பெயரை மாற்றி அழைப்பதால் வரும் மன உளைச்சல்! - சங்கர சுப்பிரமணியன்.

 பெங்களூரு நண்பர்கள் வட்டம் பெங்களூரிலுள்ள மத்திய அரசு நிறுவனத்தில் சில நண்பர்கள் இணைந்து நடத்தும் ஒரு அமைப்பு. அதில் நண்பர்கள் வைத்திருக்கும் வைப்புத்தொகை மூலம் அவசர தேவைக்கு நண்பர்களுக்குள் பணத்தை கடனாக கொடுத்து உதவுவார்கள். அந்த அமைப்பில் ஒவ்வொருமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு உணவகத்தில் நண்பர்கள் கூடி மதிய உணவு உண்பதுடன் அமைப்பு சம்பந்தமான கணக்கு வழக்குகளைப் பார்ப்பது வழக்கம்.


அந்த அமைப்பில் முருகனும் ஜெகனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவர். சில ஆண்டுகளாக முருகனின் சொந்த ஊரான நெல்லையில் இருந்து வந்து அங்கு பணிபுரிந்த சிவலிங்கமும் அவர்கள் அமைப்பில் இணைய அவனும் முருகனின் நெருங்கிய நண்பன் ஆகிவிட்டான்.

ஒருநாள் அலசூரில் இருந்த ஜெகா அலசூர் ஏரிக்கரையில் நடைபயிற்சிக்காக சென்றபோது சிவன்செட்டி கார்டனில் வசித்த
பாலமுருகனை சத்தித்தான். பாலாவும் நண்பர்கள் வட்ட உறுப்பினன் ஆவான். ஜெகாவின் முகத்தில் கவலையின் சாயலைக் கண்ட பாலா,

“ஜெகா, என்ன ஏதோபோல இருக்க. வழக்ககமாக இருப்பது போலில்லையே? என்று கேட்டான்.

“பெரிதாக சொல்ல ஏதுமில்லை. ஆனால் கொஞ்ச நாளாக கவனித்தாயா முருகன் நான்கு ஐந்து முறை என் பெயரையே மாற்றிச் சொன்னான்”

“என்ன சொல்ற? உன் பெயரை மாற்றிச் சொன்னானா?”

“ஆமாம்பா, ஜெகா என்ற என் பெயரையே மறந்நு சிவா என்று அழைத்தான்”

“ஓ, அதுவா? அவன் வேண்டுமென்று அழைத்திருக்க மாட்டான். வாய்தவறி வந்திருக்கும். அவ்வளவுதான்.”

“அப்படியொன்றும் தெரியவில்லை. வாய் தவறி அழைப்பதானால் ஓரிரு முறை என்றால் நம்பலாம்” என்று தன் கருத்தைக் கூறினான்.

இதைக் கேட்டுவந்த பாலமுருகன் அவனைத் தேற்றினான். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கலாம். மேலும் அவர்கள் இருவரும் இப்போது ஒரே இடத்தில் வசிப்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகூட இருக்கலாம். என்ன இருந்தாலும் நீ தான் அவனது நெருங்கிய நண்பன் என்பது உனக்கே தெரியும் என்றான்.

உன்னை அவனால் அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது என்று சமாதானம் செய்தான். உன் பெயரை நான்கைந்து முறை தவறுதலாக சொல்வதற்கே இவ்வளவு வருந்துகிறாயே? சிலர் வேண்டுமென்றே தொடர்ந்து வேறு பெயரைச் சொல்லி மற்றவர்களை அழைத்து வருகிறார்களே அதைப்பற்றி என்ன சொல்வாய்? என்றான்.

“வேண்டுமென்றா? அவர்கள் யார்? ஏன் பெயரை மாற்றி அழைக்கிறார்கள்?”

“எல்லாம் அளவுக்கு அதிகமான கடவுள் பக்திதான். கடவுள் பக்தி அவர்கள் கண்களை மறைக்கிறது”

“நீ சொல்வது ஒன்றும் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. புரியும்படி சொல்” என்றான் ஜெகா.

“சொல்கிறேன் கேள். பெற்றோர் தம் குழந்தைக்கு எவ்வளவு ஆசையாக பெயர் வைத்திருப்பார்கள்? மனைவி கருவுற்றிருக்கும்போதே எப்படியெல்லாம் தேடித் தேடி பெயரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்” என்றவன் மேலும் தொடர்ந்தான்.

அம்மா அப்பா பெயரை வைக்கலாமா? யாருடைய அம்மா அப்பா பெயரை வைக்கலாம். குலதெய்வம் பெயரை வைக்கலாமா? அல்லது அவர்களுக்கு விருப்பமான கடவுளின் பெயரை வைக்கலாமா? அல்லது விருப்பமான வேறு பெயர்களை வைக்கலாமா என்று எப்படி எல்லாம் யோசித்து வைத்திருப்பார்கள். அப்படி வைத்த பெயரை இவர்கள் பக்தியைக் காட்டுவதற்காக எப்படி மாற்றலாம் என்றான்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பல குடும்பங்களில் குழந்தைக்கு பெயர் சூட்டுவதை அழைப்பிதழ் அடித்து எல்லோரையும் அழைத்து தடபுடலாக விருந்து வைத்து அதை பெரிய விழாவாகவே நடத்துவார்கள். அப்போது பெற்றோர் பெரியோர் ஆகியோர் குழந்தையின் காதில் அந்த பெயரை ஆசையுடன் சொல்ல அப்பெயர் குழத்தைக்கு பெயராக நிலைக்கிறது.

இப்படி சீராட்டி வைத்த பெயரை சிறுமை படுத்தும் விதமாக இவர்களின் பக்தியை விளம்பரம் போட்டு காட்டுவதற்கு எப்படி மாற்றிச் சொல்லமுடியும். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? கண்டிப்பாக கடவுள்கூட இதையெல்லாம் விரும்ப மாட்டார்.

என்னப்பா சொல்ற, இப்படியெல்லாமா நடக்கும்? அவர்கள் எப்படி மாற்றுகிறார்கள் என்று ஜெகா கேட்டான். அதுவா அதையும் சொல்கிறேன். இப்போது கொஞ்சம்பேர் இப்படிக் கிளம்பியிருக்கிறார்கள்.

அவர்கள் தொலைபேசியில் அழைக்கும் போதும் தொலைபேசியில் பேசிவிட்டு வைக்கும்போதும் நம் பெயரைச் சொல்லமாட்டார்கள். நேரில் சந்திக்கும்போதும் பிரியும் போதும்கூட நம் பெயரைச் சொல்லமாட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் வணங்கும் கடவுள் பெயரைத்தான் சொல்வார்கள்.

அட கடவுளே? இதென்ன கொடுமை. அதுசரி, இவர்கள் வேற்று மதத்தவரை சந்திக்கும்போதோ அல்லது அவர்களிடம் பேசும்போதோ இதேபோல்தான் நடப்பார்களா என்று கேட்டான் ஜெகா. அதோடு விடவில்லை. இவர்கள் காவல் நிலையத்திலோ அல்லது அரசு அதிகாரிகளைச் சந்திக்கும்போதே இதேபோல் அழைப்பார்களா என்றும் கேட்டான்.

இவர்கள் உணவகத்துக்குப் போனால் கடவுள் பெயரைச் சொல்லி ஒரு மசால் தோசை கொண்டுவாங்க என்பார்களா? திரும்பவும் கடவுள் பெயரைச் சொல்லி அப்படியே ஒரு கப் காபி கொண்டுவாங்க என்று சொல்வார்களா? காய்கறிக் கடைக்கு சென்றால் கடவுள் பெயரைச் சொல்லி ஒரு கிலோ கத்தரிக்காய் கொடுங்க என்று கேட்பார்களா? என்றெல்லாம் கேட்டான்.

அப்படியெல்லாம் நடந்தால் இவர்களைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நீயே புரிந்துகொள் என்றான். அதற்கு பாலா அது எனக்குத் தெரியாது என்றான். ஆனால் இப்படிச் செய்பவர்களின் பெயரை நாமும் மாற்றலாம் என்றான். அது எப்படி நாம் அவர்களின் பெயரை மாற்றலாம் என்ற ஜெகாவிடம்,

“ஜெகா, நமக்கு விருப்பமான கடவள் சிவன் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் தொலைபேசியில் பேசும்போது அல்லது நேரில் சந்திக்கும்போது இதுபோன்ற பக்தர்களிடம் அவர்கள் நம்மிடம அவர்கள் கடவள் பெயரை சொல்லி அழைக்கும்போது
அவர்கள் முறையிலேயே நாமும் அவர்கள் பெயரைச் சொல்லாமல் ஒம் நமசிவாயா என்று அழைத்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?

அல்லது நமது குலதெய்வமான முனியாண்டி பெயரைச் சொல்லியும் அழைக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை” என்றான்.

இப்படி பாலா சொன்னதும் ஜெகாவுக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை. பக்கத்தில் நடைபயிற்சிக்காக நடப்பவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்றுகூட எண்ணாமல் கண்களில் நீர் வடியும்படி சிரித்தான். சிரிப்பதை விட்டபாடில்லை.
சற்றுமுன் அவன் முகத்தில் தெரிந்த கவலையின் சுவடே மறைந்து போயிருந்தது. நண்பனை எண்ணி கவலையில் இருந்த ஜெகா கவலையை மறந்து சிரித்ததை எண்ணி பாலா மகிழ்ச்சி அடைந்தான்.

அதைவிட ஜெகா சொன்னதுதான் பாலாவுக்கு ஆறுதலாக இருந்தது. பெற்றோர்கள் ஆசையுடன் வைத்த பெயரையே எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி மாற்றி அழைப்பவர்கள் மத்தியில் நீ சொல்வதை கேட்டபின் ஏதோ மறதியால் முருகன் கூப்பிட்டதில் அப்படியொன்றும் தப்பில்லை என்றான்.

தெரிந்தோ தெரியாமலோ மறந்தோ வாய் தவறியோ முருகன் நான்கைந்து முறை பெயரை மாற்றிச் சொல்லிவிட்டான். ஆனால் அதிதீவிர பக்தர்கள் பேசும் போதல்லாம் பார்க்கும் போதெல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே நம் பெயரை மாற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே?

பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம் என்றெல்லால் பேசும் இவர்களுக்கு ஒருவருக்கு பெற்றோர் ஆசையாக வைத்த பெயரை மாற்றிச் சொல்வது பாவமில்லையா என்று ஏன் தெரிவதில்லை? என்று இப்படியெல்லாம் ஜெகா சொன்னதுதான் பாலாவுக்கு ஆறுதல் தந்தது.

மேலும் அவர்கள்தான் மற்றவர்கள் மனது வேதனைப்படுமோ என்று கொஞ்சம்கூட நினைக்காமல் அப்படி நடக்கிறார்கள் என்றால் நாமும் அப்படி நடக்க வேண்டுமா? அதுமட்டுமின்றி எங்கோ சிலர்தான் இப்படி ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் அப்படியல்ல. அவர்களைப்போல் நாமும் நடந்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்றான்.

அவர்கள்தான் அவர்களது கடவுள்பெயரை வீணாக சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள் என்றால் நாமும் ஏன் முனீஸ்வரர் பெயரை சர்ச்சைக்கு உள்ளாக்கவேண்டும் என்றும் சொன்னான். ஜெகா இவ்வாறெல்லாம் சொன்னது அந்த பக்தர்களைவிட அவன் மிக மிக உயர்ந்து நிற்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. பக்தியும் மற்றவர்களின் மனதைப் பாதிக்காதபடி பண்போடு இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுவதாக இருந்தது.







-சங்கர சுப்பிரமணியன்.

No comments: