . கிருஷ்ணா கம்பீர தோற்றம் களையான சாரீரம். இன்றைய இளம் பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவன் கிருஷ்ணா. அவரது இசையோ இசைக்கு வழிகாட்டி என யாவரும் ஏற்றி போற்றும் செம்மன்குடியான் பாணியை சேர்ந்தது. தனது அபார திறமையால் கூடியிருந்த கூட்டத்தை மெய்மறக்கச் செய்தார். சம்பிரதாய சங்கீதம் இதுதான். உணர்ந்து உணர்ச்சியை சிந்தி நான் பாடுவேன், எனது இசை எதற்கும் ஈடு இணை அற்றது என்றது அவரது இசை. இறுதியிலே மக்கள் கர ஓலி மண்டபத்தையே உலுக்கியது. வீடு திரும்பும் போது எனது மகனோ அப்பாவிற்கு பிடித்த "சரச சாம பேத தண்ட சதுர" என்ற பாடலை பாடிய படி வந்தான். எப்போ 2011 ஜூன் வரும் அடுத்த இசை விழாவைக்காண?

1 comment:

Abarnaa said...

மாமி இன்று உங்களைப் பற்றிய விடயங்களை இணையத்தில் தேடும் போது இந்த ஆக்கத்தைப் பார்க்கக் கிடைத்தது. மிகவும் அருமையாக உள்ளது.