செம்மணி மனித புதைகுழி : இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அதரவு
செம்மணி மனித புதைகுழி: ஸ்கேன் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை – சட்டத்தரணி ரணிதா ஞானராஜா
வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய கல்வித்தரத்தை முன்னேற்ற கல்விமான்கள் புதிய திட்டங்களை உருவக்க வேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம்
உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது ; தொடர்ச்சியான கோரிக்கையை புறந்தள்ளும் ஐ.நா! - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்!
செம்மணி மனித புதைகுழி : இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
Published By: Vishnu
31 Jul, 2025 | 07:09 PM
யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் வியாழக்கிழமை (31) முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வியாழக்கிழமை (31) மூன்று எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித எலும்புக்கூடடு தொகுதிகள் இன்றையதினம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.
அந்தவகையில் இதுவரை 118 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தமாக 105 எலும்பு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமை முடிவடையும் ஸ்கேன் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
நன்றி வீரகேசரி
வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அதரவு
31 Jul, 2025 | 05:26 PM
ஜப்பான் தூதர் அகியோ இசொமதா, "அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)" திட்டத்தின் கீழ் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான மானிய ஒப்பந்தத்தில் டெல்வோன் சமூக நல்லிணக்கத்திற்கான உதவி (DASH) இன் இயக்குநர் மற்றும் திட்ட மேலாளர் ஆனந்த சந்திரசிறியுடன் கையெழுத்திட்டார்.
இலங்கையின் வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், DASH உடன் இணைந்து இந்த திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கம் அண்ணளவாக USD 450,000 (அண்ணளவாக ரூ. 131,400,000) வழங்கியுள்ளது. 2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு முக்கிய நன்கொடையாளராக இருந்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை அண்ணளவாக USD 48 மில்லியனாகும்.
இந்த உதவியின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி, தூதர் இசொமதா பேசும் போது: "GGP திட்டம் ஜப்பான் அரசாங்கம் அதன் ராஜதந்திரத்தின் ஒரு முக்கிய தூணாக ஏற்றுக்கொள்ளும் 'மனித பாதுகாப்பு' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
தனிநபர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள், பயமின்றி கண்ணியமாக வாழ்வதற்கு பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதன் மூலம் தேசத்தையும் சமூகக் கட்டமைப்பையும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கருத்தாகும்.
DASH இன் இந்த திட்டம், வடக்கு மாகாணத்தில் மொத்தம் 5,000 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார ஆதரவை வழங்குவதன் மூலம், இலங்கை மக்களின் மனித பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த திட்டத்திற்கான உதவி, வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு ஆதரவை வழங்குதல், 'கண்ணிவெடித் தாக்கம் இல்லாத இலங்கையை அடைவதற்கான ஆதரவு உட்பட, இலங்கைக்கான ஜப்பானின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியில் முன்னுரிமைப் பகுதிகளாகத் தொடர்கின்றன.
இந்த மானிய உதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த DASH இன் இயக்குநர் மற்றும் திட்ட மேலாளர் திரு. ஆனந்த சந்திரசிறி;
“டெல்வோன் சமூக நல்லிணக்கத்திற்கான உதவி” (DASH) 2010 ஆம் ஆண்டு ஜப்பானின் நிதி உதவியுடன் ஒரு சுயாதீனமான, உள்ளூர் அமைப்பாக இலங்கையில் அதன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளைத் தொடங்கியது. இன்று கையெழுத்திடப்பட்ட மானிய ஒப்பந்தம் அந்த ஆதரவை மேலும் 9 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது; 2025 ஆகஸ்ட் 1 முதல் 2026 ஏப்ரல் 30 வரை.
இந்த மானியம் அந்த ஆதரவின் தொடர்ச்சியான 16வது ஆண்டைக் குறிக்கிறது, மொத்த நிதி LKR 1,561 மில்லியனுக்கும் அதிகமாகப் பெறப்பட்டது, இதன் மூலம் DASH 7.9 கிமீ² கண்ணிவெடிகளால் மாசுபட்ட பகுதியை அகற்றி விடுவிக்கவும், செயல்பாட்டில் 56,475 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், 114 டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், 14,141 வெடிபொருள் எச்சங்கள் மற்றும் 77,224 சிறிய ஆயுத வெடிமருந்துகளை அழிக்கவும் உதவியது.
இதன் விளைவாக, 27,005 பேர் நேரடியாகவும், 99,830 பேர் மறைமுகமாகவும் பயனடைந்துள்ளனர். புதிய திட்டத்தின் மூலம் 100,000 சதுர மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வெடிபொருட்கள் அகற்றப்படும் என்றும், 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என்றும், மீள்குடியேற்றப்பட்ட சமூகங்களுக்கு கண்ணிவெடிகள் மற்றும் போரின் வெடிபொருட்கள் அகற்றப்படுவதால் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் என்றும், வாழ்வாதாரம் மற்றும் சாலைகள், பள்ளிகள், மதத் தலங்கள், பொது வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பாதுகாப்பான வழிகளை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி
செம்மணி மனித புதைகுழி: ஸ்கேன் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை – சட்டத்தரணி ரணிதா ஞானராஜா
Published By: Digital Desk 2
31 Jul, 2025 | 11:42 AM
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கில், செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாய்வில் இருந்து, இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.
இந்த அகழ்வில் சிறுவர்கள் உட்பட 102 மனித எலும்புக்கூடுகள்அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு, இந்த புதைகுழி, நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ளது.
தடயவியல் தளம் 1-ல், ஒரு பெரிய எலும்புக்கூட்டின் அருகில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு அரவணைக்கப்பட்டபடி காணப்பட்டதாகவும், அது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மனித எலும்புகளுடன், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் குழந்தை பால் போத்தல், குழந்தைகள் விளையாடும் பொம்மை, காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும்.
மேலும் எலும்புக்கூடுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் ஆகஸ்ட் 4ஆம் திகதி பரிசோதனை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஜூலை 25 அன்று பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்ட போதிலும், புதிய அனுமதி தேவையில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாமல் ஸ்கேன் செய்யலாம் எனவும் ரணிதா ஞானராஜா கூறியுள்ளார்.
இந்த அகழ்வுகளை,தொல்பொருள் மற்றும் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, யாழ் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் இணைந்து வழிகாட்டி நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய கல்வித்தரத்தை முன்னேற்ற கல்விமான்கள் புதிய திட்டங்களை உருவக்க வேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம்
30 Jul, 2025 | 03:49 PM
(எம்.நியூட்டன்)
வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள கல்வித்தரத்தை முன்னேற்றுவதற்கு யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக சமூகம் கல்வித்துறைசார் அறிஞர்கள் ஒன்றிணைந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
கடந்த க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பதாவது நிலையில் வட மாகாணம் நிற்பதை அறிந்து பலரும் கவலை அடைந்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர், இரு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் இரு பல்கலைக்கழகங்களின் போராசிரியர்கள் மற்றும் கல்விதுறைசார் அறிஞர்கள் ஒன்றுகூடி ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
கல்வித் திணைக்களங்கள் செயற்றிறனோடு இயங்குவதாக இல்லை. வடக்கு மாகாண கல்வி அமைச்சு கடந்த காலங்களில் பாடசாலைகளை சுதந்திரமாக இயங்கவிடாமல், குழப்பங்களைத் தோற்றுவித்தமையை ஊடகங்கள் பல எடுத்துரைத்தன.
ஆசிரிய இடமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட கல்விப் பாதிப்புப் பற்றி ஆராய வேண்டும். பாடசாலைக் கல்வியில் நாட்டம் இல்லாது தனியார் கல்வி நிலையங்களை முற்றுகையிடும் நாகரிகம் எந்தளவு தூரம் பயன் தந்துள்ளது?
எனவே, எதிர்கால நன்மை கருதி, வடக்கு மாகாண கல்வி நிலையை உயர்த்துவதற்கு கல்வியால் உயர்ந்த பல்கலைக்கழக சமூகம் வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஒன்றிணைந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வித்துறை சார்ந்தவர்கள் இவ்விடயத்தில் முன்வந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது ; தொடர்ச்சியான கோரிக்கையை புறந்தள்ளும் ஐ.நா! - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்!
30 Jul, 2025 | 12:26 PM
உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது; தொடர்ச்சியான கோரிக்கையை ஐ.நா புறந்தள்ளுகிறது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
உள்ளக பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து
வருகின்றோம். அவ்வாறிருந்தபோதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளக பொறிமுறை எப்படி சாத்தியமான முறையில் வழிவகுக்கும் என எமக்கு தெரியவில்லை.
இந்த நாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி கௌரவிக்கும் நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது.
அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கிறது.
இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்த புதைகுழிகள் வெளிப்படுகின்றன. இவற்றை செய்தது யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறியமுடியும்.
தொடர்ச்சியாக நீதி கோரி போராடிவரும் நாம் எதிர்வரும் ஆகஸ்ட்
மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment