செந்தமிழ் (கவிதை) நடை – அன்று தொட்டு இன்றுவரை! இயற்றியவர் பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்

 














சென்றபல நூற்றாண்டாய்  மரபுக் கவிதை

        செந்தமிழுக் கணிசேர்த்த திறத்தை ஆய்ந்தும்

வென்றேபுதுக்; கவிதையெனப் புதுமைப் சொட்ட

   விதைப்பவரின்; படைப்புகளை மெல்ல முகர்ந்தும்

நன்றெனவே மலரவரும் நாளைய சந்ததி;

   நமக்குத்தர விருப்பவற்றைக் கனவாய்ப் பார்த்தும் 

இன்றெனக்குப் பட்டதினைக் கவியிற் தருவேன்

   என்கருத்திற் பிழையுண்டேல்; பொறுப்பீர் தானே!

 

கவிதைகளின் பரிணாமக் கதைதனைக் கவியிலே

   கச்சிதமாய்ச் சுருக்கியென்றன் கருத்தைத் தருவேன்

புவியிலன்று பூத்திட்ட கவிவகை  என்னே!  

  புதுமையெனப் பொலிகின்ற புதுக்கவி என்னே!

தவிப்புடனே சொல்கின்றேன்  நாளைவருஞ்  சந்ததி

   தமிழைத்தான் நலிவடையச் செய்யுமோ அன்றித்

துவிமொழியாய் ஆங்கிலமும் தமிழும் கலந்த

   தூனமிகு மொழிக்கவிதை படைக்குமோ அறியேன்!

 


பொதுவாகஇன்று.. புதுக்கவிதை படைப்பவர்கள்

 

பைந்தமிழின் பழம்நூல்கள் அழியா தென்றும்

   பாரதனில் தமிழ்மொழியே சிறந்த தென்றும்

செந்தமிழின் சுவைதேனின் இனிமை என்றும்

   தெரிந்திருந்தும் கொடுந்தமிழை வளர்க்கின் றாரே!  

சந்ததமும் வேற்றுமொழி கலந்து தமிழைச்

   சந்தையிலே விற்கின்றார்! தடுத்தாட் கொண்டு

விந்தையெனத் தூயதமிழ் வளர்க்க மறைமலை

   வித்தகனார்; போன்றொருவர் தோன்று வாரோ?

  

சிலரெழுதும் புதுக்கவிதை மனதைக் கவர்ந்து

   சிந்தனைக்கோர்  விருந்தெனவே மகிழ வைக்கும்!

சுலபமென விளங்கிவிடும்;! சந்தம் இனிக்கும்!  

   சொல்லடுக்கில் அழகிருக்கும்! எதுகை மோனை

இலையெனினும் பொருள்சுவைக்கும்! வாழ்த்து கின்றேன்

   இவர்களைநாம்  ஊக்குவித்தல் நன்றே யன்றோ?

உலகிலிவர் படைப்பெல்லாம் நிலைத்து நின்று

   உயிர்வாழுமா என்பதைக்; காலமே கணிக்கும்!

 

செஞ்சொற்கள் தமிழ்மொழியிற்; பஞ்சம் இல்லை

   தேடிநறுஞ் சொற்களைப்பலர் தேர்வ தில்லை!

விஞ்சுபுகழ் மலிந்தபழம் இலக்கி யங்கள்

   விளங்குவது கடினமெனப் படிப்ப தில்லை!

கொஞ்சமெனத் தெரிந்தசொல்லை வசன மாக்கிக்

   குறுந்துண்டு துண்டுகளாய் வெட்டி வெட்டி

வாஞ்சையொடு ஒன்றின்கீழ் ஒன்றாய் அடுக்க

   வந்ததடா புதுக்கவிதை படைத்தேன் என்பார்!

 

பரிதாபப் படுகின்றேன்! பலரின் கவிதை

   படிப்பாரிலை! படிப்போர்கள் சிலரே என்றாலும்

பெரிதாயவை காலங்கடந்து நிற்குமோ என்றால்

   பேதையான் என்சொல்வேன் யதார்த்த மிதுவே!

சொரிமழைபின் பெருந்திரளாயப் பறந்து மடியும்

   சொற்பவுயிர்ப் புற்றீசல் போன்று தோன்றித்

தெரியாத இடமேகி மறையுமே உங்கள்

   சிரிப்பில்வரும் நிமிடநேர இன்பம் போலே!

 

புதுக்கவிதை யாப்பவர்கள் பலரைக் காண்பீர்!

   பொழுதுபோக்காய் எழுதுவோரே அதிகம்! அதிகம்!

மதுவெறியில் பிதற்றுதல்போல் மூன்றோ நான்கு

   வரிக்குவரி ஓரிருசொல் அடுக்கி விடுவார்

எதுகைமோனை எதற்கென்பர்! பொருள்அங் கிராது

   இருப்பதெலாம் சந்தமில்லாச் சொல்வரிசை காண்பீர்!

இதுபோன்ற கவியாற்பயன் ஏது என்றால்

   எழுதுவோர்தமைக் கவிஞரென்று மகிழ்தல் ஒன்றே!

 

அருந்தமிழின் இனிமையிலே காத லுற்று

   ஆவலொடு பலவிதமாய் ஆர்வலர் சிலரோ

இருக்கும்புலம் பெயர்நாட்டில் தடம்ப திக்க

   எழுதித்தினம்; கவியியற்றி; இதமாய் எமக்கு

விருந்துவைக்கும் பெற்றிதனைப்; போற்று கின்றேன்!

   வியனுலகில் இன்றுவரை தமிழைக் காத்துப்

பெருஞ்சேவை புரிகின்ற இவர்கள் போன்றோர்

   பெருகியெங்கும் இறையருளாற் தோன்ற வேண்டும்! 

 

நாளைய நிலை எப்படியோ?

  

விஞ்சுமெழிற் கொஞ்சுதமிழ் வரும்நூற் றாண்டில்

   விருத்திபெற்று நன்னிலையில் வாழ்ந் திடுமோ?

கஞ்சலென ஆங்கிலத்தைச் சேர்த்தே எழுதிக்

   கழிவெனப்புதுக் கவிபடைப்போர் தோன்று வாரோ?

அஞ்சுகிறேன் இந்தநிலை வாரா திருக்க

   அழகுதமிழ்க் கவிகொண்டு வைதாலும் சரணம்

தஞ்சமெனத் தொழுவோர்க்கருள் முருகன் தோன்றி

   தன்னேரிலாத் தூயதமிழ் வளர்க்க வேண்டும்!

 

இன்றையவெம் சீர்கேட்டைச் சற்றே கேட்பீர்

   எம்மவர்கள் ஆங்கிலத்தைக் கலந்தே தமிழை

நன்றென்றே தயக்கமின்றிப் பேசு கின்றார்

   நாடெங்கும் காண்கின்றோம்! வரும்நூற் றாண்டில்

என்றென்றும் ஆங்கிலச்சொல் கலந்தே கவிதை

   எழுதுவதே சிறப்பென்று இன்றமிழ் அன்னையைக்

கன்றிடவே செய்வோரின் மனத்தை மாற்றக்

   கந்தவேள்தான் பெருங்கருணை காட்ட வேண்டும்!

 

 அன்றைய நிலை!


ஈரடியால் மூன்றளந்து நான்கு தந்த

   ஈடில்லாக்  குறளோடு எழில்நா லடியார்

சீரடிகள் கொண்டெழுந்த புறநா நூறு!

   செந்தமிழ்நற் காப்பியங்கள்! சங்க நூல்கள்

பாரடிமேல் இன்றுவரை நிலைக்கு தென்றால்

   பாக்களெலாம் மரபுவழி எழுந்ததா லன்றோ?

நேரடியாய்ச் செப்பிடுவேன் தமிழ்மொழி என்றும்

   நிலைக்குமென்றால் இவையென்றும் நிலைப்பதாற் றானே!

 

தமிழன்னை செங்கோலோ மூலரின் மந்திரம்

   தலையாய தொல்காப்பியம் அவள்;சிங் காசனம்

அமிழ்தமாம் ஞானபோதம் நெற்றித் திலகம்

   அற்புதச்சேக் கிழாரளித்த புராணம் திருமுடி

குமிலமிடும் வளையாபதி கோல வளையல்

   குண்டலகேசி யவள்தன் குமிண்சி ரிப்பு

கமழ்தேன்தே வாரங்கள் கழுத்தின்;; பதக்கம்   

   கழுத்திலணி; பூமாலை அருட்பா டல்கள்!

  

பொன்னையெவர் உரைத்தபின்பு நிறுத்துப் பார்த்தால்

   புதுநிறையோ குறைந்திருக்கக் காண்பீர்! ஆனால்

முன்னெழுந்த சங்ககாலப் பாடல் ஒன்றை

   முழுநாளும் உரைத்துரைத்து விளக்கங்; காணில்;

பன்மடங்காய்ப் பொலிந்திட்டுப் பொருள் விரிக்கும்

   பாங்கெமக்கு  வியப்பூட்டிக் கிறங்க வைக்கும்

கன்னித்தாய் எமக்களித்த முதுசொம் என்றால்;

   காலத்தால் அழிவில்லாச் சங்கப் பாக்கள்!

 

நிறைவாக

 

எத்தனையோ இனிமைமிகு சொற்கள்; கூட்டி

   எதுகையொடு மோனையெலாம் விஞ்சிக்; கேட்போர்

சித்தமது கிறங்கிடவே சீருந் தளையும்

   சேர்ந்ததொரு நடையழகுஞ் செவிக்கு இனிய

சொத்தெனவே பொருள்உவமை அணிகள் தவழச் 

   சுவைபில்கும் மரபுவழிக் கவிதை படைக்கும்

வித்;துவத் திறன்மிக்கோர் வியனுல கெங்கும்

  விஞ்சிடவே தமிழ்வாழும்; கவிச்சொல் ஏற்பீர்!

 






No comments: