பன்னிரு திருமுறைகள் சைவத் தமிழ் அடியார்களுக்குக் கிடைத்த பெரும் அருட் செல்வம்.
இவற்றிலே
முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் ஆகும்.
இத்திருமுறைகள்
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இறையருள்
பெற்று அருளிய மிகச் சிறப்பான பதிகங்கள் கொண்டவை.
இந்த நாயன்மார்கள் இப்பதிகங்களைப் பாடிப் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கின்றார்கள். இப்பதிகங்களைப்
பாராயணஞ் செய்யும் அடியார்கள் இன்றைக்கும் பல அற்புதங்களைத் தங்கள் வாழ்விலே கண்டு
வருகின்றார்கள். சைவத்தையும் தமிழையும் போற்றிப் பாதுகாக்க நாயன்மார்கள் பல
தலங்களுக்கும் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானைப் பரவிப் பாடி
அருளிய பதிகங்கள் இவை.
இத்தேவாரப்
பதிகங்களைத் தல வாரியாக முற்றோதல் செய்வது சைவ மரபாகப் பல நூற்றாண்டுகளாக இருந்து
வருகின்றது. அந்த வகையில் சிவஞானத்
தமிழ்ப் பேரவை இப்பதிகங்களைத் தலவரிசையில் முற்றோதல் செய்து வருகின்றது.
இந்த
முற்றோதலை சிவாக்கர
யோகிகள் திருஞானசம்பந்தர் திருமடம் திருமுறைக் கலாநிதி அருட்குருநாதர் தவத்திரு
ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்கள் மிகச்சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள்.
ஒவ்வொரு தலத்தின் சிறப்பையும் வரலாற்றையும் சுவாமிகள் விரிவாகச் சொல்லி
அத்தலத்தில் அருளப்பட்ட அனைத்துப் பதிகங்களையும் உரிய பண்ணோடு பாடி
வருகின்றார்கள். பதிகங்களில்
பொதிந்திருக்கும் அரிய கருத்துகளையும் அடியார்களுக்கு விளக்கி வருகின்றார்கள்.
பதிகங்களைப் பாடுதற்கு முன்னர் அப்பதிகத்தை அருளிய நாயனாரைத் துதிக்கும்
வகையில் உரிய பதினொராந் திருமுறைப் பாடலைப் பாடிப் பின்னர் பதிகம் பாடியதும் பெரிய
புராணத்தில் இருந்து அப்பதிகம் அருளப்பட்ட வரலாற்றைக் குறிக்கும் பாடல்களையும்
பாடுவது மிகவும் சிறப்பாக அமைந்து வருகின்றது.
நிறைவாக அத்தலத்தில் அருளப்பட்ட திருப்புகழ் பாடலையும் சுவாமிகள் பாடிப் பொருளுஞ் சொல்லி வருவது மேலும் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளது.
மேலும் பழந்தமிழிசையான பண்ணிசைப் பாடல்களாக இத்தேவாரப் பனுவல்கள்
திகழ்கின்றன. இந்நிகழ்ச்சியை நமக்கு
நடாத்தித் தரும் திருமுறைக் கலாநிதி அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர
தேசிக சுவாமிகள் அவர்கள் ஒரு பண்ணிசை வித்தகர்.
ஓதுவார் பயிற்சியையும் கருநாடகச் சங்கீதக் கல்வியையும் முழுமையாகக் கற்றுத்
தேர்ந்தவர். நல்ல குரல் வளமும் தமிழ்ப்
புலவர் பட்டமும் பெற்றவர்.
திருமுறைகளையும் திருப்புகழையும் அவர் பாடக் கேட்பது பரவசமூட்டுவதாகும்.
இத்தொடரில் கலந்து கொள்வதால் பல நன்மைகள் எமக்குக் கிடைத்துள்ளன. பல கோவில்களைப் பற்றிய அரிய செய்திகளை நாம்
அறிந்திருக்கின்றோம். பல தமிழ்ப் பண்கள்
பற்றியும் அவற்றை எப்படிப் பாடுவது என்பது பற்றியும் அறிந்திருக்கின்றோம். இதன்
மூலம் தேவாரங்களையும் திருப்புகழ் பாடல்களையும் பண்ணோடு பாடவும்
கற்றிருக்கின்றோம். பல தமிழ் சொற்களின் கருத்துகளையும் அறிந்திருக்கின்றோம். பாடல் பெற்ற 275 தலங்களில் இதுவரை
236 தலங்களைத் தரிசித்தும் விட்டோம்.
ஒவ்வொரு தலத்திருமுறை, திருப்புகழ் பாடல்கள் மற்றும் தலவரலாறு அடங்கிய
குறுநூல்கள் பதிவு செய்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் அனுப்பப்படுகின்றன.
வாரந் தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை
12 ஜூலை 2025 அன்று 200ஆவது வாரத்தை எட்ட இருக்கின்றது என்பது எம்பெருமான்
திருவருளைக் காட்டும் ஓர் இனிய செய்தியாகும்.
இந்நிகழ்ச்சி சிட்னி நேரம் பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும்.
இச்சிறப்பான
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பின்வரும் சூம் இணைப்பு மூலம் கலந்து
கொள்ளலாம்.
https://us02web.zoom.us/j/2704072147?pwd=ZEFtRkw0QTJhZVVOTithcEhNWHZMUT09
Meeting
ID: 270 407 2147
Passcode:
P@nn1sai
மேலும்
விவரங்கள் தேவைப்பட்டாலோ, இந்த நிகழ்ச்சித் தொடரில் தொடர்ந்து கலந்து கொள்ள
விரும்பினாலோ பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது stp.thalamurai.mutrothal@gmail.com
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
திரு. அருச்சுனமணி –
0414 537 970
திரு. பன்னீர்செல்வம் – 0418 468 219
திரு. நந்திவர்மன் – 0434 314 240
சிவஞானத்
தமிழ்ப் பேரவையினர்
No comments:
Post a Comment