திருப்பதி ஆண்டவர். ( Part 1) __________________ நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர்.



எம்மில் சிலரோ  பணம் சம்பாதித்து செல்வந்தராக பணம் படைத்தோருக்கான ஆடம்பர வாழ்வு
வாழ்கிறார்கள்.  ஆண்டவரால் படைக்கப்பட்ட மக்கள்தான் இப்படியாஆண்டவர்களின் கோயில்களிலும் சில
பணமும் , படாடோபமும் கொண்ட கோயில்களும் உண்டு. அதேசமயம் வருவாய்க்கு திண்டாடும் கோயில்களும் உண்டு.
இது எப்படி என எண்ணத் தோன்றுகிறதா?
Good பிஸினஸ் - இதற்கு எப்படி சிறந்த விளம்பரம் தேவையோ அதேபோல ஆண்டவருக்கும் உண்டு. சில கோயில்கள் புதுமையானது என பெயர் பெற்று விடுகின்றன.அப்படியான கோயில்களுக்கு மக்கள் நேர்த்தி கடன்கள் செய்து, தாம் நினைத்தது நடந்துவிட்டால், ஆண்டவனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து காணிக்கையும் செலுத்துவார்கள்.   இவ்வாறான சிறப்புகள் பேசப்படாத கோயில்கள் வருமானம் வராது திண்டாடுவதையும் நாம் காண்கிறோம். ஆண்டவனை நம்பும் பக்தர்களே இதற்குக் காரணம்.

இந்திய பெருங்கண்டத்தில் மிக பணம்படைத்த கோயிலான திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம், இந்திய அரசுக்கு பணம் கடன் கொடுத்து வட்டியும் பெற்றுள்ளது. திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வருடம் பூராவும்  கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். இவ்வாறு வந்து போகும் பக்தர்கள் வெங்கடாசலபதிக்கு பலவாறாக காணிக்கை செலுத்துகிறார்கள். 
காணிக்கையை பெற்ற வெங்கடாசலபதியோ தம்மை நன்றாக வாழ வைப்பார், இன்னல்கள் வராது காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.

பலகோடிக்கு அதிபதியான 8 அடி உயரம் கொண்ட வெங்கடாசலபதி சுயம்புவாக தோன்றியதாக மக்கள் நம்புகிறார்கள், இது 2000வருடம் பழமையானது எனவும் நம்பப்படுகிறது. திருப்பதி ஆண்டவரான பாலாஜியோ இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு, கொஞ்சமேனும் வேர்வைசிந்தாது ஓடி உழைக்காது, பலகோடி சம்பாதிக்கிறார்.
இதற்கும் ஒரு கதை உண்டு, அதுவும் ஒரு பெண்மேல் கொண்ட காதல் கதை தான். ஆண்டவணோ காதல் விவகாரத்தில் மானிடர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார்.


                 பாலாஜியின் காதல்.
              ——————————-

கலியுகத்தின் ஆரம்பகாலத்திலே ஆகாச ராஜா தொண்டைமண்டலம் வரை உள்ள மேற்கு நாடுகளை வென்று சக்கரவர்த்தியாக திகழ்ந்தான்.
இந்த ஆகாச ராஜாவிற்கு அழகே உருவான மகள் ஒருத்தி  இருந்தாள். அவள் பெயர் பத்மாவதி. பாலாஜியோ இந்த பத்மாவதியை அடைந்துவிடவேண்டும் என  ஆசைப்பட்டார். பத்மாவதியை அடைந்துவிட பாலாஜிக்கு அளவிடமுடியாத செல்வம் வேண்டி இருந்ததாம்.  பெண்ணிலே மயங்கிய பாலாஜி (வெங்கடாஜலபதி) எதற்கும் தயங்கவில்லை.செல்வத்தின் அதிபதியாம் குபேரனை நாடி வட்டிக்கு பணம் பெற்றுவிட்டான். இளவல் பாலாஜி -பத்மாவதி திருமணம் இனிதே நிறைவேறியது.  ஆனால் பாலாஜியோ குபேரனிடம் பெற்ற பெரும்  தொகைக்காக தினம் தினம் வட்டி செலுத்திய வண்ணமே உள்ளானாம். ஆண்டவன் குறிப்பிட்ட அளவு வட்டியை செலுத்தாத நாட்களிலே அதற்கு தண்டனையாக வெங்கடாசலபதியின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு விடுமாம். ஆண்டவன் ஆயிற்றே அதனால் தங்க சங்கிலியால்தான் கட்டுவார்களாம். இவ்வாறு பல நாட்கள் நடைபெற்றதாக திருப்பதி தேவஸ்தானம்  கூறுகிறது.இத்தனை பெரிய கடன் பலுவை பாலாஜி ஏற்றபோதும், அதற்கான வட்டியை கட்டிவிட தானே பக்தகோடிகள் காணிக்கை செலுத்துகிறார்கள்.
பாலாஜியோ பத்மாவதியின் அணைப்பில் சுகித்து வாழ்கிறார்.

 திருப்பதியான் வருவாய்தான் எப்படி வருகிறது என பார்ப்போமா?   
திருப்பதி ஆண்டவருக்கு தலைமுடியை தருவதாக வேண்டிக்கொண்ட பக்தர்கள்  காணிக்கை 2020 இல் 5 பில்லியன், திருப்பதியில்,திரும்பி பார்க்கும் இடமெல்லாம் ஆண் பெண்  சிறுவர் என்ற வேறுபாடு இன்றி யாவருமே மொட்டை அடித்த பக்தர்களை காணலாம். திருப்பதி பிரசாதமாக லட்டு விற்கப்படும், இவ்வாறு விற்கப்படும்  லட்டு மூலம் 6 கோடியே 75 ஆயிரம் ரூபாய் வருட வருமானமாக கிடைக்கும்.., இது தவிர விசேஷ தரிசனம் எனப்பணம் வசூலிக்கப்படும். அதற்கான பணத்தை ஒரு வருடத்திற்கு முதலே கட்டிவிட வேண்டும்.இவ்வாறு விசேஷ தரிசனத்திற்கு பெற்ற தொகை 502.5 கோடி.  இவை யாவும் 2020 இல் பெற்ற தொகை.
இவை தவிர திருப்பதி ஆண்டவர் வட்டிக்கு பணம் கொடுப்பார்.
வட்டி மூலம் பெருமளவு பணமும் சேரும். இத்தகைய பணம் படைத்த ஆண்டவர் கோயிலின் உள் ஒரு உண்டியல் உண்டு . இவை எங்கும் காணாத அளவில் பெரிதாக இருக்கும். இது செப்பினால் ஆனது. காணிக்கையை பலம்கொண்டமட்டும் விசிறி எறிய வேண்டும். இதற்குள்ளே பல வெளிநாட்டுப் பணங்கள், அதாவது US, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாட்டுப்பணங்கள் மட்டுமல்லாது,அதிர்ஷ்டலாபச் சீட்டுகள்,கிலோ கணக்கு எடைஉள்ள தங்கக் கட்டிகள், நகைகள் வைரம், இரத்தினங்கள் என பலவும் வரும்.  இத்தனையும் கோயிலில் குடிகொண்ட ஆண்டவன் சொத்தே. இவ்வாறு வந்த பணத்தை தரம் பிரிப்பதற்கு 50 முழு நேர ஊழியர்கள் உண்டு. இங்கு தரம் பிரிக்கும் தொழிலாளர் தமது தகுதிக்கு மேலாக ஆடம்பர வாழ்வு வாழ்வது இந்திய துப்பு துலக்குவோரின் கவனத்திற்கு வந்தது. அவர்கள் கண்டறிந்ததோ உண்டியலில் வந்து விழும்
தங்க நாணயங்கள் தரம் பிரிப்போரால் திருடப்பட்டுள்ளது என்பதே. ஆண்டவன் புண்ணியத்தில் சுகவாழ்வு வாழ்ந்தவர்கள் திருட்டு அம்பலமானது. உண்டியலில் வந்து விழும் தங்க நாணயங்கள் யாவுமே நேர்மையாக உழைத்தவர்தான் ஆண்டவனுக்கு காணிக்கையாக செலுத்தினார்களா? என்பதும் திருப்பதியானுக்கே வெளிச்சம்.

                      (தொடரும்)

No comments: