உலகச் செய்திகள்

போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் -  ஈரான் அரசுக்கு ட்ரம்ப்  எச்சரிக்கை

வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு

ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்

கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்

இராணுவ சட்டம் அமுல்படுத்திய விவகாரம் : தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறை  



போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் -  ஈரான் அரசுக்கு ட்ரம்ப்  எச்சரிக்கை 

14 Jan, 2026 | 02:48 PM

ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அதற்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

நேற்று செவ்வாய்க்கிழமை (13) சிபிஎஸ் செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்தபோதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஈரான் அரசின் கொடூரமான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்து வருவதை இதன்போது சுட்டிக்காட்டிய ட்ரம்ப், ஈரான் நாட்டின் சர்வாதிகாரத்தை வன்மையாக கண்டித்திருந்தார். 

“போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால், அதற்குப் பிறகு நடக்கப்போகும் சில விடயங்களை நிச்சயமாக நீங்கள் பார்ப்பீர்கள்” என்றும் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்ட எர்பான் (Erfan Soltani) என்ற இளைஞனுக்கு இன்று (14) மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு தனது கருத்தை பேட்டியின்போது தெரிவித்துள்ளார். 

“இறுதி ஆட்டம் என்னவாக இருக்கும்” என்று ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டதற்கு, “ஈரானிய தலைமைக்கு அது நல்லதாக அமையாது” என்று ட்ரம்ப் பதிலளித்தார். 

அத்துடன் ட்ரம்ப் தனது பிரத்தியேக சமூக ஊடகப் பதிவொன்றில் “உதவி வந்துகொண்டிருக்கிறது” என ஈரான் மக்களை நோக்கிக் குறிப்பிட்டுள்ளமை முக்கிய விடயமாகிறது.  நன்றி வீரகேசரி 






வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு  

14 Jan, 2026 | 04:35 PM

வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

வெனிசுவெலா நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எண்ணற்ற அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது, வெனிசுவெலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவு என்றும் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெனிசுவெலாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான போரோ பீனல் வெளியிட்ட செய்தியறிக்கையில், 

அரசியல் காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்ட 56 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், வெனிசுவெலா அரசு 400 பேரை விடுவித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது. ஆனால், விடுவிப்புக்கான சான்றுகளையோ அல்லது எப்போது விடுவித்தது என்பது பற்றிய தகவலையோ வெளியிடவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களின் அடையாளமும் வெளியாகவில்லை. 

இதனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லது பிற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களா? என்ற விபரம் தெரியவில்லை. கடந்த ஜூலையில் வெனிசுவெலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 10 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. 

வெனிசுவெலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பின்னர், வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளின் விடுவிப்பு விடயங்கள் அதிக கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்  

Published By: Digital Desk 3

12 Jan, 2026 | 10:55 AM

ஈரானில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என மனி உரிமைக்குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்கபித்த மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. 

போராட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,600 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, விரைவான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். 

அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில்,வத்திக்கான நகரில் போப் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, 

ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார். இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார். அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 






கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்  

Published By: Digital Desk 3

13 Jan, 2026 | 03:36 PM

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க, ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது நீண்டகாலப் போட்டியாளரான கூகுளுடன் (Google) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, ஆப்பிளின் 'சிறி' (Siri) குரல் உதவிச் செயலி மற்றும் எதிர்கால 'ஆப்பிள் இன்டலிஜென்ஸ்' (Apple Intelligence) அம்சங்கள் கூகுளின்  ஜெமினி (Gemini) தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் வசதியைப் பயன்படுத்தி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா கூட்டணிக்காக ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் வரை செலுத்தக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட சிறி செயலி, 2026 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வெளியாகவுள்ள iOS 26.4 மென்பொருள் பதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் தொழில்நுட்ப உதவியுடன் சிறி இனி பயனர் சூழலை (Context) மிகச் சிறப்பாகப் புரிந்துகொள்வதுடன், செயலிகளுக்கு இடையிலான பணிகளை (In-app actions) எளிதாகச் செய்யும் திறன் பெறும்.

ஆப்பிள் தனது சொந்த AI மாதிரிகளை விட வலிமையான கூகுளின் 1.2 ட்ரில்லியன் அளவுருக்கள் (1.2 trillion parameters) கொண்ட மொடலைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. இருப்பினும், பயனர்களின் தரவுப் பாதுகாப்பு (Privacy) மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய, இந்த AI அம்சங்கள் ஆப்பிளின் சொந்த 'பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்' (Private Cloud Compute) கட்டமைப்பில் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் (X) மற்றும் xAI நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இக்கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கூகுள் ஏற்கனவே அண்ட்ரோய்ட் மற்றும் குரோம் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இது "அதிகாரக் குவிப்பு" (Unreasonable concentration of power) என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியானது ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக அமையும் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர்.   நன்றி வீரகேசரி 





இராணுவ சட்டம் அமுல்படுத்திய விவகாரம் : தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறை  

17 Jan, 2026 | 11:30 AM

தென்கொரியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு திடீரென இராணுவ சட்டத்தை (Martial Law) அமுல்படுத்திய விவகாரத்தில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்போது ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி யூன் சுக் யோல் இராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். எனினும், இந்த முடிவுக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னர், அரசியல் மற்றும் சட்டரீதியான நெருக்கடிகள் தீவிரமடைந்த நிலையில், யூன் சுக் யோல் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கிளர்ச்சியைத் தூண்டியதாகவும், அரசியல் அமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இராணுவ சட்டம் அமுல்படுத்தியதுடன் தொடர்புடைய சில குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது அவர்களின் முயற்சிகளை மீறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்கதாக, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 8 குற்றவியல் வழக்குகளில் இதுவே முதல் தீர்ப்பு என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மீதமுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







No comments: