பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - யசோதா - விழா வர்ணனை தொடருகிறது

 

"திருமதி கலையரசி சின்னையா அவர்களின் அடக்கமான பேச்சு! ஆழமாக கருத்துகள்! தெளிந்த நீரோடைபோன்ற கனிந்த பேச்சு! விழா அமைப்பாளர் சார்பிலே அவருக்கு எமது நன்றி. எங்கே அவருக்கு மீண்டும்  ஒரு பலத்த கரகோசம்! " என்று திருமதி கலையரசி சின்னையா அவர்களின் பேச்சுத் திறனை வியந்து பாராட்டியதைத் தொடர்ந்து சரோஜாதேவி சுந்தரலிங்கம் அவர்கள் அடுத்த நிகழ்ச்சியாகத் தொடரும்   இன்னிசைபற்றி அறிவிக்கும் பொழுது

 


"சிட்னியிலே பிறந்து வளர்ந்து ஆங்கிலத்தொடு  தமிழையும் ஆர்வத்துடன் கற்றுத் தமிழைச்   சரளமாகவும் இனிமையாகவும் பேசிமகிழும் அளவிற்கு ஆளுமையுடன் செயற்பட்டுவரும் மருத்துவ கலாநிதி செல்வி யதுகிரி   லோகதாசன் தனது மதுரக் குரலால் எல்லோரையும் தம்வசப்படுத்தி வருவது மறுக்கமுடியாத உண்மை. இங்கு பிறந்து தமிழ் படிக்கும் பிள்ளைகளுக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

செந்தமிழ்ப் பூக்கள் நூலில் உள்ள சில பாடல்களுக்கு இசை அமைத்துப் பாட   அவரை அன்புடன் அழைக்கிறோம். பக்கவாத்தியமாக வயலினினைச் செல்வன் கபிலாசன் விதூஷன் அவர்களும் மிருதங்கத்தை  செல்வன் ஹரிஷ் ரவீந்;திரன் அவர்களும் இசைக்கஉள்ளார்கள். உங்கள் பலத்த கரகோசத்துடன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்" என்று அறிவித்ததும் தனது இன்னிசைய ஆரம்பித்தார். தங்கத் தாத்தா அவர்கள் இயற்றிய

 

"மூத்தண் ணா வென்று முறைகூறிக் கும்பிடுவேன்

காத்தென்னை ஆள்க கரிமுகவா - கோத்தவினை

மாமலங்கள் போக்கு மணிக்கிண் கிணிச் சரணத்

தாமரைகள் எனறலையிற் றந்து"

 

என்ற விநாயகர் துதிப் படாடலைத் தொடர்ந்து

 

 



        






யதுகிரி   லோகதாசன்

 

 

"அஞ்சு முகத்தவர் கொஞ்சி மகிழ்ந்திடும்

    ஆறு முகப் பதுமம்

அத்தி முகத்தர் மனத்தி லினித்திடும்

    ஆறிரு கண் வேழம்

கொஞ்சு மொழிக்குற வஞ்சி முலைக்கொ

    கொண்டுழு திடுகோடு

குஞ்சரி சஞ்சரி கந்தொடர் மஞ்சரி

    கொண்டனை யண்டர்தரு

செஞ்சர ணஞ்சர ணென்றுல கந்துதி

    தேவி மணிக் குழவி

தேவர்கள் முடிமணிய சுரர்க ளடிபணி

    தீர குமார சிவம்

நெஞ்சினி லென்று நிறைந்தொளி தந்திடு

    நீல மயிற் கதிரோன்

நேரலர் தமையடு வேலா யுதமெமை

    நின்று புரந்திடுமே!

(தனது குருவின் விருப்பப்படி புலவர் அருளிய முதலாவது செய்யுள்)

என்ற முருகன் துதிப்பாடலையும் பாடியபின் பாரதி இளமுருகனார்  அவர்கள் இயற்றிய  செந்தமிழ்ப் பூக்கள் என்ற நூலிலிருந்து தான் இசை அமைத்த சில பாடல்களைப் பாடியபின்;

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே" ; என்று ஆரம்பிக்கும் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தையும் "இறவாமல் பிறவாமல்p--." என்று ஆரம்பிக்கும் அருணகிரிநத சுவாமிகளின் திருப்புகழையும் பாடித்  தனது  மது ரக் குரலாலே எல்லோரையும் மகிழ்வித்த யதுகிரி தனது இன்னிசையை நிறைவுசெய்தார்.

 



 

                                     


அவையினரின் ஒரு பகுதி

 

"இன்றைய விழாவிலே ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக சிவஞானச் சுடர் பல்வைத்திய இளமுருகனார் அவர்கள் சிறுவர்களுக்காக இயற்றிய செந்தமிழ்ப் பூக்கள் என்னும் நூல்  வெளியிடப்படுகிறது.

கம்போடியாவிலே நடைபெற்ற உலகத் தமிழ்க் கவிஞர்களின் மகாநாட்டிலே கம்போடிய அரசினால் வாழ்நாள் சாதனையாளர் என்னும் கௌரவ விருதினை கலாநிதி பாரதி அவர்கள் பெற்றவர் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். செந்தமிழ்ப் பூக்கள்   நூலைப் பற்றிய தனது கருத்தைச் சொல்வதுடன்  நூலை வெளியிட்டு வைப்பதற்கும்; செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன். அவர்கள் தமிழ்வளர்த்த சான்றோர்  விழாக்கள் பலவற்றிலும் அருமையாக உரை ஆற்றிவந்துள்ளார். அவரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அவர் யாழ்ப்பாணத்திலே தொடர்ந்து ஆற்றிவரும் பொதுப் பணிகளை விளக்குவதற்குப் பல மணி நேரம்வேண்டும். தலைசிறந்த தருமப் பணி இயற்றிவரும் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன். அவரைக் கௌரவிப்பதற்கு வைத்திய கலாநிதி தவசீலன் அவர்களையும் அழைக்கிறேன்"  என்று  இணைப்பா ளர் அறிவித்தார். வைத்திய கலாநிதி தவசீலன் அவர்கள் செஞ்சொற் செல்வரைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததும் அவர் தனது உரையை இப்படித் தொடர்ந்தார்.

 

"சிட்னி முருகப் பெருமானின் திருத்தாள்களைப் பணிந்து வணங்கி இந்த இனிய விழாவிலே ஆசியுரை வழங்கி அமர்ந்திருக்கும் எங்கள் அன்புக்கும்  பெருமைக்கும் உரிய எங்கள்  மூதாட்டி திருமதி பாலம் இலட்சுமணன் அம்மா  அவர்களே! விழாவின் நாயகனாகத் திகழுகின்ற பல்வைத்திய நிபுணர் மதிப்புக்குரிய பாரதி ஐயா அவர்களே! அருமையான ஒரு விரிவுரையை ஆற்றி அமர்ந்திருக்கின்ற திருமதி கலையரசி சின்னையா அம்மாஅவர்களே!  சிறப்பான இசைநிகழ்ச்சியை நடத்தியிருக்கின்ற யதுகிரி சகோதரி அவர்களே! இங்கே வருகை தந்திருக்கும் சான்றோர் பெருமக்களே! உங்கள் எல்லோருக்கும் எனது பணிவான வணக்கம்.

பாரதி இளமுருகனார் ஐயா அவர்கள் காலத்துக்குக் காலம்

சான்றோர் விழாக்களை நடாத்துகின்ற போது நானும் அந்த நிகழ்ச்சிகளிலே கலந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பது வழக்கம்.   . அவர்கள் நடாத்துகின்ற விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அவ்வளவும் பெறுமதியானது .ஆசியுரை வழங்கிய அம்மையாரின் உரையே மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது. கலையரசி சின்னையா அம்மா அவர்கள் இவ்வளனவு ஞாபகசக்கியோடு மிக அற்புதமாக இந்த உரையை ஆற்றினார். உண்மையிலே  நான் அவருடைய உரையைக் கேட்டு அதிர்ந்துபோய் இருக்கிறேன். இப்பொழுது யாழ்ப்பாணப். பல்கலைக் கழகத்திலே இப்படியொரு விரிவுரையாளர் இல்லையே என்ற கவலையும் என்னைச் சூழ்ந்துகொண்டது. அவ்வளவு அற்புதமாக நவநீதகிருஷ்ண பாரதியாரைப் பற்றி எவ்வளவு அழகாகப் பேசினார். அவருக்கு என;ன்னுடைய  நன்றி.

பாரதி ஐயா அவர்கள் செந்தமிழ்ப் பூக்கள் என்ற சிறுவர் பாடல் நூல்களைப் படைத்திருக்கிறார்கள். இரண்டு நுல்கள்!. உண்மையிலே  யதுகிரி அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடுகிற போது – அந்தத் தாலாட்டுப் பாடலைப் பாடுகிறபோது எல்லோருமே தலையை ஆட்டத் தொடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு அற்புதமான படைப்பாக இருந்தது.

சிறுவர் பாடல்கள் என்பது மிகக் கடினம் என்று பல சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் சிறுவர் உளவியலும் சேர்ந்துதான் சிறுவர் பாடல்களை இயற்ற முடியும். எல்லாராலும் இந்தப் பாடல்களை இயற்ற முடியாது. ஈழத்திலே பலபேர் சிறுவர் பாடல்களைப் பாடினார்கள். இங்கே கலையரசி அம்மையாருடைய தந்தை பாடிய பாடல் -- நாங்கள் "பள்ளிக் கூடம் விட்டநேரம் பாதிவழிக்கு வந்து துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித் தோளிற் போடும்.அம்மா"  -- "பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டுப் பருகத் தந்த அம்மா" -- எத்தனை வருசத்துக்கு; முதல் – 5ஆம் வகுப்பிலே நான் படித்த பாட்டு வேந்தனார்அவர்களின்  பாடல். இப்படியான சுவையான பாடல்களைப் படைத்த அந்த சிறுவர் இலக்கியம் இந்தியாவிலே வள்ளிநாயகம் போன்ற பெரியர்ள் பாடின பாடல்.. ஈழத்திலே பலபேர் சிறுவர் பாடல்கள் பாடியிருந்தாலும் சிலதே பெறுமதியானவை.

என்னுடைய தாயாருடைய ஆசிரியர் 1929ஆம் ஆண்டு பாடிய பாடல்  இன்று பல இடங்களிலே சிறுவர்பாடல் பாடப்படுகிறது. அதிலே ஒரு  பாடல்---

"மாமா வீட்டு முற்றத்திலே

மாமரம் ஒன்று நிற்கிறது

பொன்னைப் போலே பூப்பூக்;கும்

பூக்களின் உள்ளே பிஞ்சிருக்கும்

 

அணிற்பிள்ளை வந்து கொந்தாமல்

அடிப்பேன் மணியைப் பிந்தாமல்

அன்றைக்கு மாமா  - கூப்பிட்டார்

இனிப்பான பழத்தைச் சாப்பிட்டேன்

 

பொய்சொல்ல மாட்டேன் எப்போதும்

கையை மணந்து பாருங்கள்"

இதெல்லாம் சிறுவர்களுக்காக அந்தக் காலத்திலே சரவணமுத்துப் புலவர்  இயற்றிய பாடல்கள்.

இதேபோல அற்புதமான பாடல்களை இங்கே ஐயா அவர்கள் தந்திருக்கிறார்கள்.   . இந்தப் பாடல்களைப் பற்றிப் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் இங்கே முன்னுரையிலே - மிகப் பெரிய அறிஞராகப்  போற்றப்பட்ட் அறிஞர் ;அவ்வை நடராசன்   போன்ற சான்றோர்கள்  இதற்கு முன்னுரை எழுதிப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். 


நான் சொன்னபடி மாம்பழப் பாட்டை எழுதியிருக்கிறார்.

 
"மாம்பழம் நல்ல மாம்பழம் - வீட்டு

மரத்திற்; பழுத்த மாம்பழம்

தீம்பழம் இதை நினைக்க நினைக்கத்

தேனாய் இனிக்கும் மாம்பழம்

 

மஞ்சள் நிறத்து மாம்பழம் - நல்ல 

வாச மான மாம்மழம்

குஞ்சு மாமி எனக்குத்  தந்த

கொழுத்த நல்ல மாம்பழம்"

 

இப்படியான அருமையான பாடல்கள் அடங்கியிருக்கின்றது இந்த நுல்

"கண்ணின் மணியே முத்தம் தா

கரும்பே தேனே முத்தம் தா

எண்ணி மகிழ முத்தம் தா

எந்தன ;மகளே முத்தம் தா

 

அன்பே அமுதே முத்தம் தா

ஆசைக் கிளியே முத்தம் தா

இன்பந் தரவே முத்தந் தா

எந்தன் உயிரே முத்தம் தா

என்று ;ஒரு அம்மா முத்தம் கேட்டுக் பள்ளையிடம் கெஞ்சுவது போன்றபாடல்களைப் பாரதியார் இங்கு அற்புதமாகப் படைத்திருக்கிறாார்.

உண்மையிலே இயற்கையை - தாயை - நிலவை நட்சத்திரத்தை  - நட்சத்திரத்துப் பாடலை யதுகிரி அவர்கள் பாடிக் காட்டினார்கள். பச்சைக் கிளியை - நான்வளர்க்கும் பூனை இப்படிப் பல பாடல்கள் அடங்கியிருக்கின்ற இந்த அற்புதமான செந்தமிழ்ப் பூக்கள் என்பது    உண்மையிலே இன்றைக்கு இயற்றுவது மிகக் கடினம். இப்படியெல்லாம்

நல்ல பாடல்கள் இருந்த பாடத்திட்டத்தை இலங்கையிலே மாற்றினார்கள். நாங்கள் படித்த பாட்டு வேறு

நான் ஆசிரியராக இருக்கும்பொழுது புத்தகத்தை எடுத்தூப் பார்த்தால்.---

கீச்சு மாச்சுத் தம்மளம்

கீயோ மாயோ தம்பளம்

மாச்சு மாச்சுத் தம்பளம்

மாயா மாயா தம்பளம் ---

என்னமாதிரி   "பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டுப் பருகத் தந்த அம்மா" பாடின நாங்கள் பிறகு  கீச்சுமாச்சுத் தம்பலம் கீயோ மாயோ தம்;பளம்  மாச்சு மாச்சுத் தம்பளம்

மாயா மாயா தம்பளம் என்று--

தமிழைக் கொல்லத் தொடங்கி இப்ப சின்னப் பிள்ளைகளுக்கான அழகான பாடல்கள் எல்லம் அருகிக்கொண்டு போகிறபோது  இந்த அவுஸ்திரேலியா மண்ணிலே இருந்து இந்தப் புலவர் பரம்பரை--- அதுதான்   அம்மா சொன்னா…

 

"கத்தரித்தோட்டத்து மத்தியிலே நின்ற காவல் புரிகின்றசேவகா

மெத்தக் கவனமாய் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறு யார்

வேலைபுரிபவன் வேறு யார்? "

என்று பாடியவர்தான் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.  சம்பளமே வாங்காமல்  ஒருவர் காவலுக்கு நிற்கிறதென்று     கத்தரித் தோட்டத்து வெருளியைப் பாடினார். இத்தனை ஆண்டுகள் காலங்கள் கடந்தும் நெஞ்சைவிட்டுப் போகாத பாடல்களைப் பாடியவர் நவாலி  ஊர் சோமசுந்தரப் புலவர்

கதிர்காமத்துக்குப் போய் அவர் பாடிய பாட்டு

"கதிரைமலை காணாத கண்னென்ன கண்ணே!

கற்பூர வொளிகாணாக் கண்ணென்ன கண்ணே!"

என்று கதிர்காமத்துக்குப் பாடியவர் எங்களுடைய பாரதி அவர்களுடைய பேரன்.

இளமுருகனார் ஈழத்துச் சிதம்பரத்துக்குப்  புராணம்  பாடியவர்.   கரைநகர் ஈழத்துச் சிதம்பரத்துக்கு  ஒரு தலபுராணம் - மிகப் பெரிய பெறுமதியான புராணத்தைப் பாடியவர். 3வது தலைமுறை – நாலவது தலைமுறை இன்றைக்கு விழா எடுக்குது! 5வது தலைமுறை இன்று வரவேற்புரை பேசுது.! என்ன பாய்க்கியம். அந்த வீட்டுக்குள்ளே தமிழ் எப்படிக் கொஞ்சி விளையாடுது. எனவே அவர்களை வாழ்த்துகிறேன் இந்தப் புத்தகத்தில் இருக்கின்ற பெறுமதியை இன்னும் சொல்ல நேரம் போதாது. மீண்டும் உங்களோடு சந்திப்பேன் என்று விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்"

இவ்வண்ணம் அவர்  சுருக்கமா  னதென்றாலும் சுவையான தனது பேச்சை நிறைவு செய்தார்.

சிறுவர்களுக்குரிய செந்தமிழ்ப் பூக்கள் நூலின் முதற் பிரதியைப் பெறுவதற்கு மேடைக்கு அழைக்கப்பெற்ற வைத்தியகலாநிதி கமலாகரன் அவர்களை விழா அமைப்பாளர் கலாநிதி பாரதி அவர்கள் பொன்னாடை அணிந்து கௌரவித்ததும் அவர் திரு ஆறுதிருமுருகனிடமிருந்து நூலின் முதற் பிரதியைப் பெற்றார்.

 

 



வைத்தியகலாநிதி கமலாகரன் அவர்களை விழா அமைப்பாளர் கலாநிதி பாரதி அவர்கள் பொன்னாடை அணிந்து கௌரவித்தது

 இதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகளைத் தமிழ் ஆர்வலர்கள் பலர் பெற்றுக்கொண்டார்கள்.



சிவஞானத் தமிழ்ப் பேரவைத் தலைவர் சிவத்திரு அருச்சுனமணி சிறப்புப் பிரதியைப் பெறுகின்றார்

 

இதைத்தொடர்ந்து 30 நிமிட இடைவேளை வழங்கப்பெற்றது. எல்லோருக்கும் இரவு உணவும் வழங்கப்பெற்றது.

        ………..விழா வர்ணனை தொடரும்……..

 

No comments: