நினைக்க நெஞ்சில் நிற்பான் முருகன்
வனத்தில் குறத்தியை அணைத்தான் அவனும்
சினத்தில் மிதந்தால் செருக்கை அடக்குவான்
குணத்தில் உயர்வான் குறைகள் களைவான்
தீப்பொறி தோன்றினான் தீமையை அழிப்பான்
காத்திட நல்லூர் பதியினில் அமர்ந்தான்
ஆடியில் அவனுக்கு கொடியேற்ற உற்சவம்
அனைவரும் வாரீர் அவனருள் கிடைக்கும்
ஞானியர் தோன்றினர் நல்லருள் பெற்றனர்
ஊனெலாம் உருக்க உளமதை ஈந்தனர்
வானவர் மண்ணவர் மயக்கமே போக்கிட
நாடெலாம் இருப்பார் நல்லூரை நினைப்பார்
ஆடியை எண்ணி அவருளம் துடிக்கும்
வேலவன் கொடியை காணவே யாவரும்
விரைந்துமே நல்லூர் பதியினில் நிற்பார்
ஊரெலாம் திரளும் உணர்வெலாம் பெருகும்
வேலவன் சன்னதி வெளிச்சமாய் ஒளிரும்
அந்தணர் மந்திரம் செந்தமிழ் திருமுறை
அடியவர் அரோகரா ஏறிடும் கொடியும்
வேதமும் நாதமும் விண்ணினை எட்டும்
தேவரைத் திரும்பிப் பார்த்திட வைக்கும்
பூதலம் நல்லூர் புனிதமாய் ஜொலிக்கும்
யாவரும் முருகன் கொடியினைப் பார்ப்பார்
ஆண்டு தோறும் கொடியேற்றம் நடக்கும்
அதனைக் கண்டிட அனைவரும் வருவார்
நல்லூர் மண்ணைத் தொட்டுமே நிற்பதை
நாளும் வாழ்வின் துணையாய் கொள்கிறார்
ஈழத்தில் நல்லூர் எல்லோர்க்கும் விருப்பம்
வேலவன் சன்னதி வினைகளைப் போக்கிடும்
ஆழமாங் காதல் வேலவன் மீதினில்
ஆதாலால் அடியவர் அனைவரும் வருகிறார்
சமத்துவம் நல்லூர் பதியது சிறப்பு
சரித்திரம் ஆகியே விட்டது நல்லூர்
தரித்திரம் அகன்றிட வைத்திடும் நல்லூர்
தரிசனம் செய்தால் தெரிந்திடும் திருவருள்


No comments:
Post a Comment