தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன
கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக 3 குற்றப்பத்திரிகை தாக்கல்!
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு
வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி
காணிகளை விட்டு வெளியேறுமாறு 62 காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்! ; அறிவித்தல்களும் ஒட்டப்பட்டன! ; களத்தில் இறங்கிய ரவிகரன்
தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன
Published By: Vishnu
17 Jan, 2026 | 04:02 AM
(எம்.மனோசித்ரா)
தித்வா புயலுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள், இலங்கையின் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச் சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாட்டின் இயற்கைக்காடுகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றாடற்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி குறிப்பிட்டுள்ளார்.
தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, தனது அறிக்கையை புதனன்று தன்னிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனர்த்தம் நாட்டின் ஏழு பிரதான நதிப் படுக்கைகளின் சூழல் தொகுதிகளையும் பாதித்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அனர்த்தத்தின் விளைவாக இலங்கையின் கடலோர மற்றும் கடற் சூழல் தொகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி
கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக 3 குற்றப்பத்திரிகை தாக்கல்!
16 Jan, 2026 | 03:48 PM
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் 3 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஊழியர் சிலர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை தவிர ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள இந்த வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், இதனை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நிதிமன்றில் கோரிக்கை விடுத்தது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு தொடர்பான பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு
16 Jan, 2026 | 04:57 PM
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சென்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு, விகாராதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நன்றி வீரகேசரி
வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி
16 Jan, 2026 | 04:20 PM
இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று (16) முற்பகல் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, மீசாலை,
வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 800 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 20 இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தலா 300,000 ரூபாவுக்கான காசோலைகள் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது வழங்கிவைத்தனர்.
வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவ
தற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக, பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், காங்கேசன்துறை துறைமுகப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
“யுத்தத்தினால் பெருமளவான வீடுகள் சேதமடைந்தன. நீண்டகாலம்
சென்ற போதும் அந்த வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் அநேகமானோர் யுத்த சமயத்திலும் இடம்பெயர்ந்திருந்தார்கள். யுத்தத்தின் பின்னரும் இடம்பெயர்ந்திருந்தார்கள். நீண்டகாலமாக தமக்கென வீடோ, இடமோ இன்றி அவர்கள் வாழ்வது நியாயமல்ல.
எமது ஆட்சிக் காலத்திற்குள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களினதும் வீட்டுப் பிரச்சினையை நாம் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எமது அரசாங்கத்தை உருவாக்க பங்களித்தார்கள்.ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு எதிரான மற்றும் உடன்பாடற்ற நிலைப்பாடே நீண்டகாலமாக இங்கு காணப்பட்டது. அதில் தவறில்லை. அரசாங்கம் இனவாதத்தை போசிப்பதாகவோ மக்களின் சொத்துக்களை திருடுவதாகவோ பொதுமக்கள் குறித்து சிந்திக்காமல் இருந்தாலோ அல்லது அரசாங்கம் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாக இருக்குமாயின் அரசாங்கமும் மக்களும் தூரமாவதை தடுக்க முடியாது.
ஏனென்றால் அவை மக்களுக்கு எதிரான முரண்பாடுகளை
உருவாக்கும் அரசாங்கங்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசாங்கங்களாகவே அவை இருந்தன. ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் பொதுமக்களின் அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
தேர்தல் சமயங்களில் மக்களின் மனங்களில் குறிப்பாக வடபகுதி மக்களிடையே எம்மைப்பற்றி குழப்பமும் தெளிவின்மையும் இருந்திருக்கும். எம்மை ஆட்சிபீடமேற்ற வாக்களித்தாலும் சந்தேகத்துடன் தான் வாக்களித்திருக்கலாம்.
எமது அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கு சற்று கூடுதல் காலம் சென்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் கஷ்டங்களை தீர்க்கவேண்டும். அரசாங்கமென்ற வகையில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வீடற்றவர்களுக்கு வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். வரலாற்றில் அதிக தொகையை அதற்காக ஒதுக்கியுள்ளோம்.
மக்களுக்கு சிறந்த வருமான வழியை அமைக்க வேண்டும். குறிப்பாக
விவசாயத்துறை, தெங்குப் பயிர்ச்செய்கை, மீன்பிடித்துறை மற்றும் சிறிய கைத்தொழிற்துறைகள் என்பன இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
அந்த அனைத்துக் கைத்தொழிற்துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை, இருப்பதை விட உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இது அதற்காக பாடுபடும் அரசாங்கம். அது மட்டும் எமக்கு போதுமானதல்ல. நீண்டகாலமாக எமது வாழ்வில் பெரும்பகுதியை யுத்தத்துடனே கழித்தோம். மோதல்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம். சந்தேகத்துடன் வாழ்ந்தோம். குரோதத்துடன் வாழ்ந்தோம்.
தமிழ் மக்கள் குறித்து சிங்கள இனவாதக் குழுக்கள் சந்தேகமாக பார்த்தன. சிங்கள மக்கள் குறித்து தமிழ் இனவாதக் குழுக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கின. நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்தன. அந்த மோதலினால் எவருக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த மோதலினால் எஞ்சியது எதுவும் இல்லை.
வீடுகளை இழந்த குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், பொருளாதாரத்தில் முழுமையான வீழ்ச்சி என்பவை தான் கிடைத்தன. உற்றார் உறவினர்களை இழக்க நேரிட்டது. வடக்கு, தெற்கு இரண்டிலும் உள்ளோர் இந்த அழிவினால் பாதிக்கப்பட்டனர். இந்த முழு அழிவின் பின்னாலும் அரசியல் தான் இருந்தது. அதிகாரத்தைப் பெறுவதற்காக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழ் மக்களை தூண்டிவிட்டார்கள். இவ்வாறான இனவாத அரசியல்தான் முன்னர் காணப்பட்டது. இன்றும் ஆங்காங்கே அந்த நிலைமை இருக்கிறது.
தொல்பொருள் விடயத்தை முன்வைத்து அல்லது ஒரு மத ஸ்தலத்தை
காரணம் காட்டி இந்த இனவாத முரண்பாடுகளை தூண்டிவிடப் பார்க்கிறார்கள். மீண்டும் எமது நாட்டில் வடக்கிலோ தெற்கிலோ கிழக்கிலோ நாட்டின் எப்பகுதியிலும் சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடு தேவை. அதேபோன்று , சிறப்பான பொருளாதா நிலையுள்ள பொழுதுபோக்குள்ள மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை எமக்கு அவசியம்.
யாழ்ப்பாணத்தில் பாரிய விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடினேன்.அதற்கான பணிகளை இந்த வருடத்திற்குள் துரிதமாக நிறைவு செய்ய உள்ளோம். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக, அவர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொழுதுபோக்காக வாழக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அரசியல்வாதிகளின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது. யாழ்ப்பாண பிள்ளைகளுக்கு அது அவசியமானது. ஆனால் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்கின்றனர். அதாவது அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலை செய்கிறார்கள். நாம் மிக விரைவில் அந்த வழக்கை நிறைவுசெய்து அதே இடத்திலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் அந்த உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.
அதேபோன்று சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திற்கு
பெரும் பங்களிப்பு கிடைக்கிறது.யாழ் மாவட்டம் மிகவும் ரம்யமான கடற்கரையைக் கொண்டுள்ளது. மக்களை கவரக்கூடிய பல பிரதேசங்கள் உள்ளன. இருந்தாலும் இன்னும் பலமான சுற்றுலாத்துறை கிடையாது.
பலாலி விமான நிலையத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம். மிக விரைவில் காங்கேசன்துறை துறைமுக பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மிக முன்னேற்றகரமான சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு சிறந்த தொழில்கள் அவசியம். சிறந்த பொருளாதாரம் அவசியமானது. மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எமது பொறுப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். இங்குள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், தமது வாழ்நாளில் முதன் முறையாக ஜனாதிபதி, அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருக்கும் என கருதுகிறேன்.
சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஒதுக்க வேண்டும். எமது சந்ததி யுத்தம் செய்துகொண்டது. எமது சந்ததி மோதிக் கொண்டது. எமது பிள்ளைகளின் சந்ததிக்கு மோதலற்ற நாட்டை, யுத்தமில்லாத நாட்டை ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
துணிச்சலான செயற்பாட்டை இந்த பெற்றோர் மற்றும் சகோதர
சகோதரிகள் மேற்கொண்டார்கள். நேரில் கண்டிறாத எம்மை, கேள்விப்படாத எம்மை நம்பி இணைந்திருக்கிறீர்கள். நாம் ஆட்சியமைக்க நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் மீறாமல் மென்மேலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும் அரசாங்கம் மற்றும் மேம்படுத்தும் தலைவர்களாக நாமிருப்போம்.நீங்கள் எம்மை விட்டும் ஒதுங்கிச் செல்லாதது போன்றே நாமும் உங்களை விட்டும் விலக மாட்டோம்.
நாம் இணைந்து இந்த
நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவரும் சகோததரத்துவத்துடனும் குறிக்கோளுடனும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க:
“தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இன்று வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக உதவி வழங்கப்படுகிறது. நாட்டில் இரண்டு வீட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் அண்மைய சூறாவளி பேரழிவில் வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டுத் திட்டம் மற்றும் இன்று தொடங்கப்படும் தேசிய வீட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும்.
இந்த தேசிய வீட்டுதிட்டம் ஐந்து அமைச்சுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் 31,218 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளடங்கும். அதற்காக, ஒரு வீட்டிற்கு 20 இலட்சம் ரூபா வீதம் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன்
“யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் பத்தொன்பதாயிரம்
குடும்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றன. இவற்றில், இந்த ஆண்டு 2,500 பேருக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்னர், வீட்டுத் திட்டங்களுக்குப் பெறப்பட்ட தொகை, வீடு நிர்மாணிப்பதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, ஜனாதிபதி உதவித் தொகையை பத்து இலட்சத்தில் இருந்து பதினைந்து இலட்சமாகவும், பின்னர் இருபது இலட்சமாகவும் அதிகரித்துள்ளார். இதனால் மக்கள் நீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கூடிய வீட்டை நிர்மாணிக்கக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளார்.
வீட்டுத் திட்டங்கள் மட்டுமல்ல, இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்க சேவைகளை மக்கள் எளிதாகப் பெறக்கூடிய சூழலையும், அரச ஊழியர்கள் எளிதாகச் சேவை செய்யக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி கருதுகிறார். ஆண்டுதோறும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான வடக்கு மக்களின் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் அது இன்னும் வலுவான பிணைப்பாக மாறும் என்று நம்புகிறேன்” என்று இளங்குமரன் தெரிவித்தார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுதுலால் நிகழ்வில் அனைவரையும் வரவேற்று தனது கருத்துக்களை தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம்
சந்திரசேகர் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், ஜி.ஜி. பொன்னம்பலம், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோருடன் வட மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம். பிரதீபன், உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி
காணிகளை விட்டு வெளியேறுமாறு 62 காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்! ; அறிவித்தல்களும் ஒட்டப்பட்டன! ; களத்தில் இறங்கிய ரவிகரன்
16 Jan, 2026 | 01:28 PM
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் (அ), தேவிபுரம் (ஆ) ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திம்பிலி என்ற பகுதியிலும் உள்ள காணிகளிலிருந்து, காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தால் பல காணிகளுக்கு முன்பாக அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்கள் குடியிருக்கின்ற காணிகள் மற்றும் மக்களால் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் காணிகள் உட்பட 62 பேருடைய காணிகளுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தால் இந்த அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் கள நிலைமை தொடர்பில் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலகத்தால் குறிப்பிடப்பட்ட சிக்கலுக்குரிய காணிகளையும் ரவிகரன் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்.
மேலும், இப்பிரச்சினை தொடர்பாக மக்களிடமிருந்து எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ரவிகரன், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படும் எனவும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருந்தார். நன்றி வீரகேசரி
































No comments:
Post a Comment