Dr சிவா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 1975ம் ஆண்டு தொடக்கம் சிவாஜி நடித்த பல படங்கள் அவர் ஏற்று


நடித்த பாத்திரங்களை உணர்த்தும் வகையில் படத்தின் பெயராக அமையப் பெற்று வெளிவந்தன. ஜெனரல் சக்ரவர்த்தி, ஜஸ்டிஸ் கோபிநாத், பைலட் பிரேம்நாத், லாரி டிரைவர் ராஜ்கண்ணு, போன்ற பெயர்கள் அவர் நடித்த படங்களுக்கு வழங்கப் பட்டன. அந்த வரிசையை ஆரம்பித்து வைத்த படம் தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த Dr சிவா. 


 படத்தில் நவீன டாக்டராக சிவாஜி நடித்திருந்தார். வித்தியாசமான

தலை முடி ஸ்டைல் , வாயில் பைப் , கோட் என்று படம் முழுவதும் காட்சியளிக்கிறார் சிவாஜி. அதே போல் படம் முழுவதும் அவரின் நடிப்பு வியாபித்திருக்கிறது. டாக்டரின் சாந்தம், காதலியிடம் கொஞ்சல், காதலியின் அண்ணியிடம் காட்டும் பரிவு, தங்கையை கெடுத்தவனை அடித்து விட்டு பின்னர் அவனிடம் கெஞ்சுவது என்று தன்னுடைய நடிப்பின் மூலம் டாக்ட்டர் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் டாக்டர் சிவா(ஜி ).

  படத்தில் அவருக்கு ஜோடி மஞ்சுளா. மஞ்சுளா இருந்தால் படத்தில் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிந்த விஷயம். இப் படத்திலும் டூ பீஸ் அணிந்து , உள்ளாடைகளுடன் நீரில் நீந்தி விளையாடுகிறார் . ஆனால் படத்தின் பிற்பகுதியில் சோக நடிப்பை வழங்கி நெகிழச் செய்கிறார் அவர். 

 படம் முழுதும் கத்துவதற்காக சுந்தரராஜனுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் போல. ஒரே இம்சை. எம் ஆர் ஆர் வாசு கூட அடக்கி வாசித்துள்ளார். பண்டரிபாய் சாந்த சொரூபம் . மனோரமா, வி . கே. ஆர், ராஜபாண்டியன், காந்திமதி, பிரேம் ஆனந்த் என்று பலர் இருக்கிறார்கள். இவர்களுடன் நாகேஷும் சில காட்சிகளில் இருக்கிறார். படத்தில் நாகேஷ், மனோரமா இருந்தும் இருவரும் ஜோடி சேராமல் நடிக்க, எம் ஆர் ஆர் வாசு மனோரமாவுடன் ஜோடியாக நடித்தார். இவர்களுடன் ஜெயமாலினி இந்தப் படத்தில்தான் அறிமுகமாகிறார் . 

 

ஏழ்மையிலும், துன்பத்திலும் வளரும் சிவா படித்து டாக்டராகி தொழு நோயாளிகளுக்கு சேவை புரியும் உன்னத பணியில் ஈடுபடுகிறான். எல்லோர் மீதும் அன்பு, கருணை காட்டும் அவன் கீதாவின் காதலை ஆரம்பத்தில் நிராகரிக்கிறான். ஆனாலும் அவளின் வற்புறுத்தலினால் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான். கல்யாணத்துக்கு பின்னரும் நோயாளிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவனின் ஆர்வம் , வாய் பேச முடியாத தங்கையிடம் காட்டும் பரிவு என்பன கீதாவின் அதிருப்திக்கு உள்ளாகிறது. கால ஓட்டத்தில் அவர்கள் இடையே பிளவையும் கொண்டு வருகிறது. சிவா மீது அபாண்டமான பழியும் சுமத்தப் படுகிறது. இவற்றிலிருந்து சிவா மீண்டானா என்பதே மீதிக் கதை. 

 திருலோகசந்தர் எழுதிய கதைக்கு வசனங்களை ஏ . எல் . நாராயணன்

எழுதினார். காட்சிகளுக்கு அவரின் வசனங்கள் வலு சேர்த்தன. வாலியின் பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் தேனாய் இனித்தன . மலரே குறிஞ்சி மலரே, காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள், தாஜா பண்ணினாதான் இந்த ரோஜா சிரிக்கும் பாடல்கள் நன்கு படமாக்கப் பட்டிருந்தன. 

 ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்து கொடுத்த டான்ஸ்

மாஸ்டர் ஏ கே சோப்ரா ஒரு காட்சியில் தோன்றுகிறார். எம் . விஸ்வநாத் ராய் ஒளிப்பதிவு வெளிப்புற படப்பிடிப்பில் ஜொலிக்கிறது. சிவாஜியின் நடிப்பில் இருபது படங்களை இயக்கியுள்ள திருலோகசந்தர் தனது சினிபாரத் நிறுவனம் மூலம் பாபு, பாரதவிலாஸ் படங்களை தயாரித்து விட்டு இந்தப் படத்தையும் மூன்றாவதாக தயாரித்தார். ஆனாலும் வசூல் ரீதியில் டாக்டர் சிவா கை கொடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். என்றாலும் சமூக விழிப்புணர்வை கொண்ட ஒரு படத்தை தயாரித்த பெருமை தனக்குண்டு என்பதையும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் டாக்டர் சிவா வித்தியாசமான படம்தான்! 

 இந்த படம் இலங்கையில் திரையிடப் படாத போதும் 1980க்கு பின்னர்

வீடியோ கேசட்டுகள் பிரபலம் அடையத் தொடங்கிய பின்னரே இலங்கை ரசிகர்கள் இப் படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்கள்!

No comments: