தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 11…..சங்கர சுப்பிரமணியன்.


கோவிலுக்கு செல்லாமல் நம்மை நோக்கி கடவுள் வருவார். ஆதலால் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவரே நம்மைத் தேடியும் வருவார். அவர்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பவர் ஆயிற்றே. ஆம் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததையே சொல்கிறேன். இப்போது மாடசாமி அண்ணாச்சி குழப்பத்துடன் என்னை கேட்கிறார். நீ எந்த கோவிலுக்கு போனாய் அவர் எப்போது குறுக்கே வந்தார் என்று கேள்வி கேட்டார்.


அண்ணாச்சி, பழமொழி சொன்னால் அனுபவிக்க வேண்டும். இதுமாதிரி கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது என்று சொல்லி விளக்கினேன். ஹுட்டாங்கை பார்க்க முடியாமல் தவறிப்போனதல்லவா? இப்போது அதுவே குறுக்கே வந்ததை சொன்னேன் என்றேன். அவர் முகத்தில் போதிமரத்தடியில் இருந்த புத்தரின் தெளிவைக் கண்டேன்.

மாடியில்லாமல் சின்ன சின்ன வீடுகள் ஒன்றையடுத்து ஒன்றாக சிறு

சந்துக்களில் இருப்பதைக் காணமுடிந்தது. பீஜிங்கில் இப்படி ஒரு இடமா என்று நம்பவே முடியாமல் இருந்தது. பழமையைப் பாதுகாக்கத்தான் இந்த ஏற்பாடு. அதுமட்டுமல்ல ஹுட்டாங் சுற்றுலா பட்டியலில் சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளதும் அவற்றைப் பாதுகாக்க ஒரு காரணம். சீனா முழுக்க இதுபோன்ற ஹுட்டாங்கை சில இடங்களில் பாதுகாத்து வைத்துள்ளனர்.

சிறிய வீடுகளில் சின்ன ஜன்னல். வீடுகளுக்கிடையே சிறு கடைகள் என்று அதன் தோற்றம் எழுநறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் அத்தெருக்களில் நடந்து செல்வதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஹுட்டாங்கை கடந்து ஒரு திருப்பத்தில் திரும்பவும் மழை தூறல் போட ஆரம்பித்து ஒரு திருப்பம் ஏற்பட்டது.

என்னுள் ஆவி புகுந்து கொண்டது. புதியவனம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது. நான்வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது என்ற மனநிலையை ஏற்படுத்தியது. சீனாவின் கடும் வெயிலால் ஏற்பட்ட வெப்பத்தை மாற்றி குளுகுளுவென ஒரு சூழலை உண்டாக்குயது. ஆனால் நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுத்த கதையாக எல்லோராலும் வாத்தியார் ஆக முடியாது என்பதை உறுதிப்படுத்த பெரிய மழையாக பெய்து கெடுத்தது.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான். இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்றபடி குடை விற்பவன் அங்கு எப்படி வந்தான் என்பதைத்தான் நம்பமுடியவில்லை. அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது ஒருவருக்கு மட்டும் பட்டாபோட்டு கொடுக்கவில்லை அது இந்த குடை விற்பவனுக்கும் அல்லவா பொருந்துகிறது.

ஆபத்பாண்டவன் என்பது ஆபத்துக்கு உதபுபவன் என்று பொருள் கூறுமானால் இவனும் அந்த வரிசையில் இடம் பிடித்துவிட்டான். இவனும் எல்லா வல்லமைகளையும் பெற்றவன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டிருந்தான். புராணகாலத்தில் கிடைத்த அட்சயபாத்திரம் உறுமாறி அவன் முன்னே மேஜையாக இருந்தது. அதன்மேல் அட்சயபாத்திரம் வழங்கிய உணவைப்போல குறையாமல் குடைகள் குவிந்து கொண்டே இருந்தன.


அவனைக் கடந்து வெகுதூரம் சென்று என் கண்ணிலிருந்து மறையும்வரை அவன் குடைகளை விற்றுக் கொண்டிருந்தான். அட்சயபாத்திரம் உணவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்றுமட்டுமே படித்திருக்கிறோம். அதில் உணவு தீர்ந்து போனதா என்று தெரியுமா என்றால் நமக்கு தெரியாது அதுபோல இவனிடமும் குடைகள் தீர்த்தனவா என்பதும் தெரியாது.

இந்த நேரத்தில் ஒன்று என் கற்பனையில் தோன்றுகிறது. கற்பனைக்கு பொறுப்பு துறக்கிறேன. அட்சயபாத்திரம் போலவே சங்கப்பலகையும் இருந்திருக்குமோ என்பதுதான் அது. சங்கப்பலகையா? ஆம், பொற்றாமரைக் குளத்தில் மிதந்த சங்கப்லகை. திருக்குறளை சங்கப் பலகையில் வைத்ததும் அது தண்ணீரில் மூழ்கி பின் திருக்குறளுடன் மேல் வந்தது.
சங்கப்பலகையின் தன்மை என்னவெனில் அது தகுதிவாய்ந்த நூல் என்றால் மட்டுமே பலகையுடன் திரும்பவும் மேலெழுந்து வரும்.

இல்லாவிடில் தகுதுயற்ற நூலை குளத்தினடியில் போட்டுவிட்டு பலகை மட்டும் மேலே வரும். இது என்ன விட்டலாச்சாரியா தெலுங்கு படம்போல் மாயமாக இருக்கிறது என்று எண்ணாதீர்கள். சங்கப்பலகையின்
மர்மத்தை உடைக்க(கற்பனைதான்) தமிழனின் மதி நுட்பத்தையும் திறமையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். சான்றாக பலவற்றை தருகிறேன்.

காற்றின் வேகமறிந்து பாய்மரக் கப்பல்கட்டி பயணித்தவன்.

கப்பல்கட்டுமானத்தில் திறமைசாலியான அவன் கப்பல் கட்டி உலகம் முழுக்க வணிகம் செய்தவன். கப்பல்களில் யானைகளை ஏற்றிச்சென்று யானைப்படை கொண்டு கடல் கடந்தும் போர் புரிந்தவன். யானைப்படை கொண்டு சேனை பலவென்று வாழப்பிறந்தாயடா என்று கண்ணதாசன் பாடலில் சொல்லியிருப்பது கடல் கடந்தசோழன் கடாரம் வரை சென்று வென்று வாகை சூடியதை நினைவூட்டவே அன்றுகூறியிருக்கிறான்.

கண்ணதாசனும் தீர்க்கதரிசிதான். இழந்த வரலாற்றை தமிழர் மீட்டெடுப்பர் என்று நம்பினான். தமிழர் வரலாறு மறைக்கப்படுவதை அன்றே உணர்ந்திருக்கிறான். தமிழர் நாகரிகமான கீழடி நாகரிகத்தை திராவிடர் நாகரிகமாக மாற்றும் கண்கட்டி வித்தைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது. கரிகாலன் கட்டிய கல்லணையை இன்னும் சில நாட்களில் திராவிடர்களின் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு என்று நம்பவைப்பார்கள்.

கல்லணை கட்டிய கரிகாலனை நம்பமுடியாதபடி கால்டுவெல்லை நம்பவைப்பார்கள். கால்டுவெல் காலமென்ன கரிகாலன் காலமென்ன என்பதைக்கூட நம்ப முடியாமல் கயிறு திரிப்பார்கள். இன்னும் போகப்போக போதிதர்மனையும் திராவிடன் என்பார்கள். போதிதர்மனோடு திரவிட கட்டடக் கலையும் புலம்பெயர்ந்தது என்பார்கள். விட்டால் சீனப் பெருஞ்சுவரைக்கூட திராவிடர்கள் கட்டியதுதான் திராவிட நாகரிக கட்டடக்கலையின் எடுத்துக் காட்டு அது என்பார்கள்.

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதரையும் கடிக்கத் துவங்குவார்கள். மதம் பரப்ப வந்த கால்டுவெல் எழுதிய நூலான திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதை மறைத்து திராவிடம் என்பதை மட்டும் தூக்கிப்பிடிக்கிறார்கள். அதன் மூலம்
தம் இருப்பை நிலைநாட்ட தமது தாய்மொழியையும் நமது தாய் மொழியையும் திராவிடர்கள் மறைக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு திராவிட நாடு என்று பெயர் வைக்க தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தும் நினைத்தது நடக்காததால் தமிழின் சிறப்பைச் சொல்லி ஆட்சிக்கு வந்தபின் தமிழ் இப்போது வேப்பங்காயாக கசக்கிறது. திராவிட நாடு என்று பெயர் வைக்கமுடியாத தோல்வியின் அவமானத்தை துடைக்க பலவழிகளில் முயன்று வருகின்றனர்.

அந்த வழிகளின் வெளிப்பாடே தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகமென்றும் தமிழர் கட்டிடக்கலையை திராவிடக் கட்டிடக் கலை என்று கூறிவருகின்றனர். இதன் நீட்சிதான் தமிழ்ப் பொங்கலை திராவிடப் பொங்கல் என்று கூறிவருவதாகும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அது இதுதான். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையும் ஆண்டுகொண்டு உள்ளருந்தே தமிழையும் தமிழர் அடையாளத்தையும் அழிப்பதுதான்.

தமிழையும் தமிழர் அடையாளத்தையும் அழிக்க முயல்பவர்களை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே? தமிழன் விடமாட்டான்.
பொற்றாமரைக் குளத்தையும் சங்கப்பவகையையும் கையாளத் தெரிந்த தமிழனுக்கு கண்டிப்பாக தமிழையும் தமிழர் அடையாளத்தையும் அழிக்க முயல்பவர்களை கையாளத் தெரியாமலா போகும்? ஆதலால் அதை உலகெங்கும் பரவி வாழும் தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் பார்த்துக் கொள்வார்கள்.








-சங்கர சுப்பிரமணியன்.

No comments: