தைத்திருநாள் தமிழர் திருநாள் கொண்டாட்டம்!

மெல்பனில் 1992 ஆம் ஆண்டில் ஒத்த கருத்துடைய பலர் இணைந்து தொடங்கப்பட்ட விக்டோரியா தமிழ் கலாச்சார கழகம் வெள்ளிவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடிய பெருமையுடையது. திரு. விக்கிரமசிங்கம்,  திரு. சச்சிதானந்தன், திரு. சுந்தர், திரு. நவநீதராஜா போன்றோருடன் நானும் இணைந்து தொடங்கப்பட்ட இக்கழகம் பொங்கல்விழாவினை கொண்டாடி வருகிறது.


இக்கழகத்தில் சுமார் பத்து ஆண்டுகளாக மூன்று முறை தலவராக இருந்த நான் இப்போது அதன் காப்பாளராகவும் இருக்கிறேன். கொரணா காலகட்டத்தில் ஏற்பட்ட மக்கள் ஒன்று கூடலைத் தவிர்த்திருந்ததால் பொங்கல்விழா கொண்டாட்டத்தை தவிர்த்திருந்த நாங்கள் அதன்பின் பொங்கல்விழாவை தொடர்ந்து
கொண்டாடி வருகிறோம்.

எங்கள் தொண்டின் காரணமாக புலம்பெயர்ந்து வந்தவர்களின் குழந்தைகளுக்காக தமிழ்ப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தினோம். பின்னர் தமிழைக் கற்பிப்பதற்காகவே பள்ளிகள் ஏற்கனவே இயங்கிவந்த படியால் எங்களிடம் பயின்ற மாணவர்களை அப்பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தோம்.

எமது கலாச்சார கழகம் ஆரம்ப காலங்களிம் வாணிவிழா, நத்தார் விழா போன்றவற்றை நடத்த வந்த போதிலும் “தைத்திருநாள் தமிழர் திருநாள்” என்ற பிரகடனத்துடன் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்விழாவை
கொண்டாடி வந்தோம். பொங்கல் விழாவானது டாண்டினாங் நகரசபை மண்டபம், ஸ்பிரிங்வேல் நகரசபை மண்டபம் போன்றவற்றில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க சிறப்புடன் நடத்தப்பட்டது.

குறிப்பாக நான் தலைவராக இருந்த ஆண்டில் டாண்டினாங்

உயர்திலைப் பள்ளியின் மண்டபத்தில் நடந்த பொங்கல்விழாவைச் சொல்லலாம். இவ்விழா மாலை ஆறுமணி தொடங்கி இரவு பதினொருமணி வரை நடந்தது. மக்களைக் கவரும் பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அப்போது மக்கள் இடம் பற்றாமல் அரங்கத்துக்கு வெளியேயும் விழா முடியும் வரை இருந்து கண்டு களித்தனர்.

இவ்விழா இவ்வாண்டு ஜனவரி 18ஆம் நாள் சாயிற்றுக் கிழமை டாண்டினாங்க் ஹார்மனி ஸ்கொயர் என்ற திறந்த வெளியில் நடந்தது. பகல் பன்னிரெண்டு மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் பல அரசியல் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். குத்து விளக்கு ஏற்றுதலைத் தொடர்ந்து பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டோம்.


விழாவில் தமிழரின் பாரம்பரிய இசையான பறை அடிக்கும் நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டியம் போன்றவை நடந்தன. விழாமுடிவில் எல்லோருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதுடன் இரண்டு மணியளவில் பொங்கல்விழா சிற்பாக நிறைவு பெற்றது.

























































No comments: