மண்டை ஒடுன்னா சும்மாவா!

 


-சங்கர சுப்பிரமணியன்.





மனித எலும்புக் கூட்டின் ஒரு பகுதிதான் மண்டை ஒடு. மனிதர்களை இறந்த பின்
புதைப்பது மற்றும் எரிப்பது என இரண்டு வழக்கங்கள் உள்ளன. புதைப்பதால் மட்டுமே மண்டை ஓடுகளைப் பெறமுடியும். அதிலும் உடல் மக்கியபின்னரே தோண்டி எடுக்க முடியும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் விஞ்ஞான ஆசிரியர் சிவகுரு.

விஞ்ஞான ஆசிரியர் என்றாலும் சிவபக்தர். நெற்றியில் திருநீற்றுப்பட்டை அதன் மத்தியில் சந்தனக் கீற்று. சந்தணக்கீற்றில் ஜவ்வாது பொட்டு அதன் மேல் குங்கும பொட்டு
என்று பார்க்க மிகவும் கம்பீரமாக இருப்பார். அவரிடம் மாணவர்கள் விஞ்ஞான வகுப்பு என்றாலும் சிவனைப் பற்றி கேட்டால் மறுக்காமல் பதில்சொல்வார்.

அப்படிப்பட்ட சிவபக்தரிடம் மாணவன் பாலு,

“சார், ஒரு மண்டை ஓடு கிடைப்பதற்கே உடல் மக்கும்வரை காத்திருக்க வேண்டுமே அப்படி என்றால் சிவபெருமான் மண்டை ஒடுகளை சேகரிக்க என்ன பாடுபட்டிருப்பார்?”

“ஏய், என்னடா சொல்ற, சிவபெருமான் மண்டை ஒடுகளை சேகரித்தாரா?”

“ஆம் சார், பார்வதியின் மண்டை ஓடுகளை
சேகரிக்க எவ்வளவு பாடுபட்டிருப்பார்?”

“எப்பா இரு இரு, பார்வதி என்னவோ பத்துபேர் என்பதுபோல் பர்வதியின் மண்டை ஓடுகளை சேகரிக்க சிவன் எவ்வளவு பாடுபட்டார் என்கிறாயே?”

“பார்வதி பத்துபேர் இல்ல சார். ஐம்பத்தியொரு பேர் சார்.” என்றான்.

பாலு சொன்தைக்கேட்ட  ஆசிரியர் சிவகுரு குழம்பினார். நான் ஒரு சிவபக்தனாக இருந்தும் இது தெரியவில்லையே. வேடன் கண்ணப்பரைப் படித்திருக்கிறேன். திருத்தொண்டரை படித்திருக்கிறேன். ஆனால் பார்வதி ஐம்பத்தியொரு பேர் என்பதைப் பற்றி படிக்கவில்லையே.
கேள்விப்பட்டதும் இல்லையே. கற்றது கைமண் அளவு என்பது இதைத்தானோ என்று எண்ணினார்.

இவன் சொல்வது உண்மைதானா? அல்லது நம்மைக் குழப்புவதற்கு ஏதாவது சொல்கிறானா என்று நினைத்தவர் அவனிடமே நீ சொல்வது உண்மையே என்று கேட்டார். பாலு உண்மைதான். நான் படித்ததைத்தான் சொல்கிறேன் என்றார்.

அப்படியா?  படித்ததை சொல்கிறேன் என்று பாலு சொன்னதும் ஆசிரியர் சிவகுரு மகனிடம் பாடம் கேட்ட சிவனைப்போல மாணவனிடம் பாடம் கேட்டார்.

சார், ஒருநாள் பார்வதி சிவபெருமானிடம்,

“பிராணநாதா, யாருடைய மண்டை ஓடுகளை கழுத்தில் மாலையாக போட்டுள்ளீர்கள்?” என்று கேட்டிருக்கிறாள். அதற்கு சிவனும்,

“தேவி, நான் மாலையாக போட்டிருப்பது நீ இதற்குமுன் எடுத்த பிறவிகளின் மண்டை ஓடுகள். பார்வதியாக நீ பிறக்கும் முன் ஐம்பத்தியொரு முறை பிறவி எடுத்திருக்கிறாய். நீ எனக்கு மிகவும் பிடித்தவள். ஒவ்வொரு பிறவியிலும் உன்னை நான் திருமணம் செய்தேன். அதனால்தான் ஒவ்வொரு பிறவியின் மண்டை ஓடுகளையும் மாலையாக கட்டி கழுத்தில் போட்டிருக்கிறேன்.” என்று சொன்னாராம்.

இதுதான் நடந்தது என்று அவன் படித்து அறிந்ததை ஆசிரியரிடம் சொல்லி முடித்தான் பாலு. அவன் சொன்னதை மறுக்கவும் முடியவுமில்லை ஏற்கவும் முடியாமல் நின்றாலும் அதில் உண்மை இருக்கலாம் என்று நம்பவும் செய்தார்.

நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்று ஓய்வு நேரத்தில் மற்ற ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கணித ஆசிரியர் கணேசலிங்கம் என்ன ஆச்சு சிவகுருவுக்கு வாழ்க்கையே மாயம் எல்லாம் இறைவன் விட்டவழி என்று வாழ்பவர் இன்று விரக்தியாக இருக்கிறாரே என்றார்.

உடனே சிவகுரு விரக்தியல்ல குழப்பம் என்றார். இன்றொரு மாணவன் சிவனைப்பற்றி சொல்லி என்னை சிந்திக்க வைத்துவிட்டான். சிவன் கழுத்தில் ஐம்பத்தியொரு மண்டை ஓடுகளை மாலையாக போட்டிருப்பாரம். அந்த மண்டை ஓடுகள் யாவும் பார்வதியுடையதாம். பார்வதி ஐம்பத்தியொருமுறை பிறந்தாராம். சிவபெருமான் ஒவ்வொரு முறை பார்வதி பிறந்து வளர்ந்ததும் மணந்தாராம்.

இதைக் கேட்டதும் நானெல்லாம் என்ன சிவபக்தன் என்று என்மேலே எனக்கு வெறுப்பு. திருநீறு பூசிக்கொண்டால் மட்டும் பக்தியாகுமா என்ற புலம்பினார். அப்போது கணேசலிங்கம்,

“விடுங்கள் சார். எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை. இப்போது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? அல்லது ஒரு மாணவன் சொல்லி தெரியவந்ததே என்று எண்ணுகிறீர்களா?”

“அப்படியில்லை கணேசன் சார். சிவன் சுடலையில் திரிந்து சாம்பலை பூசிக்கொள்பவன். பிணத்தை எரிக்கும்போது மண்டைஒடுகள் முழுமையாக கிடைக்காது. சேதமாவதுடன் நிறமும் மாறிவிடும்” என்றார்.

“அதற்கு இப்ப என்ன?”

“தமிழில் தென்னாடுடைய சிவனே போற்றி என்கிறோம். தமிழர்கள் இறந்தவர்களை புதைக்கும் வழக்குடையவர்கள். ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. ஆதலால் பார்வதி இறந்ததும் எரித்திருப்பார்களா? புதைத்திருப்பார்களா?” என்றார்.

சிவகுரு இப்படிச் சொன்னதுதான் தாமதம் கணேசலிங்கம் கடுப்பாகிவிட்டார். சார் நீங்கள் விஞ்ஞான ஆசிரியரா அல்லது ஆராய்ச்சியாளரா? கீழடி அகழ்வாராய்வுக்கே ஆயிரம்பேர் உரிமை கொள்கிறார்கள். இன்னொரு மனிதரை தன் அப்பா என்று சொல்வது எவ்வளவு ஒரு இழிவானதோ அதைப்போன்றுதான் இன்னொருவர் நாகரீகத்தை தன்னுடையதென்பதும் என்றார்.

உடனே மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து கொள்ள அவரவருக்கு ஆயிரம் கவலை என்றால் இவருக்கு பார்வதியை புதைத்தார்களா அல்லது எரித்தார்களா என்ற கவலை. போய் பிழைப்பை பாருங்கள் சார் என்ற சொல்லவும் மணியடித்தது. ஓய்விலிருந்த ஆசிரியர்கள் பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றனர்.



No comments: