இலங்கைச் செய்திகள்

செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

இலங்கை விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி குறித்து விசாரிப்பதற்கு விசேட விசாரணைக்குழு

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது   


செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

Published By: Rajeeban

04 Jul, 2025 | 08:28 AM

செம்மணியில் ஒரு  மனித புதைகுழி    தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார்.

செம்மணியில் ஒரு  புதைகுழி தோண்டப்படுதல்தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது - மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க செயல்பட வேண்டும் என்று கோருகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார்

ஜூலை 1998 இல் தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை அவரைத் தேடி வந்த மேலும் நான்கு பேரின் கொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார். அவரது விசாரணையின் போது செம்மணிக்கு அருகிலுள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் நானூறு பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ததில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.என அவர் தெரிவித்துள்ளார்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்டத்தின் 4வது நாளின் போது, குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று யுனிசெஃப் விநியோகித்த வகையைச் சேர்ந்த தனித்துவமான நீல நிறப் பள்ளிப் பையுடன் புதைக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்ததுஎன அவர் தெரிவித்துள்ளார்

இதுவரை, அகழ்வாராய்ச்சியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு அரசு நீதித்துறை மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மனித உரிமை ஆர்வலர்கள் சாட்சியங்களை சிதைத்து இந்த எலும்புக்கூடுகள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானம் 46/1 இன் படி, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்க, ஒருங்கிணைக்க, பகுப்பாய்வு செய்ய மற்றும் பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அதிகாரம் உள்ளது. ஐ.நா. தான் கொண்டுள்ள ஆணையைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது. 1998 ஆம் ஆண்டு ராஜபக்சேவின் சாட்சியத்தை பல செய்தி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் அரசு சாரா நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதிலிருந்து, செம்மணியில் ஒரு பெரிய புதைகுழி இருப்பதை உலகம் அறிந்திருக்கிறது. இருப்பினும், இப்போதுதான் அது தோண்டப்படுகிறது. இப்போதும் கூட, சான்றுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதுஎன அவர் தெரிவித்துள்ளார்

. இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம், 46/1 தீர்மானத்தின் கட்டளைக்குள் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முறையாக சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்

.. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் 46/1 இன் இணை அனுசரணையாளராகவும், இலங்கையில் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வரலாற்றுப் பொறுப்பைக் கொண்ட நாடாகவும், ஐக்கிய இராச்சியம் இந்த பிரச்சினையில் முன்னிலை வகிக்க வேண்டும். செம்மணி படுகொலையின் குற்றவாளிகள் மற்றும் அதைப் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய இப்போது ஒரு சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் உள்ளபடி, இது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும்என அவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 




செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

Published By: Rajeeban

03 Jul, 2025 | 05:40 PM

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலி;ற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து  ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்பட பலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில் காணாமல்போனவர்களிpன் உறவுகளுடன் பிரிட்டிஸ் தூதரகம் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது என தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர 

Published By: Digital Desk 3

03 Jul, 2025 | 03:11 PM

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். 

இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர  இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,  மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 





இலங்கை விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி குறித்து விசாரிப்பதற்கு விசேட விசாரணைக்குழு 

02 Jul, 2025 | 06:15 PM

(எம்.மனோசித்ரா)

வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) கம்பனியில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக பங்களிப்பு வழங்கினாலும், அதனை மேற்கொண்டு நடாத்திச் செல்வதற்கு அரசுக்கு அதிக செலவுச்சுமை நேரிட்டுள்ளமையால், குறித்த கம்பனிக்கு ஆண்டுதோறும் ஏற்படுகின்ற அதிக நட்டத்தை தாங்கிக்கொள்வதற்கு சிரமமங்கள் தோன்றியுள்ளன.

இக்கம்பனியை பொருளாதார ரீதியாக அனுகூலங்களுடனும், வினைத்திறனாகவும், பயனுறுவாய்ந்த அரச நிறுவனமாக மாற்றியமைத்து, நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மேற்கொண்டு நடாத்திச் செல்வதே பொதுமக்களின் விருப்பாகவுள்ளது. 

அதற்காக, வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்கு சமகால நிலைமை ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பாக கடந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள பரிவர்த்தனைகள் மற்றும் சம்பவங்கள் பற்றி முறையான ஆய்வு மற்றும் மதிப்பீடொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன் விமான நிலைய தொழிற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா) (தனியார்) கம்பனியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை பற்றி பல்வேறு தரப்பினர்களும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

அதற்கமைய, 2010 – 2025 காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருத்தப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து விபரங்களுடன் கூடிய விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம்.காமினி விஜேசிங்க தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   நன்றி வீரகேசரி 





அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு   

02 Jul, 2025 | 03:35 PM

இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு  உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02) அனுமதி வழங்கியுள்ளது.

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு  உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், “இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியில் வைத்தியர் துறையிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்துள்ளார்.”

“இதனால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் ” என சட்டத்தரணி அசோக் பரன் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். 

அதன்படி, அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார். 

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது. 

இதேவேளை, இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 



கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது   

Published By: Digital Desk 3

06 Jul, 2025 | 12:23 PM

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்   யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை  வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர்.

குறித்த கவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி   புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 



No comments: