திருப்பதி ஆண்டவர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.


 மகா விஷ்ணுவே வெங்கடாசலபதிபாலாஜி என்ற பெயர்களில் திருப்பதியில் எழுந்தருளி உள்ளார். ஒருசமயம் மகாவிஷ்ணுவிற்கும் அவரது துணைவியான மகாலக்ஷ்மிக்கும் சிறிது சர்ச்சை ஏற்பட்டது.
அதனால் விஷ்ணு மனம் நொந்து ஒரு இடத்தில் போய் அமர்ந்துவிட்டார். இவரை சுற்றி கறையான் புற்று எழுந்துவிட்டது. ஒரு இடையனோ ஏதோ காரணத்தால் தன் கையில் உள்ள கோடரியால் கறையான் புற்றை தகர்க்க முனைந்தான். இதனால் மகாவிஷ்ணு காயப்பட்டு இரத்தம் வடிய ஆரம்பித்தது. உடனே பார்வதி தேவியார் பிரசன்னமாகி தனது தலை முடியில் ஒரு பகுதியை வெட்டி விஷ்ணுவின் வெட்டுக்காயத்தில் கட்டுப்போட்டார். இந்த செயலை நினைவு கூறும்   முகமாகவே பக்த கோடிகள் திருப்பதியில் தமது தலை முடியை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள் என்பதே ஐதீகம்.

 இவ்வாறு தனது தலைமுடியை காணிக்கையாக கொடுகக்க வரும் பக்தர்களின் தலை முடியை எடுக்க 1000 ஆண் நாவிதர்கள்,பெண்களின் முடியை எடுக்க 50 பெண் நாவிதர்கள் உண்டு.இவர்கள் ஷிப்ட் முறையில் நாள் பூராவும் தலை முடிகளை மழிக்கிறார்கள்.

குபேரனின் மருகரான திருப்பதி வெங்கடாசலபதியின் ஆடை ஆபரணங்கள் மிகுந்த படாடோபமானது,. அவரது முதல் கிரீடத்தை அவரது மாமனாரான குபேரனே அவருக்கு கொடுத்தார் என நம்பப்படுகிறது. நான் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் The Hindu பத்திரிகையில் வெங்கடாசலபதிக்கு மிக உயர்ந்த ரக வைரங்கள் பதிப்பித்த கிரீடம், வைரத்திற்கு பெயர் பெற்ற பெல்ஜியத்தில் இருந்து தருவிக்கப்பட்டதாக படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது, இதன்பெயர் வஜ்ஜிர கிரீடம். இது 28,367 வைரங்கள் பதிப்பிக்கப் பட்ட விலையுயர்ந்த அரிய கற்களால் ஆக்கப்பட்டது,. இதுதவிர வெங்கடாசலபதி 110 கிலோ எடை உள்ள ஆபரணங்களை அணிந்திருப்பார். அவரது அபய கரமான வைகுண்ட கஸ்தம் தங்கத்தினால் ஆனது. பல விலையுயர்ந்த முத்து,மாணிக்கம்,வைரம் , வைடூரியம் பதிக்கப்பட்டிருக்கும்  அவரது ஆடையான வேஷ்டியோ தங்கத்தினாலான நூலால் நெய்யப்பட்டிருக்கும். அதன் எடை மட்டும் 40 கிலோ,.

இத்தகைய படாடோபத்துடன் ஆன திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து 32000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு காரில் போகும்போது 51 Hair pin bend எனப்படும் வளைவு, அதாவது ஆங்கில எழுத்து போன்ற வளைவுகளை உடைய ஒடுங்கிய தெருவில் பயணிக்க வேண்டும். இதுகூட பரவாய் இல்லை, வெங்கடாசலபதியை தரிசிக்க 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். இத்தனை நேரம் காத்திருந்தாலும் 3 மணி துளிகளே தரிசனம் பண்ணலாம். 60 ஆயிரம் பேர் தரிசிக்க வேண்டுமானால் ஒருவரே சில நிமிடங்கள் நின்றால் மற்றவர்கள் தரிசிப்பது எவ்வாறு? அதனால் மன நிம்மதியாக தரிசிக்க இடம் கொடாது சீக்கிரம் விலகும்படி விரட்டியபடியே இருப்பார்கள். இது தான் தரிசனம் என திருப்திப் பட வேட்டியதுதான். இதுதான் தரிசனம்.

 இது தவிர சேவா தரிசனம் என அதிக விலை கொடுத்து அனுமதி சீட்டைப் பெறலாம்,, அப்படியான தரிசனமோ 3முதல் 5 மணி நேரம் காத்திருந்தால் போதுமானது. இதற்கான சீட்டை பெற முன்கூட்டியே பணம் செலுத்தி பற்று சீட்டைப் பெற்றுவிட வேண்டும். அப்படி சீட்டை பெற்றவர்கள் 3 நிமிடம் வரை தரிசன நேரம் கிடைக்கும். அப்போது ஆண்டவருக்கு தீப ஆராத்தி காட்டுவார்கள். இது தவிர நீங்கள் V I  P ஆனால் ஆண்டவருக்கு அண்மித்து நின்று வணங்கலாம்.   

எனது கணவருக்கும் எனக்கும் V I P தரிசனம் கிடைத்தது. என்ன நம்ப முடியவில்லையா?. நடந்தது இதுதான் . Australia வில் இருந்து ஒரு வயோதிக தம்பதியர் எமது விருந்தாளிகளாக எம் வீட்டிலே தங்கி இருந்தார்கள். அவர்கள் திருப்பதி ஆண்டவரை தரிசிக்க போக வேண்டும் என்றார்கள். அவர்கள் வயது காரணமாக அவர்களை தனியே அனுப்பாது நாமே அழைத்துச் சென்றோம்.  எமது நண்பரான Dr.பாபுவின் மைத்துனர் திருப்பதியில் அரச உயர் பதவி வகிப்பவர், தேவஸ்தானத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்.

திருப்பதி வெங்கடாஜலபதியின் ஆடைகளை மேள தாளத்துடன் கோயிலை சுற்றி எடுத்து சென்றபின்பே ஆண்டவருக்கு அணிவிக்கப்படும். அப்படி ஆடையை எடுத்துத் செல்வது மிக பெரிய பாக்கியமாக கருதப்படும். எமது நண்பரின் மைத்துனர் கூட பலதடவைகள் அந்த ஆடைகளை கைகளிலே ஏந்தி கோயிலை வலம் வந்துள்ளாராம்.

மறுநாள் காலை எமது விருந்தினரான தம்பதிகள் தரிசனத்திற்கு வரிசையில் நிற்க போய்விட்டார்கள். எனக்கு இரு நாட்களுக்கு முன் கீழே விழுந்து காலில் அடிபட்டதால் வலிகண்டிருந்தது. அதனால் பிறிதொரு சமயம்  ஆண்டவர் தரிசனத்திற்கு போகலாம் என இருந்துவிட்டோம். எதேச்சையாக எம்மை கண்ட நண்பரின் மைத்துனர் தரிசனம் பார்க்க போகவில்லையா என வினாவ, நிலமையை கூறினோம். அவரோ உடனடியாக தரிசனம் பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அவரது ஏற்பாட்டில் எமக்கு VIP தரிசனம் கிடைத்தது. எமது நண்பர் காரில் நேராக கோயில் வாசலுக்கு போய் இறங்கினோம். கோயில் gate - ஐத் திறந்தவர், எம்மைநேரடியாக திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடாசலபதி முன் எம்மை அழைத்துச் சென்றார். இறைவனுக்கு ஆராத்தி காட்டினார்கள், ஏனோ என் மனம் இறைபால் லயிக்கவில்லை, மன நிம்மதியாக கும்பிட முடியவில்லை. பல்லாயிரம் மக்கள் தரிசனத்திற்கு காத்திருக்கஆண்டவரை தரிசிக்க இப்படி ஒரு வழியா என் மனம் குற்றத்தை புரிந்தவள் போல உறுத்தியது.

                        ———————————

 

No comments: